மனிதனை உயர்த்தும் எழுத்து

எஸ். வி. நாராயணன்.

கல்கியின் மகத்தான சரித்திரத் தொடர்கதைகளுக்காக ‘கல்கி’ இதழையும், தேவனின் சிறந்த சமூகத் தொடர் சித்திரங்களுக்காக ‘ஆனந்த விகடனையும்’ வாரந்தோறும் விடாமல் விரும்பிப் படித்த ஆயிரக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. அந்த கால கட்டத்தில் இந்த இதழ்களைப் பெரியவர்களும், சிறியவர்களும், ‘நான்முதல், நீ முதல்’ என்று போட்டி போட்டுக் கொண்டு படிப்பார்கள்.

devanதேவனின் படைப்புகள் அன்றாட வாழ்வின் பல அம்சங்களைப் பிரதிபலிப்பதாக அமைந்ததால் அவற்றிலே தனி ஈர்ப்பு இருந்தது. ஆங்கில நாவலாசிரியர் பி.ஜி. உட்ஹவுஸின் பாணியிலே, அடுக்கடுக்கான சம்பவங்களின் ஊடே, நகைச்சுவையை நயமுறக் கலந்து தேவன் வழங்கிய சுவைமிகு கதைகள் தான் எத்தனை! மனிதனை மேம்படுத்தக் கூடிய நல்ல கருத்துகளை அஸ்திவாரமாகக் கொண்டு, அவற்றின் மீது அவர் எழுப்பிய நவீனங்கள்தாம் எத்தனைச் சிறப்புடையவை! சுமார் 23 ஆண்டுகாலம் ஆனந்த விகடன் மூலம் பல்வேறு தரமான கதைகளையும், கட்டுரைகளையும் அளித்த தேவன், நீண்டகாலம் நம்மிடையே இருக்கவில்லை. 1957-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி, 44 வயதிலேயே இறைவனடி எய்தினார். அவருடைய படைப்புகளில்தான் எத்தனைப் பரிமாணங்கள்! தேவனின் தமிழ்நடையிலே தான் எத்தகைய ‘இளநீர்’ ஓட்டம்!

அவருடைய சமூகப்பார்வையும், சிந்தனைகளும் எக்காலத்திற்கும் பொருந்தும். ‘லஷ்மி கடாஷம்’ என்ற உன்னத படைப்பிலே அவர் கூறுகிறார்:- “சேவை செய்வோம், அதற்கேற்ற ஊதியம் பெறுவோம் என்ற மனத்தூய்மையுடன்தான் மக்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். தெருவிலே, ரிப்பன்நாடா, சீப்பு, கொண்டை ஊசி விற்பவர்களை எடுத்துக் கொள்வோம். லாபம் மிகமிகக் குறைவுதான். ஆனாலும், அவர்கள் ஏன் அந்தத் தொழில்களை தொடர்ந்து செய்கிறார்கள்? உள்ளத்திலே, ‘நாணயமாய் நடக்க வேண்டும்; சிறியோன் ஆனாலும் தன்மதிப்பு எனக்கு உண்டு’ என்ற நம்பிக்கை இருப்பதால்தான். யோக்கியமாய் பிழைக்க நினைக்கும் எந்தச் சிறிய வியாபாரியை நோக்கினாலும் அவருக்கு ஆதரவு தருவோம். அதனால் யோக்கியர் பரம்பரை வளர உதவி செய்தவர்கள் ஆவோம்.” என்கிறார் தேவன்.

இதே நாவலிலே பிறிதொரு இடத்திலே அவர் சொல்கிறார்:- “உலகிலே ஏழை மக்களே அதிகமானவர்கள். அதற்காக எவரும் அவமானப்படத் தேவையில்லை. உழைத்து, தனக்கு வேண்டிய அளவு மட்டுமே எடுத்துக்கொண்டு, பேராசையைத் தவிர்த்து, யோக்கியப் பொறுப்புடன் நடந்துகொள்பவர் எண்ணிக்கை எப்போது குறைகிறதோ, அப்போதுதான் தலை குனியவேண்டும். அல்லது கவலைப்படவேண்டும்.” நாணத்தைவிட்டு, பணத்தின் பின்னே அலையும் இன்றைய சமூகத்தின் அவலநிலையைக் கண்டிருந்தால் தேவன் அவர்களுடைய மனம் என்ன பாடுபட்டிருக்குமோ?

ஏழ்மையிலும் ஏற்றமுடன் விளங்க முடியும் என்பதை வலியுறுத்திச் சொன்ன தேவன், பணம் வந்தால் எப்படி இருக்க வேண்டுமென்பதையும் சுட்டிக்காட்டுகிறார். பரோபகாரச் சிந்தையைப் போற்றி வளர்க்க வேண்டுமென்கிறார். ‘மிஸ்டர் வேதாந்தம்’ என்ற கதையிலே சுவாமி என்ற அருமையான கதாபாத்திரம். மனித நேயம் மிக்க சுவாமி கடற்கரையில் தமது பெரிய காரை நிறுத்திக் கொண்டிருக்கிறார். தொண்டு கிழவி ஒருத்தி கையை நீட்டி காலணா கேட்கிறாள். காலணாவை வைத்துக்கொண்டு என்ன செய்வாய் என்று சுவாமி அவளிடம் கேட்கிறார். நாலு இடத்தில் இதே மாதிரி கேட்டு வாங்கி ஏதாவது வாங்கித் தின்பேன் என்கிறாள். அந்த மூதாட்டி கையில் சுவாமி ஒரு ரூபாயை எடுத்துப் போடுகிறார் (ஒரு ரூபாய்க்கு ஒரு படிக்குமேல் நல்ல அரிசி கிடைத்துக் கொண்டிருந்த காலம் அது). அதோடு, “நீ நாலு இடத்தில் நின்று கேட்கவேண்டாம். என்னை நன்றாகப் பார்த்துக்கொள். என்னை எங்கே கண்டாலும் இனி என்னிடம் நீ பிச்சைக் கேட்கக்கூடாது. எனக்குக் கெட்ட கோபம் வரும்” என்று சொல்லி, தமது இளகிய மனதை, ஒரு பொய்ப் போர்வையால் போர்த்திக் கொண்டு போவார்.

பணத்தைப் பெட்டியில் பூட்டிவிட்டு லஷ்மிகடாஷம் இருக்கிறது என்று சொல்வது மடத்தனம் என்பார் தேவன். பணத்தை நல்ல முறையில், அனைவருக்கும் பயன்படும்படி உபயோகப்படுத்த வேண்டுமென்பதே தேவனின் கொள்கை. மனத்தைத் தாராளமாக வைத்துக்கொள்ளவேண்டும். பகை, பொறாமை கூடாது. பண்டம், பணம் இவற்றின் மீது தனிப்பட்ட ஆசை கூடாது. எல்லோருக்கும் கொடுப்போம், எல்லோரும் சந்தோஷமாக அனுபவிக்கட்டும் என்ற மனப்பாங்கு வேண்டும். இவை இருந்தால் ஆண்டவன் அருள் நிச்சயம் கிட்டும் என்பதை தேவன் உறுதிபட நம்பினார் என்றே கருதவேண்டும்.

அவருடைய படைப்புகளிலே பக்திக்கு முக்கிய இடம் உண்டு. தெய்வ மணம் அவற்றிலே பின்னிப் பிணைந்திருக்கும். தேவாரம், திருவாசகம், ஆழ்வார்களின் பாசுரங்கள், சித்தர்களின் பாடல்கள், ஆதிசங்கரர், வேதாந்த தேசிகர், வள்ளலார், தாயுமானவர் போன்ற பெரியோர்களின் அமுத மொழிகள் இவற்றை அவருடைய கதைகளிலே ஆங்காங்கே காணலாம். தொடர் கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும், ஒரு அழகான சுலோகமோ, பாசுரமோ, வாசகமோ அணி செய்து நிற்கும். புரசைவாக்கம் கங்காதரேச்வரர் கோவிலில் வீற்றிருக்கும் பங்கஜாஷி அம்மன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், வடபழனி முருகன், அங்குள்ள ஆஞ்சனேயர், சிக்கல் சிங்கார வடிவேலன் போன்ற பல்வேறு தெய்வ சந்நிதிகளை அவர் வர்ணிக்கும்போது, நேரிடையாகத் தரிசனம் செய்யும் உணர்வு வாசகர்களுக்கு ஏற்படும். பக்தி உடையவனுக்குத் தெய்வம் என்றும் துணை நிற்கும் என ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் நமது நம்பிக்கைக்கு உரம் ஊட்டுவது போல இருக்கும் தேவனின் எழுத்து.

மனித வாழ்வின் அடிப்படையை ஒரு சில வரிகளிலேயே படம் பிடித்துக் காட்டியவர் தேவன். மனித வாழ்க்கை துயரம் மிக்கது என ஞானிகள் சொல்வார்கள். ஆனாலும், எப்படியும் வாழ்ந்துவிடுவது என்ற துணிவு கொண்ட சமூகம் அதிலே பல ஆறுதல் ஊற்றுக்களைத் தேடிக்கொள்கிறது. குழந்தைப் பருவத்திலே பெற்றோரின் அன்பு இதத்தை அளிக்கிறது. பிறகு, வாழ்வு கசக்காமல் இருக்கத் திருமணம் என்ற நிலை வருகிறது. அதிலே உள்ள கவர்ச்சியை நீடிக்க வைத்து, புத்திரப்பேறு ஏற்பட்டதும் மனது அதில் திரும்புகிறது. அந்த ஈடுபாடு அறுபது வயது வரை கொண்டு செல்ல, அப்பால் மெய்ஞானத்தில் மனம் லயிக்கிறது. இந்த ரீதியிலே, சம்சாரமுட்கள் குத்திக் கீறாமல், நம்வாழ்வு சிறப்பாகிறது.

இல்லற இயல், தொழில் துறை பண்பு, முதலாளி– தொழிலாளி உறவுகள், நட்பின் இயல்பு, எழுத்தாளர் பொறுப்பு, இசையின் நயம் என பல்வேறு விஷயங்களை தம்முடைய படைப்புகளிலே தேவன் அலசியிருக்கிறார்.

ஆண்டுதோறும், தேர்வு முடிவுகள் வரும் நேரம் சிறுவர், சிறுமியரை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கும் காலம். வெற்றி பெறுவோர் பலர் இருப்பர். அதே சமயத்தில், பல்வேறு காரணங்களினால், தோல்வியைச் சந்திக்க நேரிடுவோரும் உண்டு. இவர்கள் துவண்டு போகாமல் இருக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகக்கூறுகிறார் தேவன். தோல்வியுற்றவனைக் கடிந்து கொள்ளாமல், தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லவேண்டும். “எழுந்துவாடா, என்கண்ணே! நீ வேணது வாசிக்கவில்லையா. போறாதவேளை அப்படிச் செய்திருக்கிறது. அடுத்த வருஷம் இருக்கிறது. உனக்கென்ன வயசாகிவிட்டதா?” என்ற ரீதியில் தாயார் பேசவேண்டுமாம். “அசடே! இந்த அற்ப விஷயத்திற்கா மனம் உடைந்து போகிறது?” என்று தகப்பனார் சொல்லவேண்டுமாம். இப்படிச் செய்தால் அடுத்த தேர்வில் முதலிடம் பிடிக்க வேண்டுமென்ற உத்வேகம் மாணவனுக்கு ஏற்படாதா?

எழுத்துத் தொழிலின் நிறைகுறைகளை அறிந்தவர் தேவன். நாலுலட்சம் பேர் நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும், ஒருவர் குறை கூறினால்கூட நெஞ்சு வேகிறது என்பார். ஆனால், அவரே சொல்லுவார்:- “வாசகர்கள் எல்லோரும் நல்லவர்கள். நன்றாயிருப்பதை உடனேயே தயங்காமல், குறைக்காமல் சொல்வார்கள். நம்பிக்கையுடன் எழுதிவிட்டால் வெற்றிநிச்சயம்.” நம்பிக்கையுடன் எழுதி தாமும் உயர்ந்து, வாசகர்களையும் உயர்த்தியவர் தேவன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.