சுரேஜமீ

கடமை

peak1

உலகமே ஒரு நாடக மேடை என்றார் ஷேக்ஸ்பியர்!

இது எந்த அளவு உண்மை என்பதை நாம் ஒவ்வொருவரும் சற்று யோசித்தால் புலனாகும். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை செய்யக்கூடிய பலவகையான பாத்திரங்கள், நமக்கு ஷேக்ஸ்பியர் ஒரு தீர்க்கதரிசி என்பதை விளக்கும்.

ஒரு தந்தையாக;; மகனாக; கணவனாக; சகோதரனாக; உறவினராக; நண்பனாக; பணியாளராக; மேலாளராக, சக மனிதனாக என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்!

இதிலென்ன வியப்பு என்கிறீர்களா? ஆம்! ஒவ்வொரு வகைப் பாத்திரத்திற்கும் ஒரு கடமை இருக்கிறது. பொறுப்புணர்வுடனும்; விழிப்புணர்வுடனும்; செவ்வனே நாம் செயல்படுவதில்தான், அப்பாத்திரத்தின் முழுமை அடங்கியிருக்கிறது!

இப்பொழுது புரிகிறதா ஷேக்ஸ்பியரின் தத்துவம்?

ஆக, ஓவ்வொருவருக்கும் இருக்கும் கடமையிலிருந்து கிஞ்சித்தும் பிறழாமல், செய்யக் கூடிய செயல்களில் செம்மை இருந்தால், அதுதான் ஒரு சிறந்த மனிதனை உருவாக்கும் என்ற உணர்வு சிந்தையில் ஆழமாகப் பதிய வேண்டும்.

கடமை என்பதும் ஒருவகை ஒழுக்கமே என்றால் மறுப்பதற்கில்லை; இதற்கு உதாரண புருஷர்களாக இதிகாசம் தொடங்கி இக்காலம் வரை பலர் நமக்கு சாட்சியாக வாழ்ந்திருக்கிறார்கள்; வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்றால்,

அதை நாம் பாடமாகக் கொண்டு வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான்!

நாவுக்கரசர் இறைவனைப் போற்றிப் பாடும்பொழுது,

‘என் கடன் பணி செய்து கிடப்பதே’! என்கிறார். இறையடியார்களுக்குத் தொண்டு செய்வதைத் தவிர அவருக்கு வேறு பணி கிடையாது; அவ்வாறு செய்தால்; அதற்குப் பலனாக இறைவன் நம்மைக் காப்பான் எனும் இறை நம்பிக்கையில் சொல்லி இருந்தாலும்,

இங்கு நாம் புரிந்துகொள்வது, பலனை எதிர்நோக்காமல் செய்யும் கடமைக்குக் காலம் நிச்சயம் தக்க பரிசினைத் தரும் என்பதே!

நாம் அனைவரும் அறிந்த மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர் மறைந்த திரு. நாகேஷ் அவர்களுக்கு, நடிப்பின் மீது இருந்த அபார உந்துதலும்; சிந்தனையும்; அது சார்ந்த செயலுமே,

அவரை ஒரு உயரிய இடத்திற்கு இட்டுச் சென்றது என்பதற்கு ஒரு உதாரணம்,

அவருடைய முதல் மேடை நாடகம்!

அதில் அவருக்கு ஒரு வயிற்றுவலி நோயாளி என்ற பாத்திரம் அளிக்கப் படுகிறது; ஒரு சில மணித்துளிகளே இருக்கக் கூடிய அப்பாத்திரத்தில் அவரின் பங்களிப்பு, அவையில் கூடியிருந்தவர்களைக் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல்; அதில் அவருக்கு சிறந்த நடிகருக்கான பட்டத்தையும் அளித்ததாக ஒரு செய்தி சமீபத்தில் படிக்க நேர்ந்தது!

என்ன வேலை செய்கிறோம் என்பது முக்கியமல்ல; எப்படிச் செய்கிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. எதைச் செய்தாலும்; நம்மை விடச் சிறப்பகா எவரும் செய்ய இயலாத அளவுக்கு நேர்த்தியாகச் செய்யக் கற்றுக் கொண்டால், நமக்கான அங்கீகாரம் நம்மைத் தேடிவரும் என்பதைப் பலர் நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள்!

350 சதுர அடிகொண்ட ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒரு மேசை; இரண்டு உதவியாளர்கள் மற்றும் மூன்று நாற்காலிகளுடன் 1965-ல் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனம்,

இன்று இந்திய மொத்த வருமான வரியில் 5% பங்களிக்கிறது என்பது வியப்பாக இல்லையா? இது எப்படி சாத்தியமாயிற்று? மறைந்த திருவாளர்.திருபாய் அம்பானியின் மிகச் சிறந்த செயல்களும்; அது சார்ந்த உறுதிப்பாடும் தானே!

இது மட்டுமா?

இந்தியத் திரை உலகிலேயே பல திரைக் கலைஞர்களையும்; சிறந்த நட்சத்திரங்களையும் உருவாக்கிய மிகச் சிறந்த இயக்குனர் மறைந்த திரு. பாலச்சந்தரின் கடமை உணர்வுதான்,

அவரை ‘இயக்குனர் இமயம்’ எனும் உயர்ந்த இடத்திற்கு இட்டுச் சென்றது என்பதை மறுக்க முடியாது.

ஒரு சாதாரண பொறியாளராகப் பணியைத் தொடங்கி, படிப்படியாக விஞ்ஞானியாகி, நாட்டின் குடியரசுத் தலைவர் எனும் பெரும் பதவியை அலங்கரித்த மக்களின் தலைவர், சமீபத்தில் மறைந்த திருவாளர். அப்துல் கலாம் அவர்களின் வாழ்வு நமக்குச் சொல்லுவது என்ன?

அவரவர் கொண்ட கடமையில் சிறப்பாகச் செயல்பட்டால், நமக்கான இடம் நிச்சயம் உண்டு என்பதும்; அதை எவராலும் எளிதில் தட்டிப் பறிக்கமுடியாது என்பதும் தான்!

யார் யாருக்கு என்ன கடமை என்பதைக்கூட நம் இலக்கியங்களில், அன்றே சொல்லி இருக்கிறார்கள் என்றால், நாம் எத்தகைய வரலாற்றிற்கும்; கலாச்சாரத்திற்கும் சொந்தக்காரர்கள் என்பதை அறியலாம்;

ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!

தாயின் கடமை ஒரு குழந்தையை நன்கு வளர்ப்பதுதான்; ஆனால், தந்தையின் கடமை அந்தக் குழந்தையைச் சான்றோனாக்குவது என்கிறது புறநானூற்றுப் பாடல்!

பிசிராந்தையார் எனும் சங்கப் புலவர் ஒருவரைப் பார்த்து, வயது அதிகமிருந்தும் ஏன் முடி நரைக்கவில்லை என கேட்க, அதற்குப் புலவர் தரும் பதிலைப் பாருங்கள்……

யாண்டு பலவாக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர் என வினவ,

அதற்குப் புலவர்,

என் மனைவியோடு, மக்களும்; யான் கண்ட இளையரும்; வேந்தனும்; அல்லவை செய்யான்;

அது மட்டுமல்ல…

ஆங்கே கல்வி; கேள்வி மற்றும் ஒழுக்கம் நிறைந்த சான்றோர்கள் பலர் வாழ்வதால், தலை நரைக்கவில்லை என்று கூறுகிறார் என்றால்;

அவரவர் தம் கடமையில் சிறப்பாகச் செயல்பட்டால் தலை முடிக்குக் கருஞ்சாயம் பூச வேண்டிய அவசியம் எழாது என்ற ரகசியத்தை புறனானூறு சொல்கிறது!

ஆகவே, கடமையில் செவ்வனே செயலாற்றி, வெற்றி எனும் தேரில் பவனம் செய்து,

சிகரத்தை நோக்கி நகர்வோம்!

தொடரும்…….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.