(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 31

“லக்ஷ்மி இன்ஸ்டிடுயூட் – டைப் சார் மீனாட்சிசுந்தரம்”

அவன் P. U. C. தேர்வு மீண்டும் எழுத வில்லை. அவன் சில நாட்களில் ஊரில் சர்மாஜி சாலையில் பண்ணையார் பூக்கடைக்குப் பக்கத்து மாடியில் இருக்கும் “லக்ஷ்மி இன்ஸ்டிடுயூட்டில்” (Lakshmi Institute) தட்டெழுத்தும், குறுக்கெழுத்தும் (type writing & shorthand ) கற்றுக்கொள்ளச் சேர்ந்தான். அதன் நிறுவனராகவும் , ஆசிரியராகவும் “மீனாக்ஷி சுந்தரம்” என்பவர் இருந்தார். நிறைய மாணவ, மாணவியர்கள் அவரிடம் கற்றார்கள். இப்படிச் சொல்லலாம்…அந்த ஊரில் அவரிடம் தட்டெழுத்தும் , குறுக்கெழுத்தும் கற்காத மாணவ, மாணவியர்களே இல்லை என்று.

அவனுடைய வீட்டில் அவனுக்கு அப்பாவும், சின்னம்பிச் சித்தப்பா, ரமணிச் சித்தப்பா, மற்றும் அவனுக்கு அக்காவும் அவரிடம்தான் கற்றார்கள். அப்படி ஒரு தலைமுறை பந்தம் அவரோடு அனைத்துக் குடும்பங்களுக்கும் இருந்தது. அவரது இரண்டு கால்களும் நடக்க முடியாத படி இருந்தன. அவர் ஒரு மாற்றுத்திறனாளி. நல்ல உழைப்பாளி. மிகத் திறமையான ஆசிரியர். தினமும் அவரை சின்னம்பிச் சித்தப்பாதான் “இன்ஸ்டிடுயூட்டுக்கு” அவரது வீட்டில் இருந்து சைக்கிளில் கூடிக்கொண்டு வந்து திரும்பவும் கொண்டு விடுவார்.

அவரது ஆங்கில உச்சரிப்பு அருமையாக இருக்கும். மாணவர்களுக்கு குறுக்கெழுத்துக்காக புத்தகம் மற்றும் ஆங்கில நாளேடுகளைப் பார்த்து அவர் படிக்கும் அழகை அவன் ரசிப்பான். அதை கவனிக்கும் அவர், “விஸ்வநாதா என்னப் பாக்காதே..நான் சொல்லரதக் கேட்டு மடமடன்னு எழுது” என்பார். அவன் குறுக்கெழுத்தில் நூற்றி நாற்பத்திநான்கு பயிற்ச்சிகள் கற்றான். தட்டேழுத்து முதல்நிலைத் தேர்வுவில் (typewriting Lower grade) முதல் வகுப்பில் தேறினான். அவரிடம் கற்றவர்கள் சென்னை, பம்பாய், கல்கத்தா, டெல்லி என்று வேலைக்குப் பறந்து விடுவார்கள். அப்படி ஒரு ராசி அந்த “டைப் சாருக்கு”.

அவர் மாணவர்களிடம் நகைச்சுவையுடன் பேசுவார். ஒரு முறை அவர் குறுக்கெழுத்துப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அனைவரையும் “Lunch” என எழுதச் சொன்னார். எழுதிய பின் அவற்றைத் திருத்தும் பொழுது,
“என்ன லக்ஷ்மிநாராயணா தும்மிட்டயே” என்று ஒரு மாணவனைப் பார்த்துக் கேட்டார். என்ன சார்..என்று அந்த மாணவன் கேட்டவுடன், நான் “லஞ்ச்” என்று சொன்னால் நீ “லச்” என்று எழுதி இருக்கிறாயே” (upward “L”, “N” & downword ch என்று போடுவதற்குப் பதிலாக அவசரத்தில் upward “L”, & downword ch என்று எழுதி இருந்தான் ) என்று சொன்னவுடன், அங்கிருந்த அனைவரும் சிரித்தனர், லக்ஷ்மிநாராயணன் உட்பட.

அவர் மிகவும் உற்சாகமாக இருந்தால் “ராவணா” என்னமட்டும் காப்பாத்து” என்று சொல்லுவார். “என்ன சார் ராவணனப் போய்க் கூப்படறேளே” என்று கேட்டால்,” ராமனை எல்லாரும் கூபுடுவா..ராமன் எல்லாரையும் காப்பாத ஓடுவர்.. ராவணன் சும்மா இருப்பான். அவனக் கூப்பிட்டா, அட நம்மள இவன் ஒருத்தனாவது கூப்படரானே ஒடனே ஓடிப்போய் காப்பாத்துவோம்னு வந்துடுவான்…அதான்” என்று சொல்லிச் சிரிப்பார்.

“ஊருக்கு உழைத்தல் யோகம் “

பொது வாழ்க்கையில் தூய்மையோடு தொண்டு செய்பவர்களை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஊருக்கு உழைத்தல் யோகம் என்றார் மகாகவி பாரதியார். அப்படிச் செய்து கொண்டிருந்த பெரியோர்கள் அநேகம் பேர்களை அவன் அவனது கிராமத்தில் பார்த்திருக்கிறான். பழகியும் இருக்கிறான். பிரதி பலன் பாராமல் மற்றவர்களுக்காக வாழ்கின்ற மனிதர்கள்தான் இளைஞர்களுக்கு நல்ல உதாரணம். அப்படி அவனை ஈர்த்தவர்களில் தேசிய வாழ்வில் பங்கு பெற்ற தியாகி கோமதி சங்கர தீட்சிதர், தியாகி சுப்ரமணிய ஐயர் முக்கியமானவர்கள். இவர்களைத் தவிர கிராமத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்துத் தொண்டு செய்து வந்த, வருகிறவர்களில் முக்கியமாக ஆர்.கே.சுப்ரமணிய ஐயர் (ஆர்.கே.எஸ்.மாமா), P. கிருஷ்ண ஐயர், டாக்டர் பத்மநாபன் ஆகியோர் அவனுக்கு ஒரு ஆதர்சமாக இருக்கின்றனர்.

ஆர்.கே.சுப்ரமனியாய மாமா

அவன் ஒரு முறை சென்னையில் இருந்து கல்லிடைகுறிச்சிக்கு வந்திருந்தான். வழக்கம்போல ஊருக்கு வந்தவுடன் ஆற்றங்கரைக்குக் குளிக்கச் சென்றான். சுடுகாட்டுப் பாதைவழியாக இறங்கும் பொழுது, அந்தச் சுடுகாட்டில் பிணம் சுடும் இடத்தில் புதியதாக ஒரு “கான்கிரீட் கூரை” கட்டப்பட்டிருப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அது ஒரு சிறந்த தர்மம் என்று முனோர்கள் கூறக் கேட்டிருக்கிறான். அவன் சிவன் பாறையில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுதே, அந்த சுடுகாட்டைப் பார்த்தபடியும், அதைக் கட்ட உதவிய நல்ல உள்ளத்தையும் மனதாரப் பாராட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் அருகில் குளித்துக் கொண்டிருந்த கிராமத்துப் பெரியவர் ஒருவரிடம், சுடுகாட்டைக் காட்டி ,”அதைக் கட்ட யார் உதவினார்கள்” என்று கேட்டான். “அது நம்ம ஆர்.கே.எஸ். மாமாதான் செய்தார். அவர் பம்பாயில் இருக்கிறார். இப்பொழுது ஊருக்கு வந்திருக்கிறார்” என்று சொன்னார். அவனுக்கு அந்த நேரத்தில் ஆர்.கே.எஸ். மாமாவை பழக்கமில்லை. சென்னைக்கு வந்தவுடன் அவரது அந்த நல்ல தர்மத்தைப் பாராட்டி ஒரு தபால் கார்டில் கடிதம் எழுதி அவரது விலாசத்திற்கு ஊருக்கு அனுப்பினான். அது கிடைத்தவுடன் அதில் குறிப்பிடப் பட்டிருந்த அவனது வீட்டுத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அவனிடம் ஆர்.கே.எஸ். மாமா பேசினார். அவன் அவரைவிட வயதிலும், அனுபவத்திலும் மிகவும் சிறியவன். ” விஸ்வநாதன் ஒங்களோடு லெட்டர் கிடைச்சுது. ரொம்பவும் சந்தோஷம். ஒங்களோடு லெட்டர்ல நீங்கள் எழுதிய வார்த்தைகள் எனக்கு ரொம்பவும் உற்சாகம் தந்தது. என்னிடம் சிலபேர் “என்ன ஒய் சுடுகாட்டுக்குப் போய் கூரை போட்டிருக்கீரே..வேண்டாத வேலை” என்று சொன்னதில் எனக்குக் கொஞ்சம் வருத்தமாகி விட்டது. நீங்கதான் அதப் பாராட்டி கடிதம் எழுதினீர்.” என்றார். “மாமா என்னை நீங்கள் ஒருமையிலேய அழையுங்கள்…நான் உங்களைவிடச் ரொம்பச் சின்னவன். நீங்கள் செய்த பணிக்கு ஈடு கிடையாது. மழை காலத்தில் சுடுகாட்டில் இறந்தவர்களை எரிப்பதற்குப் படுகின்ற கஷ்டத்தை நிறைய முறை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். அதனால்தான் எனக்கு உங்கள்மீது மரியாதை வந்தது என்றும், என்னோடு அப்பாதான் திலகர் வித்யாலயா பள்ளியில் வேலை பார்த்த மீனாக்ஷிசுந்தரம் ஐயர்” என்றும் கூறினான்.. “அப்படியா….நீ மீனக்ஷிசுந்தரம் புள்ளையா..சந்தோஷம் என்றார். அதன்பிறகு அவன் அவரை முடிந்தபோதேல்லாம் சந்தித்தான். ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத் திருப்பணிக்கு அவர் நிறையப் பொருளுதவி செய்து சிறப்பாக நடக்க உதவினார். அவரது இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் தொழில் செய்கிறார்கள். அவர்களுக்கும் அந்தத் தொண்டுள்ளமும், குருபக்தியும் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அவர் மறைந்தார் என்றாலும் அவர் செய்த தர்மம் அவரை எப்பொழுதும் நினைக்கும்படி செய்திருக்கிறது.

“பரமேஸ்வரன் கிருஷ்ணன்”

கிருஷ்ண மாமா என்று எல்லோராலும் அழைக்கப் படுகிற P. கிருஷ்ண மாமாவும் ஒரு பரோபகாரி. இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். தூய உள்ளம். பாட்டனயினார்புரம் கிராமத்துக்குட்பட்ட ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தின் சமயம் இவரது உழைப்பு அசாத்தியமாக இருந்தது. கோவில் திருப்பணிக்காகவே தனது பொழுதை கழித்தார் என்று சொல்வது மிகை இல்லை. காரணம் அந்தச் சிறிய கிராமத்தில் ஓடியாடி வேலை செய்ய இளைஞர்கள் மிகவும் குறைவு. அந்த நேரத்தில் கிராமக் கூட்டங்கள் நடத்தி, பொறுப்பானவர்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு, கிராமத்துப் பெரியவர்களை முக்கியமாக ஜவுளிக்கடை வீரமணி ஐயரைக் கலந்து கொண்டும், சங்கரநாராயணன், மூர்த்தி, ரமேஷ், லெ.ராமன், ஆதி போன்ற இளைஞர்களை அனுசரித்தும், கிராமத்தார்கள் பாராட்டும் வகையில் “கிருஷ்ண மாமா” பலன் கருதாமல் செய்த சிவத்தொண்டு மெச்சத்தக்கது. கும்பாபிஷேகக் கணக்குகளை “சிவன் சொத்து..சிவன் சொத்து” என்று பயபக்தியுடன் அவர் முறையாக கிராமத்திற்கு சமர்ப்பித்ததை அவன் நன்றாக அறிவான். அவரது கண்டிப்பும், நேர்மையும் சிவனுக்கும், அவனுக்கும் பிடித்திருந்தது. சமீபத்தில்தான் அவருக்கு சதாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. எதையுமே படாடோபமாகச் செய்யாமல் அமைதியாகச் செய்கின்ற கிருஷ்ணமாமாமீது அவனுக்கு என்றுமே மரியாதை உண்டு. சிவனுக்கு வில்வம் போன்றது அந்த மரியாதை..

“ஊருக்கு மருந்தாகி முதியோர்க்குத் துணையான மனிதர்”

உடம்புக்கு வியாதி என்றால் மருத்துவரிடம் ஓடலாம். மனதுக்கு வியாதி வராமல் இருக்க வேண்டுமானால் பலன் கருதாமல் ஏதேனும் ஒரு தொண்டில் நம்மைக் கரைத்துக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட ஒரு நல்ல தொண்டில் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கக்கூடிய நல்ல ஆத்மாதான் டாக்டர் பத்மநாபன், டாக்டர் அன்னபூரணி தம்பதியர்கள்.

அவனுக்கு அம்மாவுக்கு திடீர் என்று ஒருநாள் உடல் நலம் குன்றிப்போக, அவன் அம்மாவை அழைத்துக் கொண்டு டாக்டர் பத்மநாபன் மருத்துவ மனைக்குத்தான் சென்றான். அங்கு டாக்டர் அன்னபூரணி இருந்தார். அவரது கனிவான பார்வையும், மென்மையான பேச்சுமே அம்மாவின் பாதி நோயைக் குணப்படுத்தி விட்டது. அதன் பிறகு அவனுக்கு அம்மா தனக்கு ஏதேனும் நோய் வந்தால் டாக்டர் அன்னபூரணியைத் தவிர வேறு ஒரு மருத்துவரை அணுகியதே இல்லை.

“விஸ்ராந்தி”

drஇன்று கல்லிடைக்குறிச்சியில் எந்த நேரத்திலும் சென்று கதவைத் தட்டினாலும் முகம் சுளிக்காமல் மருத்துவ உதவி செய்து வருபவர் டாக்டர் பத்மநாபன். அதோடு நில்லாமல் சுமார் முப்பத்தைந்து முதியோர்களுக்குக் குறையாமல் இருக்கக்கூடிய “விஸ்ராந்தி” என்ற முதியோர் இல்லத்தையும் இவர் பொறுப்பில் நடத்தி வருகிறார். அந்த முதியோர் இல்லம் வீரப்பபுரம் தெருவில் இருக்கிறது. அங்கிருக்கும் ஒவ்வொரு வருக்கும் போதிய இடம், உடை, உணவு, சுகாதார வசதிகள் அனைத்தும் செய்து கொடுப்பதோடு, அவர்களைத் தனக்குப் பெற்றோராகவே மதித்து, கவனித்து வருகிறார்.
டாக்டர் பத்மநாபனும் அவரது நண்பர்களூம். குறிப்பாக Y. நாராயண ஐயர், காமேஸ்வர மாமா போன்றவர்கள் டாக்டர் பத்மநாபனின் வலது கரமாக இருந்து இந்தப் பணிதனைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். அவனும் அவனுக்கு மனைவி சீதாலட்சுமி, மகன் கிருஷ்ணா, மருமகள் ஸ்ரீவித்யா, மகள் அன்னபூர்ணா அனைவரும் கல்லிடைக்குறிச்சிக்கு வரும் பொழுதெல்லாம் அந்த முதியோர் இல்லம் சென்று தங்களால் இயன்ற எளிய உதவிகளைச் செய்து வருகின்றனர். அதுபோன்று எத்தனையோ நல்ல உள்ளங்கள் இந்த “விஸ்ராந்திக்கு” வந்து அங்கிருக்கும் முதியோர்களுடன் உறவாடித் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். டாக்டர் பத்மனாபனும் அவரது நண்பர்களும் “கல்லிடை சோஷியல் சேவா டிரஸ்ட்” என்ற அறக்கட்டளையைத் துவங்கி அதன்மூலம் இந்த அறப்பணியைச் செய்து வருகின்றனர்.

டாக்டரின் தந்தையார் வி.கோபாலகிருஷ்ண ஐயர் மிகுந்த தர்மசிந்தனை உள்ளவர். வேதம் அறிந்தவர். சிதம்பரேஸ்வரர் கோவிலில் தேவாரம், திருவாசகம் சொல்லி அந்த சிவபெருமானை அவர் துதிப்பதை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். அவரது அந்த குணத்தில் ஒரு சில துளிகள் டாக்டர் பத்மநாபன் மீது தெளித்திருக்கிறது. அதுதான் அவரைத் தன்னலம் கருதாத ஒரு சிறந்த தொண்டில் ஈடுபட வைத்திருக்கிறது.

“முதியோர் இல்லமே இருக்கக்கூடாது..அவரர் பெற்றோர்களை அவரவர் குழந்தைகள் தங்களுக்கு என்ன கஷ்டமானாலும் வைத்துக் காப்பாற்ற வேண்டும். இதுதான் என்னுடைய பிராத்த்தனை” என்று அவனிடம் டாக்டர் பத்மநாபன் சொன்னது அவனது இதயத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

“தர்மோ ரக்ஷதி ரக்ஷித ஹ:”
“நீ தர்மம் செய்தால் உன்னை தர்மம் காக்கும்”

24.09.2015

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

 படம்  உதவி  K.V.அன்னபூர்ணா

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அவன்,அது,ஆத்மா (31)

  1. ஸ்ரீ லக்ஷ்மீபதி கோவிலில் தொடர்பு இருந்தது போல் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவில் மற்றும் அந்த தெரு மனுஷர்களுடன் தொடர்பு இல்லாததால் நிறைய விஷயங்களை மிஸ் பண்ணுகிறேன் . தவிர மிகவும் இளம் வயதில் ஊரை விட்டு வெளியே வந்துவிட்டதால் மேலும் கற்றுக்கொள்ளமுடியாமல் போய் விட்டது.  நாங்கள் எல்லோருமே சாரிடம் டைப் கற்றிருக்கிறோம் (நான் மிகவும் குறுகிய காலம் கற்றேன்). மேலமாட  தெருவில் விகடன், கல்கி, கோகுலம் முதலிய புத்தகங்கள் ஒரு மாமா சைக்கிளில் சப்ளை செய்வார். அதே தெரு வடக்கு கோடியில் குண்டு மணி (ஜி எஸ் மகாதேவன் ) என் பால்ய நண்பன். எதிர் வரிசையில் காசி என்று ஒரு பையன் இருந்தான். குத்திக்கல் தெருவில் பிச்சக்கா பாட்டி என் சித்திப்பாட்டி ருக்மணிக்கு புக்காத்து உறவு. அவர்கள் அருகில் சிதம்பரேசன் என்ற பையன் என் கிளாஸ் மேட் .  ச்மசானத்திற்கு இப்படி கைங்கர்யம் பண்ணுவது ‘ஜீவாத்மா கைங்கர்யம் ‘ என்று வேதத்தில் விசேஷித்து சொல்லப்பட்டுள்ளது .   நன்றி ஐயா .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *