கவிஞர் காவிரிமைந்தன்.

பாட்டும்திருவிளையாடல் படத்தில் ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. ஆம்.. நண்பர்களே.. தெய்வங்களைப் பற்றிய படங்கள் வரிசையில் வெளியான படங்கள் பலவும் சுமார் ஐந்தாறு உட்கதைகளைக் கொண்டிருக்கும். அவை ஆண்டவனின் அருளைப் பற்றியும் பக்தனை ஆட்கொண்டதைப்பற்றியும் பேசும். அந்த வகையில் வந்த படம்தான் திருவிளையாடல்! இறையருள் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் இயக்கம்… என்பது இறைவனைப் பற்றி படம் எடுக்கவே இந்த உலகில் அவதரித்தாரோ என்று எண்ணும் அளவிற்கு சிறப்பான காட்சிகள்.. கதையமைப்புகள்.. இயக்கம் தந்து பக்திப்படவரிசையில் முன்னணியில் இடம்பெற்றவர்.

குறிப்பாக பாண்டிய மன்னனின் சபையில் புதிதாக ஒரு இசைக்கலைஞர் தனது திறமைகளை அரங்கேற்ற.. அத்துடன் தனக்கு இணையாக பாடக்கூடியவர்கள் வேறு எவரும் உண்டோ என்று கேட்க.. மதுரைக்கே வந்த சோதனையாக அனைவரும் எண்ணிட.. இறைவன் திருவருளால் அந்த சவால் எப்படி ஏற்கப்பட்டது.. அல்லது என்ன நடந்தது என்கிற கதையைக் காட்சிப்படுத்த நான்கைந்து பாடல்கள் அதற்குள் அடக்கம் என்பதுவே வியப்பின் வியப்பு! ஒரு உட்கதைக்கு ஒரு பாடலே போதுமானதாக இருப்பது வழக்கம்! ஆனால் இந்தப் பகுதிக்கு.. ஒரு நாள் போதுமா.. இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை .. பாட்டும் நானே பாவமும் நானே.. பார்த்தா பசுமரம் போன்ற பாடல்களின் அணிவகுப்பு நடந்ததைப் பாருங்கள்..

இணையதளத்தில் கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்கள் இயற்றி ஏ.பி.நாகராஜன் அவர்களது நட்பால்.. கவிஞர் கண்ணதாசன் பெயரிலேயே வெளிவந்த பாடலாக பாட்டும் நானே.. பாவமும் நானே.. என்கிற பாடல் பற்றிய தகவல் அறிவேன்.

அதற்கு முன்னதாகவே.. இந்தப் பாடல் பற்றிய இன்னொரு தகவல் என்னிடமிருந்தும்.. வெளியிட முடியாத நிலையில் இருந்தேன். ஆம்.. கவிஞரின் உதவியாளர் அமரர் இராம.கண்ணப்பன் அவர்கள் வாயிலாக பெறப்பட்ட செய்தியிது. கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் என்கிற பெயரில் மன்றம் அமைத்த நாள் முதல் கண்ணதாசன் தொடர்பானவர்களை சந்திப்பதும் அவர்களோடு அளாவளாவுவதும் அன்றாட வாழ்க்கையானது. அவ்வழியே.. திரு.இராம.கண்ணப்பன் அவர்களின் இல்லத்திற்கு பலமுறை சென்று அவர்களோடு கவிஞர் தொடர்பான பல செய்திகளை அறிந்திருக்கிறேன். அப்படி பெறப்பட்ட செய்திகளில் ஒன்றுதான் இது. இருந்தும் ஏன்.. இந்தச் செய்தியை நான் பகிர்ந்துகொள்ளவில்லை என்பதை நீங்களே இறுதியில் உணர்வீர்கள். (இப்போதும்கூட நண்பர்களிடையே மட்டுமே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேனே தவிர.. கருத்து முரண்பாடுகளுக்குள் செல்வதற்காகவோ.. அவர்களுக்கு பதில்தருவதற்காகவோ நான் இதை இவ்விடம் சொல்லவில்லை).

மறைந்த ஏழிசை வேந்தர் டி.எம்.செளந்திரராஜன் அவர்கள் பற்றி அனேகமான தமிழ்மக்கள் நன்றாக அறிவார்கள். அவர்போல் ஒரு பாடகர் இனி பிறந்து வருவதற்கில்லை. தலைமுறைகள் பல தாண்டி தன் குரலால் தமிழ்மக்கள் நெஞ்சில் நீங்காத இடம்பெற்றவர். ஒரு முறை தனது குரலாலலேதான் .. கண்ணதாசன் போன்றோரெல்லாம் புகழ் பெறுகிறார்கள்.. அவர்கள் எழுதிய வரிகளுக்கெல்லாம் நான் ஜீவன் தந்து பாடுகிறேன்.. அதனால் கவிஞர் புகழ்பெறுகின்றார் என்று பேசிவிட.. இந்தச் செய்தியை கவிஞரிடம் அவருக்கு அருகில் இருந்தோர் சென்று சேர்ப்பிக்க.. கவிஞர்.. அட விடுப்பா.. இதெல்லாம் ஒரு விஷயமா.. பேசிவிட்டுப் போகட்டும் என்றாராம். ஆனாலும் கவிஞரின் அபிமானிகள்.. கவிஞரிடம் இதுபற்றி அடிக்கடி சொல்லிவந்ததன் பலன் கிடைத்தது. ஆம்.. கவிஞர் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் பாடல் ஒன்று எழுத வந்தபோது அமைந்த வரியில் இதற்கான பதில் அமைந்துவிட்டது. அப்படி.. தான் எழுதிவிட்டு வெளிவந்தபோது.. அங்கிருந்த நண்பர்களிடம்.. நீங்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தீர்களே.. அதைப் பாட்டில் சிலேடையாக வைத்து எழுதியுள்ளேன் கேளுங்கள் என்று சொல்லிவிட்டுச் காரில் ஏறி சென்றுவிட்டார்.

“பாட்டும் நானே.. பாவமும் நானே.. பாடும் உன்னை நான் பாட வைத்தேனே.. “ கவிஞரின் சொல்லாட்சியை.. திறனை.. சிலேடை நயத்தை எண்ணி வியப்பதா,. தன் நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க பாடல் வழியே பதில் சொல்லி நயத்தைப் பாராட்டுவதா.. என்று தெரியவில்லை. எனவே நம்மைப் பொறுத்தவரை.. இது கண்ணதாசன் பாட்டுத்தான்! இறைவனின் அருள்பெற்ற ஜீவ கவிஞனான கண்ணதாசன் திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களையும் நவரசங்களின் கலவையாக எழுதிக் குவித்திருக்கிறார். என்றும் அவை நம் இதயங்களை குளிர்விக்கும்.. செவிகளை கெளரவிக்கும்!

http://www.youtube.com/watch?v=BAVFuEqqV-k

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “பாட்டும் நானே… பாவமும் நானே…

  1. கவிஞர் கூற்றுக்கு மறுமொழி ஏது. ஆனாலும்  திரையில் பார்க்கும்போது ஒலிக்கும் குரலும்,சிவாஜியின் நடிப்பும்,பாட்டின் பொருளும் சேர்ந்தல்லவா மெய்மறக்கவைக்கின்றன.  காட்சியைப் படைத்த எவரும் இங்கில்லை என்றுதான் வருத்தமாக இருக்கிறது.

  2. This analysis is absolutely true. Even today, when I listen to this song, I cannot help admiring the lyrics, the rendition, the way Nadikar thilagam has enacted the role and scene. It brings tears to me eyes. So powerful a combination is this scene. It is one of my all time favourites.Thank You, Thiru Kaviri maindhan for this excellent review.

  3. இறைவன் அசைந்தால் அகிலம் முழுவதும் அசையும் தான். பாட்டும் நானே.. பாவமும் நானே.. பாடும் உன்னை நான் பாட வைத்தேனே என்ற பாட்டுக்கு விளக்கமளித்த கவிஞர் காவிரி மைந்தனுக்கு பாராட்டுக்கள்.
    காணொளி காடசிக்கு வல்லமை மின்னிதழுக்கு
    நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *