நிர்மலா ராகவன்

55707832

கொழும்பிற்கு வடக்கே 180 கி.மீ தொலைவில், வில்பட்டு என்னும் தேசிய பூங்கா உள்ளது. நாட்டில் மிகப் பெரிய பூங்கா அது. அங்கு செல்ல காட்டினுள் இருவழிச் சாலை அமைத்திருந்தார்கள்.

இருபுறமும் அடர்ந்த முட்செடிகளையும் மீறி, சில சமயம் பதினைந்து யானைகள் ஒன்றாக வருமாம். ஆகவே, `யானைகள் கடக்குமிடம்’ என்று, படத்துடன் அறிவிப்புப் பலகைகள் ஆங்காங்கே.

ae

பிரதான சாலையிலிருந்து ஏழு மைல் சென்றால் காட்டை அடைய முடியும். தெருவின் ஒரு பக்கத்தில் நெல்லைக் காய வைத்திருக்கிறார்கள். ஜூலை மாதம் அரபு நாட்டிலிருந்து வரும் பயணிகள் மட்டும்தாம் (அங்கு காயும் வெயிலுக்குத் தப்பித்து வருகிறார்களாம்).

apar

காட்டைச் சுற்றி வேலி. அதன் வெளியே இருந்த ஒரு வீட்டில் ஓரறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். அந்தத் தெருவைக் கடக்க கார் ரொம்பவே சிரமப்பட்டது. அவ்வளவு மேடுபள்ளங்கள். ஆனாலும், கட்டில், மெத்தை, கொசுவலை, மின்விசிறி ஆகிய எல்லா வசதிகளும் இருந்தன.

மறுநாள் காரில் காட்டுக்குள் எங்களை அழைத்துப்போய், சஃபாரிக்கு டிக்கட் வாங்கினார் ரிஸ்மீர். காரை ஓட்டிப்போவதோடு நிறுத்திக் கொள்ளாது, பல இடங்களிலும் சிங்களத்திலிருந்து எங்களுக்கு மொழிபெயர்த்து, பார்ப்பதையெல்லாம் விளக்கி, `இங்க போட்டோ எடுத்தால் சூபரா இருக்கும்,’ என்று அவ்வப்போது காரை நிறுத்தி, ஆட்டோக்காரர்களிடம் பேரம் பேசி — இப்படி பெரும் உதவியாக அமைந்தார் அவர்.

`நீங்கள் சரித்திரம் படித்திருக்க வேண்டும், ரிஸ்மீர்!’ என்று பாராட்டினேன். பள்ளியில் சிங்கள மொழியில் படித்திருந்தார். ஏழு வகுப்பிற்குப் பிறகு, நாட்டில் கலவரம் அதிகமானதால், படிப்பு அரைகுறையாக நிறுத்தப்பட்டுவிட்டது.

வழிகாட்டிகள், வாடகைக் காரோட்டிகள் ஆண்டுதோறும் அரசாங்கப் பரீட்சைக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு நாட்டின் சுற்றுலாத் தளங்களைப்பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அத்துடன், அவைகளின் சிறப்பு அம்சங்கள் என்ன, எதையெல்லாம் தவிர்க்கலாம் என்று சுற்றுலாப் பயணிகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, தெரிவிக்க வேண்டும்.

நான் ஜீப்பின் முன்னிருக்கையில் டிரைவர் பக்கத்தில் உட்காரப்போனேன்.

`அங்க ஒண்ணும் தெரியாதும்மா. இங்க வா!’ என்று அழைத்தாள் மகள்.
செங்குத்தான ஏணியில் ஏறி பின்னால் உட்கார வேண்டுமாம்!

எப்போதுமே வெளிநாடுகளுக்குப் போனால், சாதாரணமாக நான் செய்யத் தயங்குவதையெல்லாம் (கற்பனையை ஓட விடாதீர்கள். நான் குறிப்பிடுவது — ஏறி, குதித்து, தாண்டி என்று பல சர்க்கஸ் வித்தைகள்) செய்துவிட்டு, நடக்கக்கூட முடியாது நாடு திரும்புபவள் நான். இம்முறை வீட்டிலிருந்தவர்களின் எச்சரிக்கையுடன்தான் புறப்பட்டிருந்தேன்.
`ஐயோ! என்னால முடியாது!’ என்று மறுத்தேன்.

`அரைமணி ஆனாலும் பரவாயில்ல. அமைதியா ஏறுங்க, மேடம்!’ என்று ரிஸ்மீர் ஊக்குவிக்க, `இங்க ஒரு கை, அங்க ஒரு கை,’ என்று மகள் வழிகாட்ட, ஒரு படியில் ஏறும்போது மூச்சை இழுப்பது, அடுத்த படியில் கால் வைக்கும்போது அதை விடுவது என்று முறைப்படி செய்தேன். இரு நிமிடங்களுக்குள் ஒரு வழியாக அமர்ந்ததும், பெருமையாக இருந்தது: `இருபது வயதில் பேரன் இருந்தாலும், நமக்கு அப்படி ஒன்றும் வயதாகவில்லை போலிருக்கிறதே!’

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *