ஆகஸ்ட் 17, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு  டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள் 

Dr. Tessy Thomas profile

வல்லமையின் இவ்வார வல்லமையாளராகச் சிறப்பிக்கப்படுபவர் “இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி“(Missile Woman of India) எனவும், “அக்னிபுத்திரி” எனவும் அன்புடன் அழைக்கப்படும் “டாக்டர் டெஸ்ஸி தாமஸ்” அவர்கள். இவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான திரு. ஜெயபாரதன் அவர்கள். அவருக்கு வல்லமைக் குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.

வல்லமையாளர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள், பணியிடத்தில் “இந்தியாவின் ஏவுகணை மனிதர்” (Missile Man of India) என்றழைக்கப்பட்ட மறைந்த மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களைத் தனது வழிகாட்டியாக அடையும் பேறு பெற்றவர்.

இந்தியாவில் ஏவுகணை திட்டப்பணி ஒன்றிற்குத் தலைமை தாங்கும் முதல் பெண் அறிவியலாளர் என்ற பெருமை கொண்ட டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள் பற்பல விருதுகளும், பாராட்டுகளும், கௌரவங்களும் பெற்றவர். கல்யாணி பல்கலைக் கழகமும், இந்துஸ்தான் பல்கலைக்கழகமும் (Kalyani University & Hindustan University) இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன. சென்ற வாரம் “ஸ்ரீ பத்மாவதி மகிள விஸ்வ வித்யாலயம்” (Sri Padmavati Mahila Viswa Vidyalayam -SPMVV) இப்பல்கலைக்கழகங்களின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டு, தனது 16 வது பட்டமளிப்பு விழாவில் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

Dr. Tessy Thomas

இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றிய அக்னிபுத்திரி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள் (Research and Development – R&D) ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளக்க உதவும் மிக முக்கியமான அளவீடுகளில் ஒன்று எனக் குறிப்பிட்டார், மேலும்…

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப் பெண்களை ஊக்குவிக்க வேண்டும். இளைஞர்கள் எத்துறையைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் தரமான செயல்களிலும், ஆக்கபூர்வமான பணிகளிலும் ஈடுபட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும். இந்திய மக்களில் 60 விழுக்காட்டினர் 35 வயதிற்கும் குறைவானவர்கள் என்பதால், சிறந்த பயிற்சி பெற்ற மனிதவள மேம்பாட்டைப் பெற இந்தியாவிற்குத் திறன் இருக்கிறது. பட்டம் பெற்று பணியுலகத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் தாங்கள் ஏட்டில் கற்ற கல்வியைச் செயல்படுத்த முனைவதுடன், சிறந்த நூல்களையும் படித்து ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் புரிதலுடனும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்.

நாட்டு மக்களுக்குத் தரமான கல்வி வளர்ச்சியை வழங்குவதில் விணையூக்கியாகச் செயல்படும் கல்விநிறுவனங்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றன. தற்கால உலக நடப்புகளில் ஆசிரியர்கள் அதிகக் கவனம் செலுத்தி அறிவதுடன், அதை மாணவர்களும் அறியச் செய்து அவர்களது திறமையை உயர்த்தத் தொடர்ந்து பாடுபட்டு மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்துக் கொடுக்க வேண்டும். இக்காலத்தில் பெண்கல்வி அதிகரித்திருந்தாலும் தொடர்ந்து அவர்களது பங்களிப்பு அறிவியல் துறைகளிலும், தொழில்நுட்பப் பணிகளிலும் குறைவாகவே இருந்து வருவதால், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் வண்ணம் பெண்களை ஊக்குவிக்க வேண்டும்.

உணர்வுசார் நுண்ணறிவுப் பயிற்சி, தொழில்நுட்ப வாய்ப்புகள், மேலாண்மை, வழிநடத்துதல், நிர்வாகத் திறன், வளாகத்தில் குழந்தை பராமரிப்பு வசதிகளை அவர்களுக்கு வழங்க எடுக்கப்படும் முயற்சிகள் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும். எதிர்காலத்தில் மாணவர்கள் எத்துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் சிறந்து விளங்க முயலவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

டாக்டர் டெஸ்ஸி தாமஸ் மேம்பட்ட அமைப்புகள் ஆய்வக இயக்குநர் (Director of Advanced Systems Laboratory – ASL), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் அக்னி – 5 ஏவுகணைக்கான திட்டப்பணி இயக்குநர் (Agni-V Project Director, Defence Research & Development Organization) ஆவார். ஐம்பது வயதைக் கடந்துள்ள அக்னிபுத்திரி கேரளத்தின் ஆலப்புழையைச் சேர்ந்தவர். தும்பா ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கும் தளத்துக்கு அருகில் வளர்ந்தவர். சீறிப்பாய்ந்த ராக்கெட்கள் கொடுத்த ஆர்வத்தின் காரணமாக ஏவுகணைத் தொழில்நுட்பம் பற்றிக் கற்க விரும்பி அத்துறையைத் தேர்ந்தெடுத்தவர். திருச்சூரில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் (B.Tech) பட்டப்படிப்பை முடித்தார். புனேயில் உள்ள “போர்த்தளவாட தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில்” (Institute of Armament Technology, Pune, இது தற்காலத்தில், உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் / the Defence Institute of Advanced Technology என அழைக்கப்படுகிறது) ஏவுகணைக் கல்வியில் தொழில்நுட்ப முதுநிலைப் பட்டம் (M.Tech) பெற்றார்.

நான் பணி புரியும் அறிவியல் தொழிநுட்பத்துறை பாலின பேதம் (Gender Discrimination) பற்றி அறியாதது என்று பி.பி.சி. நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டவர் அக்னிபுத்திரி. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளராக 1988 ஆண்டுமுதல் பணியாற்றி வரும் அக்னிபுத்திரி அக்னி-1 ஏவுகணையின் வடிவமைப்புப் பணிகளில் பங்கேற்றவர். தொடர்ந்து அக்னி-3 மற்றும் அக்னி-4 ஏவுகணைகளின் இணை திட்டப்பணி இயக்குநராகப் பணியாற்றினார். பிறகு 2009ஆம் ஆண்டு 5,000 கிமீ வீச்சுள்ள அக்னி-5 திட்டப்பணிக்குத் திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்று, ஏப்ரல் 2012 இல் இவரது தலைமையில் அக்னி-5 வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

Dr. Tessy Thomas 0

உலகில் ஏவுகணை தொழில்நுட்பப் பணியாற்றும் ஒருசிலரில் டெஸ்ஸி தாமஸ்ஸும் ஒருவர். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறையில் தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறிய பெண்மணிக்கு டெஸ்ஸி தாமஸ் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சுங்கால் பாராட்டப்பட்டவர் அக்னிபுத்திரி. இந்தியாவைப் பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறச் செய்த அக்னிபுத்திரிக்கு லால்பகதூர் சாஸ்திரி-தேசிய விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் போரைத் தவிர்த்து இந்தியாவை அமைதிப்பாதைக்கு வழிவகுக்கும் ஒரு திட்டம் என்பதும், “இந்திய ஏவுகணைகள் அமைதிக்கான ஆயுதங்கள்” (weapons of peace) என்பதும் இவர் கருத்து. வெற்றியை அடைந்த பிறகு ஒருவர் எதிர்கொள்ளும் சவால், கிடைத்த வெற்றியின் களிப்பால் பெருமையில் திளைத்துவிடாமல், வெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது என்பது அக்னி புத்திரி வழங்கும் அறிவுரை.

Sastri-Award
அக்னிபுத்திரி பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்க சில:
= India Today Woman Summit & Awards 2009
= Shastri Award 2012
= CNN-IBN Indian of the Year 2012
= JFW Women Achievers Award 2013
= Maharana Udai Singh Award 2013
= GR8! Women Awards 2014
= Dr. Y. Nayudamma Memorial Award – 2014

சேவையின் மறுவுருவமான அன்னை தெரசாவின் பெயரைச் சூட்டப்பட்டவர் டெஸ்ஸி தாமஸ். இந்திய பெண் அறிவியலாளர் அமைப்பு (The Indian Woman Scientists Association), “பணிபுரியும் ஏனைய பல பெண்களைப் போல இவரும் பணியின் கடமைகளையும், குடும்பப் பொறுப்பையும் கயிற்றின்மீது நடக்கும் வித்தைக்காரர் போன்று கவனமுடன் கையாண்டவர், அன்னையாகவும் அறிவியல் ஆய்வாளராகவும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். டெஸ்ஸி தாமஸ் பெண் அறிவியலார்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக விளங்கி அவர்கள் இரு உலகங்களிலும் தடம் பதித்து தங்கள் கனவுகளை வெற்றிகரமாக அடையத் தூண்டுதலாக அமைந்துள்ளவர்” என்று பாராட்டியுள்ளது. பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறையில் ஆர்வம் கொண்டு முன்னேற முன்மாதிரியாக விளங்கும் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களின் வல்லமையைப் பாராட்டுவதில் வல்லமை இதழும் பெருமை கொள்கிறது.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

இக்கட்டுரைக்கான தகவல் பெற்ற இடங்கள்:
Need to encourage women in R&D: ASL Director, August 11, 2015, The Hindu
http://www.thehindu.com/news/national/andhra-pradesh/need-to-encourage-women-in-rd-asl-director/article7523888.ece

அக்னிபுத்திரி
https://jayabarathan.wordpress.com/2012/04/28/agni-puthri/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *