Advertisements
வாசகர் கடிதம்

அவர் விஸ்வநாதம்

msvபத்து வருஷங்களுக்கு முன்பு நான் மந்தவெளி பக்கம் வசித்து வந்தேன். காலை கொஞ்சம் சாந்தோம் பக்கம் நடை பயிற்சி செல்வேன். அப்போது என் கால்களில் பாதிப்பு இல்லை. உடன் என் மனைவி வருவாள். எம் எஸ் வீ . வீட்டு பக்கம் ( அது பழைய வீடு ) வரும்போது அவரை பார்ப்பேன். பொதுவாக எந்த பிரபலத்தையும் தொந்தரவு செய்ய பிடிக்காது. ஆனால் அன்று அவர் பால்கனியில் லுங்கியில் உலாவி கொண்டிருந்தார். கீழே நாங்கள் பார்த்து வரவா என வினவினோம். அவருக்கே உரிய தோரணையில் வாங்கோ என்றார். மேலே சென்று அவரை கை குவித்து வணங்கி அமர்ந்து சிறிது நேரம் பேசினேன்.

எவ்வளவு பெரிய இசை மேதை ? கொஞ்சம் கூட அலட்டல் இல்லாமல் என்ன இயல்பாய் இருந்தார் … இந்த பண்பு படித்து வருவது அல்ல. உள்ளம் அப்படி. பிறிதொரு சமயம் சந்தூர் விஸ்வேஸ்வரன் மறைந்த போது அவர் கீழ் அமர்ந்து பேசும்போது அவர் என்னை தரையில் அமர விடாமல் இருக்கையில் உட்கார சொன்னார். என்னை பொறுத்த வரை எனக்கு எப்படி நடிகர் திலகமோ அப்படியே விசுவும். அவர் இசையில் நான் மயங்காத நாள் உண்டா ? எத்தனை பாடல்கள், எவ்வளவு நுணுக்கங்கள்…சந்தோஷமான சூழலா அங்கே விசு… வயிற்றை பிசையும் துக்கமா ..விசு அங்கே .

சென்ற வாரம் அவர் மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவரை பார்க்க வேண்டும் என சொன்னேன். ரெண்டு நாளில் சொல்வதாச் சொன்னார். பின்னர் அவரே அழைத்து நன்கு தேறி வருவதை தெரிவித்தார். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. இரவு கிளம்பி சென்றேன். மலர் அடையாரில் இருந்தார். சில பழைய நண்பர்கள் அங்கிருக்க விசுவின் குடும்பத்தினர் அங்கு குழுமி இருந்தனர். ICU வில் இருந்ததால் அவரை பார்க்க முடியவில்லை. அரை மணி நேரம் இருந்து பேசி விட்டுப் புறப்பட்டேன்.

அவர் மகள் பேசும் போது சொன்னார்கள். சிகிச்சை செய்ய வந்த நர்சை பார்த்து உன்னை நான் சந்தித்தேன் …நீ ஆயிரத்தில் ஒருத்தி என்று … கைகள் படபடக்க அவர் படுத்த படுக்கையிலே தாளம் போட்டபடி இருந்தாராம். இரண்டு நாள் முன்பு இளையாராஜா வந்து அவர் கால்களை பிடித்து விட்டதையும் , வித்யாசாகர் பாடினதையும் நினவு கூர்ந்தார்கள். பாலு வந்தவுடன் அவர் நெகிழ்ந்து பேசினாராம். இன்று காலை என் மகன் செய்தி சொன்னனான். அப்பா , எம் எஸ் வீ இஸ் நோ மோர் என்றான்–எனக்கு ஓர் ஆசை இருந்தது.என் மகன் அவர் முன் பாடவேண்டும் என்று. அது நிறைவேறவில்லை.

வாழ்க்கையில் சில விஷயம் முடியாமற் போவதின் பின் ஓர் உண்மை உண்டு. நான் வீட்டில் கவலையாய் இருக்கும் தருணத்தில் என் மகன் இணையத்தில் இருந்து நாலு பாடல்களை போட்டு காட்டி ராகம் பேசுவான் .எனக்கு நிறைவாய் இருக்கும். எனக்கு பிடித்த விசுவை என் மகனே சிலாகிக்கும் போது போது எவ்வளவு நிறைவு ——அவர் விஸ்வநாதம் .

Baskar Seshadri
chennai

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comment here