இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (138)

சக்திசக்திதாசன்

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

2015ம் ஆண்டில் இரண்டாவது மடல் உங்களுக்கு வரைந்து கொண்டிருக்கிறேன். காலத்தின் வேகத்திற்கு எம்மால் ஈடு கொடுத்து ஓட முடிகிறதா ?

கோடை, வசந்தம், மாரி என வருடங்கள் தமது விலாசங்களுக்கூடாக பறந்தோடிக் கொண்டிருக்கின்றன.

வருடங்கள் பறந்தோடினால் என்ன? என்று வாளாவிருக்க முடியாமலிருக்கிறதே ! வருடங்களோடு சேர்ந்து உனது வயதும் உருண்டோடிக் கொண்டிருக்கிறது என்று எமக்கும் மேலே இருக்கும் ஒருவன் நரை முடிகள் மூலம் எமக்கு ஞாபகமூட்டிக் கொண்டிருக்கிறான்..

1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் திகதி எனது தந்தையின் அரவணைப்போடு இலங்கையின் தலைநகராம் கொழும்பில் அமைந்துள்ள ஜக்கிய இராச்சியத்தின் தூதரகத்தினுள் மாணவன் நுழைவு அனுமதி பெறுவதற்காக நுழைந்தவன் நாற்பது வருடங்களின் பின்னே வல்லமை எனும் அருமையான இணைய இதழில் அந்நாட்டு அனுபவங்களை இனிய வாசக உள்ளங்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பேன் என்று எண்ணியிருப்பேனா?

1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் திகதி புதன்கிழமை பிரித்தானிய விமானசேவையில் புறப்பட்டு 30ம் திகதி வியாழக்கிழமை இந்த இங்கிலாந்து மண்ணில் கால் பதித்தேன்.

அன்னை, தந்தை எனும் பாதுகாப்புக் கவசங்களுக்கிடையில் எனது 18 வருட காலத்தைப் பயமின்றி எந்த விதப் பொறுப்புக்களுமின்றிக் கழித்த நான் அறியாத, புதிய மொழியில் பேச வேண்டிய கட்டாயத்திற்கு என்னை உள்ளாக்கி எதற்காக என் தாய்மண்ணை விட்டு புலம் பெயர்ந்தேன் ?

இது என்னை நான் பல சமயங்களில், பல தடைவைகள் கேட்டுக் கொண்ட கேள்வி.

ஈழத்தை விட்டுப் புலம்பெயர்ந்தவர்கள் வரலாற்றில் 1983க்கு முன், 1983க்குப் பின் எனும் காலகட்டம் உண்டு.

அரசியல் காரணங்களுக்காக, உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலையில், உரிமை மறுக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்தோர்கள் ஏராளம்.

ஆனால் நான் என் புலம்பெயருக்கு அரசியல் முலாம் பூசுவது முறையல்ல. கல்வி கற்பதற்கு சகல வசதிகளையும் செய்து தந்த என் அன்னை, தந்தையின் அன்பு அர்ப்பணிப்பின் ஆழத்தை புரிந்து கொள்ள முடியாத முட்டாளாய் அந்நாளைய வாலிப முறுக்குகளுக்கு உள்ளாகி காலத்தையும், நேரத்தையும் விரயம் செய்ததினால் ஈழத்தில் கல்வியில் கரைகாண முடியாமல் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தவன் நான்.

மிகவும் அச்சத்துடன் இங்கிலாந்தில் நுழைந்த என்னை ஆதரித்து அரவணைத்த இந்த நாட்டின் உன்னதத்தை உண்மையாக உணர்ந்து கொள்ளத் தவறினால் அது செய்நன்றித் துரோகமாகும்.

வாழ்வில் முன்னேற்றத்தை நல்கியது மட்டுமின்றி சகலவிதமான அனுபவ யாத்திரைகளுக்கூடாக என்னை வழிநடத்திச் சென்றது இங்கிலாந்து.

நிறவெறியின் தாக்கத்தை நான் குறைவாக மதிப்பிடவில்லை. ஆனால் எந்த நாட்டில் இருவேறு சமூகத்தினிடையே வேறுபாடுகளைக் காட்டும் சிறுஅளவிலான மக்கள் இல்லை ?

அதற்காக  நாட்டின் அனைத்து மக்களுமே நிறவெறி கொண்டவர்கள் என்று கூறுவது சரியாகுமா?

என்னுடைய இந்த நற்பது ஆண்டுகால அனுபவத்திலே இங்கிலாந்தில் கல்வி கற்பதிலும் சரி, அதன் பின்பு பணிபுரிந்த அலுவலகத்திலும் சரி என்றுமே நிறவெறியால் நான் பாதிக்கப்படவில்லை.

சில இடங்களில், சில நேரங்களில் சில கல்வியறிவு அற்ற நாகரீகம் தெரியாத வெள்ளை இனத்தவரால் நிறத்தின் அடிப்படையில் நான் பழிக்கப்பட்டதுண்டு. ஆனால் அந்நிகழ்வுகள் மிகவும் சொற்பமானவையே !

வாழ்வின் நெளிவு சுளிவுகள், வாழ்வில் நாம் எமது தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனும் யதார்த்த விதிகளை நான் கற்றுக்கொள்ள ஏதுவாக இருந்தது இங்கிலாந்து வாழ்க்கை.

அது மட்டுமா?

34 வருடங்களாக எனது நண்பியாக, அன்பு மனையாளாக, எனது மைந்தனின் அன்புத் தாயாக, எனது எழுத்துக்களின் முதல் வாசகியாக என்னுடன் இணைந்திருக்கும் தமிழ்நாடு தந்த என் அன்பு மனைவியின் சந்திப்பும் அதைத் தொடர்ந்து நடந்த எமது திருமணமும் என்னை வாழவைத்த இந்த இங்கிலாந்து நாட்டில் தானே !

மாணவனாக வாழ்ந்த காலத்தில் பகுதிநேர வேலை பார்த்து எனது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவையேற்பட்ட போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக எனது பெற்றோரின் அர்ப்பணிப்புகளின் ஆழம் புரியத் தொடங்கியது.

அவ்வன்புத் தெய்வங்களின் அருமையும், பெருமையும் உள்ளத்தில் உறையத் தொடங்கியது. அதுவரையும் அவர்கள் மீது தான் விரித்திருந்தது வெறும் பாசத்திரையே !. ஆனால் அத்திரைக்குப்பின்னால் அவர்கள் எனக்காக எனக்கு மட்டுமல்ல எனது சகோதரங்களுக்காக செய்த அன்பான தியாகங்கள், அர்பணிப்புக்கள் என்பனவற்றை முறையாக உணர்ந்ததினால் தான் இன்று எனது மனைவிக்கு ஒரு கணவனாக அன்பு மைந்தனுக்கு ஒரு பாசமிகு தந்தையாக எனது கடமைகளைப் புரிய முடிகிறது.

இந்த அளப்பரிய அறிவை எனக்குப் புகட்டியது இவ்விங்கிலாந்து தேசத்து நாற்பது வருட வாழ்க்கை அனுபவம் என்றால் அது மிகையாகாது.

உண்மையான நட்பை அடையாளம் காணுவது , அந்நட்புகளின் அத்தியாவசியம் என்பன எனக்குத் தெளிவாகத் தெரிந்ததும் இவ்வாழ்க்கையின் அடிப்படையில் தான்.

அனைத்திற்கும் மேலாக எனது உள்ளத்தில் எங்கோ சிறுபொறியாகத் திகழ்ந்த தமிழுணர்வைத் தட்டியெழுப்பி மனவோட்டங்களை வரிகளாக்கி எழுத்துக்களில் மூழ்கவைத்ததும் புலம்பெயர் வாழ்க்கைதான்.

என் அன்பு வாசக நெஞ்சங்களே ! இம்மடல் எனது நாற்பது ஆண்டுகால இங்கிலாந்து வாழ்க்கைக்கான ஒரு அஞ்சலி மடலாக உங்கள் முன்னே பரிமணிக்கிறது.

ஒரு சிறிய ஓய்விற்காக மூன்றுவார கால விடுமுறையின் பின்னே பெப்பிரவரி மாத முதல் வாரத்தில் மீண்டும் உங்களுடன் மடல் வாயிலாக இணைகிறேன்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.