நாளைய தமிழர்…!
-நாகினி
மேலை நாட்டு மோகத்தில்
உண்ணும் உணவில்
ஆடம்பரம் கலந்து
ஆரோக்கியம் கெட்டபின்னே
மதியில் சற்றுத் தெளிவு பிறந்து
தன்னோடு நாளைய தமிழரும்
நலமாய் வாழத்
தானிய உணவுகளாலான
தாயக பதார்த்தங்களின்
மகத்துவம் உணர்த்துகிறார்
இன்றைய சில இளைஞர்…
உலக அளவு கல்விக்கடலை
சிறு குண்டத்தில் அடைத்து
முற்றும் கற்ற மாமேதையெனப்
பகட்டும் போதையில்
தாய்மொழி தவிர்த்துப்
பிறமொழிப் பேச்சும் பல்மொழி
கலந்த தாய்மொழி வீச்சும்
நடைபோடும் சமூகத்தில்
நாளைய தமிழர் தனித்தமிழாளராய்த்
தரணியில் வீறுநடை நடக்கத்
தனித்துவத் தாய்மொழி பேசும்
மகோன்னத அமுதைப்
பரப்பவும் செய்கின்றார்
இன்றைய சில இளைஞர்…
மனிதத்தின் உயிர்மூச்சாம்
உணவு உடை மொழியென
அனைத்திலும் பாரம்பரியப் பண்பாடே
தலைசிறப்பெனப் பரப்பும்
இன்றைய சில இளைஞர் அறிவுரையை
அடிமனதில் உள்வாங்கி
நேற்றைய மூதாதையர்
வாழ்வினில் முற்றிலும்
ஒன்றி இணைந்திடுவார்
நாளைய தமிழர்!!