சரித்திரம் படைக்கத் துடிப்பவன்டா!
-றியாஸ் முஹமட்
அந்த முள்ளி வாய்க்கால்தான்
என் பெற்றோர்களுக்குக் கொள்ளி
வைத்தது!
அன்று ஈழத்து அகதிமுகாம்கள் கூட
எங்களைத் தள்ளி வைத்தது
என் பள்ளி படிப்புக்கு அன்றுதான்
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது!
உறவுகள் இல்லாது ஒதுக்கப்பட்டவன்
தேர்வு இல்லாமலே தெருவுக்கு வந்தவன்
தேர் இழுக்கும் மாந்தர்கள் மத்தியில்
பொதி சுமக்கும் கழுதையானேன்!
ஒரு கூலிக்குப் பிறந்தவன்தான்
அதற்காகக் கூனிக் குறுகி
கேள்விக் குறியாக வாழ முடியுமா?
அநியாயத்தைத் தட்டிக் கேட்பேன்
தனித்து நின்றாலும் எதிர்த்து நிற்பேன்
சமூகத்தைக் கூறு போட நினைத்தால்
அவனைச் சந்தியில் வைத்து
சந்து கிழிப்பேன்டா!
அழுக்கன்தான்டா நான்
அநீதிகளைக் கண்டால்
வெடி குண்டா வெடிப்பேன்டா!
என்னைச் சுட்டிப் பையன் என்று சொல்லாதே…
சுட்டுப் போடுவேன்!
கிட்ட வந்து நெருங்காதே
வகுந்து போடுவேன்!
ஊரில் உள்ள
நாதாரி, காவாலிகளுக்கெல்லாம்
இனி நான்தான்டா கோடாரி!
சாக்கடையில்தான் நான் சங்கமித்தாலும்
சமுத்திரத்தில் நான் குளித்தவன்டா
சரித்திரம் படைக்கத் துடிப்பவன்டா
பேய் பிடித்து ஆடுதடா உலகம்
ஒரு புரட்சியில்லாது அடங்குமா
கலகம்?