-மேகலா இராமமூர்த்தி

திரு. எம். வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்தைப் போட்டிக்குத் தெரிவு செய்துதந்தவர் நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமை இதழ் தன் நன்றியை நவில்கின்றது.

11216346_840352649352269_429205382_n

தினைத்தாளன்ன (அரிந்த தினைப்பயிரின் அடிப்பகுதி போல்) சிறுபசுங்காலுடன் நீரிலே ஆரல் மீன் தேடி அழகாகப் பறந்து செல்லும் கொக்கைக் கண்டு நம் மனம் சொக்குகின்றதே!

தனக்கான சரியான இரை கிடைக்கும்வரைக் காத்திருக்கும் பொறுமையும், கிடைத்தவுடன் அதனைத் தவறாது கொத்தித் தின்னும் திறனும் கொக்கிடம் நாம் கற்கவேண்டிய பாடங்கள். அதனால்தான் வள்ளுவப் பேராசான்,

“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து”
என்று நமக்கு நல்லுரை நவின்றார்.

குறிதவறாத கொக்குபோல் நம் கவிஞர்களும் தாம் சொல்லவந்த கருத்தினைத் தவறாது சொல்லிச் செல்லும் ஆற்றல் வாய்ந்தோர்.

முதலில், சிந்தனைக்கு நல்விருந்தாய் வந்துள்ள இவ்வாரக் கவிதைகளைப் படித்தின்புறுவோம் வாருங்கள்!

***

’பறவையின் சிறகுடையும் தரையில் அதன் பாதங்கள் சுவடுகளாகின்றன’ என்று சுவையான சிந்தனைப் பதியன் போட்டுள்ளார் திரு. கவிஜி.

முடிவெடுத்த
முற்றுப் புள்ளி
தருணங்களில்
வர்ணங்கள் சொட்டும்
கண்ணீர்… 

குதிக்க தயாராகும்
உடலுக்குள்
கடவுள் அலறுகிறார்
[…]
சிறகுடையும்
தரையில் பாதங்கள்
சுவடுகளாகும்

கண்கள் விலகும்
பின்னோக்கில்
ஒரு மரணம் வாழ்கிறது

 ***

’வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியும் பொய்த்துவிட, சொந்த மண்ணில் பிழைக்க வழியில்லா விவசாயிபோலப் பறவைகளும் வறண்ட பூமியை விட்டு வானிலே வேறிடம் பெயர்கின்றன இரைதேடி!’ என்கிறார் திரு. எஸ். பழனிச்சாமி.

…வெண்கொக்கு ஒன்று இரைவேண்டி – தண்ணீரைத்
தேடியே வானத்தில் ஆங்கே அலைகிறது
நாடியநீர் எங்குமே காணவில்லை – வாடித்
தவித்து வறண்டபூமி யில்வீழ்ந்த போது
புவிதனில் வெப்பக்காற் றோடு – செவியினில்
கேட்டது நொந்த விவசாயி சொன்னவுரை
[…]
வீழ்ந்ததை 

எண்ணியே வருந்தாதே வெண்கொக்கே நீமுயன்றால்
மண்ணிலே வேறிடத்தில் வாழ்விருக்கும் – விண்ணில்
பறந்தேதான் சென்றுவிடு; இச்சொல்லால் அவ்விடமே
துறந்து செழிப்பான வாழ்வுதேடும் – திறத்தால்
திரைகடல் மேலே விரைவாய் பறந்து
இரைதனைத் தேடுகின்ற கொக்கு.

 ***

முயற்சி செய்து மேலே பறந்தால் ’வெற்றிடக் கொக்கும் வெற்றிக் கொக்காகும்’ என்று நயமிகு வார்த்தைகளால் நம்பிக்கை ஊட்டுகிறார் திரு(மிகு). பயணி. (பெயரைப் ’பயனி’ என்று பிழையாக எழுதியிருக்கிறீர்கள்.)

…வெள்ளை
நீலம்
இரண்டும்  நெகிழும்  நீர்வழி

கடலும் வானும்
கலக்கும்  பெருவெளி

காத்திருப்பும் முயற்சியும்
ஒன்றில் ஒன்று தொடரும்
வெற்றிடக் கொக்கு
ஒரே தாவலில்
வெற்றிக் கொக்காய் மாறும் தருணம்

எதுவும்
எழுந்தால்
இருக்கும் இடம் விட்டுப்
பறந்தால்
சுகம்…

 ***

’காட்டை அழித்தோம்; மழையை ஒழித்தோம். நீர்நிலைகள் வறண்டதால் பறவைகளும் வேற்றுப்புலம் செல்கின்றன வாழ்க்கை தேடி’ என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

காட்டை வெட்டி அழித்துவிட்டார்
காண வில்லை மழையினையும்,
நாட்டி லுள்ள நீரையெல்லாம்
நச்சு நீராய் மாற்றிவிட்டார்,
கூட்டைக் கட்ட இடமுமில்லை
குடும்பம் நடத்த வழியுமில்லை,
நாட்டை விட்டே செல்லுகின்றேன்
நல்ல வாழ்வைத் தேடிடவே…!

 ***

’தண்ணீரில் மீன் கிடைக்காததால் விண்மீன் பிடித்துண்ணப் பறக்கின்றது கொக்கு’ எனும் நயமான கற்பனையைக் கவிதையில் வார்த்திருக்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

தண்ணீர்க் கரையில் தவமிருந்த கொக்குக்கு
உண்பதற் கேற்றதோர் மீனின்றி – விண்மீன் 
பிடித்துண்ண வேகம் பறக்கின்றத் தன்மை 
இடியை இடிக்கும் இடி.

***

’இறந்தகால நினைவுகளும் வேண்டாம்;எதிர்காலம் குறித்த கனவுகளும் வேண்டாம். இன்றைக்காக மட்டும் வாழ்வதை இயற்கையிடம் பயில்வோம்’ எனும் பொருள்பொதிந்த மொழிகளைப் பாடலில் பதித்திருக்கின்றார் திரு. சாயாசுந்தரம்.

நேற்றைப் பற்றிக் கேட்டு
பின்னோக்கி விரட்டும்
எதுவும் வேண்டாம் …. 

நாளை பற்றிச் சொல்லி
கனவுக் கானச் செய்யும்
கற்பனையும் வேண்டாம்… 

இன்று மட்டுமே நமக்கானதாய் வாழ
கற்றுக் கொள்ளலாமே
இயற்கையிடம் …
[…]
கடல் தாண்டிப் பயணிக்கும் 
ஒற்றைப் பறவையின் 
இரட்டைச் சிறகுகளில் அடைக்கலமாகி 
பூமியின் தாகத்திற்கு 
சிறிது பூமழை தூவலாம் வா …. 

***

’நதியன்னை ஈன்ற இந்தப் பறவை, வானிடம் இறைஞ்சுகிறது தன் தாய்க்கான மழையுணவை!’ எனும் நல்லதோர் சிந்தனையைச் செவிக்குணவாய்த் தந்திருக்கிறார் திரு. குமரகுரு.

நதி முட்டை பொரித்து
வெளியேறி வருகிறேன் வானமே
எனக்காக
என் தாய்க்கு
மழை உணவு தா!
[…]
இரவெல்லாம்
நான் புசிக்க
நிலாகனி தருகிறாய்
மழைத்துளியை ஏன் விண்மீனாக
மறைத்து வைத்து கொள்கிறாய்?
[…]
உன் சர்வாதிகாரத்தை நிறுத்தி
சமத்துவ மழை அனுப்பு

பசுங்காடுகள் தழைத்து
கிடக்கும் பூமியை படை
நான் இருக்கும் வரை
என் இறகுகளால் உன்னை
வருடி விடுகிறேன்

***

’வெள்ளை உள்ளமும் நீல விஷமுமுள்ள உன் பயணத்தில் பட்டும் படாமலும் துணிச்சலோடு பற!’ என்று வாழ்க்கைப் பாடத்தைப் பறவைக்குப் போதிக்கிறார் திரு. மீ. விசுவநாதன்.

பிரபஞ்சம் அளக்க முடியாத
பெரும் கனவு !
விழித்துக் கொண்டேதான் 
அதைக் கடக்கவேண்டும் !
வெள்ளை உள்ளமும்
நீல விஷமும் 
உள்ள பயணத்தில்
கவனமாக, ஒரே குறியாக
பட்டும் பாடாமலும் பற ! 
தைரியமாகப் பற !

***

நிலத்தோடு கடலையும் மனிதன் மாசுபடுத்திவிட்டதால் வருத்தமுற்ற பறவை தான்வாழப் பொருத்தமான இடம்தேடிப் பறக்கிறது’ எனக்கூறிச் சுற்றுப்புறத் தூய்மையின் அவசியத்தை விளக்குகிறார் திருமிகு. புனிதா கணேசன்.

விடுமுறைக் கழிப்பில் கூடும் மனிதர்கள் கூடி
இடுகின்ற குப்பைகளும் கூளங்களும் ஆங்கே
நடுக்கடலில், கரை கழுவும் அலைகள் – சேர்த்து
எடுத்துவிடும் எம்முயிரைக் குற்றுயிராய்! வருத்தி …

நேர்த்தியுடன் நான் கொண்ட சிறகு இன்று
பார்த்திருக்க பாழாகும் முன்னே – பறக்கிறேன்
மார்க்கம் ஒன்றை வான் வழியாய்க் கொண்டு!
தேர்ந்தெடுப்பேன் சிறந்த சூழல் கண்டு …

சூழல் மாசு செய்யும் மாந்தர் கேளீர் – நன்கு
பாழ் படாத சூழல் காப்பீர் யாவர்க்குமாய்
மாள்வது என்னவோ உயிரினம் யாவுமே –அவை
வாழ்வை எண்ணியே சூழல் பேணுவீர் !

***

பாசமெனும் பாசிகள் வசம் சிக்கிக் கவலைக் குளத்தில் அமிழ்ந்துவிட்ட மனிதனை மீட்டெடுக்கத் துணைநிற்கும் விந்தைப் பறவையை நம்முன் பறக்கவிட்டுள்ளார் திரு. கனவு திறவோன்.

…பறத்தல் எளிது
முயன்றால் நிஜத்தில்
மூழ்கினாலும் கனவில்
மனம் மட்டும் போதும்
மனம் அலையலாம்
தொலையலாமா?

பாசப் பாசிகள் வலைப் பின்ன
கவலைகள் குளம் தன்னில்
ஆழ்ந்திட்ட மானிடனே
என் கால்களையாவது பற்றிக் கொள்

என்
சிறகுகள் துணையுடன்
பாரெங்கும் பறப்போம் வா!

***

இருந்தால் இரைதேடிச் செல்வேன்; இறந்தால் பிறர்க்கு இரையாக ஆவேன் எனும் உயர்ந்த நீதியை வெகு சாதாரணமாகப் பேசும் அதிசயப் புள்ளொன்றைக் காண்கிறோம் திரு. சுரேஜமியின் கவிதையில்.

…நிலையைத் தேடி ஓடும்
நீர்ப்பறவை யானெனினும் எந்தன்
நிலையில் தவறுவதும் இல்லை
நின்று வருந்துவதும் இல்லை
நிலத்தார் வாழ்வதில் நடக்கும்
நித்தம் மாறுவதும் இல்லை
நீரும் வறழ்கின்ற போது
நாளும் ஓடுவதே வாழ்வு!

ஏதும் சேர்க்கின்ற பழக்கம்
எனக்கிங்கு இல்லை யதனால்
நோக்கம் சிதறுவது இல்லை
நொந்து நாளும் வாழ்வதில்லை
இருந்தால் இரைதேடிச் செல்வேன்
இறந்தால் இரையாகிப் போவென்
இப்படி ஒருவாழ்வு மண்ணில்
இருந்தால் சொல்லுங்கள் மானிடரே!

 ***

பரிவின்றிச்சுட்ட நரிக்குண மனிதனைக் கண்டு அஞ்சி, ஆண்டவனை நோக்கி அபயக்குரல் எழுப்பும் சிறுபறவையைக் கண்முன் நிறுத்துகிறார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

நரிக்குண மனிதன்
பரிவின்றி சூட்டான்
ஓலமிட்டபடியே
உயர உயர பறக்கின்றேன்
என்னை காப்பாற்றிக்கொள்ள
இறைவா நீதான் என்னில்
நிறைவாயா  இல்லை  
நானே உன்னில் மறைவேனா?

***

திசையறி கருவிகளின்றித் திறமையாய் உலகை வலம்வரும் பறவைகளை வியக்கிறார் திருமிகு. வானதி வேதா. இலங்காதிலகம்.

…ஆவலாய் ஆண்  குச்சிகளோடிறங்க
காவலர் மாறும் கட்டுதிட்டமாய்
கடமையேற்றுப் பெண் கூடிணைக்கும்.
இலகுவாக நீரில் நடக்க
இறகுகளற்ற நீண்ட கால்கள்.
கழுத்தை வளைத்துப் பறக்கும் நாரை.

அகண்ட உலகில் அரசாட்சி
விதண்டா வாதமில்லை விசாவின்றி
பனிக் காலத்தில் கர்மசிரத்தையாய்
தனிச் சுதந்திரமாய் திசையறிகருவியின்றிப்
புலம் பெயரும் மாபெரும்
புதிர் நிறை புள்ளினம்!…

***

இரைதேடிப் பறக்கும் எனக்குக் கிடைக்கவிருப்பது குண்டடியா? இல்லை கெண்டை மீனா? எனும் பறவையின் அச்சத்தைப் பாடலாக்கியிருக்கிறார் திரு. ஜெயபாரதன்.

நெடுந்தூரம் 
நீண்ட நேரம், நில்லாமல்
பசியோடு
இரை தேடிப் பறக்கும் எனக்கு
குண்டடி கிடைக்குமா ?
கெண்டை மீன் கிடைக்குமா ?
முதலை வாய் விருந்தா ?
திமிங்கலப் பற்கள் அரைக்குமா ?
இல்லை; 
பாய்ந்து வரும்
பருந்து மீன் பறிக்குமா ?
பயங்கர வாழ்வில் என்றும்
பரிதவிப்பே !

***

’மீனைப் பிடித்துவிட்டால் மகிழ்ச்சியோடு வானை அளக்கலாம்’ எனும் பறவையின் உள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றார் திருமிகு. தமிழ்முகில்.

…துள்ளிக் குதிக்கும் மீனையுமே
அலகால்
விருட்டென
பற்றிக்
கொண்டு
மேலெழும்பி –
காற்றைக்
கிழித்தபடி
பறந்து
பாறையின்
மீதே
சேகரித்திருக்கும்
மீன்
குவியலுடன்
சேர்த்திட்டால் –
கவலையின்றி
பசியாறி
களிக்கலாம் !
மகிழ்வோடு
சிறகை விரித்து
வானையும்
அளந்து
சிறகடிக்கலாம் !

***

சுயநலக் கலப்பில்லா உள்ளத்திற்கு முன்னேற்றம் ஆகாயமாய் முன்னே விரியும் என்கிறார் திரு. சங்கர் சுப்ரமணியன்.

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும்
வேசங்கள் இல்லாமல்
[…]
அன்பொன்று
இருந்தும்
இடைநிற்கும் வேறுபாட்டின்
மாயையில் வீழாமல்
மாற்றோரின் இன்னல்களை
பாராமுகமாய் தனக்கென எழுப்பும்
சுயநல இலட்சியமில்லாமல்
எல்லையில்லாமல்
என்னில் வசப்படாமல்
விட்டு சிறகடித்ததும்
முன்னே விரிந்தது ஆகாயம்

***

மாசுபட்ட சுற்றுப்புறத்தால் தன் இனத்தையே இழந்துவிட்ட சோகத்தில் உறவைத் தேடும் பறவையிது என்கிறார் திருமிகு. ராதா மரியரத்தினம்.

…மாற்றம் ஒன்றே மாறாததென
மாறும் உலகில் சிதைந்தது எம் இனம்
மாசு பட்டது உலகம் யாவும்
வீசும் காற்றும் ,ஆழிப் பேரலையும்
சேர்ந்து எம் இனம் கொன்றே ஒளித்தது
வலித்தகால்கள் தங்க ஒரு மரம் இல்லை
குஞ்சுகள் பொரித்தாலும் இருக்கக் கூடில்லை 
உண்ணஉணவில்லை 
கண்ணுக்கு தெரிந்தவரை
உறவுகளைத் தேடுகிறேன் 
எங்கேனும்  எம் இனத்தைக்
கண்டால் சொல்லீரோ

***

கவிதைகள் அனைத்துமே மிக நன்றாக இருக்கின்றன. கவிஞர் பெருமக்களுக்குப் பாராட்டுக்கள்!

சிறந்த கவிஞரைத் தேர்ந்தெடுக்கும் சமயம் இது!

தான் வசித்த, நேசித்த நிலத்தைச் சுமந்துசெல்லவியலா ஏக்கத்தோடு, தொலைதூரம் ஏகும் பறவையின் சோகம் சொல்லும் சுகமான கவிதை ஒன்றை இங்குக் கண்டேன்.

அக்கவிதை…

பறந்திடப் பல
திசைகளிருந்தனவெனினும்
அப் பேரண்டத்திடம்
துயருற்ற பறவையைத் தேற்றவெனவோ
சௌபாக்கியங்கள் நிறைந்த
வழியொன்றைக் காட்டிடவெனவோ
கரங்களெதுவுமிருக்கவில்லை
[…]
முற்காலத்திலிருந்து
தேக்கிய வன்மம்
தாங்கிட இயலாக் கணமொன்றில் வெடித்து
தன் எல்லை மீறிய பொழுதொன்றில்
மிதந்தலையும் தன் கீழுடலால்
மிதித்திற்று உலகையோர் நாள்

பறவையின் மென்னுடலின் கீழ்
நசுங்கிய பூவுலகும் தேசங்களும்
பிதுங்கிக் கொப்பளித்துக் காயங்களிலிருந்து
தெறித்த குருதியைப் பருகிப் பருகி
வனாந்தரங்களும் தாவரங்களும்
பச்சை பச்சையாய்ப் பூத்துச் செழித்திட

வலி தாள இயலா நிலம் அழுதழுது
ஊற்றெனப் பெருக்கும் கண்ணீர் நிறைத்து
ஓடைகள் நதிகள்
சமுத்திரங்கள் வற்றாமல் அலையடித்திட

விருட்சக் கிளைகள்
நிலம் நீர்நிலைகளெனத் தான்
தங்க நேர்ந்த தளங்களனைத்தினதும்
தடயங்களெதனையும்
தன்
மெலிந்த விரல்களிலோ
விரிந்த சிறகுகளிலோ
எடுத்துச் செல்லவியலாத் துயரத்தோடு
வெளிறிய ஆகாயம் அதிர அதிர
தொலைதுருவமேகிற்று
தனித்த பறவை

இக்கவிதை வி(வ)ரிக்கும் கற்பனையின் அற்புதம் உள்ளம் அள்ளுகிறது; இதன் ஆசிரியர் திரு. எம். ரிஷான் ஷெரீபை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவு செய்கிறேன்.

அடுத்து, பறவை வேட்டையாடித் தன் மிருககுணத்தை வெளிப்படுத்தும் மனிதனைச் சாடும் கவிதை ஒன்றும் என்னைச் சிந்திக்க வைத்தது.

அக்கவிதை…

துணை தேடிச் செல்லும்
தும்பை நிற புள் 

அதன் இறகு உதிரும்
வாசம் மண்ணோடு பேசும்
மீதமிருக்கும் சுவடுகளை..  

ஒற்றைக் கால்
தவமிருந்து கிடைத்த காதல்
தட்டிப் பறித்தது
ஒரு தோட்டா….

விதை முற்றாத
இளம் கனியின் சூளுடைத்த
பாவம் யாருடையதோ?

தனிமை கொன்று
தனித் தேசம் தேடும்
துயரத்தை மாற்றி எழுதிட .. 

விஞ்ஞான உலகில்
சுட்டுத் தெறித்த
காதல் பறவையின்
குருதி குடித்தவனும் 

மனிதன் என்றே
அறியப் படுகிறான்!!

இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. கார்த்திகாவுக்கும் என் சிறப்பான பாராட்டுக்கள்! 

கவிஞர்களே! தொடர்ந்து போட்டிகளில் உற்சாகத்துடன் கலந்துகொள்ளுங்கள்! வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்!

 

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “படக்கவிதைப் போட்டி 15-இன் முடிவுகள்

  1. அருமைச் சகோதரி மேகலா அவர்களுக்கும், அன்பின் உயரிய வெற்றியாளர்கள் மற்றும் சக கவிஞர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்! 

    ஒவ்வொரு படைப்புக்களும் வெற்றியே! இன்னும் உற்சாகம் பொங்கட்டும்! இருக்கும் வாய்ப்பெல்லாம் மலரட்டும்! கற்பனை சிறகுகொண்டு பறக்கட்டும்! கருணை உள்ளங்கள் நிரம்பட்டும்! தோள் கொடுக்கும் பண்பில்தான் வெற்றி அமைந்திருக்கிறது!  ஆகவே புற வெற்றி ஒரு புறமிருந்தாலும், அக வெற்றி ஒன்றுதான் நமக்கு நீடித்த மகிழ்வைத் தருவது!  தேடித் தேடி அடைவோம் வெற்றி!

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    சுரேஜமீ

  2. படக் கவிதை 15ல் வெற்றி பெற்றோருக்கும் பாராட்டுப் பெற்றோருக்கும் இனிய வாழ்த்துகள்.

    வல்லமையாளருக்கு!  அவரின் கவனத்திற்கு!  (மேகலா .இராமமூர்த்திக்கு)
    நான் பல இடத்தில் வாசித்தேன் கழுத்தை எஸ என வளைத்துப் பறப்பது நாரை 
    பறக்கும் போது  தலையை நீட்டமாக வைக்கும் கொக்கு என்று. 
    இதனாலேயே எனது வரிகனை துணிவுடன் நாரை என்று எழுதினேன் 
    இதில் ஒரு இணைப்பு தருகிறேன். இன்னும் வாசித்துப் பாருங்கள்.
    ஒரு இணைப்பு  இன்னும் பல உண்டு.
    http://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88

  3. பாராட்டு பெற்ற திருமிகு. கார்த்திகாவுக்கும் வெற்றியாளர் திரு. எம். ரிஷான் ஷெரீபுக்கும் வாழ்த்துக்கள்.

  4. அன்பின் சகோதரி  மேகலா . இராமமூர்த்திக்கு

    இங்கு ஒரு இணைப்புத் தருகிறேன் இதில் 
    குணாதிசயங்கள் என்ற தலைப்பின் கீழ் வாசியுங்கள்.
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88
    (குணாதிசயங்கள்[தொகு]
    இவை இறக்கைகளை வேகமாக அடித்துக்கொள்ளாமல் மெதுவாக பறக்கும் இயல்புடையவை. பறக்கும் போது ஆங்கில எழுத்தான “S” வடிவில் கழுத்தை மடித்து வைத்துக்கொண்டு பறக்கும். இந்த பழக்கம் இதனை மற்ற கொக்குகள் மற்றும் குருகுளின் பறக்கும் தன்மையிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகின்றது. மற்றவை கழுத்தை நீட்டிக்கொண்டு பறக்கும் தன்மையுடையன. பொதுவாக மிகவும் அமைதியான இவ்வினம் காக்கை கரைவதைப்போல் “ஃப்ராஆஆங்க்” என்ற ஒலியினை

  5. அன்பின் திருமிகு. வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு,

    மிகவும் நுட்பமாகக் கவனித்து நாரையையும் கொக்கையும் அவை பறக்கும் விதத்தின் அடிப்படையில் வேறுபடுத்திக் காட்டியிருக்கின்றீர்கள். உங்கள் நுண்ணறிவைப் பாராட்டுக்கின்றேன்.

    நீங்கள் தந்துள்ள இணையதளம் நாரைகள் பற்றிய பல பயனுள்ள தகவல்களைத் தருகிறது. அதனை எங்களோடு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

    அன்புடன்,
    மேகலா

  6. இருவருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள். அருமையான ஒரு புகைப்படத்த்திற்கு கவியெழுதும் வாய்ப்பை தவற விட்டுவிட்டேன்.கொஞ்சம் வருத்தம் தான் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *