படித்தேன், ரசித்தேன் …

உமாஸ்ரீ.

shreeja-1சமீபத்தில் எழுத்தாளர் திருமதி. ஸ்ரீஜா வெங்கடேஷ் எழுதி வெளிவந்த ”பாண்டியன் நெடுங்காவியம்“ என்ற சரித்திர நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவுடன் உண்டான மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கேன்மின் ! கேன்மின் !

ஸ்ரீஜா வல்லமையில் எழுதிக் கொண்டிருப்பவர்; வல்லமைக்குப் பரிச்சியமான எழுத்தாளர் மட்டுமல்ல ; மிகச் சிறந்த எழுத்தாளரும் கூட . இந்த நாவலின் மூலம் தமிழில் வரலாற்றுப் புதினம் எழுதிய ”முதல் பெண் எழுத்தாளர் ” என்ற சிறப்பையும் பெறுகிறார் ஸ்ரீஜா வெங்கடேஷ். அவர் சாதனைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

”பாண்டியன் நெடுங்காவியம்“ பாண்டிய மன்னரைப் பற்றியது. ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை.

புதினம் மூன்று பாகங்களைக் கொண்டது. முதல் பாகம் 240 பக்கங்கள், இரண்டாவது பாகம் 200 பக்கங்கள், மூன்றாவது பாகம் 224 பக்கங்கள் ஆக மொத்தம் 664 பக்கங்களைக் கொண்ட சுவையான புத்தகங்களை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

வரலாற்று நாவல் எழுதுவது சுலபமல்ல. முதற்கண் மொழி திறம்பட அமைய வேண்டும். ஆராய்ச்சி செய்ய வேண்டும். சம்பவம் நடந்த இடங்களைப் போய் பார்க்க வேண்டும். கல்கி வரலாற்று நாவல் எழுத்தாளர்களுக்கு ஆசான். அவர் எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கு இதுவரை ஈடு இணையில்லை. நா பார்த்தசாரதி, அகிலன், சாண்டில்யன், விக்ரமன் , கௌதம நீலாம்பரன் போன்ற எழுத்தாளர்களின் வரலாற்று நாவல்கள் மிகப் பிரசித்தம். நா. பார்த்தசாரதி “ கபாடபுரம் என்ற நாவலில் பாண்டியர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

shreeja

கதை முகம்:
கதை கூடல் மாநகர் படலத்தில் ஆரம்பிக்கிறது. புலவர் கனியன் பூங்குன்றனார் ” யாதும் ஊரே யாவரும் கேளிர் —- என்று தொடங்கும் பாடலை அரங்கேற்றம் செய்கிறார். ஆசிரியரின் கற்பனை வளம் நம்மைத் திகைக்க வைக்கிறது.

இளவரசன் இளஞ்செழியன் மாங்குடியில் மருதனார் என்னும் புலவரின் கல்விச்சாலையில் பயின்று வருகிறான். புலவரின் மகள் செண்பகக் குழலியும் இளவரசரோடு பயின்று வருகிறாள். அவளுடைய தோழி கயற்கண்ணி. பாண்டிய மன்னனைக் கொல்ல வேண்டும் என்று செயல்படுபவன் குவளை மாறன். அவன் ஒற்றர் தலைவன் என்று தன்னைச் சொல்லிக் கொள்வான். அவனை ஆசான் என்று கயற்கண்ணி அழைப்பாள். சோழ, சேர பாண்டியர்களுடன் சேர்த்து ஏழு அரசர்களைக் குவளை மாறன் ஒன்று சேர்த்து பாண்டிய நாட்டின் மேல் படையெடுக்க முயற்சி செய்கிறான். கண்ணகி, கோவலன் கதை வருகிறது. கண்ணகி மதுரையை எரிக்கிறாள். பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனும் அவனது அரசியும் உயிர் துறக்கிறார்கள்.

இளவரசன் இளஞ்செழியன் அரசனாகப் பதவியேற்கிறான். அவனுக்கு நெடுஞ்செழியன் என்பது பட்ட பெயர். ஏழு அரசர்களும் பாண்டிய நாட்டின் மீது படையெடுக்கிறார்கள்.

குவளை மாறன் ஒதுக்கப்பட்டு விடுவான். அவன் சில ஆதரவாளர்களுடன் கொற்கைக்கு வந்து அங்கு பொறுப்பில் இருக்கும் வெற்றிவேற் செழியரை கொல்ல வருவான். செண்பகக்குழலி குவளை மாறனுடன் போராடி தன் உயிரைக் கொடுத்து வெற்றிவேற் செழியரை காப்பாற்றுவாள். மாங்குடியில் அவளுக்கு நடுகல் வைத்துப் போற்றுவார்கள். பாண்டியன் நெடுஞ்செழியனும் எழுவரை வென்று வெற்றி வாகை சூடினான்.

முக்கிய கதாப்பாத்திரம்:
கதையின் முக்கிய கதாப்பாத்திரம் இளவரசன் இளஞ்செழியன். அவன் போர் செய்யத் திட்டமிடுதலை மிகவும் அழகாக காட்சிப் படுத்தியிருப்பார் ஆசிரியர். வில்லன் குவளை மாறனுக்கும் அதிக முக்யத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவன்தான் கதையை நகர்த்திச் செல்கிறான் என்று சொன்னால் மிகையாகாது. செண்பகக்குழலியும் கயற்கண்ணியும் வலுவான பாத்திரங்கள்.

காதற் காவியம்:
இந்தப் புதினத்தில் இரண்டு காதல் ஜோடிகள் வருகிறார்கள். இளஞ்செழியன், செண்பகக்குழலி காதல் கை கூடவில்லை. கயற்கண்ணி, குவளை மாறன் காதற் சித்திரத்தை மிக மென்மையாக, நளினமாக, அழகாக, அற்புதமாக நயம்பட வரைந்திருக்கிறார்.

வர்ணனை:
சாண்டில்யனின் சரித்திர கதைகள் வர்ணனை மிகுந்திருக்கும். கதைக்காக வர்ணனையா அல்லது வர்ணனைக்காக கதையா என்று சொல்ல முடியாது.
மதுரை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததும் இரண்டு வீரர்கள் கொற்கை காவலரிடம் செய்தி சொல்ல குதிரையில் அமர்ந்து ஓடி வருவார்கள். கொற்கைக் காவலர் வெற்றிச் செல்வர் ஒருவனைப் பார்த்துக் கூறியது.

“காவலனே தேவையற்ற வர்ணனைகள் இல்லாமல் சொல்ல வந்ததைச் சுருக்கமாகச் சொல். ” ஆசிரியரும் இதைத்தான் இந்த நாவல் முழுவதும் கடைப்பிடித்திருக்கிறார்.

உவமைகள்:
ஆங்காங்கே பொருத்தமான உவமைகள் மிளிருகின்றன. ”அரிவாள்மணையின் மீது அவளது விரல்கள் வீணையை மீட்டும் வாணியின் விரல்கள் போல நளினமாக விளையாடி விரைவாக நறுக்கின“ என்று கீரை வகைகளையும் சேனைக் கிழங்கையும் நறுக்குவதை அழகாக உவமிக்கிறார் ஆசிரியர்.

இனிய பெயர்கள்:
செண்பகக்குழலி. கயற்கண்ணி, பூதி, குவளை மாறன், வாணன், திதியன், வில்லவன் கோதை, கரியன், கட்டையன் இவையெல்லாம் கதை மாந்தர்களின் பெயர்கள். ஆசிரியர் பொருத்தமான பெயர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

பொதுவானவை:
நாவலின் முகப்பு அட்டைப் பட ஓவியம் மிக அழகாக நம்மை அசத்துகிறது. அன்பு, காதல், வீரம், நகைச்சுவை போன்ற எல்லா உணர்வுகளையும் சுவைப்பட கொடுத்திருக்கிறார்.

ஒரு நாவல் சுவையாக இருக்கிறது என்பதை எப்படி அறிவது ? நாவலை எடுத்தவுடன் கீழே வைக்க மனமில்லாமல் நாவல் முடிந்த பிறகுதான் கீழே வைக்கத் தோன்றினால் நாவல் சுவையாக இருக்கிறது என்று சொல்லலாம். திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்த இந்த நாவலைக் கையில் எடுத்தால் கீழே வைக்க மனம் வரவில்லை.

மேலோகத்திலிருந்து ஆசான் கல்கி இந்த புதினத்தைப் படித்திருந்தால்
“ பிரமாதம் ! ரொம்ப நன்னா இருக்கு !” என்று சொல்லியிருப்பார்.

இந்தப் புதினம் காவிரி நதியின் நீரைப் போல ஆழமும், அகலமும் நீளமும், இனிமையும் கொண்டிருக்கிறது. புதினத்தைப் படிப்பவர் அனுபவித்துக் களிப்புறுவர் என்பது திண்ணம்.

__________________________________________________________________

Srija_venkatesh
இயற்பெயர்: ஸ்ரீஜா வெங்கடேஷ்.
படிப்பு: MA ஆங்கில இலக்கியம்.
சொந்த ஊர்: நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி. தற்போது வசிப்பது சென்னையில்.
கணவர்: திரு.வெங்கடேஷ்.

தமிழ் நாடகங்கள்:
1997 முதல் 2007 வரை ஒரிஸ்ஸா புவனேஸ்வரில் வாசம். அந்த வருடங்களில் மொத்தம் ஆறு தமிழ் நாடகங்கள் எழுதி இயக்கிய அனுபவம் உண்டு. அதில் இரு நாடகங்கள் ஒரிஸ்ஸாவின் அப்போதைய ஆளுநர் திரு . . இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ஒருநாடகம் ஷதாப்தீர கலாகார் என்னும் அமைப்பு நடத்திய அகில இந்தியநாடக விழாவில் அவர்கள் அழைப்பின் பெயரில் போடப் பட்டது.

கட்டுரைத் தொடர்:
நிலவொளியில் ஒரு குளியல் என்ற கிராமத்து வாழ்க்கையின் அனுபவக் கட்டுரைத்தொடர் 30 வாரங்கள் வல்லமை மின்னிதழில் இடம் பெற்றிருக்கிறது.

இதுவரை எழுதிய சிறுகதைகள்:25, நாவல்கள் 12. ஆன்மீகக் கட்டுரைகள் 9.

சிறந்த சிறுகதை:
2011ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைகளுள் ஒரு கதையாக பாட்டியின் பெட்டி என்ற சிறுகதை தமிழ் இலக்கிய சிந்தனை அமைப்பால் தேர்தெடுக்கப்பட்டு கோடி என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது.

நூல் அறிவு நிலையம்:
‘ஊரெங்கும் பூவாசம்’ என்ற நூல் அறிவுநிலையம் அருண் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

__________________________________________________________________

1 thought on “படித்தேன், ரசித்தேன் …

  1. எனது வரலாற்று நாவலை சுவையாக விமர்சித்ததற்கு நன்றிகள் பல. உங்களது விமரிசனம் உண்மையை மட்டுமே உரைக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. பகிர்வுக்கு நன்றி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க