எழிலரசி – அன்னை தெரசா வாழி!
எழுச்சிக் கவிஞர் எழில்வேந்தன்
எழிலரசி: இந்தியத்தாய் பெற்று விட்ட
இறைஅருளோ, பெரும் பேறோ என்ன வென்பேன்.
கழிவிரக்கம் மிகக்கொண்ட கன்னித் தாயோ,
காசினியில் வந்துதித்த கடவுள் தானோ,
‘வழியோரம் வதைபட்டுச் சாவோர் எல்லாம்
வாழ்வதற்குப் பிறந்தவர்தாம்’ என்று ணர்த்த
அழிவில்லா ஆண்டவன்தான் அனுப்பி வைக்க
அன்னை தெரசென்று வந்த தூதர் தானோ!
என்னவென்பேன் இவள்பிறப்பை பெற்ற நாட்டை
யூகோசு லோவியா நாட்டு மண்ணில்
அன்னை இவள் தெரசாவாய் பிறந்தாள் அன்று
அவள்அருளைப் பெற்றதிந்த நாடு இன்று
பன்னிரண்டு வயதினிலே, சாவோர்க் கெல்லாம்
பணியாற்ற விரும்பிவிட்டாள், பாவை அன்றே.
கன்னித்தாய் ஆகிஇன்று கல்கத் தாவில்
கனிவோடு பணியாற்று கின்றாள் அன்னை.
நலிவுற்றோர் வாழ்க்கையிலே மகிழ்ச்சி காண
நற்றொண்டு புரிகின்றார் நமது அன்னை
சலிப்பின்றி அவர்ஆற்றும் தொண்டில் என்றும்
சேசுபிரான் திருஉருவைக் காணு கின்றார்
பலியாக அளிக்கின்றார் பரம னுக்கு
பாரதத்தில் ஆற்றுகின்ற தொண்டு தம்மை.
பொலிவுற்று, அமைதிகொண்டு, மகிழும் உள்ளம்
பெற்றிங்கு தொண்டாற்றும் தெரசா வாழி.
கன்னத்தில் சுருக்கங்கள் கண்ட பின்னும்
காரியத்தில் உள்ளத்தில் சுருக்கம் இல்லை.
தன்னலத்தைத் துறந்துவிட்டு ஏழை வாழ்வில்
தன்நலத்தைக் காணுகின்ற அன்னை உள்ளம்
புன்னகையில் பூத்திடுதே, மணம் பரப்பி
பூரிப்போம் அவள் உள்ளப் பாங்கை எண்ணி
அன்னையிவள் மணம்பரப்பி அவனி தன்னில்
அளவில்லா ஆண்டுகள் தாம் வாழி வாழி.
(இது, முனைவர் எழில்வேந்தனின் முதல் கவிதை (1976). அன்னை தெரசாவைப் பற்றித் தமிழில் எழுதப்பெற்ற முதல் கவிதையும் கூட. திருச்சி தூய வளனார் கல்லூரியில் அவர் வேதியியல் இரண்டாம் ஆண்டு பயின்றபோது எழுதி, நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அன்னை தெரசாவின் நூற்றாண்டுப் பிறந்த நாளை (2010 ஆகஸ்டு 26) முன்னிட்டு, மீண்டும் வெளியிடுகிறோம்.)