சுரேஜமீ

peak1
இயற்கை நம் கண் முன்னே நிற்கும் மிகப் பெரிய சவால் மட்டுமல்ல; நம்மைச் செதுக்கி சீர்தூக்கும் ஒப்பற்ற ஆசிரியர் என்று கூடச் சொல்லலாம். ஆக்கத்திற்கும் அழிவிற்கும் சான்றாக இருப்பது. கடந்த இரு நூற்றாண்டுகள் மனிதனின் அறிவு வளர்ச்சியைப் பன்மடங்கு உயர்த்தி இருந்தாலும், உலகம் தொடங்கிய காலத்திலிருந்து தன்னை இயக்கிக் கொண்டிருக்கும் இயற்கைக்கு எதிராக, இன்னமும் நாம் ஒரு அடி கூட எடுத்து வைக்க இயலவில்லை என்றால்,

இது எதை உணர்த்துகிறது?

இயற்கைச் சீற்றத்தால் எத்தனையோ பேரழிவுகள் நடந்திருக்கின்றன. எத்தனை பூகம்பங்கள்? சுனாமிகள்? வருமுன் எச்சரிக்கத் தெரிந்த நமக்கு, வருவதைத் தடுக்க ஒருக்காலும் இயலவில்லை. ஆக, நாம் அறிந்து கொள்ள வேண்டியது,

இயற்கையோடு கூடுமான அளவு ஒத்து வாழ வேண்டும் எனக் கற்றுக் கொள்வதும்,
இந்த பூமி வெப்பமடையாமலும், மாசு படியாமலும் பார்த்துக் கொள்வதும்தான்!

இந்த உலகத்திற்கு மனித குலம் செய்யும் ஒப்பற்ற கைமாறு என்று உணர வேண்டும்.

மனம் போன போக்கில் வாழ நினைக்கும் நாம் என்றாவது, இயற்கை இப்படி வாழந்தால் என்ன நடக்கும் என்பதை யோசித்திருக்கிறோமா? இயற்கைக்கு ஏது மனம் என்ற எண்ணம் வருகிறதோ? இயற்கையின் மணம் தவறும் செயலுக்குத் துணைபோகும் ஒவ்வொரு நிமிடமும், இயற்கையின் மனத்தைச் சீண்டுகிறோம் என்ற சிந்தனைத் தெளிவை உங்கள் முன் வைக்க எண்ணுகிறேன்.

இயற்கையின் முதல் பத்து தலையாய பிரச்சினைகள் என்ன என்பதை உங்களுக்காகப் பட்டியலிடுகிறேன்;

1. மக்கள் தொகை

சமீபத்திய கணக்குப்படி (2015), உலக மக்கள் தொகை சற்றேறக் குறைய 731 கோடி. நம் இந்தியாவில் மட்டும், 126 கோடி என்றால் , நம் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 17% சதவிகிதத்திற்கும் சற்று கூடுதலாக இருக்கிறது.

சற்று யோசியுங்கள் நண்பர்களே. மனிதன் வாழ்வதற்கு உணவும், உடுக்க உடையும் மிகவும் இன்றியமையாதது. இதை எங்கிருந்து நாம் பெறுகிறோம்? நம்மை இத்தகைய அபரிமிதமான வளர்ச்சிக்கும், தேவைகளுக்கும் தயார்படுத்தி இருக்கிறோமா என்பதே கேள்வி?

2. காலநிலை மாறுபடுதல்

மிகவும் வேதனை தரக்கூடிய செய்தி இதுவென்றால், நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நம்முடைய முன்னேற்றப் பாதையில், நாம் கண்ட வளர்ச்சியெல்லாம், இந்த பூமித்தாயின் நலிவில்தான் என்றால், வளர்ச்சி என்று மார் தட்டிக் கொள்வதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது?

இன்றைக்குப் புவியியல் வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? இன்றைய நிலையில், எல்லையை மீறி நாம் செய்த செயல்களால், சுற்றுச் சூழல் பல்வேறு எதிர்மறையான கால மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டது. ஆகையால், நம் கையை மீறிப் போன இந்த நிலையைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், வேண்டுமானால், கூடுதல் செய்வதைத் தவிர்ப்பதும், பூமியைப் பிளந்து கிடைக்கும் ஆற்றல் மற்றும் படிம எரிபொருள்களுக்கு மாற்றாக, இயற்கையோடு ஒத்த நிலையில் உள்ள எரிசக்திகளை உருவாக்குவதும்தான் என்று.

3. பல்லுயிர் பெருக்கங்களின் இழப்புகள்

இதைப் பற்றி எவரேனும் சிந்தித்ததுண்டா? இதை உங்களுக்கு எளிதில் புரிய வைக்க வேண்டுமெனில், ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன். கிராமங்களில் கிணறு பார்த்திருப்பீர்கள். கிணற்றை உற்று நோக்கினால், கிணற்றில் நீர் மட்டுமா இருக்கும்? சில பச்சைத் தாவரங்கள் இருக்கும். சில தவளை போன்ற உயிரினங்கள் இருக்கும். நுண்ணுயிரிகள் பல இருக்கும். இவைகளெல்லாம் இயற்கையின் தேவைகள் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதற்கான ஒப்பீடுகள் மட்டுமன்று; மாறாக நம் வாழ்விற்குத் தேவையான சத்துள்ள குடிநீருக்கும் ஆதாரமாக இருக்கிறது என்றும் சொல்லலாம். இது ஒரு புவி சார்ந்த வாழ்வியல் சுற்று.
ஒரு கிணற்றுக்கே இவ்வளவு என்றால், சற்று உங்கள் சிந்தனை வட்டத்தைப் பெரியதாக்கி, உங்கள் ஊரில் உள்ள மற்ற நீர் நிலைகள், தாவரங்கள், இயற்கை வளங்கள் என எண்ணிப் பார்த்தால் புரியும், இந்த பூமியில் அழிந்து வரும் உயிரினங்களின் அடிச்சுவடுகள்!

4. வேதிப்பொருட்களின் சுழற்சி

நாம் இதுகாறும் கரும்புகை மட்டுமே சூழலை மாசுபடுத்துவதாக எண்ணுகிறோம். ஆனால், பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் முதலிய வேதிப்பொருட்களின் சுழற்சிக்கும் இதில் முக்கியப் பங்குண்டு என அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உணவு மற்றும் வேறு தேவைகளுக்காக ஓராண்டுக்கு ஏறக்குறைய 120 லட்சம் நைட்ரஜன் மூலக்கூறுகள் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப் படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஏற்படும் பாதிப்புகள் எண்ணிலடங்கா! சுவாசிப்பதற்குத் தேவையான ஆக்சிஜனை உண்டு பண்ணக் கூடிய பல நுண்ணிய கடல் தாவரங்கள் அழிவதோடு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த சுற்றுச் சூழலும் மாசு படுகிறது என்பது நம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று!

நாம் பெறக்கூடிய ஒவ்வொரு வெற்றியும், நம் சமூகத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டுமே ஒழிய, ஒரு தனி மனித சுயநல நோக்காக இருக்கக்கூடாது என்பதில்தான், நம் வரலாறு அடங்கியிருக்கிறது. வரும் தலைமுறைகள் முன் இருக்கக் கூடிய சவாலான பிரச்சினைகளை, அவர்கள் எதிர்கொள்ளக் கூடிய வகையில், அறிய மேற்கொள்ளும் முயற்சியில், சுற்றுச் சூழல் மிகவும் இன்றியமையாதது.

asigaram

இதோ நம் கண்களைக் குளமாக்கி, இதயத்தை சுக்கு நூறாக்கிய, நேபாளத்தில் நடந்த இயற்கைச் சீற்றம் சுமார் 3000 க்கும் மேலான உயிர்களையும், பழமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களையும், மிகப் பெரிய பேரிழப்பையும் அந்நாட்டு மக்களுக்குக் கொடுத்திருக்கிறதென்றால்,

இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு, சுற்றுச் சூழலும் ஒரு காரணம் என்பதை நாம் அறிய வேண்டாமா?

நண்பர்களே சிந்தியுங்கள்!

தொடர்ந்து பயணிப்போம்…….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.