மலர் சபா

 

மதுரைக் காண்டம் – 03. புறஞ்சேரி இறுத்த காதை

 

வையை ஆற்றின் காட்சி 

flowers

குரவம் வகுளம் கோங்கு வேங்கை
வெண்கடம்பு சுரபுன்னை மஞ்சாடி மருதமரம்
சேடல் செருந்தி பவளமல்லிகை செண்பகம் பாதிரி
இந்த மரங்களின் மலர்கள் நன்கு விரிந்து
வைகைப் பெண்ணின் பூந்துகிலாய்த் திகழ்ந்தது.

 

குருக்கத்தி செம்முல்லை கொழுங்கொடி முசுண்டை
விரிந்த மலர்களையுடைய மோசி மல்லிகை
வெள்ளை நிறம் கொண்ட நறுந்தாளி
வெட்பாலை மூங்கில் கொழுங்கொடிப் பகன்றை
பிடவம் இருவாட்சி
இந்த மலர்க்கொடிகள் பின்னிப் பிணைந்த கோவை
வைகைப் பெண்ணுக்கு மேகலையாய்த் திகழ்ந்தது.

 

அக்கோவையாகிய மேகலை
எல்லா இடங்களிலும் செறிந்து பரந்து
கரையென உயர்ந்து நின்ற காட்சி
வைகைப் பெண்ணின் அல்குல் போல் திகழ்ந்தது.

 

பரந்து விரிந்த ஆற்றிடைக் குறையின்
அடிப்பக்கம் அகன்று காணப்பட்டு
பல்வகை மலர்க்குவியல்களால் உயர்ந்து நின்று
எதிர் எதிராய் நின்ற மணற்குன்றுகள்
வைகைப் பெண்ணின் ஒளிபொருந்திய
இள மார்புகளாய்த் திகழ்ந்தன.

 

கரையில் நின்ற முருக்க மரங்கள்
உதிர்த்து நின்ற செம்மலர்கள்
அவள் வாய் எனத் திகழ்ந்தது.

அருவி நீரோடு வந்த முல்லைமலர்கள்

அவள் நகையாகத் திகழ்ந்தது.

 

குறுக்கும் நெடுக்குமாய் ஓடுகின்ற கயல்மீன்கள்
அவள் விழிகளாய்த் திகழ்ந்தன.

விரிகின்ற மலர்கள் ஒருபோதும் நீங்காத கருமணல்
அவள் கூந்தலாய்த் திகழ்ந்தது.

 

இவ்வனைத்துச் சிறப்பும் பெற்ற வைகைப்பெண்
இவ்வுலகில பல பொருட்களை விளைவித்து
அனைவருக்கும் உணவு படைக்கும் சிறப்புடையவள்.
புலவர்கள் நாவில் பொருந்தியவள்.
திருமகளை ஒத்தவள்.
பருவம் பொய்த்திடாத பாண்டியநாட்டின்
குலக்கொடியாய்த் திகழ்பவள்.

 

அந்த வைகைப்பெண்
கண்ணகிக்கு வரக்கூடிய துன்பங்களை
முன்னரே உணர்ந்தவள் போல
தூய்மைவாய்ந்த நறுமண மலர்களைத்
தன் மீது ஆடையாகப் போர்த்திக்கொண்டு
தன் கண்களை மறைத்த நீரை
வெளியே காட்டாமல் உள்ளடக்கி இருந்தாள்.

 

 

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 135 – 150

http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

 

படத்துக்கு நன்றி:

http://www.dreamstime.com/stock-images-flowers-floating-water-image

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *