கனவு திறவோன்

பெண்ணே நீ எப்படி இருக்கிறாய்?
இன்னமும் அப்படித்தானிருக்கிறாயா?
அப்படித்தான்
குனிந்து நிமிராமல்
தரையைப் பாராமல்
தெருவைக் கடக்கிறாயா?

நீ கடந்த பின்னும்
அங்கேயே அலைபவர்கள்
இன்னும் எத்தனை பேர்?

அப்படித்தான்
சத்தம் காட்டாமல்
கன்னம் அமுங்கச்
சிரித்துக் கொண்டிருக்கிறாயா?

அந்த ஒளிச்சிதறலில்
சவுலாகப் பார்வை இழந்து
பவுலாக உலகைப் பார்ப்பவர்
இன்னும் எத்தனை பேர்?

அப்படித்தான்
படிக்காமல்
பாஸாகிக் கொண்டிருக்கிறாயா?

நீ பாஸாகப் படித்தவர்கள்
இன்னமும்
அரியர் எழுதிக் கொண்டிருக்கிறார்களா?
அதை அறியாதவர்கள்
இன்னும் எத்தனை பேர்?

அப்படித்தான்
பவுடர் பூசாமல்
மினுமினுக்கிறாயா?

உன் முன் பிரகாசிக்க
பவுடர் அப்பிப் கொண்டு
வந்தவர்கள்
மூஞ்சியில் கரிபூசிப் போனவர்கள்
இன்னும் எத்தனை பேர்?

பெண்ணே நீ எப்படி இருக்கிறாய்?
இன்னமும் அப்படித்தானிருக்கிறாயா?

நீ அப்படித்தான் இருப்பாய்…
நாங்கள்தான் மாறிக் கொண்டிருக்கிறோம்…
நண்பனாக வந்து
காதலனாகி
நீ அண்ணன் என்றதும்
தேவதாஸாகிக்
கவிஞனாகி…
நாங்கள்தான் மாறிக் கொண்டிருக்கிறோம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அப்படித்தானிருக்கிறாயா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *