நிர்மலா ராகவன்

பாராட்டும், கண்டனமும்

உனையறிந்தால்1-111111

கேள்வி: குழந்தைகள் தவறு செய்தால் திட்டவோ, அடிக்கவோ கூடாதா?

விளக்கம்: எத்தனை வயதுக் குழந்தை, என்ன தவறு என்ற கேள்வி எழுகிறதே!

எட்டு மாதமேயான குழந்தை எந்த சாமானையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும். அடித்தால் அதற்கு என்ன புரியப் போகிறது? ஒரு விரலால் நாம் அதன் கையில் தட்டினாலே போதுமானது. அதற்கே ஏதோ உயிர் போகிறாற்போல் கதறும்.
பண்டைக்கால வளர்ப்புமுறை ஒருவரின் முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுப்பதல்ல என்று உளவியல் கூறுகிறது. எதற்கெடுத்தாலும் பிறர்முன் திட்டுவதும், குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதும் ஒருவர் கூனிக் குறுகவோ, அல்லது எதிர்ப்பு மனப்பான்மையை வளர்க்கவோதான் செய்யுமே தவிர, அவர்கள் மேலும் சிறப்பாக எதையாவது செய்ய வழிவகுக்காது.

உதாரணமாக, ஒரு பெண் சுறுசுறுப்பாக வீட்டு வேலை செய்தாலும்கூட, `இவளுக்கு ஒரு வேலையும் செய்யத் தெரியாது. எப்பவும் கண்ணாடிமுன்னால உட்கார்ந்து அழகு பார்த்துக் கொண்டிருப்பா!’ என்று சொல்வது, பெரியவர்களைப் பொறுத்தமட்டில் அவள் இன்னும் அதிகமாக வேலை செய்யத் தூண்டுவதாக இருக்கலாம். ஒரு வேளை, தம் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காகக்கூட இருக்கலாம்.

அப்பெண்ணுக்கோ, `எவ்வளவு செய்தாலும் இவர்களுக்குத்தான் திருப்தி இல்லையே! எதற்காக வேலை செய்ய வேண்டும்!’ என்றுதான் தோன்றிப்போகும்.

ஓயாமல் திட்டப்படும் குழந்தை பிறருடன் கலகலப்பாகப் பேசுவதற்கோ, அல்லது எந்தக் காரியம் செய்வதற்கோ ஒரேயடியாகத் தயங்கும். `ஏற்கெனவே எல்லாவற்றிற்கும் வசவுதான்! எதற்கு இன்னும் திட்டு வாங்க வேண்டும்?’ என்றுதானே எண்ணம் போகும்!

அப்படி ஒரு குழந்தை எதுவும் செய்யத் தயங்குவதும் பெற்றோரின் கணிப்பில் பெரிய தவறாகிவிடும். `என் பிள்ளை எல்லாவற்றிற்கும் வெட்கப்படுவான்!’ என்று பார்ப்பவரிடமெல்லாம் கூறுவார்கள், அது சிலாகிக்க வேண்டிய குணம் என்பதுபோல்.

`இப்படித்தான் இருக்க வேண்டுமோ?’ என்று எண்ணம் போக, ஒருவர் அப்படியே நடக்கத் தலைப்படுவர். தன்னம்பிக்கை குறைவதால்தான் இளைஞர்கள் பலவித சமூகக் கேடுகளுக்கும் ஆளாகின்றனர் என்பது தெரிந்த விஷயம்.
பொதுவாக, தவறு செய்தால் திட்டுபவர்கள் ஒரு குழந்தை அல்லது சிறுவன் நல்லவிதமாக ஏதாவது செய்தால் புகழ்வது கிடையாது. புகழ்ந்தால், தன்னைவிட சிறப்பானவன் என்று கர்வம் கொண்டு, தன்னை மதிக்காமல் போய்விடுவானோ என்ற பயம்தான் காரணம். இதனாலேயே, சில பெற்றோர் புகழவேண்டிய தருணங்களில்கூட இகழ்வதைப்போலப் பேசுவார்கள்.

கதை: ஆலிஸ் (சீனப் பெண்) காரணமில்லாமலே அம்மாவிடம் அடி வாங்குவாள். கையால் அல்ல, இரும்புத் தடியால். எல்லாம் கல்வியில் இன்னும் சிறக்க வேண்டும் என்றுதான்.

(தான் எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கினாலும் திருப்தி அடையாது, தந்தை தண்டித்துக்கொண்டே இருந்ததால், தானே அவருடைய கையெழுத்தைப் போட்டு விடுவாராம்; பின் நன்கு படித்து, பெரிய உத்தியோகம் கிடைத்தபோது அவருடன் பேசுவதையே தவிர்த்துவிட்டதாகவும் ஒரு அன்பர் என்னிடம் கசப்புடன் தெரிவித்தர்).

மீண்டும் ஆலிஸ் கதை. பதின்மூன்று வயதுவரை காரணமின்றி அடித்துவிட்டு, அதன்பின் தோழமையுடன் பழக ஆரம்பித்தாளாம் அவள் தாய். இப்போது மகள் அவள் எதிர்பார்த்தபடியே பள்ளியில் சிறந்திருப்பது அவளுக்குத் தன் வளர்ப்புமுறை சரிதான் என்ற எண்ணத்தைக் கொடுத்திருந்தது.

தன்னைப்பற்றி நினைப்பதே தகாது என்று வளர்ந்திருப்பதால், ஆலிஸ் போன்ற பெண்கள் தனிமையில் மட்டும் சிறிது யோசிக்கிறார்கள். தமக்குள் பார்ப்பது — தன்னம்பிக்கை இல்லாமல், எதற்கும் பயப்படும் ஒரு பெண். அதற்கு நேர்மாறாக இருப்பதாக, அலட்டலாக, வெளியில் காட்டிக்கொள்வார்கள்.

அடுத்த முறை ஆலிஸ் பெருமையுடன் தன் மதிப்பெண்களைக் காட்டியபோது, புகழாமல் வளர்த்ததால்தான் மகள் நல்ல விதமாக வளர்ந்திருக்கிறாள் என்ற பெருமை எழுந்தது தாய்க்கு. `நீயெல்லாம் வகுப்பில் முதல் மாணவியா! ரொம்பத்தான் கர்வப்பட்டுக் கொள்ளாதே!” என்று ஏசிவிட்டு, “உன் வகுப்பில் மற்றவர்களெல்லாம் எவ்வளவு மக்கு என்று இப்போதுதான் புரிகிறது!’ என்றாளாம்!

தன் திறமையில் கர்வப்பட்டுக் கொள்வது தகாது என்று சிறு வயதில் தாய் சொல்ல, அம்மா சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி, இயற்கையாக எழுந்த பெருமையை அடக்கக் கற்கிறார்கள் சிறுவர்கள்.

நான் சிலரைப் புகழ்ந்தால், அவர்களிடமிருந்து ஏதாவது ஆதாயம் பெறலாம் என்ற எண்ணத்துடன் இல்லை. உண்மையாகப் பாராட்டப்பட வேண்டியது என்று எனக்குத் தோன்றியதைச் சொல்வேன். அப்போது அவர்களது கைகள், முகம் எல்லாம் இறுகுவது ஏன் என்று யோசித்திருக்கிறேன். புகழ்ச்சியால் எழும் பெருமையை அடக்கும் முயற்சியோ?
அப்படி இல்லையேல், நாம் புகழ்ந்ததை மறுப்பார்கள். ஒரு பெண்மணி ஏதோ விசேடத்திற்காகத் தேடி அலைந்து மிக உயர்ந்த பட்டுப்புடவை வாங்கினாள். அன்று பலரும் அவள் புடவையைப் புகழ, `ஏதோ பழசு! எடுத்துக் கட்டிக்கொண்டேன்!’ என்றாளே பார்க்கலாம்! அடக்கமாம்!

புகழ்ச்சியை ஏற்பது தற்பெருமை அல்ல. கௌரவமாக ஏற்று, `நன்றி!’ என்று சொல்லிவிட்டுப் போனால் ஆயிற்று. அதற்கு ஏன் இவ்வளவு சுயக்கட்டுப்பாடு?

சில ஆசிரியைகளும் இம்முறையைப் பின்பற்றுகிறார்கள். முதல் வகுப்புப் படிக்கும் ஒரு குழந்தையிடம், `உன் மூக்கு அழகாக இருக்கிறது. உன் கண்ணும் அழகாக இருக்கிறது. உன் கையெழுத்து மட்டும் ஏன் அழகாக இல்லை?’ என்று தினமும் கேட்டாள் ஓர் ஆசிரியை. ஆசிரியை என்ன சொல்ல வருகிறாள் என்பதே சிறுமிக்குப் புரியவில்லை. அன்புடன் வளர்க்கப்பட்டிருந்ததால், `டீச்சருக்குப் பைத்தியம்!’ என்று தன் தாயிடம் சொல்லிச் சிரித்தாள்.

`கையெழுத்தைத் திருத்திக்கொள்!’ ஆரம்பப்பள்ளிச் சிறுவர்களின் நோட்டுப் புத்தகங்களிலும், விடைத்தாள்களிலும் காணப்படும் ஒரு வாசகம்.

எப்படித் திருத்திக்கொள்வது என்பதை விளக்கினால்தானே பலன் கிட்டும்? `நடுக்கோட்டில் எழுதாது, கோட்டின் மேலேயே எழுது. எழுதியதை அடிக்கடி அடிக்காதே. சற்று யோசித்து, நிதானமாக எழுது’ — இப்படி ஆக்ககரமாக அறிவுரை கூறினாலாவது பலன் கிடைக்கும்.

ஆசிரியர்கள் தம் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதிலேயே குறியாக இருந்தால், மாணவர்களும் மாறப்போவதில்லை, ஆசிரியர்களுக்கும் நிராசைதான், தம் உத்திகள் பலிக்கவில்லையே என்று.

குழந்தைகள் தாங்கள் செய்வதன் விளைவுகளைப் புரிந்துகொள்ளாமல் செய்யும். அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது. எதையும் நகைச்சுவையுடன் அணுகினால், அவர்கள் சிரிப்பார்கள். திரும்பச் செய்ய மாட்டார்கள்.

குழந்தைகள் எப்படியெல்லாம் பெரியவர்களை மீறலாம் என்று ஆழம் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். சிறு பிழை என்றால், கவனிக்காமல் விட்டு விடலாம். தண்டித்தே ஆக வேண்டுமென்றால், செய்யும் பிழைக்கு ஏற்றார்போல் இருக்க வேண்டும். செய்த தவற்றையே மீண்டும் செய்யும்போது, கவனிக்காமல் விடுவதும் சரியல்ல. பிள்ளைகளுக்கான எல்லைகளை வகுத்துக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *