மீனாட்சி பாலகணேஷ்.

 

உலகத்தின் முதல் காதல் கடிதம்!

“உயர்ந்த குணங்களின் இருப்பிடமானவனே! பேரழகனே! உனது புகழ் செவிகளின் வழியாக எனது மனதை அடைந்து வாழ்க்கையின் துயரங்களைக் களைந்து விடுகின்றது; உனது அழகிய திருவுருவைக் காணப்பெறுவது கண்கள் செய்த பாக்கியம். எனது உள்ளம் தனது நாணத்தை விட்டொழித்து உன்னைக் கணவனாக வரித்துக் கொண்டு விட்டது!” எனும் ஸ்லோகத்துடன் துவங்குகின்றது ருக்மிணி கிருஷ்ணனுக்கு எழுதிய காதல் கடிதம்!

அரசிளங்குமரி ருக்மிணி: அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கியவள்; விதர்ப்ப நாட்டு மன்னனான பீஷ்மகனின் அருமை மகள். சிறுவயது முதற்கொண்டே துவாரகையின் நாயகனான கிருஷ்ணனைப் பற்றிக் கேள்விப் பட்டும், அவனுடைய வடிவழகைப் பற்றிச் சிந்தித்தும், கம்சனைக் கொன்று தன் தாய் தந்தையரைச் சிறைமீட்ட வீரப் பிரதாபங்களைக் கேட்டும், அவள் உள்ளம் அவன்பால், அந்த நினைக்கவொண்ணா ‘ஸ்ருத்வா குணான் புவன சுந்தரன்’ (உலகத்தில் பேரழகு வாய்ந்தவனும் உயர்ந்த குணங்களின் இருப்பிடமானவனும்) பால் காதல் வயப்படுகின்றது. மணந்தால் அவனையே மணப்பது என உறுதி கொள்கிறாள்.

அவளுடைய அண்ணன் ருக்மிக்கு கிருஷ்ணனைக் கண்டால் பிடிக்காது. தன் தங்கையை செடி நாட்டரசன் சிசுபாலனுக்கு மணமுடிப்பதாக வாக்குக் கொடுத்து விடுகிறான். மகளின் மன நிலையை- அவள் மனம் கிருஷ்ணனின் பால் ஈடுபட்டு விட்டதை- அறிந்த அரசன் பீஷ்மகனும் அரசியும் செய்வதறியாது திகைக்கின்றனர்.

திருமண நாள் நெருங்க நெருங்க ருக்மிணியின் உள்ளம் கவலை கொள்கின்றது; என்ன செய்வதென அறியாமல் திகைக்கிறாள். இங்கு காதலரின் நிலை எவ்வாறு உள்ளது தெரியுமா? கிருஷ்ணனைக் கணவனாக வரித்துக் கொண்டு விட்டாள் ருக்மிணி. அவன் தன்பால் காதல் கொண்டுள்ளானா என்பது பற்றி அவளுக்குத் தெரியாது! அவனுக்கும் அவள் உள்ளம் பற்றித் தெளிவாகத் தெரியாத நிலை! அதாவது ஒரு பேதைப் பெண் தன்னிடம் காதல் கொண்டு உருகி நிற்கிறாள் எனத் தெரியாது! (அவ்வாறென நாம் கதைப் போக்குக்காக எண்ணிக் கொள்ள வேண்டும்! எல்லாம் அறிந்த கிருஷ்ணன் அந்த இளம் பெண்ணின் உள்ளத்தைத் தான் அறிந்திரானா?)

காதலின் பொன்வீதியில் கிருஷ்ணனுடன் கைகோர்த்து உலா வர வேண்டுமானால் அரசிளங்குமரியான ருக்மிணி தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அவனுடன் இணைவதற்கு ஒரு உபாயம் அல்லது வழியைக் கண்டுணர வேண்டும்! காதல் கொண்டால் மட்டுமே போதாது! அதில் வெற்றியடையும் வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும். வரும் சிக்கல்களை எதிர் கொள்ளும் துணிவும் உபாயங்களும் தேவை. இதில் இருவர் பங்கும் வேண்டும். அவள் அவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் அவன் அவள் பக்கமாக இரண்டடி எடுத்து வைக்க வேண்டும். தமயந்தி போல இங்கும் காதல் வயப்பட்ட பெண்மையே இதற்கான வழிமுறைகளைச் சிந்தித்துப் பார்க்கின்றது. அவளுடைய அனுமதி இன்றி அவள் உள்ளத்தை ஒருவராலும் அடிமை கொள்ள முடியாது!

ஏழு ஸ்லோகங்களைக் கொண்ட ருக்மிணியின் இக்கடிதம் மிகவும் அழகானது. தெளிவானது. ஆம்! அவளுடைய மன உறுதியும், உள்ளத் தூய்மையும், தான் எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் எனும் துடிப்பும் பளிச்சிடும் சிறு காவியம் அது! முதல் இரு ஸ்லோகங்களில் எதனால் தான் கிருஷ்ணன் பால் காதல் வயப்பட்டேன் எனத் தெரிவிக்கிறாள்.

“மானிடருள் சிங்கம் போன்ற உன்னை, உயர்குடியில் பிறந்து, குணத்திலும், அழகிலும், கல்வியிலும் சிறந்த எந்தப் பெண் தான் தன் கணவனாக வரித்துக் கொள்ள மாட்டாள்?”

“நானும் அங்ஙனம் ஒரு பெண். உன்னை என் கணவனாக உளமாரத் தேர்ந்து கொண்டு விட்டேன். என் உடலையும் உள்ளத்தையும் உன் திருவடிகளில் அர்ப்பணித்தேன். சிசுபாலன் என்னைச் சொந்தம் கொண்டாட அனுமதிக்காதே! அது சிங்கத்திற்கே உரிய அரச காணிக்கையை நரி திருடிக் கவர்ந்து கொண்டு போவது போலாகும்!” என மூன்றாவது ஸ்லோகத்தில் கூறுகிறாள்.

இது எத்தனை அழகான உவமை! தன் உள்ளங்கவர்ந்தவனைச் சிங்கத்திற்கும், மற்றவனை நரிக்கும் ஒப்பிடுகின்ற காதல் மனம் கொண்ட பெண்மையின் உறுதிப்பாடு!

“நான் தான தர்மங்கள், ஏழை எளியவருக்கான உதவிகள் முதலிய புண்ணியம் மிகுந்த செயல்களை என் வாழ்நாளில் செய்திருப்பேன் ஆயின், அதன் பயனாக நீ இங்கு உடனே வந்து எனது கரம் பற்ற வேண்டும். எனது கரங்களைக் கொடியவனான சிசுபாலனின் கரங்கள் தொட்டு அசுத்தப் படுத்தலாகாது.”

தன் காதலனான கிருஷ்ணனிடம் அவனுடைய வீரத்திலும் காதலிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் ருக்மிணி. ஆகவே மேலும் அவனை, அவனது ஆண்மையை, வீரத்தினைத் தட்டியெழுப்பும் சொற்களைப் பொதிந்து கடிதத்தை வரைகிறாள்:

“எவராலும் வெல்ல முடியாத கிருஷ்ணா! நீ நாளையே விதர்ப்ப தேசத்திற்கு யாரும் காணாமல் விரைந்து வந்து, சிசுபாலனையும் அவன் படைகளையும் வென்று, என்னை ராட்சச முறையில் கவர்ந்து உந்தன் வெற்றிக்குப் பரிசாக திருமணம் புரிந்து கொள்வாய்!” என்கிறாள்.

பின் சிறிது யோசிக்கிறாள். ‘விதர்ப்ப நாட்டிற்கு வா என்று விட்டேன். நான் எவ்வாறு அந்தப்புரம், தோழியர் குழாம் இவற்றைக் கடந்து அவனைச் சென்றடைவேன்?’ எனச் சிந்திக்கிறாள்.

தனது மகிழ்ச்சிக்காகத் தன் சுற்றத்தார், உறவினர் யாரும் துன்பப் படலாகாது என எண்ணும் உயர்ந்த உள்ளம் கொண்டவள் அவள். சிந்தித்த போதில் ஒரு சிறந்த வழி புலப்படுகின்றது.

“எவ்வாறு அரச மாளிகைக்குள் நுழைந்து என்னைச் சார்ந்த மற்றவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வராமல் என்னைக் கவர்ந்து செல்லலாம் என்றால், நான் கூறுகிறேன் கேள்! எங்கள்அரசகுல வழக்கப்படி, திருமணத்திற்கு முன்பு மணப்பெண் எங்களது குலதெய்வமாகிய கிரிஜா எனப்படும் துர்க்கையின் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது சம்பிரதாயம். அப்போது அங்கு நீ ரதத்துடன் வந்தால் உன்னுடன் நான் ஓடி வந்து சேர்ந்து கொள்வேன்.”

இத்தனை துணிவுடன் வழிமுறைகளை எல்லாம் கூறிக் கடிதம் எழுதி விட்டாள் அரசமகள் ருக்மிணி. கடைசியாகத் திரும்பவும் அவநம்பிக்கை மெல்ல எட்டிப் பார்க்கிறது! இவ்வளவு எல்லாம் கூறியும் அந்த மாயக் கிருஷ்ணன் வராவிடின் என்செய்வது? ‘நான் தான் அவனிடம் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டேன். அவனுக்கு என்னிடம் ஈடுபாடு இருக்கிறதோ என அறியேனே! ஆனால் எப்பேர்ப்பட்ட நிலையிலும், கிருஷ்ணன் வராவிட்டாலும் கூட, சிசுபாலனை மணந்து கொள்வதென்பது மனதாலும் எண்ணிப் பார்க்க இயலாத ஒன்று,’ எனவெல்லாம் தனக்குத் தானே கூறிக் கொள்கிறாள்.

இதுவரை துணிவுடன் திட்டங்கள் தீட்டிய அவள் உள்ளம் கசிந்து உடைந்து போகின்றாள். காதல் கொண்ட மாயவனின் மீது தனது கடைசி ஆயுதத்தினையும் பிரயோகித்து எழுதுகிறாள். ‘இத்தனை உயரியவனான உன்னிடம் நான் பூரண சரணாகதி அடைந்து விட்டேன். என் வாழ்வும் தாழ்வும் உன் கையில் தான். நீ வராவிட்டால், என்ன செய்வதென்பதையும் நான் தீர்மானித்துக் கொண்டு விட்டேன்,’ என எண்ணிக் கொண்டு மேலும் முடிவாக ஏழாவது ஸ்லோகத்தை எழுதுகிறாள்:

“கிருஷ்ணா! உமையவளின் கணவரான சம்புவும் தமது குறைகளை நீக்கிக் கொள்வதற்காக உனது பாததூளியைத் தன்மீது தரித்துக் கொள்ள ஆவலுடன் உள்ளார். விதிவசத்தால் அத்தகைய பெரும் புகழ் வாய்ந்த கிருஷ்ணனாகிய நீ என்னைக் காப்பாற்ற வராவிட்டால், நான் என்ன தான் செய்வது? கடுமையான விரதங்களாலும் தவத்தாலும் எனது உயிரைப் போக்கிக் கொள்வேன். உன்னை அடையும் வரை திரும்பத் திரும்பப் பிறவிகளெடுத்துக் கடுந்தவம் இயற்றிக் கொண்டேயிருப்பேன்……….” என முடிகிறது ருக்மிணியின் கடிதம்.

காதலின் வலிமையை உணர்ந்த உள்ளங்களைக் கண்ணீரில் மிதக்கச் செய்யும் இக்கடிதம் இப்போது கிருஷ்ணனைச் சென்றடைய வேண்டுமே!

தனக்கு மிகவும் நம்பிக்கையான ஒரு முதிர்ந்த அந்தணரைக் கூப்பிட்டு, ருக்மிணி அவரிடம் தனது கடிதத்தைக் கொடுத்து விரைந்து சென்று கிருஷ்ணனிடம் சேர்க்குமாறு வேண்டுகிறாள்.

தன்னிடம் சேர்ப்பிக்கப்பட்ட இக்கடிதத்தைக் கண்ட பின்னரும் கிருஷ்ணன் வாளாவிருப்பானா?

குதிரைகளை ரதத்தில் பூட்டி, விதர்ப்ப நாட்டின் தலைநகரான குண்டினபுரத்தை நோக்கி விரைகிறான். தம்பியின் கருத்தறிந்த அண்ணன் பலராமன் உதவிக்காகப் படைகளுடன் தானும்அவனைப் பின் தொடர்கின்றான். நகரின் ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் தனக்கு உள்ளத்தைத் தந்தவளுக்காகக் காத்து நிற்கிறான் காதல் மன்னன்.

krishna rukminiபின்பு என்ன?

கடிதத்தில் குறிப்பிட்டபடி ருக்மிணி பூஜை செய்ய கிரிஜா கோவிலைத் தோழியர் புடைசூழ வந்தடைகிறாள். திருமகளின் அவதாரமான அவளைக் கண்ணாலாவது கண்டு மகிழ, அத்தனை அரசர்களும் வழியெங்கும் கூடி நிற்கின்றனர். அவளுடைய கண்கள் ரகசியமாகக் கிருஷ்ணனைத் தேடுகின்றன. காணாமல் உள்ளம் இன்னும் தளர்கின்றது. இனித் தனக்கு அந்த அன்னையே கதி என, “நந்தகோபன் மைந்தனை எனக்குக் கணவனாக அருளுவாய்,” என மனமுருகி வேண்டிக் கொண்டு கோவிலை விட்டு வெளியே வருகிறாள் ருக்மிணி.

அவள் உள்ளம் எப்படியெல்லாம் தத்தளித்திருக்கும்? ‘முதிய அந்தணர் துவாரகையிலிருந்து திரும்பி வந்து கடிதத்தைக் கிருஷ்ணனிடம் சேர்ப்பித்ததைக் கூறினாரே?’ எனத் தவிக்கின்றது அவள் உள்ளம். தன்னை வந்து கவர்ந்து சென்று விடுவான் எனக் காத்திருந்தவன் காணவில்லை; சிசுபாலனுடனான திருமணத்திற்கு முகூர்த்த நேரம் நெருங்கி விட்டது. நாட்டின் மொத்தப் பார்வையும் அழகின் திருவுருவான அவள் மீது தான். இனி என்ன செய்யலாம்?

நடை தளரக் கால்கள் பின்ன, உற்சாகம் குன்றிய உள்ளத்துடனும் குனிந்த தலையுடனும் நடந்தவள் செவிகளில் ‘ஜல்,ஜல்’ எனும் குதிரைக் குளம்பொலி கேட்கிறது. தோழியர் சிலர் எழுப்பிய, “ஹா,” எனும் ஆச்சரிய ஒலிகளைக் கேட்டுத் தலை நிமிர்ந்தவள் முன்பு….. காண்பது கனவில்லையே?

இதனை எவ்வாறு வருணிப்பது?

காதலில் கனிந்து பொலியும் புன்னகை பூத்த கதிர்மதியத் திருமுகம். கௌஸ்துபமும் துளசிமாலையும் தவழும் பரந்த மார்பும் திண்தோள்களுமாக, கரிய சுருண்ட குழல் கற்றைகள் நெற்றியிலும் தோள்களிலும் புரண்டு விளையாட, மயில்பீலி அணிந்த கிரீடமும் மஞ்சள் பட்டுப் பீதாம்பரமுமாக கருமுகில் வண்ணன். தான் இருந்த ரதத்தின் குதிரைகளின் கடிவாளங்களை ஒரு கரத்தால் உறுதியாகப் பற்றியபடி, அடுத்த கரத்தினை அவளை நோக்கி நீட்டியபடி அவளுக்காகவே காத்திருந்த கிருஷ்ணன். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல ஓடோடிச் செல்கிறாள் ருக்மிணி. அவளை பூப்பந்தை அள்ளுவது போலத் தூக்கியெடுத்து தன்னருகே ரதத்தில் இருத்திக் கொள்கிறான்.

கிருஷ்ணனையும் தன் காதலின் உறுதியாலும் விவேகத்தாலும் அவனை அடைந்து விட்ட ருக்மிணியையும் ஏற்றிக் கொண்டு காதலின் பொன்வீதியில் அந்தத் தேர் துவாரகையை நோக்கி விரைகின்றது! காற்றென விரையும் குதிரைகளுடன் அவர்களின் காதலைப் போற்றும் நமது உள்ளங்களும் விரைகின்றன அல்லவா?

***********************************************************

ருக்மிணியின் இக்கடிதம் உலகில் எழுதப்பெற்ற முதல் காதல் கடிதமாக எழுத்தாளர்களால், காவிய வல்லுனர்களால் கூறப்படுகின்றது. இது சாமானியமான ஒரு காதல் கடிதம் அல்ல; மன உறுதியுடன் தான் விரும்பும் ஆடவனையே மணாளனாக அடைய, ஒரு மெல்லியலாள் (ருக்மிணி), எத்தனையோ எதிர்ப்புகளுக்கும் தடைகளுக்கும் இடையே தன்னந்தனியளாகச் சிந்தித்து ஒரு வழியைத் தேடிக் கண்டுபிடித்து அதனைத் தான் காதல் கொண்ட மன்னனுக்குத் தெரிவித்து அவனையே மணந்த காதலின் உறுதியை, உயர்வைச் சிறப்புற பெருமையுடன் விளக்குகின்ற ஒரு இலக்கியப் பதிவேடு எனலாம்.

************************************************************

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.