பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 6

1

E.Annamalaiபேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

சென்னை, மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் இரா. சீனிவாசன் எழுப்பிய கேள்விகள்:

கல்வெட்டுகளில் பயின்று வரும் மொழி, இலக்கிய மொழியிலிருந்து வேறுபட்டிருப்பதன் காரணம் என்ன?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

சங்கக் கவிதைகளின் மொழியும் சமகால பிராமிக் கல்வெட்டுகளின் மொழியும் தனித்து நிற்கின்றன. கம்பராமாயணத்தின் மொழியும் சோழர் காலக் கல்வெட்டுகளின் மொழியும் வேறானவை. இதற்குக் காரண்ங்கள் பல. சில காரணங்கள் ஊகங்களே. ஒரு காரணம், எழுதப்பட்ட பொருள். கவிதையின் பொருள் கற்பனை கலந்தது. இந்தக் கற்பனைக்கு ஒரு மொழி சார்ந்த ஒரு மரபு இருந்தது. கல்வெட்டுகளின் பொருள், கொடை, போர் வெற்றி, கோயில் பராமரிப்பு முதலிய உலகியல் சார்ந்தது. இன்றும் அரசு ஆவணங்களின் மொழிக்கும் நவீன இலக்கிய மொழிக்கும் வேறுபாடு உண்டு.

இரண்டாவது காரணம், எழுத்தின் நோக்கம். இலக்கியம், மொழித் திறம் படைத்தவர்கள் படித்து இன்புற எழுதுவது. கல்வெட்டு, குறைந்த படிப்பறிவு உள்ளவர்களும் படித்து விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்காக எழுதப்பட்டது. இதனால் கல்வெட்டுத் தமிழில் பேச்சுத் தமிழின் கலப்பைப் பார்க்கலாம்.

மூன்றாவது காரணம் புரவலர்களின் மொழிக் கொள்கையும் நாட்டின் மொழி நிலையும். பிராமிக் கல்வெட்டுகளில் சுட்டப்படும் உறவிடங்களைத் தானமாகப் பெற்றவர்கள் பிராகிருதம் பேசிய சமணத் துறவிகள். இந்தக் கல்வெட்டுகள் தமிழும் பிரகிருதமும் கலந்து எழுதப்பட்டிருக்கின்றன. இதே சமணர்கள் தாங்கள் தமிழில் கவிதை எழுதும்போது தமிழ்க் கவிதை சார்ந்த மொழி மரபை – பிற மொழி கலக்காத, கலந்தாலும் தமிழாக்கப்பட்ட மொழியை – பின்பற்றுகிறார்கள். சோழ அரசர்கள் தங்கள் பேரரசுத் தகுதியை நிலைநாட்ட இந்தியாவிற்கு வெளியேயும் அரசவைகளில் கோலோச்சிய சமஸ்கிருதத்தைத் தழுவி அதைக் கல்வெட்டுகளில் தங்கள் பெருமையைப் பறைசாற்றப் பயன்படுத்தினார்கள். இதனால் கல்வெட்டுகளில் அரசனின் வம்சப் பெருமையையும் போர் வெற்றிகளையும் புகழும் மெய்க்கீர்த்தி சமஸ்கிருதத்தில் அல்லது சமஸ்கிருதம் கலந்த தமிழில் இருக்கும். ஆனால் இது போன்ற புகழ்ச்சியுரை இலக்கியத்தில் பாடாண்திணையாக வரும்போது நல்ல தமிழில் இருக்கும். மேலே சொன்ன காரணத்தால் கல்வெட்டுகளில் பிறமொழிச் சொற்கள் அதிகமாக இருக்கும். அரசு நிர்வாகத்தைச் சேர்ந்த பல கலைச் சொற்களும் பிராகிருதத்தில் இருக்கும்.

நான்காவது காரணம், மொழி வெளிப்பாட்டு வடிவம். இலக்கியம், கவிதை வடிவம் கொண்டது. கல்வெட்டு, உரைநடை வடிவம் கொண்டது. உரைநடையில் மொழியைப் பொறுத்தவரை அதிகச் சுதந்திரம் உண்டு. இறையனார் அகப்பொருள் உரை போன்ற இலக்கியம் தொடர்பான உரைநடை இலக்கிய மொழியின் தன்மைகளைக் கொண்டது. உலகியல் தொடர்பான உரைநடை, நாட்டு மொழிப் பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

=========================
மணிப்பிரவாளம் என்ற உரைநடை வடிவம் எந்தச் சமயத்தினரால், எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

மணிப்பிரவாளம் என்னும் தொகையில் உள்ள இரு சொற்களைச் சேர்த்துக் காணும் வழக்கை முதலில் அகநானூற்றைத் தொகைப்படுத்திய காலத்தில் பார்க்கிறோம். அகநானூற்றுப் பாடல்களில் ஒரு பகுதிக்கு மணி மிடை பவளம் என்று பெயர் தரப்பட்டிருக்கிறது. இது இருமொழிச் சேர்க்கையைக் குறிக்கவில்லை. ஒரு உரையாசிரியரின் கருத்துப்படி, எளிய சொற்களும் கடினமான சொற்களும் கலந்து வருவதையோ, எளிய சொற்கள் கடினமான பொருளை ஏற்று வருவதையோ குறிக்கிறது.

மணிப்பிரவாளம் என்ற தொகைச்சொல், ஒரு மொழிநடையைக் குறிக்கும் பொருளில் முதலில் சமஸ்கிருத்தில் பதினோராம் நூற்றண்டைச் சேர்ந்த அபிநய குப்தரால் ஒரு தென்னிந்திய மொழி மரபைக் குறித்துப் பயன்படுத்தப்படுகிறது. வீரசோழியத்தின் அலங்காரப் படலத்திலும் இந்தத் தொகைச்சொல் கூறப்படுகிறது. ஆழ்வார் பாசுரங்களுக்கு உரை எழுத அவற்றின் உரையாசிரியர்களால் மணிப்பிரவாள நடை உருவாக்கப்பட்டது. இந்த நடை, பதினோராம் நூற்றாண்டில் துவங்கி இரண்டு நூற்றாண்டுகள் வழக்கில் இருந்தது. இந்தக் கலப்பு உரைநடை, ஏன் இந்தக் காலகட்டத்தில் தோன்றியது, ஏன் வைணவ உரையாசிரியர்களால் கையாளப்பட்டது, ஏன் கைவிடப்பட்டது என்ற கேள்விகள் ஆய்வுக்கு உரியவை.

கடன் சொற்களிலிலிருந்து வேறுபட்ட இருமொழிக் கலப்பைத் தமிழில் சில காலக்கட்டங்களில் சில மொழிப் பயன்பாடுகளில் காணலாம். சங்க காலத்தைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுகளில் தமிழும் பிராகிருதமும் கலந்திருப்பதை ஐராவதம் மகாதேவன் காட்டுகிறார்.

ஒரு காலத்தின் சமூக, கலாச்சாரக் கூறுகளும் தேவைகளும் மொழியின் வடிவத்தை உருப்படுத்துகின்றன. பதினோராம் நூற்றாண்டு சோழப் பேரரசின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலம். அந்த ஆதிக்கத்தின் அடையாளமாக சமஸ்கிருதத்தைத் தழுவிய காலம். சமஸ்கிருதக் காப்பியங்களையும் பிரபந்தங்களையும் தமிழுக்குக் கொண்டு வருவதில் முனைப்புக் காட்டிய காலம். முக்கியமாக, தமிழை சமஸ்கிருதத்தின் வழி இந்திய நீரோட்டத்தோடு இணைக்க ஈடுபாடு காட்டிய காலம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தின் வழி தமிழை ஐரோப்பிய நீரோட்டத்தோடு இணைக்க அறிவுலகமும் இலக்கிய உலகமும் முயற்சி எடுத்ததைப் போல.

ஆழ்வார் பாசுரங்களை நிலைக்களனாகக் கொண்டு அவற்றின் உரையாசிரியர்கள் வைணவ இறையியல் கொள்கையையும் (theology) தத்துவத்தையும் (philosophy) தென்னிந்தியாவில் உருவாக்கினார்கள். இந்த உருவாக்கம் தமிழ்ப் பாசுரங்களின் கருத்துகளை உபநிஷத்துகளின் கருத்துகளோடு இணைத்துச் செய்யப்பட்டது. இந்த முயற்சியில் சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே தமிழில் கிரந்த எழுத்துகளின் துணைகொண்டு பயன்படுத்தினார்கள். இந்தப் பயன்பாட்டின் அளவும் தன்மையும் இருநூறு ஆண்டுகளில் மாறி வந்திருக்கிறது. ஆனாலும் பயன்பாட்டின் அடிப்படை நோக்கம் சமஸ்கிருதச் சொல்லில் பல நூற்றாண்டுக் காலமாகச் சேர்ந்த அடிப்பொருளையும் குறிப்புப் பொருளையும் வழக்கில் உள்ள தமிழ்ச் சொல்லிலோ, மொழிபெயர்த்து உருவாக்கும் புதிய சொல்லிலோ கொண்டுவர முடியாது என்ற நிலையே. சிரிலதா ராமன் என்ற ஆய்வாளரின் கருத்து இது. இன்று ஆங்கிலத்தில் உள்ள post-structuralism, post-modernism போன்ற சொற்களின் வரலாற்றுச் சுமையைத் தாங்கிய முழுப்பொருளையும் தமிழில் மொழிபெயர்த்த பின் அமைப்பியல் வாதம், பின் நவீனத்துவம் என்ற சொற்களில் உணர்த்த முடியாது என்று எண்ணி ஆங்கிலச் சொற்களையே தமிழ் எழுத்துகளிலோ, ஆங்கில எழுத்துகளிலோ எழுதுவதைப் போன்றது இது.

தமிழின் சமய அறிவுசார் வளர்ச்சியில் மணிப்பிரவாள நடை ஒரு காலகட்டத்தின் கருத்தாக்கத் தேவையை நிறைவுசெய்யத் தோன்றிய ஒரு மொழி நடை.

மணிப்பிரவாள நடை சைவத் திருமுறைகளின் அடிப்படையில் சைவ சித்தாந்தத்தை உருவாக்கிய சமய ஆசிரியர்கள் ஏன் பின்பற்றவில்லை என்ற கேள்விக்குச் சமூகக் காரணங்களில் விடை தேட வேண்டும். இந்த நடை, இருநூறு ஆண்டுகளுக்குப் பின் ஏன் வழக்கிறந்தது என்று அறிய ஆய்வு தேவை.

=========================

மொழியைக் கையாள்வதில் சமயங்களுக்கிடையில் வேறுபாடுகள் உள்ளனவா? உள்ளன என்றால் எத்தகைய வேறுபாடுகள் உள்ளன?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

மொழியைக் கையாள்வதில் தனி நபர்களுக்கிடையே உள்ள வேறுபாடு அவர்களின் அறிவுத் திறனையும் அழகியல் உணர்ச்சியையும் (aesthetics) மொழித் தூய்மை போன்ற கருத்தாக்கத்தையும் சார்ந்திருக்கும். சமயங்களுக்கிடையே மொழிப் பயன்பாட்டில் வேறுபாடு இருந்தால் அது மொழி பற்றிய கருத்தாக்கத்தை மட்டுமே பொறுத்திருக்கும்.

தமிழைப் பொறுத்தவரை, சமயங்களிடையே மொழிக் கருத்தாக்கம் பெரிதாக வேறுபட்டிருக்கவில்லை. ஒவ்வொரு சமயத்திற்கும் உரிய கலைச் சொற்களிலும் சமயம் சார்ந்த கலாச்சாரச் சொற்களிலும் வேறுபாடு இருப்பது இயற்கை. இதை மொழிப் பயன்பாட்டின் வேறுபாடு என்று சொல்ல முடியாது.

இலக்கிய மொழி என்று வரும்போது எல்லாச் சமயக் கவிஞர்களும் தமிழ் இலக்கிய மொழி மரபையே பின்பற்றியிருக்கிறார்கள். இலக்கிய மொழி மரபு தமிழில் அவ்வளவு வன்மையாக இருக்கிறது. வேறுபாடு இருந்தால் அதை உரைநடையில்தான் தேட வேண்டும். சமய நூற்களின் உரையாசிரியர்களில் சைவ சமய இறையறிவைக் கட்டமைத்தவர்களுக்கும் வைணவ சமய இறையறிவைக் கட்டமைத்தவர்களுக்கும் சமஸ்கிருதச் சொற்களைக் கையாள்வதில் ஒரு காலக் கட்டத்தில் பெரிய வேறுபாடு இருந்ததை இன்னொரு கேள்விக்கான பதிலில் சுட்டியிருக்கிறேன்.

காலனிய காலத்தில், கிறிஸ்துவ மதத்தில் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த மத குருமாருக்கும் புரட்டஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்த மத குருமாருக்கும் கிறிஸ்துவ மத போதனை நூல்களில் உயர்வகுப்பினர் வழக்கில் உள்ள தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டுமா, பாமர மக்கள் வழக்கில் உள்ள தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டுமா என்பது பற்றி வாதம் நடந்தது. கத்தோலிக்கரின் வாதத்தை முன்நின்று நடத்தியவர் பெஸ்கி. புரட்டஸ்டன்ட் வாதத்தை முன்நின்று நடத்தியவர் ஸீகன்பால்கு. பெஸ்கி, கிறிஸ்துவ நூல்களில் பயன்படுத்தும் தமிழ்ச் செய்யுள் மரபை ஒட்டி இருக்க வேண்டும், உயர்வகுப்பினர் ஒப்புக்கொள்வதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். கிறிஸ்துவ மதத்தை உயர்வகுப்பினர் ஏற்றுக்கொண்டால் கீழ்வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஒப்புக்கொள்ளும் வாய்ப்பு கூடும் என்று அவர் நினைத்தார். ஸீகன்பால்கு கீழ்வகுப்பினரை நேரடியாகக் கவர வேண்டும் என்று நினைத்தார். கடைசியில்  விவிலியத் தமிழ் என்று கூறும் ஒரு தமிழ் நடை பொதுவாக உருவாகியது.

=====================================

(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 6

  1. பேராசிரியரின் பதில்கள் துல்லியமாகவும் ஆழமாகவும் உள்ளன. மேற்கோள் நூல்கள், கட்டுரைகள் இவற்றை இன்னும் அதிகமாகக் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *