வியப்பில் ஆழ்த்தும் குறள் அமைப்பு

மு​னைவர் சி.​சேதுராமன்.

பல்லாண்டு காலங்கள் ஆனாலும் பல நூல்கள் நீடித்து வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதற்குக் காரணம் அந்நூலின் அமைப்பு, அழகு, எளிமை ஆகியவையே என்று கூறலாம். ஒரு நூலின் அமைப்பே அந்நூலைக் காலங்கடந்தும் மக்களின் மனதில் கொண்டு சேர்த்து நிலையாக நிறுத்துகிறது. அவை என்றும் இறவாப் புகழ் கொண்ட நூல்களாக விளங்குகின்றன. இறவாப் புகழடைந்த நூல்களுள் கட்டமைப்பில் திருக்குறள் சிறந்து விளங்குகின்றது.

ஒவ்வொரு திருக்குறளும் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய விளக்கத்தைத் தருவனவாக உள்ளது. அதிலும் சில திருக்குறள்களின் பொருள் அக்குறள்களிலேயே அமைந்திருப்பது வியப்பிலும் வியப்பாகும்.

திருக்குறள் எளிமையாக, அதிலும் குறிப்பாக கற்பார் மனங்கொளத்தக்க வகையில் பொருள் புலப்படும் வண்ணம் அமைந்திலங்குகின்றது.

குறளின் அமைப்பு:
குறள்கள் முதலடியில் நான்கு சீரும் இரண்டாம் அடியில் மூன்று சீர்ளையும் கொண்டு அமைந்துள்ளன. இவை குறளுக்குப் புதியதொரு பொருள் விளக்கத்தையே அளிக்கின்றன. திருக்குறளின் முதற்குறளாக அமைந்துள்ள,
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
எனும் கடவுள் வாழ்த்துத் திருக்குறள் எளிமையாகப் பொருள் புரியும் வகையில் அமைந்துள்ளது.

இக்குறளின் அமைப்பைச் சற்று மாற்றியமைத்தால் பொருள் எளிதில் புலப்படும்.
“எழுத்தெல்லாம் அகர முதல.
உலகு ஆதிபகவன் முதற்றே”
இவ்வாறு மாற்றியமைத்துப் பாருங்கள். குறளின் பொருள் எளிதில் விளங்கும். எழுத்துக்கள் அகரத்தை முதலாகக் கொண்டு விளங்குகின்றன. உலகம் ஆதிபகவனாகிய இறைவனை முதலாகக் கொண்டு இயங்குகின்றன என்று குறளே எளிதில் நமக்குப் பொருளை உணர்த்துவது சிறப்பிற்குரியதாகும்.

அடிமாற்றப் பொருள் தருவன:
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
இத்திருக்குறளை,
“நிலைமிசை நீடுவாழ்வார்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்”
என்று கீழடி மேலடியாகக் கொண்டு படித்தாலும் பொருள் மாறாது கற்பார்க்குப் பொருள் தெளிவாகின்றது.

இதனைப் போன்றே,
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணி யராகப் பெறின்”
எனும் குறளை,
“எண்ணியர் திண்ணியராகப் பெறின்; எண்ணிய எண்ணியாங்கு எய்துப.”
என்று அடிகளை மாற்யினால் குறளின் பொருள் நன்கு விளக்கம் பெறுகிறது.

மேலும்,
“ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றித்
தாளாது உஞற்று பவர்”
என்ற குறளை,
“உழைவின்றித் தாளாது உஞற்றுபவர் ஊழையும் உட்பக்கம் காண்பர்” என்று அடிகளைச் சற்று மாற்றினால் எளிதில் பொருள் விளக்கம் பெறுகின்றது.

காலம் அறிதல் அதிகாரத்தில் இடம்பெறும்,
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்”
எனும் குறளின் அடிகளை,
“காலம் கருதி இடத்தாற் செயின்; ஞாலம் கருதினும் கைகூடும்”
என்று மாற்றினால் குறளின் உட்பொருள் எளிதில் நமக்கு விளங்குகின்றது.

“காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்”
எனும் குறளை,
“ஞாலங் கருதுபவர் கலங்காது காலங்கருதி இருப்பர்” என்று சொற்களைச் சிறிது மாற்றி அடிகளையும் மாற்றினால் எளிதான பொருள் நம் நெஞ்சில் நிறைகின்றது.

சொற்களை முன்னும் பின்னும் மாற்றுதல்:
அடிகளை மட்டுமல்லாது குறளில் உள்ள சொற்களை முன்பின்னாகவும் மேலது கீழாகவும் மாற்றினால் புதிய புதிய பொருளைத் தருவதாகச் சில குறட்பாக்கள் அமைந்துள்ளன, இதற்குச் சான்றாக,
“கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
என்ற குறட்பா அமைந்துள்ளது.
இக்குறளானது,
1. கற்க
2. கற்க கற்க
3. கசடறக் கற்க
4. கற்பவை கற்க
5. கற்றபின் கற்க
6. நிற்க கற்க
7. அதற்குத் தகக் கற்க.
என்று கற்க என்னும் சொலலை மட்டும் குறளின் ஒவ்வொரு சொல்லுடன் முன்பின்னாக ஒட்டினால் பலவிதமான புதிய பொருளை நமக்கு அவை தருகின்றன. இக்குறட்பா ஏழுவிதமான கருத்துக்களை நமக்குத் தருகின்றது. இவ்வேழும் ஐ.நா. சபையின் கல்வி பற்றி சாசனத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

பொன்மொழி போல் விளங்கும் குறள் வரிகள்:
வள்ளுவரின் குறள் வரிகள் பல பொன்மொழிபோன்று அமைந்து இன்பம் பயக்கின்றன. அவை பின்வருமாறு:
1. கற்க கசடற
2. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
3. உள்ளம் உடைமை உடைமை
4. எண்ணிய எண்ணியாங்கு எய்துப.
5. கற்றிலனாயினும் கேட்க
6. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
7. அன்றறிவாம் என்னாது அறம் செய்க
8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்
9. தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்
10. ஊழையும் உட்பக்கம் காண்பர்
11. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
12. உள்ளற்க உள்ளம் சிறுகுப
13. எனைத்தானும் நல்லவை கேட்க
14. சொல்லுக சொல்லிற் பயனுடைய
15. எண்ணித் துணிக கருமம்
16. எல்லார்க்கும் நன்றாம் பணிதல்
17. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்
18. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்
19. யாகாவாராயினும் நா காக்க
20. அடக்கம் அமரருள் உய்க்கும்
21. காக்க பொருளாக அடக்கத்தை
22. நன்றி மறப்பது நன்றன்று
23. மறவர்க மாசற்றார் கேண்மை
24. அன்பின் வழியது உயிர்நிலை
25. பெண்ணின் பெருந்தக்க யாவுள
26. செயற்கரிய செய்வார் பெரியர்
27. நீரின்றி அமையாது உலகு
28. முயற்சி திருவினையாக்கும்
29. உடையர் எனப்படுவது ஊக்கம்
30. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்
31. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
32. உள்ளத் தனையது உயர்வு
33. ஞாலம் கருதினும் கைகூடும்
34. ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்
35. நல்லினத்தின் ஊங்கு துணையில்லை
36. மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்
37. அறிவு அற்றம் காக்கும் கருவி
38. அறிவுடையார் ஆவதறிவார்
39. அறிவுடையார் எல்லாம் உடையார்
40. கேடில் விழுச்செல்வம் கல்வி
41. கண்ணுடையர் என்பவர் கற்றோர்
42. கற்றனைத் தூறும் அறிவு
43. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்
44. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
45. பெருக்கத்து வேண்டும் பணிதல்
46. நலன் வேண்டின் நாணுடைமை வேண்டும்
47. அற்றால் அளவறிந்து உண்க
48. மிகினும் குறையினும் நோய் செய்யும்
49. உண்ணற்க கள்ளை
50. நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை
51. மருவுக மாசற்றார் கேண்மை
52. முகம் நக நட்பது நட்பன்று
53. நகுதற் பொருட்டன்று நட்டல்
54. நாடென்ப நாடா வளத்தன
55. இடுக்கண் வருங்கால் நகுக
56. இடுக்கண் களைவதாம் நட்பு
57. பற்றுக பற்றற்றான் பற்றினை
இவையும் இவை போன்ற பிற வரிகளும் ஒரு வரியிலமைந்த பொன்மொழிகளாக அமைந்துள்ளன. இவ்வரிகள் வள்ளுவர் உரைத்த திருக்குறளின் பிழிவாக அமைந்து இன்பம் பயக்கின்றன.

இங்ஙனம் குறளின் அமைப்பானது வியப்புறும் வகையில் அமைந்து புதுப்புதுப் பொருள் விளக்கங்களைத் தருகின்றன. குறளின் ஒவ்வொரு வரியும் ஒரு புதுவிதமான உள்ளார்ந்த பொருளைத் தந்து கற்பார்க்கு வியப்பையும் இன்பத்தையும் அளிக்கின்றன.

முனைவர் சி.சேதுராமன்,
தமிழாய்வுத்துறைத் தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி),
புதுக்கோட்டை-1
E-mail: [email protected]

1 thought on “வியப்பில் ஆழ்த்தும் குறள் அமைப்பு

  1. அய்யா என் வலைப்பூவைப் படித்து கருத்தளிக்க விரும்புகிறேன். நான் ஓய்வு பெற்ற கணிதப் பேராசிரியர்.திருக்குறள் கீதை இரண்டு நூல்களின் ஒப்பாய்வு என் கட்டுரை.

    1.திருக்குறள் கர்மா, மறுபிறவி, மோட்சம்,ஆத்மா என்ற கருத்துக்களை ஏற்கவில்லை. 2. மறுபிறவி, மோட்சம், ஞான,பக்தி,கர்ம யோகங்கள், சத்துவ,இராசச்,தாமச குணங்கள் ஆகிய அனைத்துப் பகவத்கீதைக் கருத்துக்களும் திருக்குறளிலிருந்தே தோன்றிய கருத்துக்களாகும். 3. கீதை திருக்குறளை விட சமார்1000 ஆண்டுகள் பிற்பட்டதாகும் 4. திருக்குறளில் பரிமேலழகரால் திரிக்கப் பட்ட சில குறட்பாக்களின் உரையும் ஆங்காங்கே கட்டுரையில் திருத்தப் பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க