பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11855425_873748699345997_814554148_n
133467347@N06_rதிரு. வினித் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (15.08.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

13 thoughts on “படக்கவிதைப் போட்டி – 25

  1. “வாருங்கள் தோழர்களே
    விண்ணுயரப்பறந்திடுவோம்! ”

    கூட்டமாய் வாழ்வதிங்குப் பிடிக்காது
    தேட்டமே குறியென்று வாழ்ந்திடுவான்
    ஓட்டமே வாழ்வென்று ஓடிடுவான்
    காட்டமே மனதிற்கொண்ட மனிதன்வாரான்

    வாருங்கள் தோழர்களே
    விண்ணுயரப் பறந்திடுவோம்!

    கருப்பென்றும் சிவப்பென்றும் பேதலிப்பான்
    விருப்புடனே எந்நாளும் வாழமாட்டான்
    செருக்குடனே வாழ்ந்திங்கு கெட்டலைவான்
    வருத்தமே கொண்டழியும் மனிதன்வாரான்

    வாருங்கள் தோழர்களே
    விண்ணுயரப் பறந்திடுவோம்!

    மதமென்னும் போர்வையிலே மாட்டிக்கொள்வான்
    நிதமிங்குப் போர்செய்து மனிதம்கொல்வான்
    இதமாகப் பேசுதலே இழிவென்பான்
    உதவாத குணமுடைய மனிதன்வாரான்

    வாருங்கள் தோழர்களே
    விண்ணுயரப் பறந்திடுவோம்!

    ஆறறிவு தனக்கென்று ஆண‌வம்கொள்வான்
    ஆறுதலாய்ப் பேசுதலை அறியமாட்டான்
    மாறுதலை மனமொப்பி வாழமாட்டான்
    சீறுதலே குணங்கொண்ட மனிதன்வாரான்

    வாருங்கள் தோழர்களே
    விண்ணுயரப் பறந்திடுவோம்!

    கூடிவாழும் நமையிங்கு விரட்டவாரான்
    சோடியாக வாழும்நம்மைத் துரத்தவாரான்
    பாடியாடி இரைசேர்ப்பதைத் தடுக்கவாரான்
    பேடியிவன் சகவாசம் நமக்குவேணாம்

    வாருங்கள் தோழர்களே
    விண்ணுயரப் பறந்திடுவோம்!

  2. சிந்தைச் சிறகு….

    ஓவியம் அசைவதாக 
    கற்பனை கொண்ட 
    பறவைகளின் மறு பக்கத்தில் 
    நான் வெறும்
    சுவர்…

    கவிஜி

  3.                  பட்சிகளின் கூக்கூ-கார்த்திகா AK 

    வெளிர் வானத்தில் 
    அரை வட்ட வானவில்லாய் 
    வட்டமிட்டு  இரை கொத்தும் 
    சிறு பறவைகள் 

    ஒற்றுமையையே 
    வலிமையாய்
    சிறகில் ஏற்றி 
    உயரப் பறந்திடும் 
    பெரும் தேவதைகள் 

    சிறகசைத்து நிலவோட்டம் 
    தொடக்கி வைக்கும் இவை  
    வால் நட்சத்திரங்களின் 
    செல்லப் பிள்ளைகளே     

    கொஞ்சும் அலகுகளால் 
    நெஞ்சம் அசத்தி 
    உலகாளும் நீங்கள் 
    இந்த தேசத்தின் 
    காதல் தூதுவர்களோ!!

       

  4. பறவைகளின் பாடம்…

    பறவைகள் பார்த்திட மட்டுமல்ல
         பாடம் பலவும் கற்றிடத்தான்,
    உறவு பகையெனப் பிரித்திடுவான்
         வேற்றுமைச் சிறகை விரித்திடுவான்,
    நிறமென இனமென விலகிடுவான்
         நினைத்திடா பேதமாய் உலவிடுவான்,
    மறந்திடும் மனிதனைத் திருத்திடத்தான்
         மேலவை ஒன்றாய்ப் பறப்பதுவே…!

    -செண்பக ஜெகதீசன்…

  5. சுதந்திரம் வாங்கியதாய் 
    சொல்லிக்கொண்டு 
    புதிய புதிய 
    சிறைச்சாலைகள் 
    திறந்துகொண்டிருக்கும் 
    மனிதர்களே வாருங்கள்  

    நேற்றுகள் தந்த பாரங்கள் 
    நெஞ்சோடு இல்லாமலும் 
    நாளையை பற்றிய 
    கவலைகள் கொள்ளாமலும் 
    இன்றைய பொழுதை 
    இனிமையாய் கழிக்கும் 
    எங்களிடம் இல்லாத  சுதந்திரம் 
    உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள் 
    நாலா பக்கமும் காவலோடு 
    கொடியேற்றும் உங்கள் விழாவில் 
    நாங்களும் ஒட்டிக்கொள்கிறோம் 

  6. உளமெனும் படர்மணல்…! உயர்ந்தெழும் நினைப்புகள்….!!
    *************************************************************************

    படர்மணல் நிலமென 
    துளமிதை  அழகே,
    நீ கேளாய்….!

    சுடரொளி யறிவெனு 
    மொருதழ லுதித்திட,
    ஒருதினம் விழைந்தேன்…!

    இடர்பல தொடரென 
    குடிபுக வரினும்,
    இடியெனு நகைதரு
    கரடிகள் தொடினும்,
    தொடர்ந்தொளி பெறநிதந் 
    துடிப்புடன் விழைந்தேன்…..!

    சிறகதை விரித்தியல்
    பொடுசுழல் விசையதை
    மனத்தினில் கொடுத்திடு
    நினைப்பெனும் பறவை…!

    நிகழ்கணப் பொழுதிலும்
    நிழலெனத் தொடர்ந்தெனை
    நிலையென விருப்பதைத்
    தடுத்தழிக் கும்!
     
    நடப்பதன் நடுவினுள்
    திகழ்கரு வெதுவென
    நினைக்கையில்,

    நடந்ததைத் திரும்பவும்
    நடந்துளம் நினைந்திட
    படபடபடவென வெழுமே…!

    நெளிவுறு புழுக்களை
    சிதற்படும் வெறுப்பினை
    லபக்கென விழுங்கிட 
    விரும்பிடும் பறவை…!

    சினந்தனில், வெளியிடும்
    விடந்தனில் விளைந்திடு
    கருநெளி புழுவதை
    விழுங்கிட,
    லபக்கென விரும்பிடும் பறவை…!

    விரட்டிடும் வழிதனை
    விழைந்துட னுளமது
    தவித்திட தளிர்த்தது
    ஒளியே….! 

    விசித்திர வொளியது
    வடக்கினி லுதித்துபின்
    எதிர்த்திசை நிலைபெறும் 
    பொழுதில்,

    செழுந்தழல் தருமதன் 
    தகிப்பில்,
    எழுந்துயர்ப் பறந்தனவே……!!

    மணல்வெளி,
    அலைவது விடுபட
    அகந்தனி லகப்படும்
    அரும்பொருள் தருமதை
    தரும்வழி தடுக்கிட,
    இருவறை தனில்கரம் 
    நுழைந்தெதிர் வரும்வழி
    முகிலென நடக்கின்றேன்…..!
    யான், இளநகை யுகுக்கின்றேன்……!

    ************************************************
    அன்புடன்,
    சுந்தரேசன் புருஷோத்தமன்.

    #  மணல்வெளி – மனம்.
        பறவைகள்    – அலையும் எண்ணங்கள்.
        வடக்கிருந்து, தென்திசை நோக்கிய ஒளியின் பயணம் –> ஞானம் கைகூடல்.
        தென்னாடு (மனிதர்தம் சிரசென அறிக), வடக்கு – மூலாதாரம்!
        ஞானவொளியால், அலைபாயு மெண்ணங்கள் மறைந்தன, தெளிவு பிறந்தது.
        முகில் நடை – மேகத்தையொத்த மெதுவான நடை.
       

  7. பறவைகள்போல சிறகுகள் வேண்டி
    இறைவனிடம் யாசிக்கிறேன்!
    பறவைகள்போல இன்னிசைகானம்
    பாட யாசிக்கின்றேன்!
    பறவைகள்போல கூட்டமாய் வாழ
    யாசிக்கின்றேன்!
    பறவைகள் கூட்டத்தில்
    மனிதநேயம் இடம்தேடி அலைகின்றேன்!
    தகதகத்த தங்க வான்குழம்பில்
    சிறகடித்துப் பறக்க ஆசைதான்!
    பறக்க நினைப்பதெல்லாம்
    செய்ய நினைப்பதெல்லாம் அடங்கி
    மண்துகளாய் மாறி ஏனிந்த வன்முறை சிறைவாசம்!
    ஆண்டுகள் பல கடந்தாலும்
    அமைதி காண யாசிக்கின்றேன்!
    விண்ணுயரப் பறக்க நான்
    நினைத்தாலும் மண்துகளாய்
    மிதிபட்டுக் கிடக்கின்றேன்!
    வானம் முட்டுமளவு ஆசைகள் பலவிதம்!
    அடுத்தவர் சொத்து நாவில் ஊறிய தேனாக
    மாறிய அதிசயமும் பாராயோ!
    விதை விதைத்தவன் மட்டுமே
    அறுவடைக்கு சொந்தமாவான்!
    அறுப்புக்கு புது நாற்று சொந்தக்காரன்
    வந்த அதிசயத்தை தடுக்க உதவுவாயோ!
    தகதகத்த தங்க மஞ்சே!
    தரணியில் இதுபோன்று நீ காண்பாயோ!
    வான்முகிலுக்கு தங்க வர்ணம்பூசலாம!
    வான்முகிலையே வரைந்தவனுக்கு 
    தங்க வர்ணம் பூசுவது முறையா!
    பறவையே! எனக்கு உந்தன் சிறகை
    இறைவனிடம் வேண்டி அருள்வாயா!
    விதை விதைத்தவனுக்கே
    விதைகள் சொந்தமென
    பரவச் செய்ய சிறகுகள்
    வேண்டி யாசிக்கிறேன்!
    ஏறுபோல உண்மைநடைபோட
    இலஞ்சம் இல்லா பெருவாழ்க்கை
    கொண்டுவர இல்லானுக்கும்
    உணவளிக்கும் மனம் மிகுந்துவர
    முதியோர் காப்பிட சிறகுக் கைகளை எனக்கருள
    இறைவனிடம் யாசிக்கிறேன்!

  8. பண்படுவோம்; பயனுறுவோம்!

    இளமாலை வேளையிலே
      இளந்தென்றல் வீசிவர
    இரைதேடி வந்திட்ட
     இசைபாடும் புள்ளினங்கள்

    இரக்கத்தை நெஞ்சோடும்
     இருப்பவற்றைக் கையோடும்
    இயன்றவரை தினம்சேர்க்கும்
     இவரன்றோ தெய்வமென்பேன்!

    உயிர்களிலே இறைவனென்றால்
     உயிர்கொடுக்கும் இவரும்தான்
    உறவுகளை மிஞ்சிநிற்கும்
     உன்னதத்தை நாடுகின்றார்

    எதிர்பார்ப்பு இங்கில்லை
     ஏங்கும் நிலையில்லை
    ஏய்த்துப் பிழைப்பதில்லை 
     எவர்மீதும் வன்மமில்லை

    பரவிநிற்கும் மணற்பரப்பு
     பறந்துவிரிய பறவைக்கூட்டம்
    பார்த்துத் தெளிந்து
     பண்படுவோம்; பயனுறுவோம்!

    எண்ணங்கள் உயர்ந்துநின்று
      ஏற்றவகை வாழ்ந்திடுவோம்!!

    அன்புடன்
    சுரேஜமீ

  9. கூட்டு வாழ்வு

    கூடி உணவுண்ண

    கூட்டம் தனையே

    கூட்டி வந்த

    புள்ளினமே !

    சிதறிக் கிடக்கும்

    தானியம் தனை

    சிந்தை சிதறாது

    அலகு தனில்

    அள்ளி எடுக்கிறீரோ ?

    சூரியனும் மெல்ல

    கடலுள் தஞ்சமடைய

    தன் மஞ்சள் பட்டாடை

    திரை மூடுகிறதே !

    கடலும் வானும்

    நீலப் பட்டு கொண்டு

    புது அரங்கம்

    அமைக்கின்றனவே !

    கூடு திரும்பும்

    நேரமதில் பிள்ளைகட்கு

    உணவெடுத்துச் செல்ல

    கருமமே கண்ணாய்

    செயலாற்றுகிறீரோ

    பறவைகளே ?

  10. எது சுதந்திரம்!

    பதந்தரும் இறகு விரித்து
    மிதந்திடும் பறவைச் செயலை
    இதந்தரும் சுதந்திரமென ஒப்பிட்ட
    சுதந்திர அடையாளமாக்கினான் மனிதன்
    சந்து பொந்தற்ற வெளியில்
    சிந்திய உணவை எளிதாக
    அந்தமின்றி உள்ளதை அள்ளுவோமென
    உந்தும் நினைவுக் கூடலிது.

    வெட்ட வெளியில் ஒன்றாய்
    கெட்ட பாகுபாடு சூதுவாதின்றி
    ஒட்டு மொத்த சிந்தனை
    எட்டும் உணவிற்கு மட்டும்!
    பட்டு சுதந்திரம் இதுவன்றோ!
    வெட்டு சூது வன்முறையென்று
    கிட்டிய சுதந்திரம் எங்கே!
    நட்டுவிடுங்கள் தர்மச் செயலை.

    (அந்தம் – எல்லை. பதம் – தகுதி)

    பா ஆக்கம்
    பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்
    15-8-2015

  11. கூட்டமாய் வரும் பறவைகளே….
    கொஞ்சம் நிதானம் தேவை.
    இரை போடும் மனிதரை
    இனியும் நம்பாதீர்.

    இரை போடும் சாக்கில்
    வலைவீசி வருவான்….
    இயற்கையைக் கூறாக்கி
    விலைபேசி விடுவான்.

    தானியங்கள் உருவில்
    விஷத்தினைத் தூவிடுவான்….
    மானியங்களாய் பறவைகளை
    மொத்தமாய் அள்ளிடுவான்….

    சுயநலக்காரனிவன்
    சுதந்திரத்தை அடகுவைப்பான்…
    பசுங்கிளியைக் கூண்டிலிட்டு
    சோதிடத்தைச் சொல்லவைப்பான்…

    பந்தயப் புறாக்களாய்ப்
    பறக்கவிட்டு பணம்பார்ப்பான்
    சிங்காரச் சிட்டுகளைச்
    சிறைபிடித்தழகு பார்ப்பான்…

    குருவிக்கூடு கலைத்து
    லேகியம் செய்துகொள்வான்….
    காக்கைகள் கரையுமென்று
    விருந்தினைப் புறந்தள்ளுவான்…

    கொக்குகளை வேட்டையாடி
    கொண்டாட்டம் போடுவான்…
    வலசைவரும் பறவைகளை
    வரிசையாய் வீழ்த்துவான்…..

    மறந்தும் பறவைகளே
    மனிதரை நம்பிடாதீர்…
    இரந்தும் இவர்முன்
    இரையினை நாடிடாதீர்..

    இயற்கையைக் கொல்பவன்…
    இவனுக்குச் சிறிதும
    இரக்கம் காட்டிடாதீர்
    இயற்கையே இவனைக் கொல்லும்,

    இனியும் இவனிங்கு
    திருந்திட வில்லையெனில்!
              இளவல் ஹரிஹரன், மதுரை
                  

  12. ஓளிர்ந்து இருக்கும் ஞாயிற்றால்
    வளர்ந்து இருக்கும் பூமியின்மேல்
    பரந்து இருக்கும் வானத்தின்கீழ்
    விரிந்து இருக்கும் மேகங்கள்
    பசித்து இருக்கும் உயிர்கள்
    ரசித்து இருக்கும் கண்கள்
    பறந்து இருக்கும் புள்கள்
    சிறந்து நிற்கும் மனிதர்!.

  13. ஓர் குழுமத்தின் சிதறல்கள் வேடுவன் கைகளில் சிக்காமல்,
    ஏர் பிடித்தவன் கூர்ப்பினில் மானிடன் என்றாகினும் இன்னும்
    வேர் விட்ட வேடுவக் குணங்களால் ஊன் நாடியே எம்மை
    மூர்க்கத்தனமாகச் சிறை பிடித்து வதைக்கு முன்னர் –நாம்
    மார்க்கம் ஒன்றை வகுத்து சிறகை விரித்து உயரப் பறந்து
    சேர்வோம் ஓர் சுதந்திர பூமியை சிறகின் வலிமையால்
    சோர்ந்து இருப்பது மடமைக்கு அறிகுறி என்று கண்டே
    கூர்ந்து நோக்கத் தெரியும் எல்லையில்லா விசும்பில்
    சேர்ந்தே பறப்போம் – சிறகின் விசைகள் உந்துதலால்
    தர்மம் தொலைந்த தாரணியில் தங்கி உணவு தேடுவிரேல்
    தேர்ந்தே எடுத்தீர் உணவதனை – சுதந்திர வேட்கை கொள்ளாது
    தீர்க்கும் பசிக்கு சொண்டுகளே போதும் இங்கு இனி –உமக்கு
    நேர்த்தியான சிறகெதற்கு சுதந்திரத்தை நாடாது ?……………

    புனிதா கணேசன்
    14.08.2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *