-செண்பக ஜெகதீசன்

குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.   (திருக்குறள்:957 – குடிமை)

புதுக் கவிதையில்…

வானில் வலம்வரும் நிலவு
வனப்புமிக்கது,
அழகு தெரிவதுபோல்
அதன் களங்கம்
அனைவருக்கும் தெரியும்…

உயர்குடிப் பிறந்தோரின் குற்றம்
தெளிவாய்
ஊருக்கே தெரிந்துவிடும்!

குறும்பாவில்…

வான்நிலவின் கறையும்,
உயர்குடி மக்கள் குறையும்
தெளிவாய்த் தெரியும் வெளியே!

மரபுக் கவிதையில்…

விண்ணுக் கழகிய வெண்ணிலவின்
     –வெள்ளை மேனிக் களங்கமது
கண்ணில் தெரியும் பளிச்செனவே
     –காணும் இயற்கை விதியிதுவே,
மண்ணில் மாந்தர் இனத்தினிலே
     — மாண்பு மிக்கப் பெரியோர்கள்
கொண்ட சிறிய குறையதுவும்
     –காணப் பெரிதாய்த் தெரிந்திடுமே!

லிமரைக்கூ…

நன்றாய்த் தெரியும் நிலவுகொண்ட கறை,
நிலவின் கதைதான் உயர்குடியோர்
வாழ்வில் வைத்துக் கொண்டுள்ள குறை…!

கிராமிய பாணியில்…

நெலவுநெலவு பால்நெலவு
நேராப்பாரு பால்நெலவு,
நெலவுக்குள்ள நல்லாப்பாரு
நெலவுக்குள்ள கறயப்பாரு,
நல்லாத்தெரியுது பளிச்சிண்ணு…

கதயிதுதான் மனுசரிலும்,
நல்லகுடியில பொறந்தாலும்
நல்லகொணந்தான் இருந்தாலும்,
சின்னக்கொறயும் அவங்கிட்ட
பெருசாத்தெரியும் பாத்துக்கோ…

நெலவுநெலவு பால்நெலவு
நெலவுக்குள்ள கறயப்பாரு,
நல்லாத்தெரியுது பளிச்சிண்ணு…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *