“தங்கத் தலைவர்”– கர்மவீரர் காமராசர்!
—ஜியாவுத்தீன்.
முன்னுரை:
கர்மவீரரைப் பற்றித் துவங்கும் முன் சமீபத்தில் மறைந்த நமது அன்பின் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களைப் பற்றிக்குறிப்பிடுவது இங்குப் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோதுகடைப்பிடித்த நேர்மையும், அரசு இயந்திரத்தைத் தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளாததும், தன் குடும்பத்தினருக்கானசெலவுகளையும், வசதிகளையும், அரசாங்கக் கணக்கில் சேர்க்காமல், சொந்தப் பணத்தில் செலவு செய்ததையும், தன்பதவியைப் பயன்படுத்தி சொத்தோ லாபமோ அடையாததும், எந்தச் சூழ்நிலையிலும் தன் பதவியை தவறாகப்பயன்படுத்தாததும் என்று 5 வருடங்கள் பதவியில் இருந்தபோது அவர் நடந்துகொண்ட விதம் பற்றி சிலாகித்துப்பேசுகிறோம். பெருமைக்குரிய விஷயம், மனதுக்கு நிறைவான விஷயம். எனக்குத் தெரிந்து சமீப காலங்களில் இப்படிஉதாரணமாய் யாரும் வாழ்ந்ததாக நினைவிலில்லை. அதனால்தான் அப்துல் கலாம் ஐயா அவர்களை இந்தியா மட்டுமின்றிஅண்டை நாடுகளும் பெருமையுடன் கொண்டாடுகின்றன.
ஐந்து வருடப் பதவியில் அப்துல் கலாம் அவர்கள் நடந்து கொண்டதுபோல், தன் வாழ்நாள் முழுதும் பன்மடங்கு உயர்வாகநடந்து கொண்டவரே நம் அன்புக்குரிய கர்மவீரர். அவரது வாழ்க்கையைப் பாடமாகவும், வழிகாட்டுதலாகவும் ஏற்றுக்கொண்டுதான் அப்துல் கலாம் அவர்கள் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.மனித இன வரலாற்றில் மறையாமல் இடம்பிடித்தோர் எல்லோரது வாழ்வும் எத்தனை முறை படித்தாலும், கேட்டாலும்,நாம் இன்றைய அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க முடியாததாக இருப்பதால்தான், அவர்கள் மாண்பு கொண்டவர்களாக,மகாத்மாக்களாக, மனிதரில் மாணிக்கங்களாக, மறையாப் புகழ் கொண்டவர்களாக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்து,மறையாமல் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நபிகள் நாயகம், இயேசு பிரான், புத்தன், மகாத்மா காந்திஎன்கிற வரிசையில், கர்ம வீரரின் வாழ்க்கையும் நாம் எளிதில் கடைப்பிடிக்க முடியாத ஒரு வாழ்க்கையாக இருந்ததேஅவர் ஒரு மகோன்னத மனிதர் என்பதற்கு அத்தாட்சி. அவரின் வாழ்க்கையைப் பாடமாக போதித்தும் யாராலும் அவர் போல்நடந்துகொள்ள முடியவில்லை, முடியவும் முடியாது. அந்த அளவுக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் ஒரு மாபெரும்மனிதரைப் பற்றி, 1000 வார்த்தைகளில் கட்டுரை என்பது, கவியரசரின் வார்த்தைகளில் ‘கங்கை வெள்ளம் சங்குக்குள்ளேஅடங்கிவிடாது’ என்றுதான் சொல்ல வேண்டும்.
என் வாழ்வின் துரதிர்ஷ்டம்:
அந்த மாமனிதரைப் பார்க்க என் வாழ்வில் வாய்த்த ஒரே ஒரு சந்தர்ப்பத்தைத் தவறவிட்டதை இன்றும் எனக்கு நேர்ந்த ஒருசாபமாக எண்ணிக்குமைந்து கொண்டுள்ளேன். ஆம்! 1973 அல்லது 74ம் வருடம் ஒருமுறை சேலம் மாவட்டம் மேட்டூர்அருகே ஒரு கிராமத்தில், அவரது பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. என் தந்தையுடன் 7 மணி அளவுக்குச் சென்றுகாத்திருந்தோம், அப்போதிருந்த போக்குவரத்து வசதிகளால் தலைவர்கள் தாமதமாக வர நேர்வதைத் தவிர்க்க முடியாதவிதிக்கு, கர்மவீரரும் விலக்கல்ல. இரவு 9.30 மணிவரை அவர் வராததால், என் தந்தை இரவு நேரப்பணிக்கு 10மணிக்குப்போக வேண்டி இருந்ததால், அதற்கு மேலும் காத்திருக்க முடியாமல் கனத்த மனதுடன் வீடு திரும்பினோம். மறுநாள்காலை தன் தந்தையுடன் சென்றிருந்த என் நண்பன் காமராசரைப் பார்த்தேன் என்று சொன்னபோது, பொறாமைஊற்றெடுத்தது உண்மை. அதன்பின் அவனிடம் நான் கேட்ட கேள்விகளால், அவன் கோபமுற்று, ‘டேய், அவர் வந்தாரு,பேசுனாரு, பாத்தேன், கேட்டேன், அவ்வளவுதான், இதுக்கு ஏண்டா இத்தனைக் கேள்வி கேக்குறே?’ என்றான். அந்தமாமனிதரைப் பார்க்கும் வாய்ப்பை நான் இழக்க ஏதோ ஒரு சாபம்தான் காரணம் என்று இன்றும் என் மனதில் ஒரு ஆதங்கம்உண்டு. அந்த அளவுக்கு என்னுடைய 9வது வயதிலேயே காமராசர் என்னுடைய மனதில் நல்ல இடம் பிடித்திருந்தார்.துரதிர்ஷ்டவசமாக அதன்பிறகு அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டாமலே போனது.
எனக்கு நடிகர் திலகம் சிவாஜியை மிகவும் பிடிக்கும், சிவாஜிக்கு காமராசரைப் பிடிக்கும், அதனால் எனக்கும் காமராசரைப்பிடிக்கத் துவங்கியது. அப்போது பத்திரிகைகளில் வந்த செய்திகளால் அவரைப்பற்றி ஓரளவுக்குப் படித்து அறிந்திருந்தேன்.அதன்பின், பல சந்தர்ப்பங்களில் கேள்வி ஞானத்தினாலும், பத்திரிகைகள் வாயிலாகவும், பலரது அனுபவப் பகிர்வுகளாலும்,காமராசரைப் பற்றி அறிந்த ஒவ்வொரு தகவலும் உள்ளத்தில் ஆழப் பதிந்து அவரது உருவை மிகப் பிரம்மாண்டமாய்ப் பதியவைத்துள்ளன என்றால் மிகையில்லை. காமராசருடன் எப்போதும் சிவாஜி இருந்ததாலேயே, சிவாஜியை இன்னும்அதிகமாகப் பிடித்தது என்பதும் உண்மையே. ஆனால், அத்தகைய ஒரு மனிதரின் அருகாமையில் இருந்தும் சிவாஜிஅவர்கள் சரியான அரசியல் பாடத்தைக் கற்றுக் கொள்ளாதது, ஒரு வகையில் ஏமாற்றமே.
தங்கத் தலைவர்:
காமராசரைப் பற்றி, இனி யாரும் புதிதாக எதுவும் கண்டுபிடித்தோ, அறிந்தோ, அகழ்வாராய்ச்சி செய்தோ, விசாரித்தோஎதுவும் சொல்லிவிடப் போவதில்லை. அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அவரது தாயார் தொடங்கி, அவரதுஉறவுகள், நண்பர்கள், அவரது இறுதித்தருணம் வரை உடனிருந்த உதவியாளர், அவரைப் பின்தொடர்ந்து சென்றுஅறிந்திருந்த பத்திரிகைகள், அவருடன் தொடர்பிலிருந்த தலைவர்கள், அவருடன் நட்பு பாராட்டிய நல்ல உள்ளங்கள்,அவரால் பயன்பெற்ற பாமர மக்கள் என்று அனைவரும் அவரைப் பற்றி அனைத்தையும் சொல்லிவிட்டார்கள். இங்கே நாம்செய்ய வேண்டியது, அவர் எந்த அளவுக்கு நம் மனதில் நிறைந்துள்ளார், என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்,அவரின் நினைவைப் போற்றும் வகையில் என்ன செய்ய முடியும், அவரது வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள்என்ன என்று அசைபோடுவதுதான் நம்மால் முடியும். ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் போல, அவரைப்பற்றி அறிகிறசெய்திகள் அனைத்துமே ஆச்சரியமான விஷயங்களே! இப்படிக்கூட ஒரு மனிதர் சிந்திக்க முடியுமா? கேள்வி கேட்கமுடியுமா? தாழ்ந்துபோக முடியுமா? தாக்கம் ஏற்படுத்த முடியுமா? விட்டுக்கொடுக்க முடியுமா? விடை காணமுடியுமா?வீரியமாய் செயலாற்ற முடியுமா? வீடு வீடாகத் தன் பெயரைத் தானே அறியாமல் பதிக்க முடியுமா? மக்கள் மனங்களை தன்செய்கைகளால் நிரப்ப முடியுமா? ஏழைகளின் வீடுகளில் நீக்கமற நிறைந்து நீங்காப் புகழ் பெற முடியுமா? என்றுகேள்விகளாய் நம் மனதைத் துளைக்கும் அந்த உத்தம மனிதரின் வாழ்க்கை எண்ணிப் பார்க்க முடியா உயரத்தில்நட்சத்திரமாய் அவரை ஜொலிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
மனிதருள் மாணிக்கம்:
இன்றைய மலிவான அரசியல் களத்தில் மாமனிதர்களாய்த் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சுயவிளம்பரங்களாலும்,கையூட்டுக் கொடுத்து காவடி தூக்க வைத்தும், தன் கட்சிக்காரர்களைக் கொண்டு புகழ்மாலையைப் பாமாலையாக்கித்துதிபாடவைத்தும், அரசு செலவில் அன்றாடம் தன் பெயரைப் பிரபலமாக்கியும் முயற்சி செய்யும் நவீன ‘மகாத்மா’க்களுக்குநடுவே கர்மவீரர் ஒரு பிரகாசமான சூரியனாய் நிலைகொண்டுள்ளார் என்பதும் உண்மை. காந்தியடிகள், பதவியில்இல்லாமல் தன் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டவர். அதில் வியப்பில்லை. அது அவரது வாழ்க்கையின் இயல்பாகமாறிப் போனது. ஆனால், பதவி கிடைத்தும் தன் எளிமையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதும், அப்பதவியினால்கிடைக்கக் கூடிய பலன்களில் அணுவளவும் அனுபவிக்காமல் மறுப்பதும் அதனினும் உயர்ந்த பண்பாகும். வாய்ப்புகளேகிட்டாத ஒருவன் தவறே செய்யவில்லை என்று சொல்வதைவிட, வாய்ப்புகள் கிட்டியும் தவறு செய்யாமல் மனதைக்கட்டுப்படுத்துபவன் மனிதரில் மாணிக்கம் ஆவான். அந்த வகையில், கர்மவீரர் அவர்கள் நிச்சயம் ஒரு ‘மனிதருள்மாணிக்கம்தான்!’.
படிக்காத மேதை:
படிக்காத மேதை என்று அவரைச் சொல்கிறோம். ஆம்! அவர் பள்ளிப் படிப்பைப் படிக்காத பேதைதான், ஆனால் அனைத்துமக்களின் மனங்களையும் படித்த மாமேதை! அவர் அரசியலைப் படித்தார், ஏழை மக்கள், பணக்கார மக்கள், நடுத்தர மக்கள்என்று அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையைப் படித்தார். நம் தேசத்தின் வலிமை என்ன, பலவீனங்கள் என்ன, தேவைஎன்ன, தேவையற்றவை என்ன, செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன, தேடவேண்டியது என்ன, தேடாமல்இருக்க வேண்டியது என்ன, பார்க்க வேண்டியது என்ன, பார்க்கக் கூடாதது என்ன என்று எத்தனையோ விஷயங்களைப்படித்து ‘படிக்காத மேதை’யாகத் திகழ்ந்தார். பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் போனதால்தான் நமக்கு ஒரு கர்மவீரர்கிடைத்தார். அவர் தொடர்ந்து படித்திருந்தால், நமக்கு இப்படி ஒரு மாமேதை கிடைத்திருப்பாரா என்பது சந்தேகமே!
அவர் ஏழைப்பங்காளன்தான், பணக்காரர்கள் எப்படி ஏழைகளின் பங்குகளைப் பிடுங்குகிறார்கள் என்பதை உணர்ந்ததால்,ஏழைப் பங்காளனாக இருந்து அவர்களுக்குரிய பங்குகளை சேதாரமின்றிப் பெற்றுத்தந்தார். அவர் காமராச நாடார், ஆயினும்அவர் பதவிகளை நாடார் என்று பாராட்டப் பட்டார். எந்தப் பதவிக்கும் அவர் விருப்பப்பட்டதில்லை, காரணம் அனைத்துப்பதவிகளும் அவருடன் ஒட்டிக்கொள்ள விரும்பின. அவர் பதவிகளைத் துறந்தார், காரணம் அவற்றால் வரும் சுகங்களைமறந்தார், மறுத்தார். எந்தப் பதவிக்கும் உரிய பணி செய்யாமல் அப்பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க அவர்விரும்பியதில்லை. காரணம், அப்படி அப்பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தால், அதற்குரிய மரியாதை தன்னோடு ஒட்டாதுஎன்று தெரிந்து வைத்திருந்தார். இன்று பதவியை பதவி என்று சொல்லாமல், பொறுப்பு என்றுதான் சொல்கிறோம் என்றுயார் யாரோ பேசுகிறார்கள், இதை தன் வாழ்நாளில் வாழ்ந்து காட்டியவர் கர்மவீரர் என்றால் மிகையில்லை. ஆம்! அவர்பதவிகளை பதவியாக எண்ணாமல், அது மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை நிறைவேற்றக் கிடைத்த ஒருவாய்ப்பாகத்தான் எண்ணினார். மக்கள் பணியும், தேசப் பணியும் தன் கடமைகள் என்று எண்ணியதால்தான், அந்தமாமனிதர் திருமணம்கூட செய்து கொள்ளாமல் நாட்டு நலனே தன் நலன் என்று இறுதிமூச்சுவரை வாழ்ந்து மறைந்தார்.
சிவகாமியின் செல்வன்:
கர்மவீரர் அவர்கள் ‘சிவகாமியின் செல்வன்’ என்று போற்றப்படுகிறார். ஆயினும் அந்த சிவகாமிக்கேகூட எந்தச் சலுகையும்காட்டாதவர் என்பது, இறைவன் அவருக்குப் பிரத்தியேகமாகப் படைத்து வழங்கிய இணையில்லாத இரும்பு இதயத்தின்இயல்பான கட்டுப்பாடேயன்றி வேறென்ன? தன் அன்புக்குரிய ஒரு தாய், மாநில முதல்வராயிருக்கிற தன் மகனிடம்போர்வை ஒன்றும், மின்விசிறி ஒன்றும் கேட்க, போர்வை தேவையெனில், மின்விசிறி தேவையில்லை, மின்விசிறிதேவையெனில் போர்வை தேவையில்லை. என்னால் ஏதாவது ஒன்றைத்தான் வாங்கித் தர முடியும், எது வேண்டும் என்றுமுடிவு செய்து சொல் என்று தாய்க்கே பதில் சொன்ன அந்த மனவலிமை, இப்புவியில் வேறு யாரிடமாவதுகண்டிருக்கிறோமா? அன்னை தண்ணீர் சுமந்து வர சிரமப்படுகிறார் என்று பஞ்சாயத்துக் குழாயை அவர் வீட்டு வாசலில்பதிக்கச் சொல்லி பரிந்துரைக்கச் சொன்ன உறவினரிடம், என் தாய்க்கு மட்டும் என்ன விதிவிலக்கு? அது என்வேலையில்லை, வேண்டுமானால் பஞ்சாயத்துத் தலைவரிடம் விண்ணப்பித்துப் பாருங்கள் என்று சொன்ன நேர்மை,இன்று எந்த ஒரு தலைவனுக்காவது உண்டா? இவையெல்லாமே அந்தச் சிவகாமியின் செல்வனுக்கு மட்டுமே உண்டு!அதனால்தான், மக்களுக்கு அருகே போவதே பாவம் என்றும், பயம் என்றும், தேவையற்றது என்றும் எண்ணுகிற பேடித்தலைவர்களுக்கிடையே, மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகி, அவர்களது தேவையென்ன, எதிர்பார்ப்பு என்ன என்பதைப்புரிந்துகொண்டு, அதற்கேற்ப திட்டங்கள் வகுக்க அவரால் முடிந்தது. அதன் வெளிப்பாடாகத்தான், சாத்தனூர் என்றும்,கிருட்டிணகிரி அணை என்றும், பள்ளிகளாகவும், சத்துணவாகவும், தொழிற்சாலைகளாகவும், தொழிற்பேட்டைகளாகவும்இன்னும் பலவாறாக அவர் பெயரைப் பறைசாற்றும் பல நினைவுத் தூண்களை தமிழகமெங்கும் காண்கிறோம்.
இந்திய அளவில் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டபோது, சரியான அணுகுமுறை, ஆலோசனை என்று அவற்றைத் தீர்க்கும்திறன் பெற்றிருந்தார். அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டபோது, அங்கே யாரைப் பொருத்த வேண்டும் என்பதைத்துல்லியமாகக் கணித்தார். இந்திய உயர்பதவிகள் அவரைத் தேடிவந்த போதும், நேர்வழியிலோ, குறுக்கு வழியிலோஅவற்றை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளாமல், பெருந்தன்மையாக மற்றவருக்கு விட்டுக் கொடுத்தார். அதனால்தான்,அகில இந்தியாவின் ஒரே ‘கிங் மேக்கர்‘ என்று புகழப்படுகிறார். பள்ளிக்கு வராத சிறுவர்களைக் கட்டாயப்படுத்தாமல்,அவர்கள் வராததற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்ததால்தான், மதிய உணவுத் திட்டம் வந்தது. பள்ளிக்குப் படிக்கபிள்ளைகள் வந்தார்கள். நீராதாரத்தைப் பெருக்க வேண்டும் என்று அணைகள் கட்டியதால்தான், விவசாயிகளின் வாழ்க்கைசெழிப்படைந்தது. தொழிற்சாலைகளை உருவாக்கியதால், தொழில் வளர்ச்சி பெருகியது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாயின.
தமிழனின் நன்றியுணர்ச்சி:
இத்தனையும் செய்தும் அந்த மாமனிதரையே தேர்தலில் தோற்கடித்தோமே, அதுதான் சராசரித் தமிழனின் ‘மாண்பு’!தனித்தன்மை! நன்றியுணர்ச்சி! இத்தனை நல்லவைகளைச் செய்த அந்த மனிதரைத் தோற்கடிக்குமளவு, அவர் செய்த தவறுஎன்ன? இன்றும் யாராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி, வரலாற்றுக்கே விடை தெரியாத வற்றாத கேள்வி! தமிழர்வரலாற்றில் அழிக்க முடியாத வடுவாய்ப் பதிந்துள்ள அருவருப்பான அரசியல் பக்கங்கள்!
இயேசுவை சிலுவையில் அறைந்ததும், நபிகள் நாயகம் மீது குப்பை வாரிப் போட்டதும் போல, மாமனிதர்களை, மனிதகுலம் நயவஞ்சகம் செய்தது என்ற நியதிக்கேற்ப, காமராசரையும் தோற்கடித்தோம். பதவியைத் தந்தவரையே, அவசரநிலைப் பிரகடனம் மூலம் மனம் நோகச் செய்து, அந்த மன உளைச்சலே அவரது உயிரைக் காவு வாங்கவும் வைத்தோம்என்பது வரலாற்றில் பதிந்து போன களங்கமான பக்கங்கள்! இன்றும் ஆளும் கட்சிகளும், ஆள நினைக்கும் கட்சிகளும், ஏன்,காமராசருக்கு எதிராக அரசியல் செய்த கட்சிகளும்கூட ‘காமராசர் ஆட்சி’யைக் கொண்டு வருவோம் என்றுசொல்வதிலேயே தெரியவில்லையா, அவரது ஆட்சி எப்படி இருந்தது என்று. அப்படிக் குறைசொல்லவே முடியாத அளவுஆட்சி நடத்தியதாக யாரையுமே குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ‘காமராசர் ஆட்சி’யைக் கொண்டு வருவோம் என்றுசொல்பவர்கள் யாருமே அவரின் வாழ்வைப் பின்பற்றி, ஒரு சதவீதம் அளவேனும் நடந்து கொள்கிறார்களா என்றால்,இல்லை என்றுதான் சொல்ல வேண்டி வரும்! இனி ஒரு ஆட்சி, காமராசர் ஆட்சிபோல் வர வாய்ப்பே இல்லை என்பது,மறுக்க முடியாத ஏக்கமான உண்மை.
முடிவுரை:
பதவி கிடைத்தவுடன், விரைவாகப் பணம் பண்ணி, பார்க்கும் இடங்களெல்லாம் தன் பெயரில் மாற்றி, கட்டிடங்களும்,கடைகளும், தொழில்களும் துவங்கி, தனக்கும் தனக்குப் பிறகு தன் சந்ததியினரும் மகிழ்ந்திருக்கவும், தன் உறவினர்கள்,நண்பர்கள் பெயர்களிலெல்லாம் சொத்து சேர்க்கவும் வாய்ப்பிருக்கும் அரசியலில், ஆலாய்ப் பறக்கும் நிகழ்காலஅரசியல்வாதிகள்/அதிகாரிகள், மக்களுக்கு நல்லது செய்தால், இறுதியில் ஒரு பாழடைந்த வீட்டை நினைவிடமாகவும்,படித்த பள்ளிக்கு பெயராகவும், ஏதோ ஒரு தெருவுக்குப் பெயராகவும், தன் சாதி போராட ஒரு காரணியாகவும் மட்டுமேஇருக்க முடியும் என்கிற உண்மையை உளமார உணர்ந்திருப்பதால்தானோ, காமராசர் போல யாருமே மாறமுயற்சிப்பதில்லை என்று தோன்றுகிறது.
தன் பிள்ளைகூட தன் பெயரைக் காப்பாற்றாமல் போகக் கூடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்ததினால்தானோ,அம்மாமனிதர் தன் சந்ததியை வளர்க்காமல் விட்டுப் போனார்? நல்ல மனிதர்களுக்கெல்லாம் நேரடி வாரிசுகள் இல்லாதுபோவதே, அவர்கள் உன்னதமான மனிதர்கள் என்று உலகுக்கு உணர்த்த இறைவன் செய்யும் ஏற்பாடுதான் போலும்.
‘தோன்றிற் புகழொடு தோன்றுக – அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று’
‘நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’
என்று சொன்ன அப்துல் கலாம் அவர்களின் வாக்குக்கேற்ப, எங்கோ ஒரு கிராமத்தில் சிவகாமி அம்மாளின் மகன் என்று ஒருசம்பவமாகத் தோன்றிய காமராசர் என்பவர், கர்மவீரர் என்னும் குறியீட்டால், சாதனைகள் புரிந்து சரித்திரமாக மாறிஇன்றும் புகழுடன் திகழ்கிறார் என்றால், அவர் ஒரு ‘தங்கத் தலைவன், கர்மவீரன்’தான் என்பதில் ஐயமும் தோன்றுமோ?
சிறந்த நிர்வாகத்தாலும், புத்திக்கூர்மையாலும், நேர்மையாலும், எளிமையாலும், தனித்துவமிக்க அணுகுமுறையாலும்,அனுபவங்களாலும், தன் வாழ்வில் நடைபோட்ட விதத்தாலும் தன் புகழை நம்முள் விட்டுப்போனது, கர்மவீரரின் சாதனை!அவரின் ஆட்சி யார்மூலமாவது மீண்டும் வராதா என்று அனுதினம் ஏங்க வைப்பதே இன்றைய ஆட்சியாளர்களின்,அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் சாதனை! நமக்கு நேர்ந்த வேதனை! இதுவும் நாம் வாங்கிவந்த வரமென்று உணர்ந்து, அம்மாமனிதனின் நினைவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டே வாழ்க்கைப் பாதையில் நடைபோடுவோம்!
வாழ்க கர்மவீரர் காமராசர்! வளர்க அவரது புகழ்!