-மேகலா இராமமூர்த்தி

நண்பர்களே! காலஎந்திரத்தில் பயணித்துப் பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்னே செல்வோம் (கற்பனையில்தான்!).

நாம் இப்போது தஞ்சைக்கு அருகிலுள்ள ’வெண்ணிப் பறந்தலை’ எனும் இடத்திற்கு வந்துவிட்டோம். அதோ அங்கே பாருங்கள்! அங்கே போர்க்களம் ஒன்று காட்சியளிக்கிறது; கடும்போர் ஒன்று இப்போது அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கக் காண்கிறோம். வாள்களோடு வாள்களும் வேல்களோடு வேல்களும் மோதி உண்டாக்கும் ஒலியும், வெயிலில் மின்னும் அவற்றின் ஒளியும், இடியும் மின்னலும் தரைக்கு இறங்கி வந்துவிட்டதாகவே தோற்றம் காட்டுகின்றன!

போரில் ஈடுபட்ட வீரர்களின் எண்ணிக்கையோ அளவிடற்கரியது. வெற்றிகண்ட வீரர்களின் வீரமுழக்கமும், புண்பட்டுத் தரையில் சாயும் வீரர்களின் ஓலக்குரலும் ஒருங்கிணைந்து கடலின் இரைச்சலைப்போல் காற்றில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இவ்வளவு உக்கிரமாக அங்கே போர் புரிந்து கொண்டிருப்பவர்கள் யார்…சற்று நெருங்கிச் சென்று பார்ப்போமா?

kingsஅதோ! ஒரு பக்கம் புலிக்கொடி பறக்கிறது.கம்பீரமாக  யானையின்மீது அமர்ந்து போர்புரியும் மன்னர் ஒருவரைக் காணமுடிகிறது. உற்சாகமும் இப்பகுதியில்தான் அதிகமாக இருக்கக் காண்கிறோம். அது என்ன முழக்கம்? ”மாமன்னர் கரிகால் வளவர் வாழ்க!”

அடடா! இவர்தான் கரிகால் வளவரா? இமயத்தில் புலிச்சின்னத்தைப் பொறித்த பெருவீரர் அல்லரோ இவர்? அவ்வீரர்கள் இவர் குறித்துப் பெருமிதம் கொள்வதில் பொருளிருக்கிறது!

சரி…எதிர்ப்பக்கத்தில் போர்புரிவது யார் என்று அறிந்துவருவோம்!

இங்கே விற்கொடி பறக்கிறது! கம்பீரமும் அரசகளையும் பொருந்திய ஒரு வீரபுருஷர், கரிய குன்றுபோலிருக்கும் யானைமீது அமர்ந்து கடும்போர் புரிந்துகொண்டிருக்கின்றார். இவர் சேரர்குலத் தோன்றல் என்று பார்த்தவுடன் தெரிகிறது.

”இவர் பெயரென்ன?”

armies”அஞ்சாநெஞ்சர் பெருஞ்சேரலாதர் வாழ்க!” என்ற முழக்கமிடுகிறார்களே இவ்வீரர்கள்! ”ஓ! இவர்தான் பெருஞ்சேரலாதரா?” வீரத்தில் இவர் கரிகாலருக்குச் சற்றும் குறைந்தவரல்லவே! இவர்கள் இருவரும் புரியும் கடும்போரின் முடிவு யாதாயிருக்கும் எனும் பரபரப்பு இப்போதே நமக்கும் தொற்றிக்கொள்கிறது.

போர்க்களத்திலிருந்து சிறிது விலகி, அதோ…அந்தப் பனைமரத்தடியில் நின்று இந்தப் போரை நாமும் கவனிப்போம்!

கடுமையான போர் தொடர்ந்து நீடிக்கின்றது. இதோ…போரின் உச்சக்கட்டம் நெருங்கிவிட்டதாகக் காண்கிறது. ஆம்…கரிகாலரும் பெருஞ்சேரலாதரும் நேருக்கு நேராகவே தத்தம் யானைகளிலிருந்து ஒருவரையொருவர் எதிர்த்துப் போர்புரியத் தொடங்கிவிட்டார்கள். ”என்ன நடக்கப்போகிறதோ?” என்ற பதற்றத்தில் நம் இதயத்துடிப்பு எகிறுகின்றது.

இருவர் வேல்களும் ஒன்றோடொன்று மோதி ’டணார் டணார்’ என்று ஒலியெழுப்புகின்றன. ”அற்புதம்! அருமையான வேற்போர்; ஆ! என்ன இது? கரிகாலர் சேரலாதரின் வேலைத் தன் வேலால் தட்டிவிட்டாரே! சேர மன்னரின் மார்புக்குக் குறிவைத்துத் தன்னை வேலைச் செலுத்துகிறாரே! ஐயோ…சேரமானின் மார்பில் வேல் பாய்ந்துவிட்டதே! அவர் தன் யானையிலிருந்து கீழே சாய்கிறாரே!”

”நல்லவேளை!” கீழே நின்று போர் புரிந்துகொண்டிருந்த அவருடைய காலாள் வீரர்கள் அவரைத் தாங்கிப் பிடித்துவிட்டனர்.

சோழர் பக்கத்திலோ வெற்றிமுழக்கம் விண்ணை எட்டுகிறது. ”கரிகாலர் வாழ்க! பகைவருக்குக் காலர் வாழ்க!” என்ற முழக்கத்தோடு சோழவீரர்கள் சேரவீரர்களை ஓட ஓட விரட்டுகின்றனர். சேரர்படைச் சிதறி ஓடுகின்றது. கரிகாலர் வெற்றிக்களிப்போடு தன் பாசறைக்குத் திரும்புகிறார்.

ஆனால் போர்க்களத்திலோ…மார்பில் வேல்பாய்ந்து புண்பட்டுச் சாய்ந்திருக்கும் சேரர்பெருமானின் அருகில் பத்துப் பதினைந்து வீரர்கள் வேதனையோடு நின்றிருக்கின்றனர். சேரர் தன்மார்பில் பாய்ந்திருக்கும் வேலைப் பார்க்கிறார்; அது குறித்து அவர் கவலை கொண்டாரில்லை. ஆனால்…அதன் மறுமுனை அவர் முதுகில் ஊடுருவியிருப்பதை உணர்கின்றார். அதனால் பெருவேதனையும் அவமானமும் கொள்கின்றார். அவர் கண்கள் கலங்குகின்றன.

“என் வீரத்திற்கு இப்படி ஓர் களங்கமா? போரில் புறமுதுகிட்டதுபோல் அல்லவா புறப்புண் (முதுகில் ஏற்படும் புண்) ஏற்பட்டுவிட்டது! இனியும் நான் உயிர்வாழ வேண்டுமா? என் குலத்திற்கே மாறாப் பழியை ஏற்படுத்திவிட்டேனே!” என்று துடிக்கிறார். அவருடைய கம்பீரமான முகத்தில் கடுமையான வேதனையின் சாயை படர்கின்றது.

ஒரு முடிவுக்கு வந்தவராய்த் தன் பக்கத்தில் கவலையோடு நின்றிருக்கும் வீரர்களைப் பார்க்கிறார். அவர்களில் ஒருவன், ”அரசே! ஊருக்குள் சென்று மருத்துவர் யாரையேனும் உடனே அழைத்துக்கொண்டு வருகிறேன்” எனக் கிளம்புகிறான். அவன் கையைப் பிடித்து நிறுத்திய சேரமான், அவனைக் கருணையோடு பார்த்து, ”வீரனே! என்மீது உனக்கிருக்கும் அன்பினைக் கண்டு மகிழ்கிறேன். எனக்கு மருத்துவர் வேண்டாம்; அதற்குப் பதிலாக நீ வேறோர் உதவி செய்யவேண்டும்” என்கிறார்.

அவ்வீரன் அவர் முகத்தையே ஆவலோடு பார்க்க அவரோ, ”அன்பனே! ஊருக்குள் சென்று தருப்பைப்புல் கொஞ்சம் கொண்டுவந்து இப்போர்க்களத்திலே பரப்பி நான் அமர்வதற்கான ஆசனமாய் அதை ஆக்கு! போரில் புறப்புண் பெற்ற நான் இனியும் உயிர்வாழ விரும்பவில்லை; வடக்கிருந்து உயிர்த்துறந்து வீரசொர்க்கம் புக விரும்புகிறேன்!” என்கிறார்.

தன் கண்களில் வழிந்த நீரைத்துடைத்துக் கொண்டு ஏதோ சொல்ல வாயெடுத்த அவ்வீரன், தம் அரசரின் கொள்கையை மாற்றுவது கடினம் என்று மனத்துள் நினைந்தவனாய்க் கூறவந்ததைக் கூறாமலே தளர்ந்த நடையோடு அங்கிருந்து அகன்றான்.

அடுத்து நடந்தவை தமிழரின் தன்மானத்திற்கும் வீரத்திற்கும் என்றென்றும் சான்று பகர்பவையாக அமைந்துவிட்ட நிகழ்வுகள். ஆம்…தன் புறப்புண்ணுக்கு நாணிப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர்த் துறந்தான் பெருஞ்சேரலாதன். அவனோடு அவன் வீரர்கள் சிலரும் அவ்வாறே உயிர்த்துறந்து வீரசொர்க்கம் ஏகினர்.

சேரன் இவ்வாறு உயிர்த்துறந்ததை அறிந்தார் அதே ஊரைச் சேர்ந்த பெண்பாற் புலவரான ‘வெண்ணிக் குயத்தியார்.’ தம்மரசனான கரிகாலன் மீதும் பெருமதிப்புக் கொண்டவர் அவர். ஆயினும் சேரன் தன்முதுகில் புண்பட்டதற்காக மனம்வருந்தி உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்தது அவரைப் பெரிதும் நெகிழ்த்திவிட்டது. அச்செயல் அவனைச் சுத்தவீரன் என்று மெய்ப்பித்துவிட்டதையும், கரிகாலனினும் அவனை உயர்ந்தவனாகவும், நல்லவனாகவும் ஆக்கிவிட்டதையும் உணர்ந்தார் குயத்தியார்.

நேரே தம்மரசனான கரிகாற் சோழனைக் காணப் புறப்பட்டார். அங்கே நாளோலக்கத்தில் கம்பீரமாக வீற்றிருந்தான் கரிகாலன். புலவரைக் கண்டதும் இன்முகத்தோடு வரவேற்று ஆசனத்தில் அமர்த்திவிட்டு, ”பெருமாட்டி! வெண்ணிப் போரைப் பற்றி அறிந்திருப்பீர்களே?” தன்மீசையை முறுக்கியபடிக் குயத்தியாரைப் பார்த்து கம்பீரமாக அவன் வினவ, குயத்தியாரும் பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு,

”நீர் செறிந்த பெரிய கடலின்கண்ணே மரக்கலத்தையோட்டி போர்செய்தற்குக் காற்றின்துணை அவசியம் என்றறிந்து வளிச் செல்வனை (காற்றை) அழைத்து ஏவல் கொண்ட வலியோன் மரபிலுள்ளோனே!

(கடலில் இயங்கும் காற்றைக் கலஞ் செலுத்துதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் தந்திரத்தை முதன்முதலிற் கண்டவர் பண்டைத் தமிழரே ஆவர் என்பது குயத்தியாரின் இப்பாடலால் உறுதிப்படுகின்றது; எனவே, சிலர் நினைப்பதுபோல் காற்றின் திசையறிந்து மரக்கலத்தை முதலில் செலுத்தியவர்கள் உரோமானியர் அல்லர்… தமிழரே என்பதை அறிக.)

மதம் பொருந்திய யானையையுடைய கரிகால் வளவனே! போர்மேற்சென்று போரில் நின்ஆற்றல் நன்கு வெளிப்படுமாறு வென்றவனே! புது வருவாயையுடைய வெண்ணியென்னும் ஊர்ப்புறத்தேயுள்ள போர்க்களத்தில், உலகத்துப் புகழுக்குப் பெரிதும் பாத்திரமாகும் வண்ணம் தன் புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்த சேரர்பெருந்தகை நின்னைவிட நல்லவன் அன்றோ?” என்று புலவர் கரிகாலனைப் பார்த்துக் கேட்க, அம்மையாரைச் சிறிதுநேரம் உற்றுப்பார்த்தவண்ணம் யோசனையோடு அமர்ந்திருந்த கரிகாலன், பின்பு அவரை நிமிர்ந்து பார்த்து ‘ஆம்!’ என்று தலையசைத்தான்.

போரில் வென்று கரிகாலன் பெற்ற புகழ் வெற்றிப் புகழ்; போரில்பெற்ற புறப்புண்ணுக்கு நாணி உயிர்த் துறந்ததன் வாயிலாய்ச் சேரன் பெற்றதோ வளவனினும் விஞ்சிய பெரும்புகழ் என்பதே வெண்ணிக் குயத்தியாரின் எண்ணம்; அதுவே அவர் பாடலின் பொருள்.

நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் னாற்றல் தோன்ற
வென்றோய்
நின்னினு நல்லன் அன்றே
கலிகொள்
யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே. (வெண்ணிக் குயத்தியார்:புறம்-66)

தம்மரசன் முன்பு பிறிதோர் அரசனை, அதுவும் தம்மரசனிடம் போரில் தோல்விகண்ட அரசனைப் போற்றுதற்கு ஒரு புலவருக்கு எத்துணைத் துணிச்சல் வேண்டும்! அஃது அந்நாளைய புலவோர்க்கு இருந்திருக்கின்றது என்பதற்கு இப்பாடல் சான்றாகிறது. வாழ்க புலவரின் அஞ்சாமை!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நின்னினும் நல்லன்!

  1. அருமையான பதிவு. நம் பழந்தமிழர் பெருமைகளை விரித்துரைக்கும் கட்டுரை. எல்லாருக்கும் புறநானூற்றுச் செய்யுட்களை செய்யுட்களாகவே படித்துப் பொருள் கொள்ள இயலாது. இவ்வாறு நயம் வாய்ந்த பொருள் விளங்க வைக்கும் அழகான கதைச் சுவை கொண்ட கட்டுரைகள் வரவேற்கத் தக்கவை. இன்னும் எழுதுங்கள் மேகலா அவர்களே!

  2. ஊக்கமூட்டும் தங்கள் கருத்துரைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி அம்மா!

    அன்புடன்,
    மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.