கூட்டாஞ்சோறு
-ராகவபிரியன்
வயல் தலையின்
வகிடு வரப்பின்மேல்
சீப்பாய் ஊர்ந்தனர் குழந்தைகள்!
மதகு மடிமீது
தலைவைத்துப் படுத்திருந்தது நிழல்
காலடி கேட்டு
ஓடி ஒளியும் அணிலாய்
நிழலோடிக் குவிந்தனர் குழந்தைகள்!
சுள்ளி அடுப்பின்மேல்
சுகமாய் அமர்ந்து
தாளமிட்டவாறே தயாரானது
கூட்டாஞ்சோறு!
உப்பிலிமாட்டான் கோவில்
வேல்மேல் குத்திய எலுமிச்சைச் சாறாய்
எல்லோர் முகத்திலும் ஆவல் வடிந்தது
முதல் கவளம்…காகத்திற்கு!
இந்தக் கோடையிலும்
அந்தக் கூட்டாஞ்சோறு
இன்னும் ஆறவேயில்லை!