விசாலம்.

பல்லாண்டுகளுக்கு முன் தவ  வலிமை மிக்க ரிஷிகள், முனிவர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் தவ வலிமையினால் செய்யமுடியாததையும் மிக எளிதாகச் செய்துக்காட்டினர்.  அதில் சிருஷ்டியும் ஒன்று, ஆனால் அந்த  சிருஷ்டி  அவர்களது   சங்கல்பத்தினால்,  தர்சனத்தினால், ஸ்பர்சத்தினால்  உண்டாயிற்று.   உடல் சேர்க்கையினால் அல்ல … தெய்வீக ஆற்றல் பெற்ற மகரிஷிகள்  தேவர்கள், ஈசனின் அருளையும் பெற்றதால்  இது போன்ற சிருஷ்டியைச் செய்ய முடிந்தது.

Lord-Hanumanசங்கல்பம் மூலம் உண்டான  சிருஷ்டி
இதற்கு இராமயணத்தைக் கொஞ்சம் பார்க்க வேண்டும். இராவணன் ஒரு நாள்  வருணனின் மகள் புஞ்சிதஸ்கலை என்ற அழகு ஓவியத்தைப் பார்த்து விட்டான். அவளை அடைய முற்பட்டு அதில் வெற்றியும் கண்டான். புஞ்சிதங்கலை மனம் ஒடிந்துப் போய் பிரம்மாவிடம் நியாயம் கேட்கச் சென்றாள். பிரும்மதேவன் அவளுக்கு ஆறுதல் கூறி குரு பகவானின் மந்திர தீர்த்தத்தினால் அவள் புனிதமாகிவிடுவாள் என்றும் பின்னால் நடக்கப்போகும் ஒரு சம்பவத்திற்காகத்தான் காலம் இது போல் செய்துள்ளது என்றும் கூறி விளக்கினார். ராம அவதாரத்தின் நோக்கம் இராவணனை வதைப்பது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் இராவணனின் பாபம் அதிகரிக்கும் இதனால் அவனது அழிவும் ஏற்படும் என்றும் கூறினார்.

ருசி கண்ட பூனைப்போல் இராவணின் காம இச்சை மேலும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. ஒரு நாள் அவன் ரம்பை என்ற அப்ஸரஸைப் பார்த்துவிட்டான். அந்த ரம்பையோ குபேரனின் மகனான நளகூபனின் மனைவி. குபேரன் இராவணனுக்கு ஒருவிதத்தில் சகோதரன். ஆனாலும் காமம் அவன் கண்ணை மறைத்தது. சற்றும் சிந்திக்காமல்  ரம்பையைக் கெடுத்து விட்டான். நளகூபனுக்கு வந்தது  கோபம். ” நீ எந்தப்பெண்ணைத் தீண்டினாலும்  உன் சிரம் ஏழாய்ப் பிளக்கும்” என்று கடுஞ்சாபம் கொடுத்தான்.

இராவணன் இதைப்பொருட்படுத்தவேயில்லை. பிரஹஸ்பதியிடம் சேவை செய்து வந்த பெண்ணைக்கண்டான். அவளையும் விடவில்லை. பிரஹஸ்பதிக்கு கோபம் வந்து பிரம்மாவிடம் சென்று இதைப்பற்றி  முறையிட்டார். பிரும்மா இராவணனுக்கு சாபம் கொடுத்தார்.

“உனக்கு நல்ல தனமாக சொல்லியும் நீ பல பத்னிகளை கெடுக்கிறாய். திரும்ப திரும்ப அதே தவறை செய்கிறாய். ஆகையால் இதுபோல் இனி நீ செய்தால் உன் சிரசு சுக்கு நூறாக வெடித்துவிடும். அந்தப்பெண்கள் சபிக்க மறந்தாலும் என் சார்பில் இது நடந்துவிடும். ஜாக்கிரதை.”

ஒரு தடவை புஞ்சிதஸ்கலை  தெய்வ ஆராதனைக்கு பூக்கள் பறிக்க நந்தவனம் சென்ற போது  பல தம்பதிகள் மிக நெருக்கமாகவும் அன்னியோன்னியமகவும் இருப்பதைப்பார்த்து  உணர்ச்சி வசப்படலாயினாள். இதனால் பிரஹஸ்பதியை அவள் அழைக்க அவர் கோபம் கொண்டு அவள் ஒரு பெண்குரஙகாக மாற சபித்துவிடுகிறார். கௌதம ரிஷியின் தர்மபத்னி அஹல்யா  சில காரணங்களினால்  தனக்கு பிறக்கும் குழந்தை அழகில்லாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தாள். அதன் படியே குரங்காய் சாபமுற்ற புஞ்சிகஸ்தலை அஹல்யாவுக்கு குரங்கு ரூபமாக பிறந்து அஞ்சனை என்ற பெயர் பெற்றாள். புஞ்சிகஸ்தலை ஆசைப்பட்டது போல் சிவஸ்வரூபமாக ஒரு குழந்தையை சங்கல்பவசமாக அஞ்சனைக்கு பரமேஸ்வரன் அருளினார். பரமேஸ்வரன் பார்வதி இருவரது உணர்ச்சிகளும் சேர்ந்து உண்டாக்கப்பட்ட  சக்தி  வாயுவுடன் கலந்து தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று தவம் செய்துகொண்டிருந்த அஞ்சனையின் வாய் வழியே உள்ளே நுழைந்தது.  அதே நேரம்  தசரதர் புத்திரகாமேஷ்டியாகம் செய்திட, யாகதேவன் மழலைச்செல்வம்  உண்டாகும் பலனைக் கொடுக்க கனி அமுதைக் கொண்டு செல்ல, அதிலிருந்து ஒரு துளி கீழே விழுந்து அஞ்சனையின் உதட்டில் அமர்ந்தது. அஞசனையும் தன் உதட்டில்  ஏதோ ஒன்று இனிக்கறதே என்று அதைச்சுவைக்க அதுவும் உள்ளே போய் கலந்தது. இராமயணத்தில் முக்கிய அம்சமாக வரும் அனுமன் பிறந்தது இப்படித்தான்.

ராமாயணத்தில் சுந்தரகாண்டம்  66வது சர்க்கம் மூலம் இதைப்பற்றி அறியமுடிகிறது. இதில் புஞ்ஜிகஸ்தலை என்ற அப்சரஸ்  அஞ்சனை என்ற  பெயரில் ஒரு வானரப்பெண்ணாகப் பிறந்தாள். அவளுக்குப் பல ரூபங்கள் எடுக்கும் சக்தி இருந்தது.  ஒரு நாள் ஒரு பெண்ணாக ரூபம் எடுத்து மலை உச்சியில்  உல்லாசமாக இயற்கையை ரசித்தபடி உலாவினாள்.  அப்போது வாயுபகவான் அவளைத் தழுவிச்சென்றார். உடனே தழுவியதை அந்தப்பெண் உணர்ந்து “யார் என்னைத் தழுவிச்செல்வது?” என் வினவ  “நான் தான் வாயு, நான் உன்னைத் தழுவ உனக்கு ஒரு விதமானப்பிரச்சனையும்  இல்லை. நான் தழுவிச்சென்றதின் பலனாக ஒரு வீர சூரபுத்திரன் பிறப்பான் அவனால் புகழுண்டாகும்” என்றார். இது  அனுமனின் பிறப்பு.

சங்கல்பத்தினால் ஏற்பட்டது வாக்கினால் பிறந்த  வேதவதி
ராவணன்  பல இடங்களுக்குச்சென்று ஜயித்து வெற்றி பெற்று வந்தான்.  பின் திக்விஜயத்திற்கு கிளம்பினான். அப்போது ஒரு பேரழகி  கண்களை மூடியபடி   தன்னை மறந்து தியானம் செய்துக்கொண்டிருந்தாள். ராவணன் அவள் அழகில் மயங்கிபோனான்.

“நீ யார் ? உன்  அழகில் நான் என்னை மறந்தேன்” என்றான்.

“நான் வேதவதி “

“உன்  தந்தை  யார் ?”

“என் தந்தை பிரஹஸ்பதியின் புத்திரர் சத்வஜர் என்னும் பிரும்மரிஷி. அவர் வேதாப்பியாசம்  செய்ய ஆரம்பித்தவுடனே அவர் வாக்கிலிருந்து நான் தோன்றினேன், வரும் போதே நான் கன்னியாகத்தான் வந்தேன்  இதனால்தான் என் பெயர் வேதவதி“.

பின்னால் இவள் தான்  கர்ப்பம் இல்லாமலே மீண்டும் சீதையாக பூமியில் வந்தபோது ஜனகரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள். வேதவதியின் மேல் வைத்த ஆசையை இராவணன் மறக்கவில்லை அவள்தான் சீதை எனக் கண்டுக்கொண்டு அவள் மேல் திரும்பவும் ஆசைப்பட்டான். இதுவும் இராமயணத்தில்  உத்தர காண்டத்தில் வருகிறது.

மனசினால் வந்த சிருஷ்டி
விசுவாமித்தரருடன் ஸ்ரீராமர் செல்லும் போது விசுவாமித்திர ரிஷி தன் குலத்தைப்பற்றிச்சொல்கிறார். ஒரு முனிவர் தவம் செய்தபோது ஒரு கந்தர்வப்பெண் அவருக்குப் பணிவிடைச்செய்தாள். அவள் பணிவிடையில் மனம்  மகிழ்ந்து முனிவர் அவளிடம் வேண்டியதைக் கேள் என்று கூறுகிறார். அவளும் தனக்கு மிகச்சிறந்த தர்மப்பிரபுவாக ஒரு மகன் வேண்டும் என்கிறாள். அவர் மனம் அறிந்து  முனிவர் தன் மனதிலேயே அதே மாதிரி மகனைப்படைத்து  “பிரும்மதத்” என்ற பெயரும் அளித்தார். அந்தப்பிரம்மதத்தின் பரம்பரையில் வந்தவர்தான் விசுவமித்திரர். இராமயணத்தில் பாலகாண்டம் 33ம் சர்க்கம்

இப்போது சிருஷ்டியில் வாக்கினால் வந்தவள் வேதவதி
மனசினால் வந்தவர் பிரும்மதத்தர்
ஸ்பர்சத்தினால் வந்தவர் ஆஞ்சநேயர்  …
என்று மூன்று நிலைகளையும் நாம் இங்கு பார்க்கிறோம். இப்போது நினைத்துப்பார்த்தால் இப்படியெல்லாம் அந்தக்கால ரிஷிகள் எப்படி செய்தார்கள்?அவர்களிடம்  இது போல் செய்ய எத்தனை சக்தி இருந்திருக்க வேண்டும் என்று  நினைக்க  நினைக்க மிகவும்  வியப்பாக இருக்கிறது.

 

 

 

படம் உதவி:  http://www.oknation.net/blog/banarashindu/gallery/39404

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *