குழந்தையும் குட்டி தேவதையும்

9

திவாகர்

(இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை. இந்த அடிப்படையைச் சொன்ன என் நண்பன் வாசுவுக்கு இந்தக் கதையை சமர்ப்பணம் செய்கிறேன் – திவாகர்)

ஒரு போலீஸ்காரனுக்கு இப்படிப்பட்ட சோதனைகளெல்லாம் சகஜம்தான் என்றாலும் இது வித்தியாஸமாக இருக்கிறதே என்று கவலைப்பட ஆரம்பித்தேன் நான். அதுவும் அந்தப் பெண் இடம் தெரியாமல் ராத்திரி வேளையில் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும்போது வெளியாட்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்.. நல்ல காலம் மீடியாக்காரர்கள் யாரும் அன்று பார்த்துத் தென்படவில்லை..

”சார், எப்படியாவது என் குழந்தை எனக்கு வேணும்.. சார்.. மனசு வையுங்க சார்.. நீங்க நினைச்சா எப்படியும் குழந்தை வந்துடும்.. இல்லைனா, அந்த அட்ரஸைக் கொடுங்க.. நானும் எங்க ஜனங்களும் அங்கேயே போறோம்.. சார்.. என் குழந்தை சார் அது.. என் குழந்தையை எங்கிட்ட காமிக்காம இப்படி சதி பண்றீங்களே.. இது நியாயமா..”

எனக்கு உதவியாக ரைட்டர் உலகநாதன் கூட சொன்னான்..”ஏம்மா.. இப்படி அநியாயமா எங்க மேலே பழியைப் போட்டுப் பேசறே.. முதல்ல அழுவறதை நிறுத்து.. உனக்கு என்னவெல்லாம் எங்களாலே செய்ய முடியுமோ அத்தனை உதவியும் நாங்க பண்றோம் இல்லே….”

அவள் கேட்கவில்லை..”என் குழந்தை இப்பவே வேணும் சார்.. எப்படியாவது கொண்டாங்க சார்..”

நான் எழுந்துவிட்டேன்.

“இதோ பாரும்மா.. நான் உனக்கு ஏற்கனவே சொன்னதுதான்.. உன் கம்ப்ளெயிண்ட் மேலே ஏற்கனவே போன்ல பேசியாச்சு..  ஆறு மாசம் குழந்தையை விட்டுட்டு இப்ப திடீர்னு வந்து உடனே அது வேணும்னா நான் எங்கே போவேன்.. நீ சொன்ன குழந்தையைப் பத்தி அத்தனை தகவலையும் சரிபார்த்தாச்சு. எல்லாமே அந்தக் குழந்தையோட அடையாளத்தோடு ஒத்துப் போறதையும் நாங்க ஒப்புக்கறோம். ஆனா கையிலே அந்தக் குழந்தை வரணும்..  ஒரு நாள் பொறுமையாயிரு.. நாளைக்கு இதே நேரத்துல எப்படியாவது உன் குழந்தையை உன்கிட்டே சேர்க்கிறது எங்க பொறுப்பு..” உலகநாதனைப் பார்த்தேன்.. “இந்தம்மாவையும் புருஷனையும் எங்கியாவது நல்ல இடமா பார்த்துத் தங்க வைய்யு.. ஏதாவது பணம் தேவைன்னா சொல்லு.. நான் தர்ரேன்..”

வெளியே வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன். உலகநாதன் கூடவே வந்தான்.. ”சார், எப்படி சார், மல்லிகா நிச்சயம் வருமா சார்.. எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு சார்.. மல்லிகா வராதுன்னு தோணுது.. ரொம்ப பிடிவாதமான பொண்ணுன்னு கேள்விப்பட்டிருக்கேன் சார்.. எல்லாமே சட்டபூர்வமா செஞ்சிருக்கு சார், கோர்ட்டுக்கு போய் டைம் கேக்கும்.. ஒருவேளை கோர்ட்டுக்குப் போனா ஏதாவது தீர்ப்பு கிடைக்கும்.. ஆனா ரொம்ப நாள் ஓடும் சார்.. இது ரொம்ப சிக்கலா போறது.. நாம் இந்த கேஸ்’லயிருந்து கழண்டுக்குவோம் சார்.. நம்ம சைட்’ல எல்லாமே கரெக்டாதான் பண்ணியிருக்கோம்.. ஆனா எனக்கு என்னவோ இந்தப் பொம்பளையைப் பார்த்தா பரிதாபமா இருக்கு சார்..”

”இல்லே உலகா.. மல்லிகா நல்ல பொண்ணு..  நான் பேசியிருக்கேன்.. நிச்சயம் வரும்.. வராக்காட்டி அப்போ ஏதேனும் செய்யலாம்.. இப்ப இந்தம்மாவை சமாதானம் செய்யு.. எவனாவது வெளியிலேர்ந்து ஸ்டேஷனைப் பார்த்தா தப்பா பேசுவான்.. முதல்லே அவங்களை வெளியே கிளப்பு.. நாளைக்குப்பகல் நேரத்துல வரச் சொல்லு..”

நான் கிளம்பிவிட்டேன்.. வண்டியில் போகும்போது சில்லென்று உடலில் காற்று பட்டதுதான்.. ஆனால் மனம் மட்டும் குளிராகவில்லை.. குழப்பம் தீருமா.. தெரியவில்லை. மல்லிகா வந்தால்தான் தெரியும். அவள் வருவாளா..

எல்லாம் ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்த பழைய கதைதான். இன்று புது உருவாக வந்து தொல்லை கொடுக்கிறது.. ஒருநாள் நள்ளிரவு வரும் நேரத்தில் ஒரு ரோந்து பார்த்து விட்டு வீட்டுக்குச் செல்லலாம் என்றபோதுதான் மல்லிகாவிடமிருந்து போன் வந்தது.

அந்த நேரத்தில் ஒலித்து வந்த அந்த பரபரப்பான குரல் எனக்குள் சற்று படபடப்பை அதிகரிக்கத்தான் செய்தது.

”என்ன மல்லிகா.. சொல்லு..பரவாயில்லே..”

“நீங்க கொஞ்சம் வீட்டாண்ட வரணும்.. முடியுமா?.. நீங்க மட்டுமா வாங்க.. ஸ்டேஷனுக்குத் தகவல் தரவேண்டாம்.. காரணமாதான் சொல்லறேன்..”

“சரி.. இதோ வந்துடறேன்..” கைபேசியை மூடிவிட்டு கிளம்பினேன்..

மல்லிகா இதுவரை இப்படியெல்லாம் இரவில் கூப்பிட்டதேயில்லை.. ஏன் அவள் வேலை செய்யும்போது இருந்த மோசமான நிலையில் கூட இரவில் கூப்பிட்டதில்லை. மல்லிகாவைப் பற்றி விவரமாகத் தெரிந்தவன் நான். அட, நானென்று இல்லை. யார் அவளைப் பற்றித் தெரிந்து கொண்டாலும் முதலில் அவளைப் பற்றிச் சொல்வது மிகவும் நல்ல பெண்..என்றுதான்.

பொதுவாக இந்தப் பெண்களே வேலைக்குச் செல்லக்கூடாதென்று ஒரு காலத்தில் நான் நினைத்ததுண்டு. அதுவும் போலீஸ் வேலைக்குச் செல்லும் பெண்கள் படும் சிரமம் சொல்லி மாளாதுதான்.. ஆனாலும் உலகம் அதுவும் நம் ஊரெல்லாம் அதிகம் மாறி விட்டது. தைரியமான பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள்தான். அதிலும் மல்லிகா போன்று தைரியமான பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் பெண் என்பவள் ஆளப் பிறந்தவள்தான் என்று ஒரு புதிய எண்ணம் கூட வந்துவிட்டது.

ஊட்டியில் பிறந்து வளர்ந்தவள். அதனால்தானோ என்னவோ நிறமும் அழகும் சற்றுக் கூடுதலாகவே கிடைத்ததோ என்ற ஒரு மாயை நினைப்பு எனக்கு உண்டு. வேலூரில் போலீஸ் வேலை கிடைத்து அவள் புதிதாக சேர்ந்தது முதலே அவளை அறிவேன். ஏதோ ஒரு அதிர்ஷ்டம் என்னை அவள் அருகிலேயே நிறுத்தி வைப்பது போல ஏறத்தாழ இருபது வருடங்களாக வைத்திருந்ததால் அவளின் கல்யாணம், அது நடந்த சில வருடங்களிலேயே ஒரு விபத்தில் கணவனை இழந்தது, ஆனாலும் வாழ்க்கையின் சோகத்தை சமாளித்தவிதமும் நான் அறிவேன். தன் சோகத்தை வெளிக் காண்பிக்க மாட்டாள். அதிசயப் பிறவிதான் என நினைக்கும் அளவுக்கு தன் கடமையில் நல்ல பெயரும் பெற்றவள். பெண்களுக்கே உரிய சோதனைகள் வரும்போதெல்லாம் அவள் அதை நாகரீகமான முறையில் கையாளும் விதமும், நடத்தை சரியில்லாத சில மேலதிகாரிகளின் நடவடிக்கைகளை தவிர்க்கும்போது கூட அவள் பொறுமையாக நடந்து கொள்வதும் அவர்களிடமிருந்து விலகிப் போவதும் நான் அறிவேன். நானும் பல சமயங்களில் அவளுக்காக பரிந்து பேசுவதும் அதனால் அவ்வப்போது சக அதிகாரிகளிடமிருந்து ஒரு ஏளனமான சிரிப்பும் கூட பரிசாகக் கிடைப்பதும் எனக்கே பழகிப் போனதுதான்.  என்னிடம் மட்டும் அவளுக்கு ஏதோ ஒரு பாசம் உண்டு என்பது தெரிந்தாலும் எந்த நிலையிலும் எந்த ஆண்மகனையும் அலைக்கழிக்காத பாங்கும் அவளுக்கு உண்டு என்பதை அறிந்தவன் என்பதால் அவள் மேல் எனக்கு பெருமதிப்பு கூட உண்டு.

ஆனாலும் இந்தக் கூட்டத்தில் அவள் தனியாக நின்று போராட முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஒரு கேஸில் இவள் செய்யாத தவறுக்காக அரசாங்கத்தால் கண்டிக்கப்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மூன்று மாதம் அஞ்ஞாத வாசமாக வீட்டிலேயே இருந்தாள். இந்த சமயத்தில் என் உதவியை தாராளமாக வழங்கினேன். மேலதிகாரிகளுக்கு அவள் நன்னடத்தைப் பற்றிய விளக்கங்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் என் மனைவியுடன் அவள் வீட்டுக்கு அடிக்கடி சென்று உதவுவதை வழக்கமாகக் கொண்டேன். மூன்று மாத சஸ்பெண்ட் முடிந்து விசாரணையில் இவள் மீது தவறு இல்லை எனத் தெரிந்து மறுபடியும் இவளை வேலைக்கு சேர்த்துக் கொண்டபோதுதான் யாருமே எதிர்பாராதவிதமாக இவள் ராஜினாமா செய்தாள். ஊட்டியிலிருந்து தன் தாயை வரவழைத்துக்கொண்டு தனியாக வசிக்க ஆரம்பித்தாள். நான் எதுவும் அவளிடம் கேட்பதில்லை.. என்னிடம் கூட அவள் அறிவுரையோ ஆலோசனையோ கேட்பதில்லை.. அவள் இஷ்டம்.. அவள் கஷ்டம்.. அவள்தான் அறிவாள் என்று சும்மா இருந்துவிடுவேன்.. ஆனால் அடிக்கடி அவள் எங்கள் வீட்டுக்கு வருவதும் நாங்கள் அவளிடம் செல்வது வழக்கமான ஒன்றுதான். அப்படிப்பட்டவள்தான் திடீரென இந்த இரவில் கூப்பிட்டிருக்கிறாள்.

மல்லிகா வாசலிலேயே அந்த நேரத்திலும் காத்திருந்தாள். காட்பாடியின் அந்த மங்கலான தெரு விளக்கில் அவள் வீட்டில் மட்டும் முன் வாசல் விளக்கு போட்டு வெளிச்சமாய் காத்திருந்தாள்..

”என்ன மல்லிகா.. என்ன விஷயம்..?”

”உங்களுக்குத் தொந்தரவு கொடுத்துவிட்டேன் ஸார்.. எங்க பக்கத்து வீட்டுலதான் இந்த அதிசயம்..”

அழைத்துக் கொண்டு போய் அந்த அதிசயத்தைத்தான் காண்பித்தாள்.. ஒரு டர்க்கி டவலில் அப்படியே போர்த்தப்பட்டு அந்தக் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. எட்டு மாதமோ ஒன்பது மாதமோ இருக்கும் என மனதுள் நினைத்தேன்..

”இந்தக் குழந்தை”.. என நான் ஆரம்பிக்குமுன் அந்த வீட்டுக்கார ஆசாமி என்னைக் குறுக்கிட்டான்.. பயந்தபடிதான் பேசிக்கொண்டு போனான்.

”ஒரு மணி முன்னாலே நம்ம வீட்டுத் திண்ணைல இந்தக் குழந்தை சத்தம் போட்டுச்சு.. ரொம்பப் பெரிசா அழலைன்னாக் கூட இருட்டாச்சுங்களா.. நல்லா கேட்டுதுங்க.. உடனே கதவைத் துறந்து வெளியே பார்த்தாக்க துண்டுக்குள்ள  இந்த குழந்தை மட்டும் கிடந்துச்சு சார்.. சுத்தி ஒரு பய இல்லே.. என்ன சார்.. எவ்வளோ அழகா இருக்கு சார் இந்த பெண் குழந்தை.. எப்படி சார் இங்க வுட அந்த மனுஷனுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ.. யார் வுட்டாங்களோ.. சார்..  பால் குடுத்தோம் சார்.. அழுவாம குடிச்சுது.. என்னமா சிரிச்சுது சார்.. இப்போதான் தூங்குது..”

யாரோ இந்தச் சின்னக் குழந்தையைக் கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள். இந்தக் குடும்பம் பக்கத்து வீட்டு மல்லிகாவை எழுப்பி சொல்லியிருக்கிறது.. அவள்  எனக்கு போன் செய்து கூப்பிட்டிருக்கிறாள். இப்போது இந்தக் குழந்தையை என்ன செய்ய? மல்லிகாவே வழி சொன்னாள்.

”சார்.. காலை வரைக்கும் இவங்க கிட்டேயே இருக்கட்டும். சார்.. நீங்க வந்தீங்கன்னா நாளைக்கு ஏதோ ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா நீங்க துணையா இவங்களுக்கு இருப்பீங்க’ன்னுதான் தொந்தரவு பண்ணிட்டேன் சார்.. நாளைக்குக் காலைல கொஞ்சம் வெளில விசாரிச்சு வெக்கலாம். நைட்டுல ஓட்டற ஆட்டோக் காரங்க நீங்க சொன்னா கேப்பானுங்க.. அவங்ககிட்டே கேட்டா கூட துப்பு கிடைக்கும். எந்த பணக்காரன் பெத்த பிள்ளையோ.. சும்மா ஜொலி ஜொலின்னு ஜொலிக்குது..”

”இந்தக் குழந்தை வெளியூர்க் குழந்தைன்னா, அதுவும் இங்க வந்து ஒரு மணி நேரம்தான் ஆச்சு இல்லியா.. அப்படின்னா எதுக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு போயிட்டு யாரானும் தேடறங்களா’ன்னு பாக்கறேன்.. நம்ம ஸ்டேஷனுக்கும் போறேன்.. யாராவது கிடைச்சாங்கன்னா உடனே சமாதானம் பண்ணிக் குடுத்துடலாம்.. கிடைக்கலைன்னா கேஸ் எழுதணும்தான்.. நீ சொல்ற மாதிரி இன்னிக்கு ராத்திரி குழந்தை இங்கேயே இருக்கட்டும்.. காலைல விசாரிக்கலாம். எதுனாச்சும் விசேஷமான விஷயமிருந்தா நீ என்னைக் கூப்பிடு..”

நாம் கிளம்புமுன் மல்லிகாவிடம் தனியே பேசினேன்.. “எதுவும் துப்பு கிடைக்கலேன்னா வேலூர் குழந்தைகள் காப்பகம்’ எங்கியாவது பார்த்து கொடுத்துடலாம்  நாளைக் காலைல அதுக்கு வேண்டிய வேலை செய்யலாம். எதுக்கும் இந்த ஆளை நாளைக்குக் காலைல ஸ்டேஷனுக்குக் கூப்புட்டு வந்து ஒரு கம்ப்ளெயின் ஃபைல் பண்ண வெய்யு.. உனக்குதான் தெரியுமே.. நாளைக்கு எதுவும் பிரச்சினை வந்துடக் கூடாது பார்..”

அவளிடம் சொல்லிவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.. குழந்தை முகம் நினைவுக்கு வந்தது. நல்ல சிகப்பு.. குண்டு முகம்.. தொட்டுப் பார்த்திருக்கலாம்தான்.. பஞ்சு போல இருந்திருக்கும். நல்லா சிரிக்குதாம்மே.. நாளைக்கு எதற்கும் தொட்டுப் பார்த்து அது சிரிப்பதைப் பார்த்து விடலாம்..

பகல் நேரத்திலேயே ரயில் வரும் நேரம் தவிர எப்போதும் அமைதியாக இருக்கும் காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் அந்த நட்டு நடு நிசியில் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவேண்டியதில்லைதான். ஒரு சுற்று வலம் வந்து பார்த்தேன்.. யாரும் நான் நினைத்தது போல யாரையும் தேடிக்கொண்டிருக்கவில்லை என்பதால் மறுபடியும் வெளியே வந்து பார்த்தேன். தெரிந்த ஆட்டோ டிரைவர்கள் கண்ணுக்குப் பட அவர்களை அழைத்து சாதாரணமாக விசாரித்தேன்.. ஒன்றும் விஷயம் தேறவில்லைதான்.. வீட்டுக்குச் சென்று விட்டேன். மனைவியிடம் விஷயம் சொல்லிவிட்டுப் படுத்துவிட்டேன்.

விடிந்து விட்டதா என்பது தெரியாமல் இருந்தபோதுதான் திடீரென மனைவி எழுப்பினாள். “என்னங்க.. கொஞ்சம் எழுந்திருங்க.. மல்லிகா வந்திருக்குது.. கையிலே அந்தக் குழந்தை இருக்குது.. வாங்க..”

இவள் குழந்தையுடன் ஏன் வந்தாள்.. ஆச்சரியமாக அறையிலிருந்து வெளியே வந்தேன்..

”என்ன மல்லிகா.. என்ன விஷயம்?”

“இல்ல சார்.. ராத்திரிஏதாச்சும் விஷயம் தெரிந்ததா’ன்னு கேட்கலாம்னுதான் வந்தேன்..நீங்க போனவுடனே இந்தக் குழந்தையை என்னோட எடுத்து வந்துட்டு எங்கிட்டேயே படுத்துக்க வெச்சுட்டேன்.. ரொம்ப பாசமா அப்படியே சாஞ்சு தூங்குது சார்..”

மல்லிகாவை ஆதூரத்துடன் பார்த்தேன். எனக்கு அவள் நிலை புரிந்தது.

“நேத்துயாரும் கிடைக்கலே மல்லிகா.. இன்னிக்குப் போய் ஸ்டேஷன்’ல ஆளை அனுப்பி விசாரிக்கலாம்.. உனக்குத் தெரிஞ்ச குழந்தைகள் காப்பகம் எதுனா இருந்தா சொல்லு.. அங்கே கொடுக்க நான் அரேஞ்ச் பண்ணறேன்..”

“அதைப்பத்திப் பேசத்தான் நான் காலைலையே ஓடி வந்தேன் சார்.. எதுக்கு சார் அநாதை இல்லம்.. அது இதுன்னு.. பேசாம எங்கிட்டயே இருக்கட்டும் சார்.. யார்னா வந்து ஸ்டேஷன்’ல கம்ப்ளெயின் பண்ணினா விசாரிச்சுட்டுக் கொடுத்துடுவோம் சார்..”

”அது சரிம்மா.. ஆனா இந்தக் குழந்தையை பதிவு செய்யப்பட்ட அநாதை இல்லத்துல விட்டாத்தானம்மா நாளைக்கு கேஸ் எதுவும் தடம் மாறாது. உனக்குத் தெரியாதா? உனக்கு இந்தக் குழந்தை ரொம்ப பிடிச்சுருக்கா?”

சட்டென அவள் கண்கள் ஒளிர்ந்தன.. “ரொம்ப சார்..யாருமே வரலைன்னா நான் என்கிட்டேயே வெச்சு வளர்க்கிறேன் சார்..”

அவள் சொன்னவிதம் என்னை என்னவோ செய்தது.. தாய்மைக்கே உள்ள குணம் எல்லாப் பெண்களுக்கும் இயற்கையிலேயே இறைவன் கொடுத்திருக்கிறான் போலும்..

“மல்லிகா.. எதையும் யோசிச்சு செய்யு.  இந்தக் குழந்தையைப் பெத்தவங்க வந்து கேட்டா உடனே கொடுத்துடணும்மா.. இருந்தாலும் ஒண்ணு பண்ணு.. நம்ம ஸ்டேஷன்’ல லிஸ்ட்’ல இருக்கற அநாதை இல்லத்துல நமக்குத் தோதா யாராவது இருக்காங்களா’ன்னு பாரு. அங்கே போய் இந்தக் குழந்தையை சேர்த்துட்டு அப்ளிகேஷன் கொடுத்துட்டு அத்தோட ஒரு காபியும் வாங்கிக்கோ.. அவங்ககிட்டே பேசி குழந்தையை நீ வளர்க்கறதுக்கு ஏற்பாடு பண்றேன்னு அவங்ககிட்டேயிருந்து குழந்தையைத் திருப்பி வாங்கிக்கோ… நம்ம ஊர்’ல அநாதைக் குழந்தைங்களுக்கு பஞ்சமே இல்லே.. அவங்களோட இந்தக் குழந்தையும் சேருவதை விட உங்கிட்டே வளர்ந்ததுன்னா நல்லதுதானேம்மா.. ஆனா இப்போ நான் சொல்றது எல்லாமே இந்தப் பெத்தவங்க கிடைக்கறதைப் பொறுத்துதான்.. அவங்க கிடைச்சுட்டாங்கன்னா கொடுத்துடணும்மா.. ஞாபகம் வெச்சுக்கோ.. இல்லைன்னா குழந்தைக் கடத்தல் கேஸுன்னு ஆயிடும்.. உனக்குத் தெரியாத விஷயம் இல்லே இது.”

“ஆமா சார்.. நீங்க சொல்றமாதிரியே ஏற்பாடு பண்றேன்.”

”சரி, இந்த விஷயத்துல என்னோட பூரண உதவி வழக்கம்போல இருக்கும்”

அவள் முகம் மகிழ்ச்சியால் பூரிக்க குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே கிளம்பி விட்டாள்.

அவளைப் பொறுத்தவரை வாழ்க்கையில் ஏதோ ஒரு நிம்மதியை இந்தக் குழந்தையில் பார்க்கிறாள் என்று புரிந்தது. அவளுக்கு இந்தக் குழந்தை இருந்தால் அவள் வாழ்க்கைக்கு ஒரு நல்ல காரணமும் அமைதியும் கிடைக்க ஆண்டவன் வழி செய்ததாகத்தான் நினைத்தேன்.

அவள் போனது மனைவி கேட்டாள். “பாவங்க.. ஏதாவது ஏற்பாடு பண்ணி இந்தக் குழந்தை இவகிட்டேயே இருக்கும்படி செய்யுங்க..”

“அப்படில்லாம் சட்டத்துல இடம் இல்லே.. பெத்தவங்க கிடைச்சு அவங்கதான் பெத்தவங்க.;ன்னு நிரூபணமாச்சுன்னா அவங்க கையிலே சேர்த்துடணும்.. இல்லாகாட்டி கேஸ் வேறவிதமா போகும்.. இதுவரைக்கும் நல்ல பேரோட இருந்திருக்கேன்.. இப்படியே இருக்க விடு.”

அன்று முழுவதும் யாருமே அந்தக் குழந்தையைத் தேடி வரவில்லை.. மல்லிகா அநாதை இல்லத்தில் பதிவு செய்து, திரும்பவும் தத்து எடுத்துக் கொண்டதாக உறுதிப் பத்திரமும் உடனடியாக வாங்கிவிட்டாள். கெட்டிக்காரிதான். . அந்தக் குழந்தையும் அழகாக மல்லிகாவிடம் தன் சொந்தத் தாயாக நினைத்து பாய்ந்து சென்று அவள் மடியில் விழும்போதெல்லாம் அவள் முகம் காட்டும் மகிழ்ச்சியைப் பார்க்கவேண்டுமே. எனக்கே அதைப் பார்க்கவும் மனதுக்கு சந்தோஷமாகத்தான் இருந்ததது. இரவு ஸ்டேஷனுக்கு வந்திருந்தவள் ஏதோ முடிவுக்கு வந்தவள் போல பேசினாள்..

”சார்..நான் ஊட்டிக்குப் போகறேன் சார்.. இன்னிக்கு மிட் நைட் வண்டிக்கே கோயம்புத்தூர் போய் அங்கேயிருந்து ஊட்டி போயிடறேன் சார், அண்ணன் கூப்பிட்டுக் கொண்டே இருக்கறச்ச இனிமேயும் கேக்காட்டி நல்லா இருக்காது சார்.. அப்புறம் குழந்தையோட படிப்பு எல்லாம் ஊட்டியிலேயே ஏற்பாடு பண்ணனும் சார்.. உங்ககிட்டே சொல்லிட்டு போகலாம்னுதான் வந்தேன்.. நீங்க குடும்பமா அப்பப்ப அங்க வரணும் சார்..” முகத்தில் மகிழ்ச்சி ஏராளமாகத் தெரிய ஒருவித பதட்டமும் சேர்ந்து கொண்ட நிலையில்தான் பேசினாள்.

என்ன இது.. ஒருநாள்தானே ஆயிற்று.. இன்னும் சில நாட்களாவது பார்க்கவேண்டாமா.. இந்தக் குழந்தையைத் தேடி யாரும் வரமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.. இவள் கொஞ்சம் பொறுமை காண்பிக்காமல் அவசரப்படுகிறாளோ..

அவள் உடனடி முடிவு அசாதாரணமாகப் பட்டாலும் நானும் தலையசைத்தேன். ஒருவிதத்தில் எனக்கும் மகிழ்ச்சி அவளிடமிருந்து தொத்திக் கொண்டது. ஸ்டேஷனில் எல்லோரிடமிருந்து பிரியா விடை பெற்றாலும் என்னைப் பார்க்கையில் ஒரு விசேஷ அன்பு பிரதிபலித்ததை என்னால் உணர முடிந்தது.. அவளை அனுப்பி வைத்த போது என்னையுமறியாமல் என்னிடம் ஏற்பட்ட ஏதோ இனம் தெரியாத வருத்தத்தை எப்படி வெளிக்காட்டுவேன்..

ஆனால் உடனடியாக வராத அந்தக் குழந்தையின் தாயும் தகப்பனும் இத்தனை நாட்கள் கழித்து வருவார்கள் என்று யாருமே எதிர்ப்பார்க்கவில்லைதான்.. குழந்தையைப் பற்றி ஆறு மாதங்களுக்கு முன் ஒரு கேஸ் கோப்பாகப் பதிவு செய்திருந்தாலும் அதன் தொடர்ச்சியாக அதை அனாதை இல்லத்தில் கொண்டு விடப்பட்டது என்பதையும் எழுதி அந்தக் கேஸையும் க்ளோஸ் செய்தாயிற்று. இப்போது இந்தத் தாய் வந்திருக்கிறாள்.

சென்னையைச் சேர்ந்தவள் குடும்பத்துடன் கோவையிலிருந்து சென்னை திரும்பும்போது காட்பாடி ஸ்டேஷனில் ரயிலில் குழந்தையின் செயினுக்கு ஆசைப்பட்ட திருட்டுப் பயல் ஒருவன் பயணத்தில் தூங்கிக் கொண்டிருந்த இவர்கள் யாருமறியாமல் குழந்தையை அப்படியே தூக்கிக் கொண்டு போய் செயினை மட்டும் கழட்டி விட்டு, அந்தக் குழந்தையை அநாதையாக அன்று அந்த வீட்டில் போட்டுவிட்டு ஓடியிருக்கிறான். திருட்டுப்பயல்.. நல்லகாலம்.. செல்லாக் காசுக்காகக் கூட கொலை செய்யத் தயங்காத மனிதர்கள் ஏராளமாக இருக்கும் இந்தக் கால கட்டத்தில் இப்படி ஒரு குழந்தையைக் கொல்லாமல் விட்டிருக்கிறான் என்ற ஒன்றே அப்போதைக்கு சமாதானமாக இருந்தது. இருந்தாலும் அந்தத் தாய் அடுத்த நாள் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் புகார் கொடுக்க, அது அப்படியே இருக்க, இவளே பாவம் கோவையிலிருந்து ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் விசாரித்துக் கொண்டே இருந்திருக்கிறாள். இங்கே நம் ஸ்டேஷனுக்கும் அதுவும் நான் இல்லாத சமயத்தில் வந்தபோதுதான் புதிதாக சமீபத்தில் ட்ரான்ஸ்பர் ஆகிவந்த ரைட்டர் உலகநாதன் விவரம் தெரியாமல் மூடிக் கிடந்த ஃபைலைத் திறந்து அந்தத் தாயை அவள் குழந்தை முதலில் பதிவு செய்து வைக்கப்பட்ட அநாதை ஆசிரமத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறான். அத்தனை விவரங்களும் கிடைத்து, இதோ இப்போது நீதி கேட்டு போராட அந்தத் தாயும் அவள் புருஷனும் என்னுடைய ஸ்டேஷனுக்கு என்னிடமே வந்துவிட்டார்கள்.

இது ஒருவிதமாகப் பார்த்தால் மிகச்சாதாரணமான கேஸ்தான்.. முதலில் குழந்தையின் தாயார் யார் எனத் தெரியாமல் போய்விட்டது. இப்போது அந்தத் தாய் கிடைத்துவிட நாம் குழந்தையை திரும்ப வாங்கிக் கொடுத்துவிட்டால் கேஸ் முடிந்துவிடும்தான். காணாமல் போன பொருட்கள் கிடைத்து விட்டால் உரிமையானவரிடம் ஒப்படைத்தது போலத்தான். இன்னும் இதைப் போன்ற கேஸ்கள் பொறுப்பான முறையில் நிறைவு செய்தால் எனக்கு பிரமோஷனுக்கான சந்தர்ப்பங்களை அதிகரிக்கக் கூட செய்யும்.

ஆனால் மல்லிகாவின் கையில் உள்ளதே இந்தக் குழந்தை… நான் மல்லிகாவிடம் கைபேசியில் பேசினேனே.. குழந்தையைக் கொண்டு வந்து கொடுக்கும்படி இரக்கமேயில்லாமல் அவளிடம் சொன்னேனே.. அவள் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும் கடைசியில் கேட்டு முடித்தவுடன் பதில் ஏதும் சொல்லாமல் வந்த கேவலில் அவள் வேதனையை என்னால் உணரமுடிந்ததே.. ஆறு மாதம் தாய்மையை முழுமையாக அனுபவித்த அந்த சுகத்தை எப்படி அவளால் இழக்க முடியும்.

குழந்தை பாசம் என்றால் காணாமல் போன பணம் பொருள் போலவா.. தாய்மைக்கு ஏதேனும் அரசாங்கம் சட்டத்தில் தனிச் சலுகை கொடுத்துள்ளதா..அதுவும் பெற்ற தாய் நீதி கேட்க, வளர்க்கும் தாய்க்கு இங்கே என்ன உரிமை இருக்கும்?. எனக்குப் புரிந்த இத்தனை விஷயம் மல்லிகாவுக்கும் புரிந்திருக்கும். புத்திசாலிப் பெண் அவள் வருவாள்.. குழந்தையை ஒப்படைப்பாள். அப்படி வரவில்லையெனில் போலீஸ் பாதுகாப்போடு இந்தத் தாயை ஊட்டிக்கு அனுப்பி வைக்கத்தான் வேண்டும்.. வேறு வழியில்லைதான்.

போகும்போதே உலகநாதன் போனில் அழைத்தான்.. ‘சார்.. ஒரு குட் நியூஸ்.. இந்தம்மாவும் புருஷனும் நம்மோட ஒத்துழைக்க சம்மதம் சொல்றாங்க..”

“என்ன உலகா.. என்ன சொல்லறே”

உலகன் நிதானமாக விளக்கினான்.. அவன் சொல்லச் சொல்ல என் மனத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடத் தொடங்கியது.

இந்தக் குழந்தையைப் பெற்றவர்கள் பணம் படைத்தவர்கள் இல்லை.. சாதாரண குடும்பம்தானாம். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறதாம்.. இது மூன்றாவது குழந்தை, உலகன் இவர்களிடம் ஏதோ பேசியிருக்கிறான். குழந்தை மல்லிகாவிடமே வளரட்டும்.. அவ்வப்போது ஊட்டிக்குப் போய்ப் பார்த்துவிட்டு வரட்டும். இப்போதெல்லாம் ஒரு குழந்தை ஹாஸ்டலில் போட்டுப் படிக்கவிட்டால் அது பாட்டுக்கு வளராதா என்ன.. அது போல மல்லிகாவிடமே வளரட்டுமே.. ஆனால் மல்லிகா ஏதேனும் இவர்களுக்கும் பண உதவி அவ்வப்போது செய்து வரவேண்டும்.. இதை உலகன் சொன்னபோது முதலில் அந்த தகப்பன் ஒப்புக் கொண்டு பின்னர் அவன் மனைவியையும் ஒப்புக் கொள்ள வைத்தானாம்.. குழந்தை நன்றாக வளரவேண்டும் என்று அவர்களுக்கும் ஒரு விருப்பம் இருக்காதா என்ன.. குழந்தையை  யாருக்கும்விற்கவில்லையே.. வளர்ப்பதற்கு இன்னொரு இடம் வாய்ப்பாகக் கொடுக்கிறோம்… என்றைக்கும் இவள்தான் அன்னை.. என்றெல்லாம் எடுத்துச் சொன்னபிறகு இவர்களை சம்மதிக்க வைத்திருக்கிறான் உலகன்..

நான் அவனைப் பாராட்டினேன்.. மல்லிகா நாளை வந்தால் எவ்வளவு பணம் அவளால் தரமுடியும் என்றும் கேட்டு ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.. கேஸ் இவ்வளவு சுமுகமாக முடித்து வைத்திருக்கிறான் உலகன்.. நல்லதுதான்.

என் மனதில் ஒருவகையான நிம்மதி பரவ அந்த நிம்மதியுடன் இர்வு தூங்கினேன். அடுத்த நாள் காலையிலேயே மல்லிகாவிடம் மறுபடி பேசினேன்.. டிரெயினில் அவள் அண்ணன் துணை வர குழந்தையுடன் வந்து கொண்டிருக்கிறாள். அவளிடம் நடந்ததைச் சொன்னேன். எத்தனை சந்தோஷமாகக் கூவினாள். வண்டி இறங்கினதும் நேரடியாக ஸ்டேஷன் வருவதாகச் சொன்னாள். அவள் சந்தோஷம் என்னுள் பரவ அதை அனுபவித்துக் கொண்டே கொஞ்சம் தாமதமாகத்தான் ஸ்டேஷன் சென்றேன்.

நான் நுழைந்தபோது ஸ்டேஷனில் அந்தத் தம்பதியினர் இருந்தனர். முதல்நாள் செய்த ஆர்ப்பாட்டமெல்லாம் செய்யாமல் பெஞ்சில் உட்கார்ந்து உலகனிடம் பேசிக்கொண்டிருந்தனர். என்னைப் பார்த்தவுடனே ஒரு புன்சிரிப்போடு உலகன் என்னிடம் வந்தான்.

”சார், எல்லாம் நல்லபடியா முடியுது.. அந்தம்மா கூட குழந்தை நல்லபடியா இருந்தா போதுமின்னுதான் சொல்லறது.. பணம் கூட வேண்டாம்கிறது இப்போ..”

”மல்லிகா வந்துடுவா உலகன். அவளும் தன்னால் முடிந்த பண உதவியைச் செய்யறேன் நு சொல்லியிருக்கா..எல்லாமே மகிழ்ச்சியா இருந்தா நல்லதுதானே.. அவள் வரட்டும்.”.

கொஞ்ச நேரத்தில் மல்லிகா வந்தாள். பயணக் களைப்பு அவள் முகத்தில் கொஞ்சமும் தெரியாமல் மலர்ந்த முகத்துடன் அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தாள். ஆறு மாதத்துக்கு முன் பார்த்த குழந்தையா அது.. ஆஹா.. நன்றாக சதை பிடித்து தத்தித் தத்தி நடைபோட்டு கீழே இடறி தானே விழுந்து தானே எழுந்து கலகலவென சிரித்து வந்த ஒரு சில நிமிஷங்களிலேயே  போலிஸ் ஸ்டேஷனையே தலைகீழாய் மாற்றிவிட்டது.

ist2_2304394-baby-girl

குழந்தையாய் இங்கிருந்து சென்றது ஒரு குட்டி தேவதையாக திரும்பி வந்தது போலத்தான் உணர்ந்தேன். அழகான ஆடை.. கழுத்தில் இரண்டு பவுனுக்கும் மேலான கனமான சங்கிலி, கையில் தங்க வளையல்கள் ஜொலிக்க அந்தக் குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்தேன்.

நான் பார்ப்பதைப் போலத்தான் அந்தத் தாயும் பார்ப்பதாக சட்டென உணர்ந்ததால் அவளைப் பார்த்தேன். ஆமாம்.. அப்படித்தான் பார்த்திருந்தாள். திடீரென என்ன நினைத்தாளோ பெஞ்சிலிருந்து எழுந்து ஓடி வந்து தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு முத்தமாரிப் பொழிந்தாள். அவள் கண்களில் நீர் மழையாய்ப் பொழிய அந்தக் குட்டி தேவதையை கட்டிக்கொண்டு உச்சி மோர்ந்தாள்..அந்தக் குழந்தை அழ ஆரம்பித்தது..

குழந்தையை சமாதானப்படுத்திக்கொண்டே அந்தக் குழந்தையின் நகைகளைக் கழட்டினாள். அப்படியே அவைகளை மல்லிகாவிடம் கொடுத்தாள்.. ”இந்த நகைக்காகத்தான்மா எவனோ ஒருவன் இந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போனான்.. இத்தனை மாஸம் இவளைக் காப்பாத்தி இப்படி வளர்த்திருக்கியே.. உனக்கு எப்படி நன்னி சொல்றதுன்னு தெரியலே.. ஆனா இந்தக் குழந்தையை உன்னிடமே வெச்சுக்க விட எனக்கு மனசில்லை..இது என் குழந்தை.. நானேதான் வளர்க்கணும்..  நீ எப்ப வேணும்னாலும் இந்தக் குழந்தையைப் பார்க்க வரலாம்.. வேற எதுவும் எனக்குச் சொல்லத் தெரியலே”

அந்தக் குழந்தை அவளிடம் இருக்க இருக்க சத்தம் போட்டு அழத் தொடங்கியது..திமிறியது கூட ஆனால் அந்தத் தாய் அதைப் பொருட்படுத்தவேயில்லை.. அவள் கதறக் கதற அந்தக் குழந்தையை மேலும் இறுக்கிக்கொண்டே பேசினாள். மல்லிகாவின் நிலையை என்னால் விளக்க முடியவில்லை.. அவள் இதை எதிர்ப்பார்க்கவில்லை. எத்தனை ஆனந்தத்தோடு உள்ளே வந்தாள்.. உடனடியாக அந்த ஆனந்தம் இப்படிப் பறிக்கப்பட்டுவிட்டதே.. ஏன் இப்படி இவளுக்கு மட்டும் ஆகவேண்டும்.

மல்லிகா என்னிடம் வந்தாள்.

“அம்மான்னா, அதுவும் பெத்த அம்மான்னா அம்மாவுக்கு உள்ள உரிமையே தனி.. அவங்க சொல்றது எல்லாம் சரி சார், குழந்தை அவங்ககிட்டேயே இருக்கட்டும் சார்.. இதோ நிறைய விளையாட்டுச் சாமான்லாம் இருக்கு சார்.. பேபிக்கு என்னென்ன பிடிக்கும் எது பிடிக்காது ந்னு ஒரு லிஸ்ட் எழுதி வெச்சிருக்கேன் சார்..  ராத்திரில ரெண்டு மணிக்கு மூணு மணிக்குன்னு எழுந்திருக்கும்.. கொஞ்சம் சமாதானப்படுத்தி தூங்கவெச்சா போறும்.. தூங்கிடுவா.. நாள் போக போகச் சரியாயிடும்.. ஜாக்கிரதையாப் பார்த்துக்கச் சொல்லுங்க சார்.. என்ன.. இப்ப அழுதாலும் போகப் போகச் சரியாயிடும்.. எனக்கு ஒண்ணும் வருத்தமில்லே சார்.. அவங்க குழந்தையை நான் எப்படி சார் சொந்தம் கொண்டாடமுடியும்.. எனக்கு ஒரு ஆறு மாசத்துக்கு அம்மாங்கிற ஸ்தானத்தைக் கொடுத்ததே பெரிசு சார்.. அவங்களைத் தூக்கிட்டுப் போகச் சொல்லுங்க சார்..”

அந்தத் தாயிடத்தில் அந்தக் குழந்தை சப்தம் போட்டு திமிறிக் கொண்டே அழ இந்தத் தாயோ மௌனமாக தனக்குள் அழுதுகொண்டே ஸ்டேஷனை விட்டு நிதானமாக வெளியேறிக் கொண்டிருந்தாள்.

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “குழந்தையும் குட்டி தேவதையும்

  1. நல்லதொரு கதை சார். ஆஹா! நம்மூரிலும் காணாமல் போன பொக்கிஷத்தை கண்டுபிடிக்க முடிகிறதென்றால் ஆச்சரியம் தான்! பெற்ற தாயின் உரிமை தவிர்க்க இயலாததுதான், ஆனால் இந்தக் குழந்தைதான் அந்தக் குழந்தை என்பதை எவ்வாறு உறுதியாயிற்று? ஏன் அதே நாளில் பிறிதொருவர் இந்த குழந்தையை கைவிட்டுச் சென்றிருக்கலாமல்லவா?!

    தங்கள் நண்பரின் ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்திப்போம்…

  2. What a lovely story. You have expressed the emotions of the different characters beautifully! As I was reading the story I got the feeling that I was seeing a TV episode so vivid was the description.Hats off to you! I am very proud to know you!

  3. கருப்பொருளிலிருந்து விட்டகன்று, பல்வேறு இடங்களில் பயணித்ததலோ என்னவோ, கதையில் மனம் ஒட்டவில்லை. நீளத்தைக் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம் எனப் பட்டது. நிஜக்கதை என்பதால், முடிவை ஏற்றுக் கொள்ள‌த்தான் வேண்டும்! நம்பிக்கையின் பெருமையையும், தாய்மையின் பெருமையையும் வலியுறுத்தும் கதை. எடுத்துச் சொன்னமைக்குப் பாராட்டுகள்.

  4. சதீஷ்! நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அங்கேயே எழுதிவிட்டேனே..
    //நீ சொன்ன குழந்தையைப் பத்தி அத்தனை தகவலையும் சரிபார்த்தாச்சு. எல்லாமே அந்தக் குழந்தையோட அடையாளத்தோடு ஒத்துப் போறதையும் நாங்க ஒப்புக்கறோம். ஆனா கையிலே அந்தக் குழந்தை வரணும்..  ஒரு நாள் பொறுமையாயிரு.. நாளைக்கு இதே நேரத்துல எப்படியாவது உன் குழந்தையை உன்கிட்டே சேர்க்கிறது எங்க பொறுப்பு.//

    இதற்கு மேல் விவரித்தால் ஏற்கனவே டாக்டர் சங்கர்குமார் ரொம்ப நீளம் என்று சொல்லிவிட்டார்.. இன்னும் நீளமாகிப் போய்விடும் 🙂

  5. அன்புள்ள டாக்டர்,
    என் கை கொஞ்சம் நீளம் போல.. எழுதும் வேகத்தில் கவனிக்கத் தவறி விட்டேன். 🙂
    சில கதைப்பாத்திரங்கள் சில இடங்களில் தடம் மாறித்தான் போகின்றது.. இருந்தாலும் எல்லாவற்றையும் முடிவின் போது சேர்த்து விடலாம்தானே..

    உங்கள் பார்வை எனக்குப் பிடித்தமானது. நன்றி!
    அன்புடன்
    திவாகர்

  6. பண்பட்ட நெஞ்சங்களை உலவ விட்டு,
    பண்பாட்டுக் கூறுகளை உலவ விட்டு,
    வாழ்வு இனிமையானதும் எளிமையானதும் 
    பண்பட்ட இயல்புகளின் கோபுரமானதும்
    என்பனவற்றை இக் கதையின் உயிரோட்டமாகக் கண்டேன்.
    இத்தகைய கதைகள் மனித வாழ்வை வழிப்படுத்துவன.
    மனத்தை வழிப்படுத்துவன.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *