-செண்பக ஜெகதீசன்

குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும். (திருக்குறள்-601: மடியின்மை)

புதுக் கவிதையில்…

விளக்கு ஒளி குறையாதிருக்க
அது                                                  
மாசடையாமல் காக்கவேண்டும்                    
நற்குடி என்னும்
நல்ல விளக்கில்
சோம்பலெனும் மாசடைந்தால்,     lamps
ஒளியிழந்து
வீணாகி அழியும்!

குறும்பாவில்…

நற்குடி என்னும் நல்விளக்கு
சோம்பல் கறைபடிந்து
வீணாகி அழியும் ஒளியிழந்தே!

மரபுக் கவிதையில்…

என்றும் நன்றாய் ஒளிபெறவே
ஏற்றும் விளக்கில் மாசகற்றி
நன்றாய்த் துடைத்து வைத்தால்தான்
நாலா புறமும் ஒளிதெரியும்,
என்றும் நற்குடி விளக்கேதான்
இதிலே சோம்பல் மாசடைந்தால்
குன்றும் ஒளியும் மாய்ந்தேதான்
கெட்டே அழியும் காண்பீரே!

லிமரைக்கூ…

விளக்கை ஒளிகுறைத்து அழியவைக்கும் தூசு,
நற்குடி என்பதும் விளக்கேதான்,
நலியவைத்து அதையழிக்கும் சோம்பலாம் மாசு…!

கிராமிய பாணியில்…

வெளக்குவெளக்கு ஊட்டுவெளக்கு
வெளிச்சந்தரும் நல்லவெளக்கு,
தொடச்சிவச்சா ஒளியத்தரும்
தூசிசேந்தா அழிஞ்சிபோவும்
நல்லகுடியும் வெளக்குத்தான்
நன்மதரும் வெளக்குத்தான்,
அதுல
சோம்பல்தூசி சேந்ததுண்ணா
சொந்தபந்தம் உட்டுப்போவும்
சேந்தாப்புல கெட்டுப்போவும்

வெளக்குவெளக்கு ஊட்டுவெளக்கு
வெளிச்சந்தரும் நல்லவெளக்கு!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *