Featuredஇலக்கியம்பத்திகள்

சிகரம் நோக்கி (13)

சுரேஜமீ

மனம்

peak1111111

இந்த உலகில் வடிவமில்லாத ஒன்று, கண்ணுக்குப் புலனாகாத ஒன்று, கடவுள் என்ற கருப்பொருளுக்கு இணையான ஒன்று, பிறப்பின் ஆழத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் புரிய வைக்கின்ற ஒன்று, மனிதனின் இருப்பை மற்ற உயிரினங்களிலிருந்து உயர்த்திக் காட்டுகின்ற ஒன்று இருக்கிறது என்றால்

அதன் பெயர்தான் ‘மனம்’!

அது எங்கே இருக்கிறது? அதை எப்படி புரிந்து கொள்வது? அதனால் நமக்கு என்ன பயன்? என்பதைப் பற்றிப் பார்ப்போமா?

உலகில் படைக்கப்பட்டுள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் மனம் என்ற ஒன்று இருந்தாலும், மனித மனம் மட்டும் அதிலிருந்து வேறுபடக்கூடியது. விலங்கினங்கள் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரப்போகிறது என அறிந்தால், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுதான், அதனை வழி நடத்தி, உயிரைக் காப்பாற்ற உதவுகிறது.

ஆனால், மனிதனுக்கு மட்டுமே ஒரு ஆபத்துக்கான காரணத்தை ஆராயும் தன்மையான உயர்ந்த நிலையைக் கொடுக்கிறது. அடுத்து அதுபோல் நடக்காமலிருக்க தன்னைத் தயார்படுத்தவும் செய்கிறது.

அத்தகைய உயர்வான மனத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

விலங்குகளில் குரங்கு என்பது ஓரிடத்தில் நிற்காது அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பது போல், மனம் என்பதும் ஒரு குரங்கைப் போல், நிலையால் இல்லாமல், ஒரு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே, அடுத்தடுத்த சிந்தனைகலுக்கும் சென்று கொண்டிருக்கும்.
அதானல் எதிலுமே முற்றுப் பெற முடியாமல், அதற்கேற்ற விளைவுகளால் அவதியுற நேரும்.

அவ்வாறு நேராமல் இருக்க மனதை நாம் பக்குவப் படுத்த வேண்டும்.
மனத்தின் தன்மையை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், இவ்வுலக வாழ்வே ஒரு சொர்க்கமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மனதின் ஆற்றலுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், நாம் நினைத்த மாத்திரத்தில், உலகின் ஒரு மூலையிலிருந்து அடுத்த மூலைக்கு மனம் பயணப்பட்டு விடும். ஆனால், உடல் அவ்வாறு பயணிக்க வேண்டுமானால் கடவுச்சீட்டு தொடங்கிப் பயணசீட்டு பெற்று பயணப்பட்டால் மட்டுமே முடியும்!

மனித வாழ்வில் ஏற்படக்கூடிய அத்துனை இன்ப துன்பங்களுக்கும் காரணமாக இருப்பது மனம். இன்பம் வந்தால் அறியாமையால் ‘துள்ளிக் குதிப்பதும்’; துன்பம் வந்தால் ‘துவண்டு விடுவதும்’ மனம் தான் என்பதை நாம் அறிவோம்.

கவியரசர் கண்ணதாசன் அவர்கள், ஒரு பாடலிலே இவ்வுலகில் எல்லாமே இரண்டாக இருக்கும் பொழுது உள்ளம் மட்டும் ஒன்று போதாது….இரண்டு வேண்டும் என்று இறைவனிடம் கேட்பார்;

இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே! ….என்று

ஆக நமக்குள் இருந்து ஒரு நீதி பரிபாலனம் பண்ணக்கூடிய ஆற்றல் வாய்ந்த மனதை நாம் ஆள்வதன் மூலமாக, இவ்வுலகில் நாம் நினைத்த எதையும் அடைய முடியும் என்பது மட்டுமல்ல; ஒரு ஒப்பற்ற மாமனிதராக உருவெடுக்க முடியும் என்பதும் உண்மை.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் சொல்கிறார் ;

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

ஒருவன் மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதே சிறந்த அறம் என்றால், அதனை நாம் பின்பற்றி மனத்தைப் பழக்கப்படுத்தி, நம்மை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்கான விதையை அப்பொழுதே விதைத்திருக்கிறார் என்றால்,

ஏற்றுக்கொள்ள வேண்டிய இடத்தில்தான் இன்னமும் நாம் இருக்கிறோம் என்பது மட்டுமல்ல; இனிவரும் காலமும் இருக்கும் இந்த மனித சமுதாயம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

உலகில் உள்ள எண்ணற்ற மதங்கள் தோன்றியதன் நோக்கமே மனித மனத்தைப் பக்குவப்படுத்தி மனித வாழ்வை ஒரு உயர்ந்த நிலைக்கு இட்டு செல்வதற்காகத்தான் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

குருஷேத்திரத்திலே அர்ஜுனன் தன் உறவுகளுக்கு எதிராகப் போருக்குத் தயங்கிய பொழுது, பகவான் கிருஷ்ணர் அவனுக்கு எது தர்மம் என்பதை நிலைநாட்ட, உள்ளத்தைத் தெளிவு படுத்த, அதிலிருந்து எழக்கூடிய உணர்வுகளை மட்டுப்படுத்தி, நீதியைப் புரியவைத்து உலக்குக்கு அளித்த ஒப்பற்ற வசனங்களைக் கொண்டதுதான், பகவத் கீதை எனப்படும் இந்துக்களின் புனித நூல்.

இதைப்போல ஒவ்வொரு மதத்திலும் நன்மை தீமைகளை ஆராய்ந்து தெளிவான மனநிலையைக் கொடுக்கும் ஒப்பற்ற நூல்களாக புனித நூல்கள் இருக்கின்றன.

மனத்தினில் எழக்கூடிய உணர்ச்சியின் பால் தூண்டப்படுகின்ற ஆசைகளே துன்பத்திற்குக் காரணமாக இருக்கிறது. அத்தகைய துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள

மனத்தை அறிவின்பால் செலுத்த, அதனைப் பழக்க முயன்றால், வாழ்வில் ஒரு நிலைத்தன்மையை நம்மால் அடைய முடியும்.

• மனதைப் பழக்குவதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது ‘ நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப உச்சரிக்க வேண்டும்.
• உடற்பயிற்சி எப்படி உடல்நலத்திற்கு முக்கியமோ, அதைப்போல ‘மனப்பயிற்சி’ மனநலத்துகும்; உடல் நலத்திற்கும் இன்றியமையாதது.
• யோகா முறையாகக் கற்றுக்கொண்டு தினமும் பயிற்சி செய்வது மனதைக் கட்டுப்படுத்த உதவும்.
• ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு பத்து நிமிடமாவது கண்களை மூடித் தியானம் செய்வது.
• உயர்ந்த இலட்சியங்களை நோக்கி வாழ்க்கையை நகர்த்துவது.
• மனதுக்கு இதமாக, இன்பமாக இருக்கக் கூடிய இடத்திற்கு அடிக்கடி செல்வது.

இவ்வாறெல்லாம் மனதைப் பழக்கிப் பக்குவப்படுத்த, ஒரு செயலின் விளைவை ஆராய்ந்து அதன் சாதக பாதகங்களைக் கூறிட்டு; அதனால் ஏற்படக்க்கூடிய நன்மை தீமைகளைக் கணக்கில் கொண்டு, செயலில் இறங்கும் ஆற்றலை மனம் சுலபமாகக் கொண்டுவிடும்!

அதன்பின் பாருங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறதென்று?

ஒரு வெற்றியாளராக, ஒரு ஊர் போற்றும் உத்தமராக, சான்றோன் எனக் கேட்கும் தாய்க்கும்; என்னோற்றான் கொல்! என அறியும் தந்தைக்கும் மகனாக; மகளாக; நாட்டின் சிறந்த குடிமகனாக உங்களை மாற்றிக் காட்டும் உங்கள் மனம் என்பதற்கு உங்கள் வாழ்வே ஒரு சாட்சியாக இருக்கும்!

இதோ காவியத்தாயின் இளைய மகன் கவியரசர் கண்ணதாசனே சொல்கிறார்…….
நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி
அது நீதிதேவனின் அரசாட்சி! ……….என

நண்பர்களே இங்கு சொல்லப்படுவது ஒரு துளியே…அந்தத் துளி ஒரு உளிபோல உங்களைச் செதுக்கினால் வருகின்ற சிலையாக ஒரு தெய்வத்தன்மையுடன் கூடிய மனிதனாக மாற்றினால் சிகரம் என்பது கூட ஒரு சிறுகுன்றாகிவிடும் உங்கள் முன்னால்!

தொடர்வோம் பயணத்தை………

அன்புடன்
சுரேஜமீ

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க