கவிக்கோ ஞானச்செல்வன்

படக்கவிதைப் போட்டி (19)

மதிப்பீடும் முடிவுகளும்.
—————————–

11124265_850423111678556_1461065741_n

வணக்கம். வல்லமை மின்னிதழ் வளர்ச்சியை ஊக்கும் நல்லிதழ்.
நல்லமைப் பண்பினர் நயந்து போற்றும்மெல்லிதழ்.

பத்தொன்பதாம் படக்கவிதைப் போட்டிக்கு14 கவிதைகள் வந்துள்ளன.எல்லாம் முகமூடிக் கவிதைகள்.

பொய்ம்முகத்துப் போலிகளும் புகழ்முகங்கள் ஆகிவர
மெய்ம்முகத்தார் வனவாசம் மேவுகின்ற காலமிது.

என்று ஒரு கவியரங்கில் நாம் குறிப்பிட்ட வரிகள் நினைவில் தோன்றுகின்றன.

முழுமையும் மரபு வழுவாத இலக்கணத்தோடு அமைந்த கவிதைகளோ,புதுக்கவிதையின் வீச்சும் படிமங்களும் சிறப்பாக அமைந்த கவிதைகளோ இல்லையாயினும்,சிந்தனை மாட்சியும் சீர்த்திமிகு கருத்தும் கவிதை வரிகளில் விரவி நிற்பதைப் பாராட்ட வேண்டும்.பங்கேற்ற அன்பர் அனைவரையும் வாழ்த்திப் பாராட்டிமகிழ்கிறோம்.

நாடகமே உலகம்-தலைப்பில்
சிலமனிதர்கள்
சிலநேரங்களில் மட்டும்
கழற்றிய
நிழல்மூடிகள்……என்று தொடங்கி,
முகமூடி அணியாத
கலியுக
மாந்தர் உண்டோ?- என்று முடித்து ள்ளார்,திரு. ஜெயபாரதன்.

உருவங்கள் மாறினாலும்எண்ணமும் குணமும் மாறாது
பொய்முகம் என்றும் உண்மைமுகம் ஆகாது.
மனிதனே வாழ்க்கையில் பலவுருவம் எடுக்கிறான்
பசுத்தோல் போத்திய புலிபோல். வாழ்கிறான். என்று திரு.பார்த்த சாரதி பகர்கிறார்.

கவிஜி என்ற கவிஞரோ,
கருவிழிகளற்ற
வெள்ளை தேசம்
காணுவதாக அவர்கள்
திரிகிறார்கள்.
பூனைகளும் புதையல்களும்
புனைவுகளால்
ஆளப்பட்டாலும்,
புதிர் விதைத்து
மறைக்கிறார்கள்.——என்று புதுக்கவிதை உத்தியைப் புரட்டிப் பார்த்துள்ளார்.

க கனத்தின் உள்ளே கரந்துறையும்
நாகத்தின் விசம்போலக் கொல்லும்
மிக க் கொடிய முகமூடித்தனங்கள்
இகத்திலே மிகமலிந்து விட்டதே. என வேதனைப்படுகிற புனிதா கணேசன்,
முகமூடி மாயைக்குள் முகம் நுழைத்தே
அகத்தழகை இழக்காமல் சிறப்போமே. என்று முடித்துள்ளார்.

உறவெல்லாம் தொடர்கதை
தொடர்வதில்லை புதுக்கவிதை
காரணம் மனங்களிடை
மாயையின் திரையிடை –
வேசம் போட்ட வாழ்க்கை
நாசமாகும் நம்பிக்கை
வேண்டாமே நிஐவாழ்வில்
உறவுகளில் வேசங்கள். என்கிறார் …கருப்பையா துஷ்யந்தி.

மேடையில் அடுத்தவர்
முகத்தைத் தரித்தவன்
பாடையில் சொந்த முகத்தோடு
கிடக்கிறான்!
யாருக்கும் அடையாளம் தெரிய வில்லை
வந்தவர்கள் தேடுகிறார்கள்
கலைஞனை,
சுவரில் அவன்களைந்து போட்ட
முக ஒப்பனைகள் !——————இது,கனவுதிறவோனின் சில வரிகள்.

வீட்டிலும் நாட்டிலும்
பொய்முகங்கள்காட்டி
வளையவருகிறார்பலர்
சிரித்துக் கெடுப்பார்சிலர்
நடித்துக் கெடுப்பார்சிலர் சிலர்
கடன்கேட்க ஒருமுகம்
கழிக்கப் பார்ப்பது ஒருமுகம். எனத்தொடர்கிறார் சரஸ்வதி இராசேந்திரன்.

அகம்மூடிச் சிரிப்பு
முகம்மூடிப்பேச்சு…….
திருட்டில் ஒட்டும் நண்பன்
உருட்டும் தலைக்குள் வஞ்சம்
இருட்டைப்போல் பற்றிக் கவலை யில்லை
வெருட்டென மருட்டும் முகமூடி.-இது வேதா இலங்காதிலகம் வரிகள்.

ஆணாதிக்கத்சைச் சாடி அழகிய கவிதை தந்துள்ளார் இலட்சுமி.
மெய்யன் நடராசன் வரிகள் மெச்சத்தக்கவை.
அன்பின் முகவரியை அடையாளப் படுத்தி யுள்ளார். கார்த்திகா.

இறுதியாக வந்துள்ள(புதுக்கவிதை போன்ற)தமிழ்முகில் என்பார்தம்கவிதையை முதல் இடத்திற்கு உரியதாக நாம் அறிவிக்கின்றோம்.அறிவில் ஓங்கிய மனிதாம் அறமற்ற அனைத்தும் துணிந்து செய்கிறார்கள் முகமூடிக்குள் மறைந்து எனும் கருத்தை ஏற்றுப் பாராட்டுகிறோம். கவிதை காண்க:

பூனை புலி

நாய் நரி
பாம்பு பட்டாம்பூச்சி
உருவங்கள் பல
அறிவென்னவோ ஐந்தே
இவைதம்
உளந்தனில் வஞ்சகமில்லை
தம்மினத்தைத் தாமே அழிப்பதில்லை!
பகுதறிவுள்ள மனிதர்களே
துவேஷம் சுமந்து
தம்மினத்தையே கொன்று குவிக்கிறார்!

ஒரேமுகம்-ஆனால்,
முக மூடிகள் பல
உளந்தனில் மண்டிக் கிடக்கும்
அழுக்குகள் பல!
யாரை நம்ப, யாரைநம்பாது போக,
உலகமே உண்மைமுகம் மறைத்ததோ?

இனி,இரண்டாம் இடத்தில் பாராட்டுப்பெறும் கவிதை பெரிதும் மரபு யாப்பமைந்த ஒன்று.
இரண்டு எண்சீர் விருத்தங்கள்? அவற்றுள் ஒன்று:

விதவிதமாய் மனிதர்பலர் நம்மிடையே இருக்கின்றார்
விசித்திரமாய் நாய் புலி மான் சிங்கமொடு நரியாக
நிதமொரு விதமான விலங்காய் வலம்வந்தே
நடமாடித் திரிகின்றார் மனிதமுக மூடிகளாய்!
முதலையாய்க் கடித்து யானை சாய்த்திடுவார் விழுங்கிடும்
மலைப்பாம்பாய் மாறிடுவார் நன்மை தான் மிகச்செய்து
உதவுகின்றது நாக்கினிலே உறவாடித் திரிந்திடுவார்
உலகினில் உய்யவே உண்மையைக் கண்டுணர்வீர்!
(உலகத்தார் உய்ந்திடவே). (சில திருத்தங்கள் செய்யப்பட்டன)

பங்கேற்ற அனைவரையும் மீண்டும் பாராட்டி வாழ்த்துகிறோம்.வல்லமை இதழாசிரியர்,எம் அன்பு மாணவர் அண்ணாகண்ணன் ஆகியோர்க்கு நன்றி.வளர்க பொலிக வல்லமை!a

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி 19 – முடிவுகள்

  1. படக்கவிதைப் போட்டி – 19 இன் முடிவுகளை அறிவித்த கவிக்கோ திரு. ஞானச்செல்வன் அவர்களுக்கு நன்றி. என்னுடைய கவிதையை பாராட்டி இரண்டாம் இடத்துக்காகத் தேர்வு செய்து சில திருத்தங்களுடன் அறிவித்ததற்கு மிக்க நன்றி.

  2. படக்கவிதை 19 ல் சிறந்த கவிதையாளர், பாராட்டுக்  கவிதையாளர்
    எடுத்துக் காட்டப் பட்ட வரியாளர்கள், தேர்வுத்  தலைவர்  ஐயா கவிக்கோ திரு. ஞானச்செல்வன் அவர்கள்
    அனைவருக்கும் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்

  3. என்னுடைய கவிதையை முதலிடத்திற்கு உரியதாய் தேர்வு செய்த ஐயா கவிக்கோ திரு.ஞானச்செல்வன் அவர்களின் இனிய பாராட்டுதல்கட்கு நன்றிகள். ஏனைய கவிஞர்கட்கும் எனது இனிய நல்வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *