எஸ் வி வேணுகோபாலன் 

 

அன்பானவர்களுக்கு

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இரண்டு நாட்களுக்குமுன் ஒரு பத்திரிகை அலுவலகத்திற்குள் தீவிரவாதிகள் மூவர் நுழைந்து ஆசிரியர் குழு கூட்டத்தில் இருந்த ஆசிரியர், உலகின் சிறந்த கேலிச் சித்திரக்காரர்கள் உள்பட 12 பேரைச் சுட்டுக் கொன்றனர்…….

அது தொடர்பான சில முக்கியமான தலையங்கங்கள், கட்டுரைகள், அற்புதமான கார்ட்டூன் எதிர்வினை இவற்றை வேறொரு மெயிலில் சேர்த்து அனுப்பி வைக்கிறேன்…

இங்கே உடனே இணைத்திருப்பது நாளைய தீக்கதிரில் வரவிருக்கும் எனது எளிய பிரதிபலிப்பு:

asv

அன்பையே பேசுகின்றன
எல்லா சமயங்களும்
ஆனால்
எல்லா சமயங்களிலுமல்ல !

விவாதங்களின் புல்வெளியில்
யாரும் இனி
சுதந்திரமாக நடந்துபோய்விட முடியாது
நிலக் கண்ணிகள் புதைந்திருக்கும்
பூமியாகிவிட்டது

சிந்தனையின் பரந்த
தெளிய நீர்ப்பரப்பை நாசப்படுத்த
பாசிஸ நஞ்சு
ஒரே ஒரு துளி போதுமாயிருக்கிறது

ஜனநாயக பொழுதுகளில்
அராஜக வன்முறைகளை
(நமக்கென்ன வந்ததென்று )
மௌனமாகக் கடந்து போகிறவர்களின்
வழித்தடத்திலேயே அமைக்கப்படுகிறது
கொடுங்கோன்மைக்கான ராஜ பாட்டை

துப்பாக்கிகளும் தோட்டாக்களும்
வெடிமருந்துகளும் ஏவுகணைகளும்

நேற்றைய முன்தினம்
வெடிச்சத்தம் கேட்ட பாரீஸ் நகரின்
எளிய பத்திரிகை அலுவலகத்திலும்
கடந்த மாதம்
சிறார்களைப் பொசுக்கிப் போட்ட
பள்ளியிலும் மட்டிலுமல்ல

உலகெங்கிலும் அவை
எடுத்தாளப்பட்டிருக்கின்றன
அதற்குமுன்னரும் பின்னரும் கூட

மனிதத்திற்கு அப்பாற்பட்ட
அந்த வெறிக்கு
இருக்ககூடும்
அதுவாக சூட்டிக் கொள்ளும் ஒரு போலிப்பெயர்
ஏதாவது ஒரு மதத்தின் பெயரில்
அன்பான சமூகத்தைக்
கனவு காண்போர்
முகவரியைக் கொடுத்துவிடக் கூடாது
தப்பித் தவறிக்கூட –
ஒற்றை விரலசைவில்
நழுவிப் போய்விடத் தக்க
அழைப்பிலும்கூட !

****************

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க