பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11911066_876881972366003_724950865_n
94284833@N07_rதிரு. துளசிதாசன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (22.08.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

15 thoughts on “படக்கவிதைப் போட்டி – 26

 1. காடுகளின் குழந்தை 

  புலி கரடி சிங்கம் 
  குரங்கு, மான் 
  காட்டு நாய், மயில் 
  என பல விலங்குகளிடையே
  ஒய்யாரமாய் பாதுகாக்கும்
  எங்கள் வசந்த சேனா 
  என்னை அவள் 
  காட்டுக்குள் அனுமதிக்க 
  மறுத்தாள்….
  எவ்வளவு கெஞ்சியும் 
  அனுமதிக்காத அவள், 
  கடைசியாக உதிர்ந்த 
  யோசனையில் ஒரு முயல் 
  பொம்மையை 
  வாங்கிக் கொண்டு வந்த 
  என்னை 
  சிரித்துக் கொண்டே 
  உள்ளே செல்ல அனுமதித்தாள்… 
  முயல் பொம்மையை 
  தன் 
  கூட்டத்தில் 
  சேர்த்துக் கொண்ட பாங்கில் 
  எங்கள் வீட்டு 
  வாசல் கதவு  
  ஓர் அடர்ந்த காடாகத்தான் 
  தெரிந்தது….

  கவிஜி 

 2. இரட்டைச் சம்பளமும்   
  குறைவு தானாம்…!
  குடும்பமாய் வாழ மட்டும்   
  ஒற்றைக் குழந்தை 
  கூட அதிகமாம் ..!

  பாட்டியும் தாத்தாவும் 
  ஆளுக்கொரு 
  முதியோர் இல்லத்தில்
  தனித் தனியாக…!
  உறவுகள்  எதுவும் 
  ஒட்டாத தனிவீடிது..! 
  பள்ளி திரும்பியதும் 
  பூட்டு தான் 
  சிரித்து வரவேற்கும் 
  விரல்பிடித்து..விளையாடும் 
  நித்தம் என்னோடு…!

  ஆறுமணி வந்துவிட்டால் 
  அலுத்துவிடும் பூட்டெனக்கு..
  காற்றைக் கட்டிக் கொண்டு 
  கண்களில் தேடலோடு 
  அம்மா வரும்வரையில்  
  நானும் நிற்கிறேன் 
  அனாதையாய்..!

 3. இந்தக் கதவுகளைப்  
  போலவே 
  மனப்பேதங்கள் 
  அவர்களிடத்தும்…!

  நித்தம் நித்தம் 
  காற்றில் இடிக்கும்  
  கதுவுகளாய் 
  வார்த்தைகள் ..
  அவர்களின் 
  பரிமாற்றங்கள்..!

  பாதுகாப்பாய் இணைத்திட 
  அங்கே தாழ்பாள் இல்லை 
  பூட்டுமில்லை 
  சாவியுமில்லை…!

  பாதுகாக்கப் பட 
  வேண்டிய…நான் 
  வீட்டு வாசலில்…!

  அவர்களோ…
  திறந்த கதவுகளாய் 
  மன விடுதலைக்காக 
  கோர்ட்டின் வாசலில்..!

 4. எழுந்திடு பெண்ணே!
  பூட்டிக் கிடக்கும்   ஆணாதிக்கக் கதவை
  உடைத்துவிடு பெண்ணே!
  எழுவகைப் பருவத்தில்  எப்பருவமும் பெண்ணுக்குப்
  பாதுகாப்பில்லை!
  மூடிக் காத்துவிடு உன் மானத்தை!
  யாருக்கும் அச்சமின்றி வாழ்ந்துவிடு!
  கல்லாமை இருட்டை விரட்டிவிடு!
  பூட்டிய ஊழல் கதவுகள் திறக்க வயதில்லையடி!
  பூட்டிய கதவுகள் திறக்க கல்விச்சாலை செல்ல
  என்னடி தயக்கம்!
  கணினி தமிழ்க்கல்வி  வளர பாடிடுவாய்!
  ஆங்கிலமும் தேவை என்றே
  உணர்ந்து நீயும் வாழ்ந்திடுவாய்!
  அகிலத்தை நீ தாங்க  தாய்மொழி தமிழ்க்கல்வி
  உயர்ந்திடவே பாப்பா!
  பாடிவிடு! நீ உயர்ந்துவிடு!
  சுமங்கலி மலடி விதவை என்றே பெயரிடுவார்!
  சாக்கடைக் கலவை வீணர் கூட்டம்!
  புவி ஆளும் பெண்ணிற்கு
  புரியாத பட்டங்கள் தேவையில்லையடி!
  பெண்ணடிமை கொள்ளவே சுனாமியாய்
  பெருங்கூட்ட சமுதாயம்  மதத்தின் பெயரால் 
  சடங்கு எமன் காலைச் சுற்றுது!
  கழற்றி நீயும் எறிந்திடுவாய்!
  பெண் சிங்கமென சீறி புறப்படுவாய்!
  பெண்கல்வி வேண்டி இங்கு பிழைப்பதனால்
  உணர்நதிங்கு நீயும் கற்றிடுவாய்!
  தன்னம்பிக்கை வித்தாய் எழுவாயடி!
  மாதா என்ற சொல்லுக்காக
  முழுபிறப்பும் ஆமைஓடுவீட்டினில்
  அடைபடமுடியுமோ!
  உன்னுள் உறங்கும் திறமையினை
  உலகெங்கும் பறைசாற்ற கற்றிடுவாய் பெண்ணே!
  நிரம்பக் கற்றிடுவாய்!
  கற்க கற்க கல்வி இனிக்கும்  கல்வியளித்த காமராசர்
  புகழ்பாடி கலாம்வழி வாழ புறப்படுவாய்!
  உடையில் எளிமை உள்ளத்து உறுதி
  அவையஞ்சா தூய பேச்சு  ஊர் போற்றும் கற்புத்திறன்
  தெளிவான சிந்தனை நாவினில் அடக்கம்
  இல்லறப்பெருமை  முதியோர் நலம் காக்க
  அதிகப்படிப்பு அகந்தையின்றி
  வெல்ல புறப்படுவாய்!
  அகிலம் ஆள வென்றிடுவாய்!
  கட்டிய கைகளுக்குள் உலகம்
  உனதாகட்டும் என்றே முழங்கி
  விவேகானந்தர் சிந்தைனையுடன்
  வாழ்ந்திடுவாய்!

 5. கண்களில் ஒரு வெறியோடு கையிரண்டும் கட்டியபடி நேர்நிமிர்ந்த பார்வையுடன் யாரையோ பார்த்தபடி பூட்டிய வீட்டின் முன்னால் தீர்மானமாக நின்றுகொண்டிருக்கும் இந்த அறியாச் சிறுமியின் முகத்தைக் கண்டதும் என் மனதில் எழுந்த எண்ண‌த்தை இங்கே வடித்திருக்கிறேன். பணிவன்பான வணக்கம்.

  என்னதான் முறைச்சாலும்
  எப்பிடித்தான் ஏய்ச்சாலும்
  பூட்டைநான் திறக்கமாட்டேன்
  வீட்டுக்குள்ள வுடமாட்டேன்!
  ஒருகாலை முன்மறிச்சு
  கையிரண்டும் கட்டிக்கிட்டு
  தீர்மானமாப் பார்த்தபடி
  ஒம்முன்னால நிக்குறேன்நான்!
  நோட்டமிங்க வுடவேணாம்
  சட்டமொண்ணும் பேசவேணாம்
  காட்டமா நிக்குறேன் நான்
  கேட்டதுக்குப் பதில்தேவை!
  புதுத்துணியைக் கேக்கவில்லை
  புத்தகமும் கேக்கவில்லை
  இதுவெதுவும் எனக்குவேணாம்
  மதுவைநீ வுடமாட்டியா?
  அவுந்தகைலி ஒருகையுல‌
  துண்டுபீடி ஒதட்டுமேல‌
  தள்ளாடி நிக்குறியே
  வெக்கமில்லை ஒனக்கு?
  நான்வளந்து ஆளாகி
  நாலுகாசு சம்பாரிச்சு
  ஒன்னியநான் காப்பாத்துவேன்
  அதுவரைக்கும் நிறுத்துநைனா!
  அக்கம்பக்கம் பேசறாங்க‌
  அதப்பத்திக் கவலையில்ல‌
  பெத்தவனை இப்பிடிப்பாக்க‌
  வெக்கமா இருக்கப்பா!
  சேத்தபணம் அத்தினியும்
  நாத்தக்கள்ளு வாங்கிப்போவ‌
  ஆத்தா மனம்பதைச்சு
  அளுவறதப் பாருநைனா!
  ஒடனொத்தப் பிள்ளைங்கல்லாம்
  ஓடியாடி விளையாடக்கொள்ள‌
  நான்மட்டும் தனிமரமா
  நிக்குறதப் பாக்கலியோ?
  சேதிஒண்ணு தெரியாம‌
  வுடறதில்ல இன்னைக்கு
  நாதியத்து நாங்கல்லாம்
  நடுவீதி போகணுமாசொல்லு!
  பாழாப்போன குடியைவுட்டு
  வாழுறதுக்கு வழியைப்பாரு
  கூழுகஞ்சி குடிச்சாவுது
  குடும்பத்தக் காப்பாத்து!
  சொல்லுறதச் சொல்லிப்புட்டேன்
  மீதியெல்லாம் ஒம்பாடு
  நல்லவனா நீதிருந்தி
  எங்கூட இருக்கணும்ப்பா!
  பதிலொண்ணு தெரியாம‌
  பூட்டைநான் தொறக்கமாட்டேன்
  எம்மேல அன்புவைச்சு
  எனக்காகத் திருந்துநைனா!

 6. வீட்டில் நால்வரும் விரல்போலிருக்க
  வரும்நேரம் கூடியிங்கு வகுத்திருக்க
  வீட்டுபாடம் படித்துவிட்டு விரைந்திருக்க
  வந்துபார்க்க வீடும் பூட்டிருக்கு!
  கைகளிரண்டும் கோபத்தை கட்டியிருக்க
  கண்களில் வந்தேறியது கொப்பளிக்க
  பூட்டுடன் மனதுசாவியை ஏங்கியிருக்க
  பூட்டிய கைகளே எங்கேபோயிருக்க?

 7. கதவில் தொங்குவது பூட்டல்ல
  இரக்கம் அறியா 
  அரக்கத்தின் மனசு 

  தெய்வத்தின் வரவுக்கே 
  கருப்புக்கொடிக் காட்டுவதால் 
  கோவில் அல்ல  இந்த வீடு 
  பிசாசுகள் வாழும் சுடுகாடு 

  உலகில் மனிதம் 
  தொலைந்துவிட்டது 
  என்பதை அத்தாட்சிப் படுத்தக் 
  குத்தப்பட்ட முத்திரை .

 8. தெய்வமும் குழந்தையும்…

  கும்பிடும் தெய்வம் உள்ளிருக்கக் 
       கோவிலைப் பூட்டி வைப்பதென
  நம்பிடா மனிதரின் நாணயமாய்
       நாட்டில் நடக்கும் அவலம்போல்,
  தம்பதி சேர்ந்து பூட்டிவீட்டை
       தங்கள் பணிக்குச் சென்றபின்னே
  கும்பிடத் தகுந்த குழந்தைவெளியே
       காத்திடும் கொடுமையும் மாறாதோ…!

  -செண்பக ஜெகதீசன்…

 9. பூட்டிக் கிடக்கும்

  வாசல் கதவருகில்

  கைகட்டி சமர்த்தாய்

  காத்திருக்கிறாயே –

  யாருக்காக ?

  அன்னையும் தந்தையும்

  வேலைக்கு சென்றிருக்க

  விளையாடி ஓய்ந்ததும்

  வீட்டிற்கு ஓடி வந்தாயோ ?

  பூட்டிக் கிடக்கும்

  வீட்டு வாசலிலிருந்தபடியே

  உன் வயது பிள்ளைகளின்

  விளையாட்டை கண்டு

  இரசிக்கிறாயோ ?

  ஓடியாடி விளையாடி

  உள்ளம் மற்றும் உடலினை

  உறுதியாக வைத்துக் கொள் !

  நிமிர்ந்த நடையும்

  நேர்கொண்ட பார்வையும்

  எவர்க்கும் அஞ்சாத தன்மையும்

  குறையா ஞானமும்

  உன்னை பாரினில் உயர்த்திடும் !

  கள்ளம் கபடமறியா

  கிள்ளை உள்ளம் தனையே

  காலமெலாம் பெரும் செல்வமென

  காத்துக் கொண்டால்

  நல்வாழ்வும் தானிங்கு வசப்படும் !

 10. ஆண்டாண்டு காலங்கள் சென்றாலும் 
  ஒவ்வொரு ஆண்டுகள் வீணாய் செல்வது
   பிறந்ததற்கு அழகல்ல!
  புரியாத வயதில் புதிதாய் பிறப்பது அழகு!
  இடுப்பில் தூக்கி அலுத்த கைகள்
  இன்றும் கட்டியபடி தவறுகளைச்
  சுட்டி இங்கு காத்திருக்கிறது!
  பாசங்கள் என்றும் தொலைவில் கழிவதில்லை
   பணக்கற்றைகளில் பாசங்கள் உறைவதில்லை!
  பல்லாண்டுகள் கடந்தாலும் பயத்தோடு
  பதுங்கினாலும் தவறுகள் என்றுமே
  நியாயப்படுத்தப்படுவதில்லை!
  குற்றங்கள் நிலையானவை அல்ல
  திருந்தி வாழும் மனிதனுக்கே
  மன்னிப்பு நிலையான செல்வம்!
  பூட்டிய மரமனக் கதவுகள்
  துலாக்கோல் திறவுகோலுக்காக
  காத்திருக்கிறது!

 11. நேரம் பொன்

  ஏது காப்பென உள்ளத்தில் குறை
  பாதுகாப்பு இல்லா வாழ்வு முறை
  அகத்தில் கிலி முகத்தில் வலி
  செகத்தில் எத்தனை உள்ளங்கள் பலி!

  நற்றவம் கொண்டு பெற்ற பிள்ளைகள்
  பெற்றவர் வீடேகும் வரை, கல்வி
  கற்ற பின் வேறு கலைகளும்
  பெற்றிடும் ஒழுங்கு அமைத்தல் வேண்டும்.

  வாசலில் காத்திருத்தல், வீதியில் திரிதல்,
  வாசம் இழக்கும், பாழாக்கும் வாழ்வை.
  வெறுமை மனதில் சாத்தான் குடியேறும்
  சிறுமை அழித்தால் சிறப்புற உயரலாம்!

  பெறுமதி நேரம் பயனாகும் முறையை
  வெகுமதியாய்ப் பெற்றோர் பிள்ளைக்குக் கையளித்தால்
  தகுதி வரும் தரமாய் வாழ!
  நகுதலற்ற வாழ்வை நானிலம் போற்றும்!

  பா ஆக்கம்
  பா வானதி வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்.
  22-8-2015.

 12. புது வாள்

  பூட்டுகளுக்குள் புதைந்துவிட 
  நான்
  புராண காலத்து பெண் அல்ல
  பூமியைப் புரட்டிப்போடும்
  புதுயுகத்தின் அடையாளம்!

  நிலம் பார்த்து நடந்து
  நித்திரையைத் துறந்து
  சுயத்தை இழக்கும்
  சோகச் சுவடல்ல நான்!

  வானில் வலை வீசி
  வரலாற்றை உருவாக்கும்
  அடுத்தத் தலைமுறையின்
  ஆரம்பம்!

  வீட்டிற்குள் மாந்தரைப்
  பூட்டிவைத்த விந்தை மனிதரை
  புறக்கணித்த பாரதிப்  படையின்
  புது வாள்!

  அன்று
  உள்ளே வைத்துப் பூட்டியது
  எங்களை உறைய வைக்க
  இன்று
  வெளியே பூட்டுவது
  எங்கள் இறகுகளை விரிக்க!

  இறகு விரித்து
  இன்னல் துடைப்போம்
  பூட்டுகள் திறந்து
  புது வழி அமைப்போம்!

 13.                                                    இரட்டை வால்-கார்த்திகா AK

  துள்ளியோடும் மான் குட்டிகள்
  தோற்கும் நீ நடந்தாலே 

  குறும்புகள் நீ செய்தால்
  கடை இதழின் புன்னகை 
  நிறம் மாறுவதில்லை 

  உன் கனிமொழி சொல்லில்  
  கற்கண்டுகள் ஊர்வலமாய் 

  நீ கொஞ்சிப் பேசும்
  அழகில் பொறாமை கொண்டு 
  மென் மேலும் சிவக்குமடி
  கிளிகளின் மூக்கு 

  நீ பறிக்க வேண்டுமென 
  தினம் மலரும் பூக்களின் 
  புவி வருகையை மறந்துவிட்டு 

  பூட்டிய கதவின் முன்னே 
  கை கட்டி நிற்பதேனடா!!

 14. தாத்தாவின் மரம் இல்லை
  தந்தையின் கதவு இருக்கு
  பாவாடை சட்டை இல்லை
  மிடியும் ஜீன்ஸும் இருக்கு
  கிழவியும் நாயும் இல்லை
  கதவுக்கு பூட்டு இருக்கு
  உறவும் உதவியும் இல்லை
  காலுக்கும்  கற்கள் இருக்கு
  சிரித்துபேச விசயங்கள் இருக்கு
  வீட்டுக்கு வொரேவொரு பிள்ளை! 

 15. இறுகக் கட்டிய கைகளுள் இரும்பென இருந்திடும்
  உறுதியை உன் இரு விழிகளின் மொழிகள் கூறிவிடும்
  வறுமையின் வாட்டங்கள் செற்றிடும் வன்மொழி
  ஒறுத்திட்டே அவை வாழ்வினில் வளம் சேர்க்கும் !
  மாறுதல் நாடியே மன மாளிகைக் கதவுகள் தன்னிலே
  தேறுதல் கூறி நிற்கும் இரு கைகளின் சேர்க்கையில்
  வீறுடன் வீரமாய்த் தன்மானமும் தவழ்ந்திருக்கும் !
  பேறுகள் அடைந்திட பெருமைகள் பொங்கிட
  ஆறுதல் கொண்டிடுவாய், எந்தப் பூட்டையும்
  மறுத்திடு, மறவராய் உடைத்தெறி விலங்கு எதற்கு?
  சிறுமைகள் சொல்லி நிந்தனை செய்திடும் மாந்தர்கள்
  நிறுத்துவர் தம் நீசமாம் செய்கைகள் நின் பெயர் கேட்டதுமே!

  புனிதா கணேசன்
  22.08.2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.