Featuredகட்டுரைகள்பத்திகள்

சிகரம் நோக்கி . . . . . (20)

சுரேஜமீ.

 

நேரம்

peak1

 

உழைப்பின் அருமையை அறிந்தவர்கள் நேரத்தின் தன்மையை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்! ஒவ்வொரு நிமிடமும் வாழ்வின் அர்த்தத்தை நமக்கு விளக்கிக்கொண்டு இருக்கிறது என்பதை ஒரு சிலர் மட்டுமே அறிய, அவர்கள் வாழ்வு மற்றவர்களுக்குப் பாடமாக அமைகிறது!

எளிதில் எதை வேண்டுமானாலும் இவ்வுலகில் பெற்று விடலாம்; ஆனால், உலகையே கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று உண்டென்றால்; அதுதான் கடந்து சென்ற காலம்!

மேல்நாட்டிலே நேரத்தின் அருமையைப் புரியவைக்க ஒரு கற்பனைக் கதை ஒன்றைச் சொல்வார்கள்;

நீங்கள் ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அக்கணக்கில் தினமும் ரூபாய் 86,400/- வரவு வைக்கப்படுகிறது ஆனால் ஒரு நிபந்தனையாக , அன்று மாலையிலேயே, தாங்கள் செலவு செய்தது போக மீதமுள்ள தொகை உடனடியாக உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு விடுகிறது என்றால்,

என்ன செய்வீர்கள்?

மனித இயல்பு உடனடியாக ஒரு பைசா மீதமில்லாமல் எடுப்பதுதானே? இதற்கு விதிவிலக்காக இருப்பவர்கள் யாரும் உண்டோ ?

இதேபோல்தான், இயற்கை நமக்கு வரமாக வாழ்வின் வளத்திற்குத் தேவையான நேரத்தைத் தினமும்

விழித்தெழும் காலம் முதல் இரவின் மடியில் விழும் காலமும் சேர்த்து

86,400 வினாடிகள் (24 x 60 x 60) நம் கணக்கில் வரவு வைக்கிறது; ஆனால் அது ஏதோ இலவசமாக வருவதாக எண்ணி நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம்!

கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும், உங்கள் வாழ்வில் ஒரு மைல் கல்லாக இருந்தால் காலத்தை நீங்கள் வென்றதாக நம்பலாம்; அல்லாமல், காலம் மட்டுமே கடந்து நீங்கள் வெறும் கல்லைப் போல் இருந்தால், காலம் உங்களை வென்று செல்கிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை!

நண்பர்களே, இதுவரை நேரத்தைக் கருதிச் செயல்படாவிடினும், இப்பொழுது தொடங்குங்கள்; இனிவரும் காலத்தை வெல்ல…

காலத்தின் அருமையைச் சொன்ன ஒரு அழகான திரையிசைப் பாடல் உங்களின் பார்வைக்கு…

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்

அன்னை மடி தனில் சில நாள்
அதை விடுத்தொரு சில நாள்
திண்ணை வெளியினில் சில நாள்
உண்ண வழியின்றி சில நாள்

நட்பின் அரட்டைகள் சில நாள்
நம்பித் திரிந்ததும் பல நாள்
காணல் நீரினில் சில நாள்
கடல் நடுவிலும் சில நாள்

இதைவிடக் கடந்து சென்ற காலத்தின் பதிவையும்; கடக்கக் காத்து இருக்கும் காலத்தை எப்படிக் கையாளவேண்டும் என்பதையும் சொல்லவும் வேண்டுமா?

காலம் என்பது கையில் இருக்கும் மிகப்பெரிய சொத்து மட்டுமல்ல; விட்டுச் செல்லும் காலம் நம்மைச் சற்றுக் காலனின் பக்கம் இழுத்துச் செல்கிறது இந்த மனித வாழ்வில் என்பதை உணர்ந்தால்,

நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் விழிப்புடன் இருப்பீர்கள்; விழிப்புணர்வு உங்களைப் பயனுள்ள செயல்களைச் செய்யத் தூண்டும்; பயனுள்ள செயல்கள் உங்களைப் பண்புள்ள மனிதராக ஆக்கும்; பண்புள்ள வாழ்வு தன் சுவடுகளைப் பதிந்து சென்றால்,

அதுவே, தாங்கள் காலத்தை வென்றதற்கான வரலாறாக இருக்கும்!

இது வார்த்தையல்ல… வாழ்க்கை! நம்புங்கள்! இந்த உலகில் வெற்றியின் ஒவ்வொரு அத்தியாயமும் வேர் விடுவது, நீங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில்தான்!!

உங்களுக்குள் ஒரு மாற்றத்தை, கடிகார முட்களின் நகர்வு ஏற்படுத்தினால்,

உலகம் தன் கையை விரித்து உங்களை வரவேற்கக் காத்து நிற்கிறது என்பதைக் காலம் நிச்சயம் உங்களுக்குச் சொல்லும்!

சாதனையாளருக்கும்; சாதாரணமானவருக்கும் சமமாகத்தான் காலம் இருக்கிறது; காலத்தைத் தன்பக்கம் இழுத்தவர்கள் வெற்றியாளர்கள்; மற்றவர்கள் காலத்தின் போக்கில் செல்பவர்கள் என்று சொல்லலாம்!

நீங்கள் எந்தவகை எனத் தீர்மானியுங்கள்!

எழுதுகின்ற இந்த நேரம்கூடக் கடந்து சென்றாலும்; ஒரு நிறைவைத் தருகிறது ஒரு எழுத்தாளனாக…

உங்கள் சிந்தனையில் சில விதைகளை விதைத்ததற்கு!

திருவள்ளுவரின் வாக்கில் சொல்ல வெண்டும் என்றால்…

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்?

காலத்தின் தன்மை அறிந்து செய்தால், கடினமான செயல் என்று எதுவும் கிடையாது என்பதைக் காலம் பற்றிய தெளிவு ஏற்படும் முன்பே நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார் என்றால்

அதைக் கையாள்வது நம் திறமை மற்றும் கடமை என்பதை சிந்தையில் தைக்க வேண்டும்.

காலத்தைச் சரியாகப் பயன்படுத்த உங்களின் இலக்கையும் அதற்கான செயல்களையும் கீழ்கண்டவாறு பட்டியலிட வேண்டும்;

1. மிக மிக முக்கியமானது
2. மிக முக்கியமானது
3. முக்கியமானது
4. சாதாரணமானது
5. தேவையற்றது

இவ்வாறாகப் பிரித்துக் காலத்தின் தன்மைக்கேற்பச் செய்ய வெண்டும்;

கால வீணடிப்பைக் கண்டறிய, ஒரு வாரத்திற்கு உங்களின் செயல்களையும்; அதற்குத் தாங்கள் எடுத்துக் கொண்ட கால அளவையும் குறிப்பெடுங்கள்! அதை மேற்சொன்ன வகைகளில், அதன் தன்மையை ஆராயுங்கள்!

உங்கள் நேரம் எப்படிக் கையாளப்பட்டது என்பது உங்களுக்கே புரியும்!

கண் துஞ்சார்; பசி நோக்கார்; மெய் வருத்தம் பாரார்; கருமமே கண்ணாயினார் என காலத்தை மதிக்கக் கற்றுக்கொண்டு இலக்கு நோக்கிப் பயணிக்க முடிவு செய்துவிட்டால், எதுவும் சாத்தியமே!

புரிந்தவர்கள் சிகரம் நோக்கிப் பயணிப்பவர்கள்… புரிய முனைபவர்களுக்கும் சிகரம் காத்திருக்கிறது!

தொடர்வோம்…

அன்புடன்
சுரேஜமீ

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க