சக்தி சக்திதாசன்

உலகத்திலே நாம் பிறக்கும் போது எம்முடனே உதிரத்து உறவுகளாக கூடிப் பிறப்போர் கொடுக்கும் உறவை விட, நெருக்கமாகச் சில சமயங்களில் உடன் பிறவாத உறவுகள் அமைந்து விடுவதுண்டு.

நான்கு குழந்தைகளிலே எனது பெற்றோரின் கடைசிக் குழந்தையாக அவதரித்தவன் நான். வளரும் போது தம்பி, தங்கை என்று பாசம் செலுத்தக்கூடிய பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. “தம்பியுள்ளான் படைக்கஞ்சான்” என்பார்கள். என் மீது பாசமும் நான் பாசம் செலுத்தக்கூடியதுமான தம்பியையோ, தங்கையையோ நான் அடையவில்லையே என நான் ஏங்கிய பொழுதுகள் பலவுண்டு.

ஆனால் தமிழன்னையின் மலரடி தொட்டு நான் எனது கைவிரல்களை அவளின் புகழுக்காக வளைக்கத் தொடங்கியபோது, அத்தமிழன்னை என் வேதனையைப் புரிந்துகொண்டது போல அற்புதமான பல உறவுகளைத் தந்தாள். அவற்றிலே முகமறியாத உறவுகள் ஏராளம்.

“அழகி” என்னும் அழகிய தமிழ் எழுத்துருவைத் தாங்கிய மென்பொருளைப் படைத்த “விஷி விஷ்வநாதன்” அத்தகைய ஓர் உன்னத உறவாக அமைந்தார்.

அன்புத் தம்பி விஷி எனது மின்னிதழான “தமிழ்ப் பூங்காவை” பெற்றுக்கொண்டதும், அதைத் தம்பி சுரேஷுக்கு அனுப்பி வைத்தார். அந்தத் தமிழ்ப் பூங்கா கொடுத்த உன்னதமான தம்பியாக என் நேசமிகு, பாசமிகு தம்பி சுரேஷும், அவரின் மனைவி தங்கை விஜியும் அமைந்தார்கள். முகமறியாமலே அண்ணா, அண்ணி என்று என்னுடனும் என் மனைவி மைதிலியுடனும் சுரேஷின் உறவு பலமானது.

தம்பி விஷியின் மூலமாகத் தம்பி அந்தோணி முத்துவைப் பற்றி நான் ஏற்கனவே அறிந்திருந்தாலும், அன்புத் தம்பி சுரேஷ், தம்பி அந்தோணி முத்துவுடனான என் உறவுக்கு மேலும் பாலமாகினார்.

தமிழ்ப் பூங்காவையும், எனது ஆக்கங்களை எனது வலைத்தளத்திலும் படித்து என்மீது பாச மழை பொழிந்தார் தம்பி அந்தோணி முத்து. கவிதைகளிலும் சரி, கட்டுரைகளிலும் சரி தன்னை ஆழமாய் ஈடுபடுத்தி, அவற்றின் பின்னூட்டத்தில் தன்னை முழுமையாக அமிழ்த்தி விடுவார் தம்பி அந்தோணி முத்து. இதோ மாதிரிக்காக அவர் என்னுடைய கட்டுரை ஒன்றைப் படித்து விட்டு எழுதிய பின்னூட்டம் ஒன்றைத் தருகிறேன்,

=========================================

உங்களின் #6 “சக்தியின் கவிதைப் பக்கம்” இடுகைக்கு ஒரு புது மறுமொழி வந்துள்ளது
எழுதியவர்: அந்தோணி முத்து (IP: 117.193.66.148 , 117.193.66.148)
மின்மடல்: anthonymuthu2008@gmail.com
உரல் : http://positiveanthonytamil.blogspot.com/
யாரிது:http://ws.arin.net/cgi-bin/whois.pl?queryinput=117.193.66.148
மறுமொழி

//துணையான உறவுகள்
தூரத்தே அகன்றதும்
இணையாகத் துன்பங்கள்
இணைந்தின்று வருவதும்

நிழல்தேடி ஓடுகின்றான்
மரங்களில் இலைகளில்லை
தாகத்தில் தவிக்கின்றான்
கண்களில் கானல் நீர்//

அண்ணா,

இந்த வரிகளில் நான் என்னையும், என் கடந்த காலத் துன்பங்களையும் ஒருங்கே ஸ்பரிசித்தேன்.

ஏனோ கண்களில் கண்ணீர் முட்டுகிறது.

உங்களுக்கும் எனக்கும் ஒரு வித ஒற்றுமையுண்டு.

பெரும்பாலும்.. நம் இருவரது படைப்புகளிலும் எதோ ஒரு இனம் புரியாத சோகம் இழையோடும்.

காரணம் வாழ்வில் சந்தித்த துன்பங்களும் துயரங்களும்.

உங்களுடன் ஒப்பிடத் துளியும் அருகதையற்றவன் நான்.

என்னை விட வயதிலும், அறிவிலும், அனுபவங்களிலும், வலிகளைத் தாங்கியதிலும் மிக மிக மூத்தவர் நீங்கள்.

ஆயினும் உங்களின் வலிகளில் என்னை நான் அடையாளம் காணுவது சத்தியமான உண்மை.

உங்களது அனைத்துக் கவிதைகளையும் படித்தேன்.

அனைத்தும் தேனில் ஊறிய பலாச் சுளைகள்.

அத்தனைக்கும் இங்கே என்னால் பின்னூட்டமிட முடியவில்லை.

ஒவ்வொரு படைப்பாளியின் படைப்புத் திறனிற்கும், பின்னூட்டங்கள்தான் (அது பாராட்டோ (அ) கண்டனமோ)
உயிர் தரும் உணவு.

அந்த வகையில் நீங்கள் எனது பல படைப்புகளுக்குப் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்.

பல சமயங்களில் அவற்றுக்கு நான் நன்றி கூட சொன்னதில்லை.

காரணம், பெரும்பாலும் வேலைப் பளு, ஒரே கையால் தட்டச்சு செய்ய வேண்டிய நிலை.

இயற்கையும் கடவுளும் எப்படி பிரதி பலன் பாராமல் தருகிறார்களோ அப்படியே நீங்களும் நன்றிகளையும் பதில்களையும் எதிர்பார்த்துப் பின்னூட்டம் இடுவதில்லை என்பதை என் மனம் அறியும்.

அந்த வகையில், கொடுப்பதில்  நீங்கள் என் கர்ணனையே விஞ்சி நிற்கிறீர்கள்.

நீங்கள் விரும்பும் அனைத்தும் நிறைவேற எல்லாம் வல்ல இறையை உளமாறப் பிரார்த்திக்கிறேன்.

=========================================

இந்த மிகச் சிறிய எழுத்தாளனுக்கு என் தம்பி தன் இதயத்தில் கொடுத்த இடமோ மிகப் பெரியது. இதற்காக நான் அந்த இறைவனுக்கும் இந்தத் தம்பியின் உறவை எனக்களித்த தம்பிகள் சுரேஷுக்கும், விஷிக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் சென்னை செல்லும் வழக்கமுடைய எனக்கு ஒரு வருடம் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆமாம், அன்புத் தம்பி சுரேஷ் பல அன்பு உள்ளங்களின் உதவியுடன் தம்பி அந்தோணி முத்துவிற்காக வாங்கிய மின்சார நாற்காலி அவருக்குத் தரப்படும் வேளை சென்னையில் இருக்கும் நானும் நண்பர் சீனா (காசி விஸ்வநாதன்) அவர்களுடன் பங்கு கொள்ள வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்தார்..

தம்பி அந்தோணியைச் சந்திக்க வருவேன் என்று அவருக்கு உறுதியளித்த காரணத்தினாலும், அன்புத் தம்பியினதும், அருமை நண்பர் சீனாவின் வேண்டுகோளைத் தட்ட முடியாமையாலும் அக்கையளிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றேன்.

அப்போதுதான் எனது தம்பியின் அன்பு முகத்தை முதன் முறையாகப் பார்த்தேன். முகமறியாமலே பாசத்தை வாரியிறைத்த அத்தம்பியின் முழு வதனத்தைப் பார்க்கும் பாக்கியம் பெற்றவன் எனப் பேருவகை கொண்டேன்.

சிறுவயது முதலே படுக்கையில் தனது வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த அந்த உளத்திடம் கொண்ட உன்னத மனிதனின் அறிமுகம் எனக்கு ஒரு வரப் பிரசாதமே!

சக்கர நாற்காலியிலே தனது வாழ்வை நடத்த வேண்டிய நிலையிருந்தும் தானே தனைப் பாராமரிக்க வேண்டும் என்னும் தன்மானம் நிறைந்த தமிழ் மகனாய் எனக்குக் காட்சி தந்த அந்தத் தம்பி தமிழன்னையின் தவப் புதல்வனே. என்னுடன் என் அன்பு மனைவியும், அருமை நண்பர் சீனாவும் அவனின் அன்பு மழையில் நனைந்தார்கள்.

என் தம்பியைக் கண்டதும் இவ்வுலகில் அனைத்தும் அடைந்திருந்தும் வெறும் சோம்பேறித்தனத்தால் வாழ்வைக் கோட்டை விடும் புல்லுருவிகளின் மீது நீங்காத ஆத்திர உணர்வு மேலோங்கியது.

தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தனக்கு ஒரு வழி கிடைக்காதா என்று ஏங்கிய அந்தத் தம்பியை இறைவன் அருள் மழை பொழிந்தான்.

அன்புநிறை நண்பர் மதுரா டிராவல்ஸ் உரிமையாளர், அதிபர் திரு. வி.கே.டி. பாலன் ஐயா அவர்கள், தம்பிக்கென ஒரு பணி உருவாக்கிக் கொடுத்து அவன் இல்லத்திலிருந்தபடியே இணையத்தின் வழியாகப் பணியாற்றும் வாய்ப்பினைக் கொடுத்தார்.

அந்த அன்பு உள்ளத்திற்கு நான் என்றும் தலை வணங்குவேன்.

என் தம்பி, எழுத்தாற்றலில் ஒன்றும் குறைந்தவன் இல்லை. அவனது கவிதைகளும் கட்டுரைகளும் தத்துவ எழுத்துகளும் அற்புதக் கருத்தாழம் மிக்கவை. அழகிய தமிழ்நடை கொண்டவை.

இதோ கர்ணனுடன் பேசுவது போன்று தன் இதயக் குமுறலை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க இந்தக் கவிதையின் ஒரு பகுதி.

=========================================

என் இனிய கர்ணா…!

என்னவோ தெரியவில்லை… இன்று நாள் முழுக்க உன் நினைப்புத்தான்.

எல்லோருக்கும்… “கர்ணன்” என்றால் கொடை வள்ளல்.

வேண்டும் என்று வருகிறவர்களுக்கெல்லாம், வாரி வாரி வழங்கினவன்,
சிறந்த வீரன், க்ஷத்திரியன் என்பதுதான் தெரியும்.

ஆனால்…

நீ ஏன் கொடுத்தாய்…?

கொடுக்கும் மனம் உனக்கு எதனால் வந்தது..?
என யாரும் சிந்தித்து இருக்க மாட்டார்கள்.

ஆமாம்…
நீ ஏன் கொடுத்தாய்?

ஏனெனில்…
நீயும் என்னைப் போலவே…
துன்பங்களையும்… துயரங்களையும்.. மட்டுமே
வாழ்வில் சந்தித்தவன்.

பிறந்த உடனே…
தாய் ஆற்றில் விட்டு விட்டாள்.
என்னதான் குதிரைக்கார அப்பா…
உன்மீது பாசத்தைப் பொழிந்தாலும்…
பல முறை பலரால் அவமானப்
படுத்தப் பட்டவன் நீ.

குறிப்பாக உன் தம்பி அர்ச்சுனனாலேயே….
அப்பன் பேர் தெரியாதவன்…
குதிரைக்காரன் மகன்…
இழிபிறவி…
என்றெல்லாம்…
உன் பூ மனம்…
பல முறைக்
கொலை செய்யப் பட்டிருக்கிறது.

என் தங்கமே…
எப்படியெல்லாம் நீ துடித்திருப்பாய் என்பதை…
எண்ணிப் பார்த்தால்….
என் இதயம் சுக்கு நூறாகக் கிழிகிறதடா…
நண்பா…!

என் கண்கள் உன்னைப்
போலவே…
வள்ளலாகிச் சுரக்கிறது.

வரங்களுக்குப் பஞ்சமில்லைதான்.

தெய்வாம்சம் பொருந்தியவன்தான்.

ஆனால்…
எதுவுமே…
உன் காயங்களிலிலிருந்தோ,
மரணப்படுவதில் இருந்தோ…
உன்னைக் காப்பாற்றப் பயன்படவில்லையே.

இது போக மனைவியும் தன் பங்குக்கு…
விதியோடு சேர்ந்து உன்னைப்
பந்தாடிப்… பந்தாடிப்…
பரிதவிக்க விட்டாளே….

சுத்த வீரனான நீ…
அந்த பகவானாகிய கிருஷ்ணன் உட்பட
அனைவராலும்,
ஏன்… சாகும் நேரத்தில் கூட…
முதுகில் குத்தப் பட்டவன்.

ஆரம்பம் முதலே…
விதியால் வஞ்சிக்கப் பட்டவன் நீ…!

=========================================

ஒரு உன்னதப் படைப்பாளி. உயர்ந்த உழைப்பாளி, தன்மானம் மிக்க தமிழன், என் அன்புத் தம்பி.

சுகயீனம் காரணமாக14.08.2010 அன்று வைத்தியமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டவன், 23.08.2010 அன்று காலை கர்த்தரோடு ஐக்கியமாகி விட்டான்.

என் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடிக்கொண்டே… என் மனைவி வேதனையின் விளிம்பில்…

இறைவா! நீ இருக்கிறாயோ, இல்லையோ நானறியேன். இருந்தால் என் தம்பியை உன்னருகில் வைத்துக்கொள். ஏனெனில் அவன் இனி இந்த உலகை அன்பின் வழியில் நடத்துவான். அவன் இதயம், அன்பு நிறைந்த கடல்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “என் தம்பி அந்தோணி

  1. மாண்புமிகு அண்ணன் திரு சக்தி சக்தி தாசன் அவர்களுக்கு,

    வணக்கம்.

    வல்லமை என்ற இணையதளம் பற்றி இன்று தான் அறிந்தேன். இங்கு வந்ததும் உங்கள் கட்டுரை. அதில் நமது அந்தோணியின் நினைவுகள்!

    வாசிக்க வாசிக்க நினைவுகள் என் கண்முன்னே வந்து நிற்க கண்கள் குளமாகின!

    “அன்பே சிவம்” – என்று வாழும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எத்த்னையோ பேருக்கு இறையன்பு தந்த சகோதரர்/தந்தை/நண்பர்!

    நீங்கள் பேனாவில் எழுதினாலும் தட்டச்சிட்டாலும் பேசினாலும் அது உங்கள் இதயத்தின் அன்பை மட்டுமே ஓவியமாய் வரைந்து அடுத்தவர்களுக்கு தருகிற அதிசயம் கண்டு வியப்பவர்களில் அடியேனும் ஒருவன்!

    இறைவன் உங்களையும் அண்ணியையும் மகன் மற்றும் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்.

    அன்புடன்
    என் சுரேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *