இலக்கியம்கவிதைகள்

காலம்! (3)

மீ. விசுவநாதன்

vallamai11

வானவில் இன்பம் , வளர்கதிர் பேரின்பம் ,
வான்மழை அற்புதம் , வாழ்க்கையோ தேன்துளி ;
அம்புலி கண்விருந்து ; அம்மாப்பா ஆனந்தம்;
நம்புஇவை யாவையும் நன்று. (21)

கருவில் இருந்தநம் காலங்க ளொன்றும்
திரும்ப நினைத்துத் திரையில் தெரியும்
நிழற்பட மன்று ; நிறைந்த கொடையே
பழக்க மறதிப் பலன். (22)

புள்ளுக்குள் தோன்றுவான் , புள்ளாகத் தோன்றுவான்,
அள்ளிக்கொள் இந்தா அழகெனத் துள்ளி
நடனமும் ஆடுவான் , நம்கண்ணன் என்போல்
விடலை களுக்கும் விருந்து. (23)

துங்கைக் கரையிலே தோன்றிய பீடத்து
“சங்கரர் சீடர்கள்” சத்தியக் கங்கணம்
பூண்ட துறவிகளே ; பூப்போல் புனிதர்கள் ;
நீண்ட தவமே நிஜம் (24)

ஊரெங்கும் சிட்டுக் குருவி கிடையாது ;
சீரோங்கு(ம்) நல்லூர் சிருங்கேரி சாரதா
கோவில் வளாகத்தில் கொஞ்சும் குருவியினம்
கூவி வளர்க்கும் குலம். (25)

வேதம் படிப்பதுவும் வேதாந்தம் கேட்பதுவு(ம்)
ஏதும் குறைவில்லை ; என்றாலும் ஓதும்
படியே நடக்கிற பண்பாளர் பார்த்துப்
படிந்தாலே கிட்டும் பலன். (26)

எல்லா மொழியும் இனிது அறிந்தோர்க்கு !
இல்லார்க்குத் தன்மொழியே இன்பமாம் ; பொல்லாங்கும்
சொல்வர் புரியாமல் ; சோதனை செய்தாலே
வல்லமை கூடி வரும். (27)

அம்மாவோ, அப்பாவோ, ஆசானோ, பந்துவோ ,
எம்மாம் பெரிய எதன்முன்னும் எம்பிக்
குதிக்கு மகந்தைக் குரங்கு ; அதனை
மதிக்காது வாழ்தல் மதி. (28)

எல்லோரும் நல்லவரே என்கின்ற எண்ணமே
நெல்லாய் முதிர்ந்துளது நெஞ்சுள்ளே – புல்லாய்
இருந்தாலும் அப்புற்கே ஈடிலா தர்ப்பைப்
பெருமைப் பவித்ரமாம் பேர். (29)

கட்டிப் புரண்டு களிக்கிறான் காசிலான் !
முட்டியும் துட்டெனும் மோகமுள் வெட்டிலும்
மாட்டி முழிக்கிறான் மாமனிதப் போக்கிரி !
வெட்டியாய்க் காலமோ வீண். (30)

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க