பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: வித்து இன்றிச் சம்பிரதம் இல்
நாணின்றி ஆகாது பெண்மை. நயமிகு
ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை – பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள். காரிகையாய்!
வித்தின்றிச் சம்பிரத மில்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
நாண் இன்றி ஆகாது பெண்மை; நயமிகு
ஊண் இன்றி ஆகாது உயிர் வாழ்க்கை; பேணுங்கால்,
கைத்து இன்றி ஆகா கருமங்கள்;-காரிகையாய்!
வித்து இன்றிச் சம்பிரதம் இல்.
பொருள் விளக்கம்:
நாணம் என்ற பண்பு இல்லாமல் பெண்மை என்ற குணம் அமைவதில்லை. நலம்தரும் உணவை உண்ணாமல் உயிர் வாழ்வது இயலாது. ஆய்ந்து நோக்கும்பொழுது கைப்பொருள் இன்றி நமக்குத் தேவையான செயல்களை நடத்திக்கொள்ள முடியாது. அழகிய பெண்ணே! விதைகள் இல்லாவிட்டால் விளைச்சலைக் காண்பதும் இயலாது.
பழமொழி சொல்லும் பாடம்: கையில் பொருளின்றிக் காரியங்களைச் செய்து முடிக்க முடியாது. இக்கருத்து உண்ண உணவின்றி உயிர் வாழ்தலும் முடியாது, விதைக்க விதைகளின்றி விளைச்சலும் காண முடியாது என்ற உண்மைகள் மூலம் புலப்படுத்தப் படுகிறது. இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் தேவைப்படும் இன்றியமையாமையை விளக்க விரும்பிய வள்ளுவரும்,
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (குறள்: 247)
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை சிறப்பாக அமையாதிருப்பது போல கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமைய வழியில்லை என்று எடுத்துரைக்கிறார்.