இந்த வார வல்லமையாளர்!
ஆகஸ்ட் 10, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு மீனாட்சி பாலகணேஷ் அவர்கள்
வல்லமை இதழின் எழுத்தாளர்களில் ஒருவராகத் தனது இலக்கியப்படைப்புகள் மூலம் வல்லமை வாசகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்துவரும் திருமதி மீனாட்சி பாலகணேஷ் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய இலக்கியங்களையும் அதில் வரும் காதலர்களையும் அறிமுகப்படுத்தி, இலக்கிய நயம் பாராட்டுதலையும், அக்காதலர்களின் காதலின் மேன்மையையும் ஒருங்கே வழங்கிவரும் “காதலின் பொன்வீதியில்” (http://tinyurl.com/kadhalin-ponveethiyil) என்ற கட்டுரைத்தொடருக்காக அவர் பாராட்டப் படுகிறார்.
அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்றிய மீனாட்சி பாலகணேஷ் அவர்கள், பணி ஓய்விற்குப் பிறகு தனது நெடுநாளையக் கனவான தமிழ் கற்பதில் ஆர்வம் கொண்டு தமிழில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ளத் துவங்கியுள்ளார். தற்பொழுது தமிழ் இலக்கியக் கட்டுரைகளைப் பல இணையதளங்களிலும் எழுதி வருகிறார். இவரது பாடுதும் காண் அம்மானை, குழல்வாய் மொழியாள் கொண்ட ஊடல், திருநடனம் ஆடினது எப்படியோ, கோபுலுவின் ஏகலைவி, காதலின் பொன்வீதியில் ஆகிய கட்டுரைகள் வல்லமை இதழில் வெளிவந்துள்ளன. சென்ற வாரத்தின் ‘காதலின் பொன்வீதியில்’ தொடரில் வாசவதத்தையும் உதயணனும் கொண்ட காதலை விவரித்து, “உதயணகுமார காவியம்” நூல் வழங்கும் பாடல்களின் இலக்கியநயத்தோடு இணைத்து வழங்கியவிதம் சிறப்பானது.
காதலின் பொன்வீதியில் என்ற தொடரை கீழ்வரும் அறிமுகத்துடன் தொடங்கினார் மீனாட்சி பாலகணேஷ் …
காதல், காதல், காதல் இன்றேல்
சாதல் சாதல் சாதல் – ( குயில் பாட்டு)
என்றான் பாரதி, இதனை ஏன் இவ்வாறு கூறினான் என நான் பலமுறை யோசித்ததுண்டு. காதல் எனில் அன்பு, பக்தி, விருப்பம், ஆவல், வேட்கை, காமம் எனவெல்லாம் பொருள் கொள்ளலாம். இங்கு நாம் பார்க்கப் போவது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான அன்பு அல்லது காதல் என்பதனைப் பற்றித் தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் உணர்வை இயற்கை படைத்ததற்குக் காரணம் ஒரு இனம் அழிந்து விடாமல் தொடர்ந்து வளர ஏதுவாக இருப்பதற்கும், அதற்கான முதல் படியாக இருபாலரிடையும் அன்பு செழித்து வளர்வதற்காகவும்தான் எனலாம். ஆகவேதான் காதல் போயின் எல்லாம் போயிற்று, சாதல் ஒன்றே எஞ்சி நிற்பது என்றானோ பாரதி!
இத்தகைய காதல் உணர்வு நூதனமானது. சிறிது சிந்தித்துப் பார்த்தால் இத்தனைப் புலவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் காதலைப் பற்றியே விதம் விதமாக ஏன் எழுதிக் குவித்துள்ளனர் என ஆராயலாம்! காதல் சம்பந்தமான உணர்வுகள் மனித குலத்துக்கு மட்டுமே உரிமையானதா என அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. காதல் சம்பந்தப்பட்ட அழகிய மென்மையான உணர்வுகள் பற்றி கற்ப கோடி காலங்களாக இருந்து வரும் இனிய நயங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் இதன் நோக்கம்.
இந்தியத் தொன்மமாகிய இராமாயணக்கதையில் வரும் காதலர்களான இராமன் சீதையின் காதலைக் குறித்துக் கூறி, கம்பராமாயணத்தில் கம்பரின் வரிகளிலும் அக்காதலின் தன்மையை விவரிக்கிறார். ‘அண்ணலும் நோக்கி அவளும் நோக்கிய’ பிறகு, இராமனின் வடிவழகை, ஆண்மையின் கம்பீரத்தை, காதலின் கருணை நோக்கினை மீண்டும் கண்டு களிக்கச் சீதையின் உள்ளம் விழைகின்றது. இயலாமையினால் கடலெனக் குமுறிக் கொந்தளிக்கின்றது.
விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இம்
மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார்
எண்ணுளே இருந்த போதும் யாவரென்று தேர்கிலேன்
கண்ணுளே இருந்த போதும் என்கொல் காண்கி லாதவே.
“மண்ணுள் இழிந்த விண்மேகம்” என வந்த இராமனின் வடிவழகை காண ஏங்கும் சீதையின் கனிந்துருகும் காதல் உள்ளத்தை மீனாட்சி உணர்த்தும் பாணி இலக்கிய வாசகர்களை மகிழ்விக்கக்கூடியது.
இத்தொடரில் தொடர்ந்து …
புலவர் புகழேந்தியார் யாத்த ‘நளவெண்பா’ வரிகளின் மூலம் நளன் – தமயந்தி காதலையும்,
கவியரசர் தாகூர் படைப்பில் ஒரு புதிய கோணத்தில் அவர் அறிமுகப்படுத்திய சித்ராங்கதா – அர்ஜுனன் காதலையும்,
அரசிளங்குமரி ருக்மிணி கிருஷ்ணனுக்கு காதல்கடிதமாக எழுதிய ஏழு ஸ்லோகங்களின் வழி ருக்மிணி – கிருஷ்ணன் காதலையும்,
பெரியபுராண ஆசிரியரான சேக்கிழார் பெருமான் பாடல்களின்வழி சுந்தரர் – பரவை நாச்சியார் காதலையும்,
ரூப்மதி இயற்றிய காதல் ரசம் சொட்டும் ஒரு தோஹாவின் மொழிபெயர்ப்பு மூலம் இளம் காதலர்கள் ரூப்மதி – பாஜ்பஹதூர் காதலையும்,
காளிதாசரின் குமாரசம்பவம் மற்றும் கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணத்தின் பாடல்களின் துணைகொண்டு பார்வதி – பரமசிவன் காதலையும்,
கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தின் வரிகளின் வழி வள்ளி – முருகன் காதலையும்,
உதயணகுமார காவியம் பாடல்கள் மூலம் வாசவதத்தை – உதயணன் காதலையும்,
காதலின் பொன்வீதியில் உலாவரும் பொழுது நாமும் படித்துப் பரவசமடைந்தோம்.
இலக்கியவிருந்து வழங்கும் இந்த அறிவியல் பின்புலம் கொண்ட மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் ஒரு பன்முகம் கொண்ட கலைஞர்.
சௌந்தர்யலஹரி ஸ்லோகம் (66) ஒன்றிற்கு ஓவியர் கோபுலு வரைந்த அழகிய படம் ஒன்றை அவர் போலவே வரைந்து கோபுலுவிடம் காட்டி, “எனது அருமை ஏகலைவி மீனாட்சிக்கு ஆசிகள்” என்று கோபுலுவிடம் கையொப்பமும், பாராட்டும், ஆசீர்வாதமும் பெற்றிருக்கிறார்.
விபஞ்ச்யா காயந்தீ விவிதமபதானம் பசுபதேஸ்-
த்வயாரப்தே வக்தும் சலித சிரஸா ஸாது வசனே
ததீயைர் மாதுர்யை ரபலபித தந்த்ரீ கலரவாம்
நிஜாம் வீணாம் வாணீம் நிசுளயதி சோளேன நிப்ருதம்
— சௌந்தர்யலஹரி ஸ்லோகம் (66)
அந்த சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை தமிழ்ப் பாடலாகவும் மொழிபெயர்த்துள்ளார் மீனாட்சி பாலகணேஷ்.
பல்லவி
நாதன் பெருமைதனை நாத வீணையினில்
வேதன் தலைவியவள் கீதம் இசைத்திடவே (நாதன்)
அனுபல்லவி
யாதும் இனிமையென யாழின் இனிமைகெட
ஓதும் திருவாய்மொழி சாது என்றனையே (நாதன்)
சரணம்
இனிதென்று சிரமசைத்து இசைதன்னை நீ ரசிக்க
இனிதன்று வீணையென இசைவாணி பரிதவிக்க
இனியொன்றும் தோணாமல் உறையிட்டு மூடிவைக்க
கனிவான நகைகாட்டி கருணைவெள்ளம் நீ பெருக்க (நாதன்)
அத்துடன் நவராத்திரி கொலு பொம்மைகளைச் செய்வதில் திறமைசாலியான அவரது கைவண்ணத்தில் உருவான பொம்மைகளின் படங்களையும் வல்லமை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் மீனாட்சி பாலகணேஷ்.
பலகலைகளிலும் சிறந்து விளங்கும் மீனாட்சி பாலகணேஷ் அவர்களின் நெடுநாள் கனவான தமிழில் முனைவர்பட்ட ஆராய்ச்சியை அவர் வெற்றியுடன் முடிக்கவும், தொடர்ந்து இலக்கியப்பணியாற்றவும் வல்லமைக் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]