ஆகஸ்ட் 3, 2015

இவ்வார வல்லமையாளர்கள்
வல்லமைமிகு “ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம்” குழுவினர்

freetamilebooks-troup

 

சென்ற வாரம் ஜூலை 26, 2015 அன்று “மூலிகை வளம்” என்ற மின்னூல் வெளியீட்டின் மூலம், இரண்டு ஆண்டுகளில் 200 மின்னூல்களை வெளியிட்டு தனது மூன்றாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ள தன்னார்வப் பணி செய்யும் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினரை (freetamilebooks.com) இவ்வார வல்லமையாளர்களாகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

சென்னை, மும்பை, காரைக்குடி, கோவை, விழுப்புரம், புதுக்கோட்டை, பூனே என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்; அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அரேபியா ஆகிய நாடுகளிலும் வாழ்ந்து வரும் 15 தன்னார்வப் பணியாளர்கள், சென்னையில் வாழும் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர் திரு. த.சீனிவாசன் தலைமையில் இணையம் வழியாக ஒருங்கிணைந்து தன்னார்வப் பணியாகத் தமிழ்த்தொண்டு செய்து வருகிறார்கள். படைப்பாக்கப் பொதுமங்கள் (கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons) உரிமத்தின் கீழ் தங்கள் நூல்களைப் பதிப்பிக்க அனுமதி அளித்த 80 நூலாசிரியர்களின் நூல்களை மின்னூல்களாக மாற்றி இணையம் வழி அனைவரும் பெறச் செய்யும் சிறப்பான பணியை மேற்கொண்ட இக்குழுவினர் தங்களது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நேரத்தில் அவர்களது தொடர் வெற்றிக்காகப் பாராட்டவேண்டியது தமிழர்களின் கடமை. தங்கள் நூல்களைப் பகிர்ந்து கொள்ளும் நூலாசிரியர்களும் மின்னூலாக்கம் செய்து வழங்கும் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினரின் தன்னார்வத் தொண்டும் காலத்தால் நிலைத்து நிற்கும்.

freetamilebooks-books

மின்னூலாக்கம், தமிழில் கணினி நூல் எழுதுதல், மென்பொருள் உருவாக்கம், அட்டைப்படம் உருவாக்கம், ஒருங்குறியாக்கம் செய்தல், ஆன்டிராய்டு செயலி உருவாக்கம், மக்கள் தொடர்பு, பயிலரங்கம் ஒருங்கிணைப்பு, திட்ட மேலாண்மை, திட்ட ஒருங்கிணைப்பு, மின்னூல் வெளியீடு, பதிப்பகப்பணி என தங்கள் திறமைக்கேற்ற பணியைத் தேர்ந்தெடுத்து தன்னார்வப் பணி செய்துவரும் இக்குழுவிலுள்ள 15 உறுப்பினர்களின் பணியும், அவர்களது பங்களிப்பும், வசிப்பிடம் பற்றிய தகவலும் கீழே அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர்:
அ. இரவிசங்கர் – புதுக்கோட்டை (மேலாண்மை, திட்ட ஒருங்கிணைப்பு)
அன்வர் – சென்னை (மக்கள் தொடர்பு, பயிலரங்கம் ஒருங்கிணைப்பு)
இராஜேஸ்வரி – ஆஸ்திரேலியா (மின்னூலாக்கம்)
கலீல் ஜாகீர் – விழுப்புரம் (ஆன்டிராய்டு செயலி உருவாக்கம்)
கிஷோர் – சிங்கப்பூர் (மென்பொருள் உருவாக்கம்)
சிவமுருகன் பெருமாள் – அமெரிக்கா (மின்னூலாக்கம்)
த.சீனிவாசன் – சென்னை (மின்னூல் வெளியீடு, பதிப்பகத்தார்)
நித்யா – சென்னை (மின்னூலாக்கம், தமிழில் கணினி நூல் எழுதுதல்)
பிரியா – மும்பை (மின்னூலாக்கம்)
ப்ரியமுடன் வசந்த் – அரேபியா (அட்டைப்படம் உருவாக்கம்)
மனோஜ் குமார் – கோவை (அட்டைப்படம் உருவாக்கம்)
மு. சிவலிங்கம் – தமிழ்நாடு (ஒருங்குறியாக்கம் செய்தல்)
லெனின் குருசாமி – காரைக்குடி (அட்டைப்படம் உருவாக்கம்)
ஜெகதீஸ்வரன் – சென்னை (அட்டைப்படம் உருவாக்கம்)
ஜெயேந்திரன் சுப்பிரமணியம் – பூனே (மின்னூலாக்கம்)

தன்னார்வலர்களாகச் செயல்படுகின்ற இக்குழுவினரின் நோக்கம், தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாகப் பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மின்னூல் வெளியீட்டை அச்சு நூல் வெளியீடு அளவுக்குப் பெருமிதத்துக்கும் பொதுமக்கள் ஏற்புக்கும் உரிய ஒன்றாக மாற்றி வரும் இவர்களது பணியின் பயனாக வெளியிட்ட ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் தரவிறக்கங்கள், ஏராளமான பின்னூட்டங்களைப் பெற்ற நூல்களையும், பல்லாயிரக் கணக்கான வாசகர்களையும் பெற்றிருப்பது இவர்களது உழைப்பின் சிறப்பு.

மின்னூல்களைப் படிக்க வசதியான கையடக்கமான கருவிகள் பலவும் சந்தையில் சிறந்த தொழில் நுட்பத்துடனும், குறைந்த விலையிலும் கிடைக்கத் துவங்கிய காரணத்தினால் பலரும் அவற்றைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். ஆங்கில மொழி வாசகர்களுக்கு எண்ணிறைந்த மின்னூல்கள் இலவசமாகவும் கிடைத்து வருகின்றன. தமிழிலும் மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற தன்னார்வக் குழுக்களும், இணைய ஆவணகம், கூகுள் புத்தகங்கள், திறந்த நூலகம், திறந்த வாசிப்பகம் போன்ற நிறுவனங்களும், தமிழ் இணையக் கல்விக்கழகம் போன்ற அரசு நிறுவனங்களும் தமிழ் மின்னூல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை முன்னெடுத்துள்ளன என்றாலும் இவையாவும் காப்புரிமை காலம் முடிந்த பல பழமையான நூல்களையே சட்ட சிக்கல்கள் இன்றி செய்யும் பணியை மேற்கொண்டுவருகின்றன.

ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர் இவர்களில் இருந்து வேறுபட்டு தற்கால எழுத்தாளர்களையும், இணையம் வழி வலைப்பூக்களில் எழுதிவரும் எழுத்தாளர்களின் படைப்புகளை காப்புரிமையற்ற இலவச மின்னூல்களாகத் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இரண்டாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது முயற்சியால் தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்னூல்களாகக் கிடைக்கப்பெற்றுள்ளோம். கிரியேட்டிவ் காமன்ஸ் எனும் உரிமத்தின் கீழ் நூல்கள் வெளியிடப்படுவதால் மூல ஆசிரியருக்கான உரிமைகளும் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. தற்போது மக்கள் அதிக அளவில் மின்னூல்களைப் படிக்க வசதியான கருவிகள் பயன்படுத்துவதால் எழுத்தாளர்களுக்கும் அவர்களை நெருங்குவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

இக்குழுவினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றிய நூலாசிரியர் சிலரது புகழுரைகள் சில …

சிறப்பானசேவை. பாராட்டுகள். என் நான்கு நூல்களில் வேதமும் சைவமும் என்ற நூல் மட்டும் ஒரு லட்சம் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதில் பத்து சதவீதத்தினராவது படித்திருப்பார்கள் எனநினைக்கிறேன். இதே நூல் அச்சடிக்கப்பட்ட புத்தகமாக சந்தைப்படுத்தப் பட்டபோது ஐந்து ஆண்டுகளில் 1400 பிரதிகளுக்கு மேல் ஓடவில்லை. உங்கள் சேவை மூலம் இது மிக அதிகமான மக்களைச் சென்றடைந்தது பற்றி எழுத்தாளன் என்ற முறையில் மிக மகிழ்கிறேன்.
– கோதண்டராமன்

ஒரே மாதத்தில் என் மின்னூல் வெளியாக, மகிழ்ச்சி பொங்கியது. இப்போது எனது பல சிறுகதைத்தொகுப்புகளையும், நாவல்களையும் நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரே ஒரு வாசகர் மட்டும் கானடா நாட்டிலிருந்து என்னைப் பாராட்டி, மின்னஞ்சலில் தொடர்பு கொண்டிருக்கிறார். உற்சாகமாக இருந்தது — நம் எழுத்து உலகின் பல பாகங்களுக்கும் பரவுகிறதே என்று.
– நிர்மலா ராகவன்

ஒரு சிலரால் மட்டுமே எவரும் நினைத்துப் பார்க்காத சில புதிய முயற்சிகளை யோசித்து அதனைப் பிடிவாதமான முயற்சிகளின் மூலம் நிலைநிறுத்தி தன்னை மிகச் சிறந்த ஆளுமையாகக் காட்டிக் கொள்கிறார்கள். அதுவும் தன் சுய வளர்ச்சிக்கு, வருமானத்திற்கு எவ்வித பலனும் இல்லாமல் பொதுநலம் சார்ந்து இருப்பது என்பது மிகவும் அரிது. தன் நேரம், பல சமயம் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் போன்ற அழுத்தங்கள் இருந்தாலும் இதே நோக்கத்தில் ஒரு குழுவாக அமைந்து ஒத்த கருத்தோடு செயல்படுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் ஆச்சரியமான நிகழ்வே. அப்படியொரு ஆச்சரியத்தைத் தந்த தளம் தான் freetamilebooks.com
– ஜோதிஜி திருப்பூர்

அறிவியல், ஆன்மிகம், ஆளுமைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவை, நுட்பம், புதினங்கள், வரலாறு நூல் வகைகள் என்ற பல்வகை நூல்களையும் வெளியிடும் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. த. சீனிவாசன் அவர்கள், “ஆங்கிலத்தில் கிடைக்கும் அறிவுச் செல்வங்கள் யாவும் துறைசார் வல்லுநர்களால் மட்டுமே எழுதப்படுவது அல்ல. தம் அறிவைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் சாமானியர்களால் மட்டுமே ஆங்கிலத்தில் எல்லா அறிவுகளும் கிடைக்கின்றன. எனவே, தமது புலமை, திறமை பற்றி ஐயம் கொள்ளாமல், நமக்குத் தெரிந்ததை, தெரிந்த வரையில் தமிழில் பகிரலாமே. இலக்கியம், சினிமா, அரசியல் பற்றி எழுதுவோருக்கு இருக்கும் அதே ஆர்வமுடன் பிறதுறைகளிலும் எழுதத் தொடங்கினால் , தமிழ்த்தாயின் ஆயுள் கூடும்” என்ற ஊக்க மொழிகளைத் தமிழ் எழுத்தாளர்கள் முன் வைக்கிறார்.

தன்னார்வப் பணி மூலம் தமிழ்த் தொண்டாற்றி தமிழுக்கும், தமிழ் வாசகர்களுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் அரும்பணி ஆற்றிவரும் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினருக்கு பாராட்டுகளையும், அவர்கள் மேலும் பல வெற்றி எல்லைகளை மின்பதிப்புத் துறையில் அடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

தகவல் பெற்ற இடம்:
http://freetamilebooks.com/
http://freetamilebooks.com/meet-the-team/
http://freetamilebooks.com/how-to-publish-your-works-here/

தொடர்புக்கு:
email: freetamilebooksteam@gmail.com
Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks
Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948
Web: http://freetamilebooks.com/

* மின்னூல் வெளியீட்டில் பங்கு பெற விரும்பும் எழுத்தாளர்களுக்காக படைப்பாக்கப் பொதுமங்கள் (கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons) உரிமம் பற்றிய தகவல்:
Attributions:
Attribution CC BY – http://creativecommons.org/licenses/by/4.0/
Attribution-ShareAlike CC BY-SA – http://creativecommons.org/licenses/by-sa/4.0/
Attribution-NoDerivs CC BY-ND – http://creativecommons.org/licenses/by-nd/4.0/
Attribution-NonCommercial CC BY-NC – http://creativecommons.org/licenses/by-nc/4.0/
Attribution-NonCommercial-ShareAlike CC BY-NC-SA – http://creativecommons.org/licenses/by-nc-sa/4.0/
Attribution-NonCommercial-NoDerivs CC BY-NC-ND – http://creativecommons.org/licenses/by-nc-nd/4.0/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.