பாரினில் பாரதப் பெண்கள் (1)

சுலோசனா

முன்னுரை

பாரினில் பாரதம்
தமிழ் ஆந்திரா, கேரளம் ,கர்னாடகா எனத் தெற்கிலும் மஹாராஷ்டிரா,குஜராத்,ஹரியானா,பிஹார் பஞ்சாப்,எனப் பலவாக நாடுகள் பிரிந்து இருந்தாலும், ஹிந்து தர்மம் சொந்த தர்மம் எனும் அடி நாதமே அஸ்திவாரமாக இருக்கின்றது. பலவித மனம் உள்ள பல வித பூக்களால் தொடுக்கப்பட்ட கதம்பமாலையாக பாரதம் உள்ளது. பாரதத்தில் மங்கையரும் பல விதமான மலர்களே. அவைகள் பூத்துக் காயாகி கனியாகிப் பக்குவமடைகிறது. பாரதம் போன்ற கதம்பமாலையே அதன் பல்வேறு நாட்டுப் பெண்களும்.

அந்த கதம்ப மாலையை இணைக்கும் சூத்திரம் நூலாகப்பட்டது தியாகம். தியாகமே பாரதத்தில் பெண்கள் பலவித முறைகளில் ஆடை ஆபரணங்கள் அணிந்தாலும்,பல மொழிகளில் பேசினாலும் ஆதாரச் சுருதியாக ஒலிக்கும் நாதம் ஒன்றுதான். அது தியாகம்தான். சராசரிக்கும் மேற்பட்ட பெண்மணிகள் நாட்டிற்காக தியாகம் செய்வார்கள்.சராசரியான குணமுடைய பெண்கள் வீட்டிற்காக,தான் நடத்தும் இல்லறத்திற்காக, கணவனுக்காக, மகன், மகளுக்காகவும், அடுத்து பேரன் பேத்திகளுக்காகவும் வாழ்ந்து வருகிறார்கள்.அதில் இன்பம் காணவும் பழக்கப்பட்டுவிட்டனர். இதற்கு மாறான பெண்களே இல்லையா எனக் கேட்கலாம். இருக்கலாம். ஆனால் அது எங்கோ ஒன்று.

தவறிழைத்தவர்களுக்கு ஒரு ஸ்லோகம் இவ்வாறு காணப்படுகின்றது;-

யத்ர நாரிஸ்ய பூஜ்யந்தே

தத்ர தேவா; ரமயத்தே ;

எங்கு பெண்கள் பூஜீக்கப்படுகிறார்களோ, அங்கு தெய்வங்கள் மகிழ்வடைகின்றன.என்பது இதன் பொருள்.இங்கேதான் இன்னொரு சொல் வழக்கும் உண்டு.

பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசு” ஆணின் வைராக்கியத்திற்கு பலகீனம் தந்து அவன் சம்சார சாகரத்தில் இருந்து கடைத்தேறாமல் இருக்கக் காரணம் பெண்ணே என்ற ஒரு கருத்து.

தமிழகத்தில் அரசவைக் கவிஞர் ராமலிங்கம் பாடுகின்றார். “மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்று பெண்பிறப்பை உயர்த்தி ஒரு கருத்தும் தீர்க்கதரிசியான மஹாகவி பாரதியார் ,பெண் என்று பூமிதனில் பிறந்து விட்டால் மிக்க பிழைகள் இருக்குதடி என்றும் இன்னொரு கருத்துமாக நம்முன் வைக்கின்றார்கள் இவ்வித இரண்டு கருத்துகளுக்கு நடுவேதான் இந்திய பெண்மணிகளின் வாழ்வு . ஆனால் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில்தான் ஒரு வழிப்பாட்டு முறை;-

இந்த கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்வதுபோல் ஒரு வழிப்பாடு ,சிவனும் சக்தியுமாக ,பெருமாளும் பிராட்டியுமாக இந்து கோவில்களில் பெரும்பாலும் வழிப்படுகின்றனர்.எங்கும் உள்ள இறைவனை ஆணாகவும் பெண்ணாகவும் தனித்தனியே வழிப்பட்ட பழக்கம் ஆயின் ஒரு திருத்தலத்தில் தமிழகத்தில் உள்ள திருச்செங்கோடு எனும் திருத்தலத்தில்தான் ஒரு சம நிலை வழிபாடு நடக்கின்றது.

இந்த மலைக்கோவிலில்தான் இறைவன் என் படைப்பில் அனைவரும் சமமே என்பது போல் ஒரு பாதி ஆணாகவும்,ஒரு பாதி பெண்ணாகவும் காட்சி அளிக்கின்றார். அவரே “அர்த்தநாரீஸ்வரர்” என அழைக்கப்படுகிறார். இவ்விறைவடிவம் தானாகவே உருவான சுயம்பு மூர்த்தி என்கிறது தல புராணம். இங்கு எழுந்தருளியுள்ள செங்கோட்டு வேலவரும் அவ்விதமே அழைக்கப்படும். இக் கோவில் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது.,என தாராளமாக குறிப்பிடலாம். நாயன்மார்களால் பாடல் பெற்ற தலம். அருணை முனிவர் பாடல் அருளிச் செய்த திருத்தலம். ஆணாகவும் பெண்ணாகவும் இரண்டும் ஒன்றுமாகவும் ஆகி நின்ற அவ்வடிவை பூஜித்தும் ஆண் பெண் இரு பாலரின் மனங்களும் ஏன் சம நிலைக்கு வரவில்லை எனத் தெரியவில்லை. மற்ற நாட்டினரும் மதிக்கும் பாரதப் பண்பாடு இன்று கலப்பட மற்றதாகக் கேள்வி.

பெண்களால் கட்டிக் காப்பாற்றப்பட்ட கலாச்சாரம் இன்று கலப்பட ஆசாரமாகிவிட்டதா என்றும் கேள்விகள் எழுகின்றன.ஒரு புறம் ஆசிரியையாக ,ஜில்லா அதிகாரியாக , நீதியரசியாக,காவல் துறையில் கண்ணியமுள்ள காவல் அதிகாரியாக ஏன் விண்வெளி விஞ்ஞானியாக. மறுபுறம்?

சின்னஞ் சிறுமி கூட சீரழிக்கப்படுகின்றனர்.உறவாக வந்தவராலும் கொடுமை ஊரானாலும் கொடுமை. யார் இதற்கெல்லாம் பதில் சொல்வது?இதில் பெண்ணே பெண்ணுக்கு எதிரி.வீட்டிற்குள்ளேயே மாமியார் என்ற பெயரில் நாத்தி என்ற பெயரில், அண்ணி என்ற பெயரில். இனப்பற்று தேவையற்ற இடங்களில் அதிகமாகக்கூட இருக்கின்றது .பெண்கள் இடத்தில் ஏன் இல்லை?

படித்த பாமர பெண் இனமே சிந்திப்பாயா? இறைவன் படைப்பில் இருவரும் சமம் என்றாலும் இயற்கையே நம்பிக்கை வைத்து, நாரீ மணி இடத்திலே படைப்புத்தொழிலில் சிறிது பங்கிட்டு கொடுத்திருக்கும் தாய்மை எனும் மாபெரும் பொறுப்பை தயங்காமல் தந்திருக்கிறது.

பெண்ணை துறந்தபெரும் தவச்சீலர்களாளும் தாயை துறக்க இயலவில்லையே. பெரும் பாலும் எல்லா உயிர்களிலும் பெண்ணிற்கே தாய்மைத்தவம் பலித்திருக்கிறது.

பரந்த பாரத மண்ணை உயரப் பறந்து கருடப் பார்வை பார்க்காமல் சின்னஞ்சிறு பறவையாக பறந்து பார்த்ததை ஆசையின் காரணமாகவும் ஆவலின் காரணமாகவும் பகிர்ந்து கொள்ள விழைந்து வந்துள்ள நன்றியுடன்

சுலோசனா

தட்டச்சு உதவி : உமா சண்முகம்

About சுலோசனா

வீணை பயிற்சியாளர், ஹிந்தி ஆசிரியர், ஆன்மீக எழுத்தாளர்.

One comment

  1. நன்றாக உள்ளது. ..

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க