நிர்மலா ராகவன்

பெற்றோரின் அங்கமல்ல

உனையறிந்தால்1-1111111

கேள்வி: பல சிறுவர்கள் வகுப்பறையில் பதில் சொல்லத் தடுமாறுகிறார்களே, ஏன்?

விளக்கம்: அவர்கள் பெற்றோரின் ஒரு அங்கமாக வளர்க்கப் பட்டிருப்பார்கள். பிள்ளைகளுக்கும் தனித்துவம் உண்டு என்று ஒப்புக்கொண்டு, அவர்களது திறமைகளை ஊக்குவிக்க பெற்றோர் முன்வர வேண்டும்.

கதை 1: `புத்திசாலியான மாணவர்கள்’ என்று பெயரெடுத்த மலாய் பையன்கள் ஒரு வகுப்பில் இருந்தார்கள். ஆனால், நான் என்ன கேள்வி கேட்டாலும், அவர்கள் வாயே திறக்க மாட்டார்கள். போட்டிகளில் கலந்துகொள்ளவும் அஞ்சுவதாகத் தெரிவித்தார்கள்.

காரணத்தையும் அவர்களே தெரிவித்தார்கள்: `நாங்கள் ரொம்ப ஒடுக்கப்பட்டுவிட்டோம்!’
அவர்கள் குறைந்த மதிப்பெண்கள் வாங்கினாலோ, போட்டிகளில் வெற்றி பெறாவிட்டாலோ பெற்றோர் வருந்துவார்களாம். தம்மிடம் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோரை ஏமாற்ற விரும்பாது, தோல்வி அளிக்கக்கூடிய எதையும் தவிர்க்கிறார்களாம்!

கதை 2: `என் பெண் தானே நீச்சல் பழகிவிட்டாள். எங்கே, `கோச்’சிற்குக் காட்டு!’ என்று ஒரு சீன மாது தன் மகளிடம் கூறினாள். சோனியாக இருந்த அப்பெண் தன் உடம்பை குறுக்கிக்கொண்டாள்.

இடம்: கோலாலம்பூரிலுள்ள ஒரு நீச்சல் குளம்.
தாய் விடுவதாயில்லை. இன்னும் கொஞ்சம் புகழ்ச்சி. பின், வற்புறுத்தலில் இறங்கினாள். பெண் மேலும் விறைத்துப்போனாள்.

சிறிது பொறுத்து, பெண்களது குளியலறையில், தாயின் குரல் மட்டும் உரக்க ஒலித்தது. `நீ ரொம்ப புத்திசாலின்னு நினைப்போ? அம்மா சொன்னபடி கேக்க முடியாதோ?’ என்று பலவாறாகத் திட்டி, சிறுமியை அடிக்க ஆரம்பித்தாள். அவளோ, அழாமல் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டாள்.

அங்கிருந்த சிலர் தலைகுனிந்தபடி, விரைந்து வெளியேறிவிட்டோம். எல்லாம் நாகரீகம் கருதிதான்!
இத்தாய் செய்த தவறென்ன என்று பார்க்கலாமா?

தன் மகளுடன் தன்னை அடையாளப் படுத்திக் (IDENTIFY) கொண்டிருக்கிறாள். அந்த சின்னப் பெண்ணுக்கும் உணர்ச்சிகள் உண்டு, அவளுடைய வெட்கமான சுபாவத்தைச் சட்டைசெய்யாது, அவளை தனக்குப் பெருமை தேடித் தர முடுக்குகிறோம் என்று அவளுக்குப் புரியவில்லை. நீண்டகால விளைவு: பெண் மேலும் மேலும் ஒடுங்கிப்போவாள்.

தாயின் கை ஓங்க, `எவ்வளவு திட்டினாலும், அடித்தாலும், இவள் உருப்படவில்லையே !’ என்ற நிராசையும் எழும்.
இன்னொரு தாய் தன் மகளை அறையில் வைத்து பூட்டிவிட்டாள், இரண்டு நாட்கள். சாப்பாடும் கிடையாது. எல்லாம் அவள் தாய் எதிர்பார்த்தபடி மதிப்பெண்கள் வாங்கிவில்லையென்றுதான்! பெண் தன் பள்ளித்தோழிகளிடம் சொல்லி அழுதது என் காதுகளுக்கு எட்டியது.

தாய்மார்கள் தாம் பெற்ற பெண்கள் தங்களை மிஞ்சவேண்டும் என்று பேராசையுடன் அவர்களைப் பிடித்துத் தள்ளினால், தாயையும் எதிர்க்கத் துணிவில்லாது, தம்மையும் குறைவாக மதிப்பிட்டுக்கொண்டு, அதனால் மனமுடைந்து போகிறார்கள், அந்த பரிதாபத்துக்குரியவர்கள். பதினாறு வயதான சீனப் பெண்கள் பலர் மனநிலை லேசாகப் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சில காலம் கழிப்பதாக ஒரு சமூக சேவகி என்னிடம் தெரிவித்தாள்.

நல்ல விதமாகச் சொல்லியோ, திட்டியோ, அல்லது மனம் போனபடி தண்டித்தோ தாம் பிறரிடம் பெருமையாகப் பேசிக்கொள்வதற்குத் தம் குழந்தைகளைக் கருவியாகப் பெற்றோர் உபயோகப்படுத்தினால் எதிர்மறையான விளைவுகள்தான் உண்டாகும்.

எல்லாக் குழந்தைகளும் படிப்பிலும், பலவிதமான கலைகளிலும் கண்டவர் மெச்சும்படி விளங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நடக்கிற காரியமா! வயதில் பெரியவர்கள் அப்படித்தான் இருக்கிறோமா? பின், குழந்தைகள் மட்டும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

தப்பித் தவறி ஒரு குழந்தை முன்னுக்கு வந்துவிட்டால், அது அவனுடைய பெற்றோரின் ஊக்குவிப்பால் மட்டும்தான் என்று பலரும் கருதி, பெற்றோரைப் பாராட்டுவார்கள். அப்படிச் செய்வதால், சிறுவர்களுக்கும் ஆற்றல் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ள மறுப்பதாக ஆகாதா? இதனால் சிறுவயதினருக்குச் சற்று ஏமாற்றம் எழ, எதையும் முனைந்து செய்யும் ஆர்வம் குறைந்துவிடுகிறது.

இல்லையேல், `இதைச் செய்தால், எனக்கு என்ன பரிசு கிடைக்கும்?’ என்ற ரீதியில் அவர்களது எண்ணம் போகிறது. பொழுதுபோக்காக இருந்தாலும், அதனால் என்ன ஆதாயம் கிடைக்கும் என்று வர்த்தக ரீதியில்தான் கணக்கு பார்ப்பார்கள். (`உங்களுக்கு எழுத்தில் நிறையப் பணம் வருவதில்லையா? பின் ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்பவர்களை இந்த ரகத்தில் சேர்த்துக்கொள்ளலாம். ஆத்ம திருப்தி என்பது அவர்களுக்குப் புரியாத சமாசாரம்.).

சிறுவயதினர் பெற்ற வெற்றியை மனமாரப் பாராட்டும் வகையில், `வாழ்த்துகள்! நீ புத்திசாலி!’ என்று புன்சிரிப்போடு சொன்னால்கூடப் போதும். மேலும் துணிந்து புதிய முயற்சிகளில் ஈடுபட ஊக்கம் பிறக்கும்.

கதை 3: நான் இடைநிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, பெங்களூர் நகரெங்கும் நடைபெறும் பேச்சுப் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் செல்வார் என் தலைமை ஆசிரியை. தமிழ் பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியிருந்தேன். ஆனால், அப்போது என் ஆங்கிலம் அரைகுறை. சில பெரிய வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கத் தெரியாது, தமிழில் எழுதிவைத்திருப்பேன்.

போட்டிக்குப் பிற பள்ளிகளிலிருந்து வந்த பெண்கள், `எங்க பள்ளிக்குப் பரிசு கிடைக்கலே. டீச்சர் ரொம்பத் திட்டுவாங்க. பயமாயிருக்கு!’ என்று என்னிடம் கூறியபோதுதான், வெற்றி பெறாதது திட்டு வாங்கக்கூடிய சமாசாரம் என்றே எனக்குப் புரிந்தது.

நானும் அன்று வெற்றி பெறவில்லை. அதற்காக மனமுடைந்து போகவோ, பயப்படவோ இல்லை. என்னை அழைத்துப்போயிருந்த எனது தலைமை ஆசிரியை, மிஸ்.கோகுல் தாஸ், என் தோளில் கைபோட்டு அணைத்து, `நீ நேருமாதிரி குரலை மாற்றிப் பேசினாயே! அதை எல்லாரும் ரசித்தார்கள். எப்படி கைதட்டினார்கள்!’ என்று என் பேச்சிலிருந்த ஒரு சிறு நல்ல விஷயத்தைப் பாராட்டினார். பிறகு, மெள்ள, `உன் குரலே பெரிது. நீ மைக்கில் உரக்கப் பேசி இருக்கக்கூடாது!’ என்றார். ஒலிபெருக்கி எனக்கு அன்றுதான் முதல் அனுபவம்.

வயதேற, ஏற, பிறர் என்ன சொல்வார்கள் என்று யாரும் கவலைப் படுவதில்லை. உடல் வலிமை குன்றிய அந்த பிராயத்தில் அவர்களுக்கு அன்பும் அரவணைப்பும்தான் முக்கியமாகப் படுகிறது. ஏனோ, இவைகளுக்காகத்தான் அவர்களது குழந்தைகளும் ஏங்குவார்கள் என்பது அப்போதும் புரிவதில்லை!

கதை 4: திருமணமாகி சில மாதங்களே ஆகியிருந்த ஒருவர் தன் அந்தரங்கத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டார்: `என் பெற்றோரும், என் மனைவியின் பெற்றோரும் சீக்கிரமே குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்லி எங்களை வற்புறுத்துகிறார்கள். அதனால் நானும், என் மனைவியும் தனித்திருக்கும் தருணங்களில் உற்சாகமோ, ஆர்வமோ, மகிழ்ச்சியோ எதுவுமில்லை. `இன்றாவது ஒரு குழந்தையை உற்பத்தி செய்ய முடியுமா?’ என்பதுபோல் யோசிப்பதில் அலுப்புதான் மிஞ்சுகிறது!’

இந்த விஷயத்திலாவது தாம் பெற்ற பிள்ளைகளை அவர்கள் போக்குப்படி நடக்க விடுவோம் என்று ஏன் சிலருக்குத் தோன்றுவதில்லை?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.