இலக்கியம்கவிதைகள்

எத்தனை நிலவுகள்!

-துஷ்யந்தி, இலங்கை

இரவோடு உறவாட
தினந்தோறும் மறவாமல்
வான் பரப்பில் ஜாலமிட
வாராயோ…
வட்ட நிலவே…!

வார்த்தையின்றிக் காத்திருக்கும்                    moon
கவிஞனுக்கும் பார்த்தவுடன்
பல நூறு சொல்லெடுத்துத்
தரமான கவிபடைக்க,
கவியோலை கொண்டிங்கு
வாராயோ…
காவியநிலவே…!

இருமனங்கள் இணைந்துள்ள
காதலுக்கு தூது சென்று
துன்பமெல்லாம்
வாங்கிக்கொண்டு
இன்பங்கள் கொண்டுசேர்க்க
வாராயோ…
காதல் நிலவே…!

பால்மணக்கும்
குழந்தைக்கெல்லாம்
நட்பென்னும் நூல் கொண்டு
பல வர்ணப் பட்டமாய்
வானமெங்கும் பறக்கவே
நித்தமும் முற்றத்திலே
வாராயோ…
பால் நிலவே…!

சூரியனுக்கு ஓய்வு தந்து
உலகெல்லாம் குளிர வைக்க
இரவென்னும் படலம் கொண்டு
பனிப்படலப் போர்வை செய்து
பூமியை மெத்தையாக்க
வாராயோ…
பனி நிலவே…!

வண்டெல்லாம்
உறங்கும் நேரம்
உன் வதனத்தின் எழில்
அல்லியின் மேல் படவே – அவள்
மெல்லத் திறக்கும் அழகைக்
கொஞ்சிப்போகத் தினம்
இருளிலே ஒளி கொண்டு
வாராயோ…
அல்லி நிலவே…!

மனங்களெல்லாம் மகிழ்வித்தாய்
உலகெல்லாம் குளிரவைத்தாய்
உயிர்களெல்லாம் உறங்கவைத்தாய்
தென்றலோடு கீதம் தந்தாய்
நதியிலே ஓவியமானாய்…!

நாளையென்ற சொல்லுக்கு
ஒளியேற்றி மறைகின்றாய்
நாளைகள் உனக்காகக் காத்திருக்கு
மறவாமல் உன் வதனத்தைக்
காட்டிவிட்டுச் சென்றிடு வானத்து
வெண்ணிலவே…!

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க