மீனாட்சி பாலகணேஷ்.

இசையால் இணைந்த இதயங்கள்

கானகத்தின் நடுவிலிருந்த அழகான அந்தப் புனலில் இளமங்கையர் சிலர் நீராடி மகிழ்ந்தனர். ஒருவரையொருவர் கேலி செய்தபடியும், நீரைத் துளாவி வாரி இறைத்தும் மகிழ்ந்தவர்கள் நீராடி முடித்துக் கரையேறி உடைகளை உடுத்துக் கொண்டு அலங்காரம் செய்து கொண்டனர்.

“ரூப்மதி, இப்போது நீ கொஞ்சம் உனது ‘பீனை’ இசைத்துப் பாடேன். இந்த இயற்கைச் சூழலில் எவ்வளவு நன்றாக இருக்கும்,” என்றாள் ஒருத்தி. ரூப்மதி என்ற அந்த மங்கை பேரழகி மட்டுமல்ல. இசையிலும் தேர்ந்தவள்; இனிய குரல் படைத்தவள்; ‘பீன்’ எனும் இசைக்கருவியை இசைத்தபடி பாடுவதில் வல்லவள்.

மரத்தடியில் அமர்ந்து கொண்ட அப்பெண்கள் குழாம் ரூப்மதியின் இனிமையான பாடல்களை ரசிக்கலாயிற்று.யார் இந்த ரூப்மதி? மால்வாபிரதேசத்தின் ஒரு நாடான தரம்புரியின் அரசரான தன்சிங் எனும் ராஜ புத்திர வம்சத்து மன்னரின் அருமை மகள். தோஹா (Doha) எனப்படும் அழகான இரண்டு வரிக் கவிதைகள் இயற்றுவதிலும் அவற்றை இசையமைத்துப் பாடுவதிலும் திறமை படைத்தவள்.

அந்தக் கானகத்தின் மறுகோடியில், மாண்டுவின் சுல்தானான பாஜ் பஹதூர் வேட்டையாட வந்திருந்தான். அவன் ஒரு மானைத் துரத்த, அது ஓட , மன்னனும் மானும் கானகத்தின் இக்கோடிக்கு வந்து விட்டனர். இசைப்பிரியனான பாஜ்பஹதூரின் செவிகளில் ரூப்மதியின் இன்னிசை தேனாகப் பாய்ந்தது. இசையால் ஈர்க்கப்பட்டு அவளுடைய குரல் வந்த திசையில் தேடிச் சென்று ஒளிந்து நின்று பார்த்தான்.

இசையால் மட்டுமல்ல, அவளுடைய காந்தம் போன்ற ஈர்க்கும் எழில் மிகுந்த வடிவ அழகாலும் தன் வயமிழந்து, கொடிகளையும் செடிகளையும் விலக்கிக் கொண்டு அவள்முன் வந்தான் பாஜ் பஹதூர். “பெண்ணே, நீ யார்? உனது இசையால் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டாய்,” என்றான்.

அச்சத்தால் தோழியர் சிதறி ஓடினர்!சிறிதும் அச்சம் கொள்ளாது அந்த ராஜபுத்திர மங்கை ரூப்மதி, “நான் மால்வா பிரதேசத்து தரம்புரியின் அரசர் தன்சிங்கின் மகள்,” என்றாள்.

முதலில் தனது இனிய இசையைப் பொழிந்து அவனது உள்ளத்தை வசப்படுத்திக் கொண்டவள், இப்போது கண்ணையும் கருத்தையும் தன் அழகினால் கவர்ந்து கொண்டு விட்டாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியபடியே……… கணங்கள் பெருகி மணிகளாகி, அவையும் திரண்டு யுகங்களாகி விட்டனவோ?

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல … என்னும் குறளுக்கொப்ப, தன்னுடைய இனிய இசையால் அவன் தன்பால் காதல் வயப்பட்டு விட்டான் என்று குறிப்பால், அவன் நோக்கினாலும், பேச்சினாலும் உணர்ந்து கொண்டு விட்டாள் ரூப்மதி. தன் இசையை, தான் போற்றும் இசையை அவனும் மிகவும் ரசிப்பவன், அழகன், இளைஞன் என்ற காரணத்தால் வேற்று மதத்தவனாயினும் அவள் உள்ளமும் அவனிடம் சென்று ஒன்றி விட்டது.

இருவருக்குமே உள்ளுணர்வு கூறியது- ‘காலம் தாழ்த்தினால் காரியம் கைகூடாது’ என்று!

பாஜ் பஹதூர் தான் முதலில் கேட்டான்: “எனது நாடான மாண்டு உன்னை அரசியாக அடையும் பாக்கியம் பெறுமா?”

ரூப்மதியின் இதயம் வேகமாகத் துடித்தது. அவள் கேட்க விழைந்த சொற்களைக் கூறுகிறான் அவன்! ஆயினும் சிந்தித்தாள். வாய்ப்பை நழுவ விடக் கூடாது. ராஜபுதன மங்கையான அவளுக்கும் சில விருப்பங்கள் உண்டு. அவற்றை நிறைவேற்றுபவனே அவள் இதயத்திற்கும் உரிமையாளன் ஆக இயலும். ‘நர்மதை நதி எனக்குத் தாய் போன்றவள்; அவள் மடியில், பிறந்து, விளையாடி, வளர்ந்து செழித்தவள் நான்; அவளைப் பிரிந்து, அவளைக் காணாமல், என்னால் ஒரு நாள் கூட வாழ இயலாது. என்ன செய்யலாம்?’ சிந்தித்தாள்.

நெடு நேர அமைதியின் பின், இசைக் குயிலின் இதழ்கள் பிரிந்து மன உறுதியுடன் சொற்கள் வந்து விழுகின்றன. “என் தெய்வமான அன்னை நர்மதையை நான் தினந்தோறும் கண்டு மகிழும் வண்ணம் ஒரு அரண்மனையை உங்களால் மாண்டுவில் நிர்மாணிக்க முடியுமா? அப்போது தான் நான் மாண்டுவின் அரசியாகவும் உங்கள் இதய ராணியாகவும் ஆக இயலும்.”

காதலின் திண்ணம்- கனவுகளின் வண்ணம்- மனதில் கொண்ட எண்ணம்- எல்லாம் சேர்ந்திழைந்த சொற்கள் அவை!

“அது விரைவிலேயே நடக்கும்,” எனும் உறுதியானசொற்களைக் கூறியபடி கம்பீரமாக பாஜ் பஹதூர் திரும்பிச் சென்றான்.

ரூப்மதியின் உள்ளம் அலைகடலில் படகு போலத் தத்தளித்தது. ‘நான் அவரால் நிறைவேற்ற முடியாத ஒரு செயலைக் கேட்டு விட்டேனோ? அவரைத் திரும்பக் காண்பேனா? அன்னை நர்மதை தான் வழி காட்ட வேண்டும்….’ பற்பல எண்ணங்கள். ஏக்கத்தில் நாட்கள் யுகங்களாக நகர்ந்தன.

இப்போது அவள் இயற்றிய பாடல்கள், பாடிய இசை அனைத்துமே பிரிவின் துயரைத் தாங்க இயலாத காதல் கவிதைகளாகவே இருந்தன. அதிகம் பாடுவதும் இல்லை! பாடினாலும் அதில் துயரம் பெரிதும் கொப்பளித்தது!

சுல்தான் பாஜ் பஹதூரும் தனது அரசியல் கடமைகளைப் புறக்கணித்தும் தனக்கு மிகவும் விருப்பமான இன்னிசை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமலும் நாட்டியங்களை ரசிக்காமலும் தனிமையை விரும்பி, ரூப்மதி பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்து, அவள் வேண்டுகோளை எவ்வாறு நிறைவேற்றி அவளைக் கைப்பிடிப்பது என்ற துயரில் வாடலானான்.

மகளின் வாட்டத்தை அறிந்த அரசி, ரூப்மதியின் தோழியர்களிடம் துருவிக் கேட்டு, ரூப்மதியை பாஜ்பஹதூர் சந்தித்ததையும், அவளை மாண்டுவின் அரசியாக்கிக் கொள்ள விரும்பி வேண்டியதையும் அறிந்து கொண்டாள். கேள்விப்பட்ட தந்தை தன்சிங் மிகுந்த சினத்தினால் இதனை ஒப்புக்கொள்ள மறுத்தார். “நமது குடிக்கும் குலத்துக்கும் அவப்பெயர் வந்து சேரும், அவளுக்கு விஷம் கொடுப்பது தான் இதற்கான தண்டனை,” என்றார். தாய் மன்றாடிக் கேட்டுக் கொண்டதன் பேரில், மகளை அரண்மனையிலேயே சிறையிட்டுக் காவலில் வைத்தார்.

தனிமையிலும் தாபத்திலும் தவித்த ரூப்மதியின் கனவில் அவள் நாளும் வழிபடும் நர்மதை அன்னை வந்தாள். “மகளே, மாண்டு நகரில் ஒரு குறிப்பிட்ட மரத்தினடியில் ஊற்று ஒன்று உற்பத்தியாகி எழுந்து ஓடி வந்து என்னுடன் (நர்மதையுடன்) சேரும். அங்கு நீ உன் காதலனைச் சேர்வாய்,” என ஆசி கூறினாள். ரூப்மதியின் நெஞ்சம் ஆனந்த வெள்ளத்தில் நீந்தியது.

Baz_Bahadur_and_Rani_Rupmatiரூப்மதி அவளுடைய தந்தையால் சிறை வைக்கப்பட்டதைக் கேள்வியுற்ற பாஜ்பஹதூர் தரம்புரி மேல் போர் தொடுத்து, ரூப்மதியைச் சிறைமீட்டுச் செல்கின்றான். அவளை இந்து, இஸ்லாம் ஆகிய இரு முறைப்படியும் திருமணம் புரிந்து கொண்டு தன்னுடைய பட்டத்தரசியாக்கிக் கொள்கின்றான். இப்போது இருவரும் நாடு முழுவதும் சுற்றி, அன்னை நர்மதை கனவில் வந்து கூறிய நீரூற்றைத் தேடுகின்றனர். ஒரு மரத்தினடியே ‘குபு குபு’வெனப் பெருகி வரும் வெள்ளியிழைகள் போன்ற ஊற்றைக் கண்டு பிடித்ததும் ரூப்மதியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

Rewa_Kund,_Manduஇனிய இசையால் தன் இதயத்துள் குடிபுகுந்து தன் வாழ்வையும் இன்ப மயமாக்கிய இசைக்குயிலுக்கு பாஜ்பஹதூர் ஒரு அழகான அரண்மனையை அங்கேயே நிர்மாணிக்கின்றான். இந்தப் புனிதமான நீரூற்று ரேவா குண்ட் எனப் பெயரிடப்பட்டு, ஒரு நீர்த்தேக்கமாக அமைக்கப் பட்டது. இதிலிருந்து வாய்க்கால்கள் மூலம் நர்மதையின் நீரானது ரூப்மதியின் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. (புகைப்படங்களில் பார்த்தால் எத்தனை விதவிதமான கலையம்சம் நிறைந்த வாய்க்கால்கள்! இவை அனைத்தும் ரூப்மதிக்கான பாஜ் பஹதூரின் காதல் பரிசுகள்)16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட இந்த அரண்மனை விசாலமான முற்றங்களையும், பெரிய அறைகளையும், சுற்றுப்புறங்களைக் கண்டு களிக்க உகந்த மிக உயரமான உப்பரிகைகளையும் கொண்டு விளங்குவதாகும். இந்த உயரத்திலிருந்து ரூப்மதி கீழ்மட்டத்தில் ஓடும் நர்மதை நதியையும், தொலை தூரத்து விந்திய மலையின் செழித்த பச்சை நிறக் காடுகளையும், இன்னும் தொலைவில் இருக்கும் தனது தாய்வீடான தரம்புரியையும்கண்டு மகிழ ஏதுவாக அந்த உப்பரிகை அமைந்திருந்தது.

Rupmati_Pavilion_01தாய்வீட்டைப் பிரிந்தவளின் உள்ளத் தவிப்பைத் தனிமையான நேரங்களில் இந்த உப்பரிகை மீது அவள் அமர்ந்து இயற்றிப் பாடிய இந்த தோஹா அழகுறத் தாபத்துடன் விவரிக்கின்றது.

‘நீயும் என்னுடன் இருந்த நாட்கள் இறந்து பட்டன;
நான் உன்னுடன் இருந்தவை போலவே:
இன்று திரும்பவும் நான் நானாக, நீ நீயாக
ஒன்றாக அல்ல, இரண்டாக:
இந்தக் கொடுமைக்கு என்ன செய்தோம் நாம்,
ஓ, விதியே?

(இங்கு நீ என்பது தாய்நாட்டைக் குறிக்கின்றது)

Rupmati_Pavilion_02இளம் காதலர்கள் ரூப்மதியும் பாஜ்பஹதூரும் இந்த உப்பரிகையில் அமர்ந்து மாலை வேளைகளிலும் இரவுகளிலும் தங்கள் பொழுதினை இன்பமாகக் கழித்தனர். அவள் கவிதை இயற்றிப் பாட, அவன் ரசித்து மகிழ்ந்தான். அவனும் சில வேளைகளில் அவளுடன் சேர்ந்து பாடல்களை இசைத்தான். இசை, இன்னிசை, என்றும் பொழியும்அழியாத இசை இருவர் உள்ளங்களிலும் தாம் ஒருவர் பால் மற்றவர் கொண்டிருந்த காதலை மேன்மேலும் ஆவலுடனும் சிறப்புடனும் வளரச் செய்தது.

ரூப்மதி இயற்றிய காதல் ரசம் சொட்டும் ஒரு தோஹாவின் மொழிபெயர்ப்பு:

‘இன்றிரவு நான் நிலவை வரவேற்பேன்
அவளது புதுமையான ஒளிரும் முகத்திற்கு முகமன் கூறுவேன்
ஆ! எத்தனை ஆனந்தம்! உமது கண்களும் எனதும்
ஒரே இடத்தில் பதிந்து நோக்குவது!’

ரூப்மதியின் அழகும் இசையும் பாஜ் பஹதூரைக் கட்டிப் போட்டு வைத்திருந்தன. அவளை விட்டுப் பிரியாது மகிழ்ந்திருந்த அவன், அரச அலுவல்களைப் புறக்கணித்தான்.அவர்களுடைய ஆனந்த வாழ்வு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.அப்போது தான் அரியணை ஏறியிருந்த அரசரான அக்பர் கண்களில் படைப் பாதுகாப்பற்றிருந்த மால்வா- மாண்டு பகுதி உறுத்தலாகப் பட்டது.

அதனைக் கைப்பற்ற தனது படைத் தலைவர்களுள் ஒருவனான ஆதம்கானைப் படையோடு அனுப்பி வைத்தார். இசையிலும் காதலிலும் மூழ்கி அரச அலுவல்களை மறந்து விட்ட பாஜ் பஹதூரால் முகலாயப் படைகளைத் தாக்குப் பிடிக்க இயலவில்லை. விரைவில் தோற்கடிக்கப் பட்டான். ஆதம்கானின் படைகளால் கொல்லப்பட்டான் எனவும் கூறப்படுகின்றது.

ரூப்மதியின் அழகினைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த ஆதம்கான் அவளைத் தன் உடமையாக்கிக் கொள்ள முயல்கிறான். தான் அவனிடமிருந்து தப்ப வேறு வழியில்லை என அறிந்த ரூப்மதி, தனது துயரத்திலிருந்து விடுபட மூன்று நாள் அவகாசம் கேட்கிறாள். ‘ஒரு ராதோர் ராஜ்புத்திர மங்கை ஒருமுறை தான் காதல் வயப்படுவாள். பாஜ் பஹதூர் ஒருவனே எனது உயிரும் ஆன்மாவுமாவார். நான் என்ன செய்து இந்த இக்கட்டிலிருந்து தப்புவது?’ என யோசித்து வருந்தியவளுக்கு ஒரு நல்ல வழி புலப்படுகின்றது.

இக்கருத்தைப் பிரதிபலிக்கும் ஒரு தோஹா- ரூப்மதி இயற்றியதன் மொழிபெயர்ப்பு:

‘ஒரு சிங்கத்திற்கு ஒரு சிங்கக்குட்டி;
உண்மையாளனுக்கு ஒரு சொல்;
வாழைக்கு ஒருமுறை குலை தள்ளல்;
என் இதயத்திற்கும் ஒரே தலைவன்!’

மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றிக் கழிகின்றன. மூன்றாம் நாள் இரவில் பாஜ் பஹதூருடனான தனது திருமணத்தின் போது தான் அணிந்தபட்டாடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து கொண்டு அலங்கரித்துக் கொண்டாள். ‘பீன்’ இசைக்கருவியை மீட்டியபடி துயரம் நிறைந்த பாடல்களை இசைக்கலானாள்.

ரூப்மதி இயற்றிய அவலம் நிறைந்த ஒரு பாடலின் (தோஹா) மொழிபெயர்ப்பு:

‘எனது மென்மையான உள்ளம் இந்தக் கொடூரத்தைத் தாங்காது
நம்மைப் பிரிக்கும் இந்த நெருப்பின் ஜ்வாலைகள்!
ஓ! தன்னைக் குளிர்விப்பதென இந்த சதி உன்னுவாள்
தனது தலைவனின் சிதை தன்னை!’

(சதி- உடன்கட்டை ஏறும் மனைவி)

வெகு நேரத்தின் பின், தாதியைக் கூப்பிட்டாள்: “நான் எனது அறைக்குச் செல்கிறேன். ஆதம்கானை அங்கு வரச் சொல்.”

தனது அறைக்குள் சென்றவள் ஏற்கெனவே தயாராக வைத்திருந்த விஷத்தை அருந்துகின்றாள். அமைதியாகப் பஞ்சணையில் சாய்ந்து கண்களை மூடிக் கொள்கின்றாள்.

உற்சாகமாக உள்ளே நுழைந்த ஆதம்கான் அந்த அழகியின் உறங்கும் கோலத்தில் அவள் பேரழகைக் கண்டு பிரமிக்கிறான். உள்ளம் படபடக்க அவளருகே அமர்ந்து கையைப் பற்றுகிறான். உயிரற்ற அவள் உடலைக் கண்டு திகைக்கிறான். அவள் எண்ணம் இப்போது அவனுக்குப் புரிகின்றது.

“ஓ! காவலாளிகளே! ஓடி வாருங்கள். இவள் இறந்து விட்டாள்,” எனப் பதறுகிறான்.

எல்லாரும் ஓடி வர, “ரூப்மதி தன் காதலனுக்காகவே தன்னைக் காப்பாற்றிக் கொண்டு இறந்து விட்டாள். பாஜ் பஹதூர் பக்கத்திலேயே இவளையும் அடக்கம் செய்ய வேண்டும்,” எனக் கட்டளை இடுகின்றான் ஆதம்கான். அவ்வாறே செய்யப் படுகின்றது.

நீண்ட நாட்கள் வரை இந்தச் சமாதிகளின் அருகே சென்று, ‘ரூப்மதி,’ எனக் கூவி அழைத்தால் அது, ‘பாஜ் பஹதூர்’ என்று எதிரொலிக்குமாம். (தற்சமயம் இந்த சமாதி பாழடைந்த நிலையில் உள்ளது என்பது மிகுந்த வருத்தம் தரும் செய்தி ஆகும்.)

காதலின் பொன்வீதி காதலர்களுக்கு வாழ்வில்மட்டுமே அல்ல; இறப்பிலும் இணை பிரியாது பயணிக்கும் காதலர்களுக்கும் உரித்தான பொன்வீதி தான் அல்லவா?

இசையால் இணைந்த ரூப்மதி- பாஜ் பஹதூர் இதயங்கள் காதலின் ஜீவகீதங்களை என்றென்றும் இசைத்திருக்கும் அன்றோ?

___________________________________________________________________________

பின் குறிப்பு: ரூப்மதி- பாஜ் பஹதூர் காதல் கதை ராணி ரூப்மதி எனும் பெயரில் ஒரு அற்புதமான ஹிந்தி திரைப்படமாக நீண்ட நாட்களுக்கு முன் வந்துள்ளது.வேண்டுவோர் இதனை You Tube- ல் காணலாம். மிக அழகான பாடல்கள் கொண்டது. கட்டாயம் பார்த்து மகிழுங்கள்.

___________________________________________________________________________

படங்கள் உதவி: விக்கிபீடியா

Baz Bahadur and Rupmati: http://upload.wikimedia.org/wikipedia/commons/6/68/Bazrupmati.jpg
Baz Bahadur and Rupmati: http://upload.wikimedia.org/wikipedia/commons/1/1c/Baz_Bahadur_and_Rani_Rupmati_-_Google_Art_Project.jpg
Rewa Kund: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/ba/Rewa_Kund%2C_Mandu.jpg/800px-Rewa_Kund%2C_Mandu.jpg
Rupmati Pavilion: http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a6/Rupmati_Pavilion_at_Mandu.JPG
Rupmati Pavilion: http://upload.wikimedia.org/wikipedia/commons/2/28/Rupmati_Pavilion_03.jpg

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *