நாஞ்சில் நாடனுடன் ஒரு பயணம் – 4

1

தி. சுபாஷிணி

நாஞ்சில் நாடரின் பயணம் திருச்சி, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி என திசை மாறியதால், என்னை கோவையிலேயே தங்க வைத்து விட்டார். திடீரென அழைத்து, சென்னை செல்கிறேன். அதுவும் ‘‘துரன்தோ எக்ஸ்பிரஸ்’’. இது குறிப்பிட்ட ஊரில் தான் நிற்கும். என்னுடன் வருகிறீர்களா’’ என்று கேட்டது தான் தாமதம். எதையும் சிந்திக்கவில்லை. இரயிலில் ஏறிவிட்டேன். ‘‘இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’’ போல் நின்று நின்று செல்லாது இது. அது விரைவு வண்டி என்பதால் நம் பயணம் விரைவாகத்தான இருக்கும்.

இப் பயணத்தில் முதல் புத்தகமாக ‘‘நஞ்சென்றும் அமுதமென்றும் ஒன்று’’.

160  பக்கங்கள் கொண்ட நூல். தமிழினி பதிப்பகம் டிசம்பர் 2003ல் வெளியிட்டு, மீண்டும் இரண்டாம் பதிப்பாக டிசம்பர் 2008ல் வெளியிட்டு இருக்கிறது. விலை ரூ.90. பதினெட்டு கட்டுரைகளைக் கொண்டு அமைந்திருக்கின்றது.

இவரது சிறுகதைகளின் பின்புலம் எவ்வாறு இருந்தது என்பது முதல் கட்டுரையாக அமைந்திருக்கின்றது. முதலில் 1972ல் பம்பாய் சேர்ந்த உடன் அங்குள்ள தமிழ்ச் சங்க நூலகம் முதல் இடம் வகுத்திருக்கிறது. பின் ‘ஏடு’ என்னும் மாத இதழுக்கு ஊதியமில்லா உதவியாளனாக பணியாற்றியது கூடுதல் வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. புதுமைபித்தன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, க.மாதவன், நீல.பத்மநாபன் என ஊன்றிப் படித்தவை பின் புலத்திற்கு உறுதுணையாய் நின்றிருக்கின்றது. தன் கிராமம் தாண்டி, தொலை தூரம் சென்ற தனிமை, கான்கிரிட் காடுகளின் தகிப்பு, தோல் நாறி ஊறும் சேரிகளின் அருவருப்பு, கிராமத்தின் நினைவுகளை ஆசுவாசப்படுத்திக் கொள்ளத் தூண்டின. முதல் கதையாக ‘விரதம்’ பிறந்தது. வண்ணதாசனின் பாராட்டுக் கடிதம் ஊக்குவித்தது. ‘இலக்கிய சிந்தனை’ அவரை அடையாளம் காட்டியது. தனது மொத்தமான அனுபவப் பதிவுகளில், சிலவை அந்தரங்களினூடேயே உறைந்து போய் விடுகின்றன. சிலவற்றை கதையாக்கும் முயற்சியில் நழுவிப் போய் விடுகின்றன. சிலவைதான் மீண்டும் உயிர்த்து கதையாகி வருகின்றன. என்றும் இம் முயற்சியில் தளர்ந்து போய் விடாத அளவுக்குத் தன்னை உயர்ப்பித்துக் கொண்டே இருப்பதாக நாஞ்சில் நாடன் கூறுகிறார். (ஆம். 1990ல் கருத்தரங்கிற்கு எழுதிய கட்டுரை இது. இப்பொழுது அவரது கதைகளின் எண்ணிக்கை 113. ஆனால் அவர் ஒவ்வொரு கதையும் தன் முதல் கதை என்பது அவரது கணக்கு என்பார்).


நாஞ்சில் நாடன் என்பவன் சக வாசகன். சக இலக்கிய மாணவன் என்று தான் தன்னைச் சொல்லிக் கொள்கிறார். தனக்குத் தன் எழுத்து என்பது தன் வாழ்க்கையை, தன்னை புரிந்து கொள்ளும் முயற்சி. தன் சுயத்தைத் தேடும் முயற்சி என்கிறார். இந்தத் தேடலின் போது, தனக்குப் புலப்படுவதை சொல்லிக் கொண்டு போவதாகவும், தன்னைப் புரிந்து கொள்வதைப் பற்றியோ அக் கதைகள் எதுவும் அற்று என்று தன் எழுத்தைப் பற்றி இரண்டாவது கட்டுரையில் வைக்கிறார். மேலும், If you hate somebody you can’t understand him” என்று மேனாட்டு இலக்கியவாதியின் கூற்றை நகுலன் அவர்கள் (தற்போது அவர் இல்லை) தன்முன் வைத்தாற் போல், மனத் தடைகள் அற்று, மனச் சாய்வுகள் அற்று மனிதனை மேலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

அவரது முதல் நாவல் 1975ல் வெளியான போது அது காகமா & குயிலா என்பது வசந்த காலத்தின் தீர்மானத்தில் விட்டுவிட்டார். அது இன்னமும் குயிலாக எல்லோராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து எழுதிய ‘பகாப்பதங்கள்’ என்னும் நாவலை, இதே ஐயத்தில் (“அதைக் கேட்டு வாங்கிப் படிக்க வேண்டும் என்று என் விருப்பம். கேட்டால் தருவாரா”) அச்சிடாமல் கிடப்பில் வைத்திருக்கிறார். அந்தக் கச்சேரி என்று நடைபெறும் என்பது தெரியவில்லை. இதன்பின் 5 நாவல்கள் வெளி வந்து விட்டன. வாழ்வின் புதுப்புது அனுபவங்களையும், அதன்மூலம் புதுப்பிக்கப்படும் வாழ்க்கையும் என நிகழ்ந்து கொண்டு இருக்கும் வரை எழுதுவதற்கானத் தூண்டுதல்கள் இருக்கும் எனக் கூறுகிறார் நாடன்.

தான் உணர்ந்திருந்த வாழ்க்கையை, உணர்ச்சிகளை, சீரழிவுகளை, சிறப்புகளை கலையாக மாற்றும் போது பாசாங்குகள் அற்ற தெரிந்த மொழி தேவைப்படுகிறது. ஆனால் அதுதான் புழங்கிக் கொண்டிருக்கிற மொழியாக இருந்தால் வேற்றுமையாக தொனிக்கும் என்ற வகையில் தன் வட்டார வழக்கை வழங்கு மொழியாக்கிக் கொண்டதாக விளக்குகிறார் நாஞ்சில் நாடன். தன் ஆத்தாள் புழங்கிய சொல்லை, அவர் அம்மா அறிந்ததாகவும், தன் மனைவி அறிந்ததில்லையென்றும், ஆனால் அது தன் மகனுக்கு அது ஒரு கண்டுபிடிப்பாக அமையும் என்கிறார் தன் “எனது நாவல்களும் வட்டார வழக்கும்” என்கின்ற கட்டுரையில்.

முதலில் ‘என்பிலதனை’யைப் படிக்கும் போது ஏற்பட்ட சிறு சிறு சிரமங்கள் அவரது படைப்பில் அறிந்த மொழியாகிவிட்டது. நானும் ஒரு நாஞ்சில் நாட்டு மொழியாளாய் மாறிப் போனேன். இது என் முதல் பெண்ணிடமும் நிகழ்ந்தது. அவள் கி.ராவின் படைப்புகளை (இரு பெண்களும் அவரது மொழியில், கதை சொல்லும் பாங்கில், கதையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள்) விரும்பிப் படிக்கும் போது ஏற்படுத்திய சிறப்புப் பாதிப்பில், அம்மொழியில் 25 கவிதைகள் படைத்தாள் என்பது ஒரு மொழி நிகழ்த்தும் மாயை என்பதைவிட வேறு என்ன சொல்லமுடியும்?.

பதனீர் இறக்கப் பாளை சீவிக் கலயம் கட்டப் போனவனிடம் பனை பேசலாயிற்று.

தான் பிறந்து வளர்ந்த கதை, கண்ட கதை, கண்மூடி நின்ற கதை, வானில் கைவீசி விண் மீன்களிடம் உரையாடிய கதை. கொடுங் காற்றுக்கும் அடை மழைக்கும் கொடுங்கிய கதை. உயிரினங்களைத் தோற்கடிக்கும் வெயிலுடன் போராடிய கதை…

இவ்வாறு எனக்கென்றோர் உலகம் உருவாயிற்று. வாழும் போதே குடிப்பதற்கும் கருப்புக் கட்டி காய்ச்சவும் பதனீர் கொடுத்தேன். உண்ணக் கள் கொடுத்தேன். உறிஞ்ச நுங்கு கொடுத்தேன். தின்னப் பழம் கொடுத்தேன். கூரை கொடுத்தேன். விறகு கொடுத்தேன். உத்தரமும் தூணும் கொடுத்தேன். மனிதன் சுமந்து தீராப் பாரம் தூக்கக் கடவம் கொடுத்தேன். சின்னப் பிள்ளைக்குக் கிலுக்காம் பெட்டி கொடுத்தேன். அவல் போட்டுத் தின்ன கொட்டான் கொடுத்தேன். பனந்தவண், பனங் கிழங்கு கொடுத்தேன். மறுபடியும் விடலைப் பனைகள் என சந்ததிக்கு வழி கொடுத்தேன்.

3. என்று பனை மரமாய் நாஞ்சிலார் படைப்பாளி ஆன கதை. அவருடைய படைப்புலகம் முற்றிலும் கற்பனையோ அனுபவமோ இல்லை. அவரது சிறிய வயதில் மத்தியானம் வகுப்பாசிரியரிடம் அனுமதிப் பெற்று ஒன்றரை மைல் வந்து, திருமண வீட்டில் சாப்பிடப் பந்தியில் அமர்ந்த போது, பாதியில் தன் ஏழ்மையால் எழுப்பி விட்ட சோகம், அவமானம், பசியின்பால் உள்ள கோபம் ஒளியற்ற சூழலிலும் படித்து, முதன்மையாய்த் தேர்ச்சி பெற்று வேலைக்கு அலைந்த போது, தேளின் ஆயுதத்தை மக்கள் எடுத்து தேளாய்க் கொட்டிய வார்த்தைகள், ஆகிய அனைத்தும் படைப்பின் பார்வையாகியது நாஞ்சிலாருக்கு. எனினும் இதனால் ஒரு சாய்வு இருப்பினும் தான் பார்வையே அற்றவன் அல்லன் என்கிறார் நாடன்.

அன்று நா. பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ நாயகன், நாயகி பெயர்களை அரவிந்தன், பூரணி என்று மக்களுக்குச் சூட்டிய தமிழ் ரசிகர்களின் ஆதரவு இன்று இருந்தால் ‘தீபம்’ கருகிப் போயிருக்குமா? வணிக இதழ்கள் சிறுகதை இயக்கத்தை குழி தோண்டிப் புதைத்ததைக் காப்பாற்ற இவ்விதழ்கள் போராடியது என்றும், தி.ஜாவின் எழுத்தைப் போல் கலை நுணுக்கம் நிறைந்தது ஆ.மாதவன் கதையில் என்றும், மனித சோகமும் வறுமையும் பூமணிக்கு என்றால் அன்பு வண்ணதாசனுக்கு என்றாயிற்று என்றும் ஆசிரியர் கட்டுரையில் பதிவு செய்கிறார். இந்த 50 ஆண்டுகளில், தாண்டி விட இயலா சிகரங்கள் என்று கூறப்படும் புதுமைப் பித்தனையும், மௌனியையும் சில சிறுகதைகள் தாண்டி விட்டன என்கிறார் ஆசிரியர்.

தனி மனித உறவு பற்றிப் பேசிய ஆசிரியர், சமூகத்தில் அவனுக்கு இருக்கும் உறவு பற்றியும் பேசுகிறார். தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் பாம்பின் சீற்றம் போல் என்கிறார். உலகம் அயோக்கிய மயமாக இருந்தாலும், வன்முறைகளில் ஈடுபட்டுத் துன்புற்றாலும், கிட்னி திருடி, சாராயம் விற்று, கலப்படம் செய்து விபசாரம் செய்து பணம் ஈட்டினாலும், சிலர் தன் நல்ல தன்மைகளை அற்ப சுகங்களுக்காக இழக்காது உலகத்தின் சமன் நிலையைக் காப்பாற்றி வருகிறார்கள் என்கின்ற கருத்தை முன்னிலைப் படுத்துகிறார். 1994 ஆம் ஆண்டு ஆன்மீக வாழ்க்கை முறைப் பயிற்சி முகாமின் அனுபவத்திலிருந்து இது பெறப்பட்ட கட்டுரை.

பள்ளியில் அரை மதிப்பெண் குறைந்து விட்டால், ஒரு கண்ணாடித் தம்ளர் கீழே விழுந்து விட்டால், ஒரு கப் பால் சிந்திவிட்டால், தாய்மார்களின் தடித்த வார்த்தைகளும், அடிக்கும் அடிகளும், அரசு அலுவலத்தில், அல்லது வங்கியில் தகவல் ஒன்று பெறும் போது எதிர்நோக்கும் அடுத்த பதில்கள், கான்வென்ட் பள்ளிகளில் சகோதரிகளும் தாய்களும் பெற்றோரைப் பார்க்கும்பாணி, பேருந்து வரிசையில் நிற்கும் பொழுது, இடம் கிடைத்ததும் செய்யும் ஆக்கிரமிப்பு, இரயிலில் முன்பதிவு செய்யும் வரிசையில், ரேஷன் கடையில், சாலையோர சடைகளில் பொருளொன்று விலைகேட்டு வியாபாரியிடம் வாங்கிக்கட்டிக் கொள்ளும்போது, (சார்! சென்னையில் விலைகேட்டு வாங்காவிட்டால் தொலைந்தோம். நம் பரம்பரையைப் பற்றி நமக்கே சந்தேகம் வந்துவிடும். ஆட்டோவைக் கூப்பிடும் போது… இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்).

வயது முதிர்ந்த தந்தையிடம் மகன், சக மனிதனை அவன் தலித் எனும் காரணத்தால் சாணத்தை, மலத்தை….

(எழுதவே நாறுகிறது)…..

கணக்கற்ற நீதி நூல்கள், எண்ண எண்ணக் குறையாத மதங்கள், தெருவுக்குத் தெரு கோயில்கள், சுவிசேஷ ஆராதணைகள், இன்னுயிர் நேசம் கொள்ளச் சொல்லும் தியானங்கள், வாழ்வியல் நுட்ப கலைகள், கலை, இலக்கியம் இன்னபிற இன்பம் இருந்தும் என்ன பயன்? ஏனிந்த வன்மம்? காழ்ப்பு? கடுப்பு? வெறுப்பு?

ஏன் எமது மக்கள் அனைவருமே பிரஷர் குக்கரினுள் வாழ்வது போன்றதோர் மன நிலையை எப்போதும் கொண்டிருக்கிறார்கள்? எதன் மீதான ஏமாற்றம், வெறுப்பு, கசப்பு, தோல்வி இந்த வன்மத்தை உருவாக்குகிறது? சக மனித சகிப்பு ஏன் காணாமற் போயிற்று? நாளை மனநோய் மருத்துவர்களின் தேவை அதிகரிக்கப் போவதன் அடையாளங்களா இவை? கிராமத்து மனிதனைவிட, நகரத்து மனிதன் இந்தப் பொறிக்குள் விரைந்து சிக்கிக் கொண்டான் எனில் அவனது கல்வி, உயர் பதவி, சம்பளம், வாழ்க்கை வசதிகள், அனுபவங்கள், துய்ப்புகள் அவனுக்கு எந்த விடுதலையும் தேடித் தராதா?

நமது பண்பாட்டு அடையாளங்கள், மனித வாழ்வை மேம்படுத்துவதாகச் சொல்லும் முயற்சிகள், நமது கடவுள்கள், தேவதூதர்கள், ஆன்மீக வழிகாட்டிகள், நீதி போதனைகள், அறச்சார்புகள் எல்லாம்… எல்லாம் கை நழுவிப் போய்க் கொண்டிருக்கின்றனவா? என்று ‘வன்மம்’ என்று கட்டுரையில் கேட்கிறார்.

அன்பர்களே! ஆசிரியருக்கு என்ன பதில் தரப் போகிறோம். ஆண்டவனின் அபிஷேகம் இறங்கும் வரை காத்திருக்கச் சொல்லுவோமா! ஆத்மாவின் உள் தரிசனம் கிடைக்கும் வரை நிதானமாகப் பார்த்துக் கொண்டிருக்கச் சொல்லுவோமா? என்ன செய்வோம் தோழர்களே! எல்லோரும் நோன்பிருந்து ஹஜ் நோக்கிப் பயணிப்போமா? எது எது செய்தால் நம் பித்தம் தெளியும்?.

‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ என்னும் கட்டுரையைப் படிக்கும் போதே நானும் நாஞ்சில் நாடனுடன் ஒரு லார்ஜ் எடுத்துக் கொண்டு, அவருக்கு அமுதாகிய மது என் உடலில் மனதில் கருத்து நீல நிறமாகி… மலங்க மலங்க முழித்து…

சிறிய கட் பெறினே எமக்கீயும் மன்னே

பெரிய கட் பெறினே யாம் பாட தான்

மகிழ்ந்துண்ணும் மன்னே!

ஔவையாரும் அதியமானும் கண்ணுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தனர். கண்ணாடி டம்ளரில் ஊற்றி அருந்தியதிலிருந்து வெள்ளி டம்ளரில் குடித்தது வரை எழுதியிருக்கிறார். ஆனந்த விகடனில் ஞாநியின் அறிந்தும் அறியாமலும் போல், நாஞ்சில் நாடன் மதுவின் மகிழ்ச்சியையும், அளவாய் உடலுக்குத் தக்கவாறு அருந்தக் கற்றுக் கொண்டு தெளிவாய் இருக்க வேண்டும் என்கிறார்.

“மது அருந்திய பின் வாகனம் ஓட்டிச் செல்பவன் மேற் கொள்ளும் அபாயகரமான துணிச்சல்களை, சாதாரணமாக அவன் செய்வதில்லை. அவனது வாய் மொழி, உடல் மொழி எல்லாமே தீவிர மாற்றம் பெறுகின்றன. எனவேதான் போதை விரும்பத்தகாத செய்கை எனப் பொதுவாகக் கருதப்படுகிறது”.

50 ஆண்டுகளுக்கு முன் ஒரு கல்லூரி மாணவன், வேலைக்குப் போகும் இளைஞன் மது பானம் அருந்த சிரமமும் துணிவும் மேற் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் இப்பொழுதோ 10 வயதுப் பையன் மிக எளிதாக தடையின்றி அரையோ முழுதோ விளங்கிச் செல்ல முடிகிறது. என்கிறார் ஆசிரியர். கள் இறக்குவது குற்றம். அதில் கலப்படம் என்பது அரசு பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்து வழங்கும் மது பானங்கள்.அதற்கு அவன் செலவழிக்க வேண்டியது நாள் ஒன்றுக்கு 60 ரூபாய்.

ஆசிரியருக்கு மன நிலை கிளம்பி மதுக் குப்பியையும் கண்ணாடித் டம்பளரையும் எடுக்கும் போது, அவரது மகன் கிளாஸைத் தூக்கிக் கொண்டு வருவான்.  கண்ணாடித் தம்பளர் உடைந்தால் நான் பதறுவதில்லை என்கிறார் ஆசிரியர். (நீங்கள் பதற மாட்டீர்கள் கிளாஸ் உடைந்து பையன் கையில் காலில் குத்தி விடும் என்று உங்கள் மனைவி பதறுவார்கள். தாயின் இயல்பு தானே இதனால் இவரது மகன் பின்னாளில் மது அருந்தப் பழகினாலும் குற்ற உணர்வும் இருக்காது. குடிகாரனாகவும் மாற மாட்டான் என்று உறுதியாக் கூறுகிறார். ஏனெனில் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’

சரிங்க அண்ணாச்சி! இந்தத் தெளிவு அறிவு, என் வீட்டு வேலைக்கு உதவ வரும் சகோதரியின் கணவரிடம் எதிர்பார்க்க இயலுமா? கணவர் குடித்தார். திருமணமான 13 வயதிலிருந்து வீட்டு வேலைக்கு வருகிறார். கடுமையான ஆஸ்துமா தொந்தரவுடன். எனக்குப் பார்க்க சகிக்காது. அவளை உட்கார வைத்து உணவு உட்கொள்ள வைத்து ஆசுவாசப் படுத்தி அனுப்புவேன். அவள் மகன் குடிக்கிறான். மருமகள் பேத்தி என்று அனைவரும் சேர்ந்து குடும்ப வண்டியை இழுக்கிறார்கள் நண்பரே! அவள் கண்ணீரை கால முழுவதும் ஏந்தி நிற்க என்னிடம் அட்சய பாத்திரம் இல்லை எழுத்தாளரே! இல்லை! அந்த தீதை நாம்தான் ஊற்றிக் கொடுத்தோம் என்று அனுபவிக்கட்டும் சந்தோஷத்துடன் இதையும் என்று பிள்ளையாராய் உட்கார்ந்து விடலாமா நண்பரே! யாம் பெற்ற இன்பம் நீயும் பெறுவாய் என்கின்ற கம்யூனிஸம், துன்பத்தை ஏந்தி நிற்குமா சொல்லுங்கள் எழுத்தாளரே!

“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று வாளாது இருக்கவா?

 

தொடரும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.