திருக்குவளை மீ.லதா.

தமிழ்நாட்டின் தலைமகன்
இந்தியாவின் பெருந்தலைவன்
பிள்ளை மனம் கொண்ட தங்கமகன்
கம்பீர நடை கொண்ட சிங்கமகன்
செல்வம் சேர்க்காத செல்வமகன்
ஏழைகளின் செல்ல மகன்
சாதனைகளின் சரித்திர நாயகன்…
எங்கள் கல்விக்கண் திறந்த
ஐயா உங்கள் பாதம் பணிகிறோம்

தந்தை பெரியார் அவர்களால் தமிழ் நாட்டின் இரட்சகர் என்று அழைக்கப்பட்ட கல்வி வள்ளல் பெருந்தலைவர் காமராசர். நூற்றுப் பத்து ஆண்டுகளுக்கு முன் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, தம் கடுமையான உழைப்பால் அகில இந்தியத் தலைவர் என்ற அளவுக்கு உயர்ந்த காமராசர் பெயரால், கால் நூற்றாண்டுக்கு முன் டெல்லியில் ஓர் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

அதன் காரணம் என்னவென்று கேட்டபோது இந்தியாவில் ஒருவர் அகில இந்தியத் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டுமென்றால் அவர் முதலில் மேல்சாதிக்காரராக, குறிப்பாகப் பார்ப்பனராக இருக்க வேண்டும். ஒரு பாரம்பரியமிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர் மேல்நாட்டுப் படிப்புப் படித்திருக்க வேண்டும். அடுத்தபடியாக அவர் வடநாட்டுக்காரராக இருக்க வேண்டும். அதிலும் இந்திக்காரராக இருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக அவர் சிவப்பு நிறத்தவராகப் பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும். இந்த ஆறு அடையாளங்களில் ஒன்று கூட இல்லாமல் ஓர் அகில இந்தியத் தலைவராக வந்தார் என்றால் அது காமராசர் ஒருவர்தான் என்று பதில் சொன்னார்கள்.

கறுப்புக் காந்தி என்றழைக்கப்பட்ட காமராசர்தான் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக இருந்த ஜவகர்லால் நேரு மறைந்தபோது லால்பகதூர் சாஸ்திரியை ஏகமானதாகத் தேர்வு செய்தவர். அவரது திறமையை, பெருமையை உலகமே பாராட்டியது.

அன்றைக்கு 16 ஆயிரம் மக்கள் மட்டுமே வசித்து வந்த விருதுநகரில் மேகவர்ணம் என்ற பிரிவினரைச் சேர்ந்த பிரபல வியாபாரியான குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மையாருக்கு 1903-ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் காமராசர் பிறந்தார். அங்கே சத்திரிய வித்தியா சாலை என்ற பள்ளியில் அவர் 6-ஆம் வயதில் சேர்க்கப்பட்டார். இந்தப் பள்ளிக் கூடத்திற்கு ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு கைப்பிடி அரிசி கொண்டு போய் கொடுக்கவேண்டும். ஆதலால் இப்பள்ளி பிடியரிசிப் பள்ளிக்கூடம் என்று அழைக்கப்பட்டது. காமராசரின் 12-ஆம் வயதிலேயே அவரது தந்தையார் எதிர்பாராது முடிவெய்திய காரணத்தால் அவரது பள்ளி செல்லும் வாய்ப்பு நிறுத்தப்பட்டது.

1920-ஆம் ஆண்டு, காந்தி அறை கூவல் விடுத்த ஒத்துழையாமைப் போராட்டத்தின்போது காமராசர் அதை ஏற்று, போராட்டத்தில் பங்குகொண்டார். விருதுநகரில் மட்டுமன்றி சுற்று வட்டார கிராமங்கள் எல்லாவற்றுக்கும் நடந்தே சென்றுதான் பிரச்சாரம் செய்தார். ஒரு முறை 60 கிலோ மீட்டர் சுற்றி மதுரைக்கு நடந்து சென்று கட்சிப் பணியாற்றி விட்டுத் திரும்பி வந்தார்.

1924-ஆம் ஆண்டு, தந்தை பெரியார் கேரள மாநிலம் வைக்கத்தில் நடத்திய போராட்டத்தில் ஒரு தொண்டராக காமராசர் விருதுநகரிலிருந்து சென்று வந்தார்.
காங்கிரஸ் தலைவராக 1940-இல் காமராசர் வெற்றி பெற்றார். அப்போது அவரைத் தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டி பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

1941-ஆம் ஆண்டு, அவர் சிறையில் இருந்தபோதே விருதுநகர் நகராட்சித் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறையிலிருந்து விடு தலையாகி வெளியே வந்து நகராட்சித் தலைவர் என்ற முறையில் கூட்டத்தை நடத்தி விட்டுப் பின் அந்தப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். இந்தப் பதவியில் இருந்தால் காங்கிரஸ் கட்சியின் இதர கட மைகளையெல்லாம் கவனித்துச் செய்ய முடியாது என்ற காரணத்தால்தான் அப்பதவியிலிருந்து விலகினேன் என்று அவர் சொன்னார். அதுபோலவே பொதுத்தொண்டு செய்பவருக்குத் திருமணம் ஒரு தொல்லை என்று முடிவு செய்து திருமணத்தைத் தவிர்த்து கடைசிவரை பிரமச்சாரியாகவே வாழ்ந்து தொண்டாற்றினார்.

காமராஜரின் தமிழகம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்.

காமராசர் பற்றிய குறிப்பு:
காமராஜருக்குக் கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டித் தீர்த்து விடுவார். ஆனால் அந்தக் கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும்.

தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகச் சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.

தனது பாட்டி இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

கதர்த்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்தக் கதர்த்துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்குக் கொடுத்து விடுவார்.

1966-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர், “மக்களுக்குக் குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறையத் தொடங்க வேண்டும்” என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும் “காமராசர்” என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.

காமராஜருக்கு “பச்சைத்தமிழன்” என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.

பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், “மக்கள் தலைவர்” என்றே கூறினார்.

தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லாக் கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது.

காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.

காங்கிரஸ் கட்சியை மிக, மிகக் கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

சட்டத்தைக் காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நலத் திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. “மக்களுக்காகத்தான் சட்டமே தவிரச் சட்டத்துக்காக மக்கள் இல்லை” என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.

தவறு என்று தெரிந்தால் அதைத் தட்டி கேட்கக் காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்படப் பலர் காமராஜரின் இந்தத் துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

காமராஜர் எப்போதும் “முக்கால் கை” வைத்த கதர்ச் சட்டையும், 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.

காமராஜர் அவர்கள் திருநெல்வேலி மக்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்

காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. ‘எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை’ என்று நேரு குறிப்பிட்டதுண்டு.

காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாகப் படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்குச் செல்ல நேரிடும் போது, அந்தப் பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார்.

காமராஜர் ஒரு தடவை தன் பிரத்தியேக பெட்டிக்குள், இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீன்ஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதைக் கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார்.

காமராஜரின் தன்மானம்:
காமராஜர் நாகர்கோவில் தொகுதியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லியில் தங்கி இருந்தபோது, அமெரிக்க அதிபர் நிக்சன் இந்தியா வந்தார். காமராஜரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைச் சந்திக்க விரும்பினார். ஆனால் காமராஜர் சந்திக்க மறுத்து விட்டார். உடனே உதவியாளர் அதிர்ச்சி அடைந்து, ”உலகமே பெருமைப்படும் அமெரிக்க அதிபரே உங்களைப் பார்க்க விரும்பும் போது…” என்று இழுத்தார். அதற்குக் காமராஜர் நிதானமாகப் பதில் சொன்னார், ”அவரு பெரிய ஆளா இருக்கலாம்ன்னேன். யார் இல்லைன்னது? நம்ம ஊர் அண்ணாதுரை அமெரிக்கா போனாரு, இதே நிக்சனை பார்க்க விரும்பினாரு. ஆனா இந்த நிக்சன் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாருன்னேன். நம்ம ஊர்க்காரரைப் பார்க்க விருப்பமில்லாதவரை நாம ஏன் பார்க்கணும்னேன்?” என்றார்

விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.
அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14!!!

இன்னும் சொல்லவோ?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிற்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி…என்று தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.
(பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன)

மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே!
காமராஜ் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்!

அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த இந்தச் சாதனைகளில்…
எதைச் சொல்ல எதைச் சொல்லாமல் போக. பக்கங்கள் பத்தவில்லை இவர் பெருமை பேச. இவர் வாழ்ந்த மண்ணில் வாழ்கிறேன் என்றபெருமையில் திளைக்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *