சிகரம் நோக்கி.. (2)
சுரேஜமீ
எதைக் கொண்டு வந்தோம்? வாழ்க்கையில் நாம் துய்ப்பதும்; எய்துவதும், ஏகுவதும், பெற்றதும், பெறுவதும் அனைத்தும், இடையில் வந்தவையே!
அதற்கும் மேலாக இவையெல்லாம், நம்மை விட்டுச் செல்பவையோ அல்லது நாம் விடுத்துச் செல்பவையோதான்!
நாம் செய்ய வேண்டுவன எல்லாம், இந்த உண்மையைச் சரியாக வளரும் தலைமுறைக்குப் புரிய வைப்பதுதான்!
எப்படி?
தென்னாட்டு சார்லி சாப்ளின், நாஞ்சில் தந்த முத்து, நகைச்சுவையால் நல்ல தமிழில் நம்மை சிந்திக்க வைத்த மனிதர், இருந்து கொடுப்பதல்ல வள்ளல் தன்மை; இல்லாதும் கொடுப்பதே எனும் வாழ்க்கைக்குச் சொந்தக் காரர், அவர் தான் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள்!
அவர் ஒரு முறை ஒரு விழாவில் பங்கெடுத்து, சிறுசேமிப்புத் திட்டம் பற்றிப் பேசுகிறார். அவ்விழாவில், சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சரும், பொருளாதார நிபுணருமான, ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமையேற்றிருக்க, என்.எஸ். கே ஒரு கதை மூலம் நமக்கு எது தேவை என்பதை விளக்குகிறார்!
அந்தக் கதை உங்களுக்காக…..
ஒரு உணவு மற்றும் தங்கும் விடுதிக்கு வரும் பயனாளி, 100 ரூபாயைக் காசாளரிடம் கொடுத்து, தான் விடுதியை விட்டுச் செல்லும்போது திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறுகிறார். அந்த சமயத்தில், காசாளரிடம் பாக்கி வசூலிக்க மளிகைக் கடைக்காரர் வருகிறார். உடனே, அந்தப் பணத்தை மளிகைக் கடைக்காரருக்கு கொடுக்கிறார் காசாளர். மளிகைக் கடைக்காரர், சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்கிறார். ஆக, அந்தப் பணம் தற்போது மருத்துவரின் கைக்கு வந்துவிட்டது.
அடுத்த நாள் மருத்துவர், ஒரு விருந்தோம்பலுக்காக, உணவு மற்றும் தங்கும் விடுதிக்குத் தரவேண்டிய பாக்கிக்காக,காசாளரிடம் அந்த 100 ரூபாயைக் கொடுக்கிறார்.
அன்று மாலை, விடுதியிலிருந்து காலி செய்து புறப்படும் பயனாளி வருகிறார். தான் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு, தான் கொடுத்த அந்த 100 ரூபாயைப் பெற்றுக் கொள்கிறார்.
பெற்றுக் கொண்ட பயனாளி, காசாளரிடம் என்ன கூறுகிறார் என்பதே, நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடம் என்று சொன்னால் மிகையாகாது!
பயனாளி கூற்று – இது ஒரு செல்லாத நோட்டு! செலவாணி ஆகிறதா என்று பார்க்கத்தான் உன்னிடம் தந்தேன் என்று!
கூறியதோடு மட்டுமல்ல; அந்த 100 ரூபாயை, காசாளரின் கண்ணெதிரே கிழித்தும் போட்டு விட்டார்!
கலைவாணர் அவர்கள் இந்தக் கதையைக் கூறிவிட்டு,
இதில் யாருக்கு நட்டம்? எனும் கேள்வியையும் எழுப்பினார்!
இதற்கு தலைவராக இருந்த சண்முகம் செட்டியார், இதுதான் செல்லாத நோட்டாயிற்றே; ஆதலால், யாருக்கும் நட்டமில்லை என்கிறார்!
அப்படியானால், காசாளர், மளிகைக் கடைக்காரர், மருத்துவர் என பலருடைய கடன்கள் இதன் மூலம் அடைபட்டிருக்கிறதே என்கிறார் கலைவாணர்!
அதற்குச் செட்டியார் தந்த பதில் என்ன தெரியுமா? இதற்குப் பெயர்தான் ‘நாணயம்’ என்பது! ஒரு பொருள் மீது வைக்கப்படும் மதிப்பு! ஒரு மனிதன் மீது இருக்கும் நம்பிக்கை!
ஆக, நாம் கையாளும் காகிதத்திற்கே அவ்வளவு மதிப்பு என்றால், அதை உருவாக்கும் மனிதர்களுக்கு எவ்வளவு மதிப்பு என்பதை நாம் அறிந்தோமா?
உயிர்கள் துச்சமாக அல்லவா மதிக்கப்படுகின்றன?
மீண்டும் தொடங்கிய இடத்திற்கே செல்வோம்! எதைக் கொண்டு வந்தோம், நாம் இழப்பதற்கு! இருப்பதைப் பகிர்ந்து, இன்பமாய் வாழ, நாம் கற்றுக் கொடுத்தால்,
வரும் சமுதாயம் வாழ்வில் ஒளி பெறும்!
ஒரு பதிவாக ஆரம்பித்தது, ஒரு தொடராக ஆகிவிட்டது! தொடர்வோம் சிந்தனையை!!
சிகரத்தை நோக்கி!