படக்கவிதைப் போட்டி (32)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
ஆதித்யா நாகராஜ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (03.10.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
பொய்முகம்
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவார்
உறவு வேண்டாமென்ற
வள்ளலார் வாழ்ந்த பூமி
வண்ணப் பூச்சுகளுடன்
எத்தனை வடிவ மாற்றம்
வார்த்தைகளுக்கும்
உள்ளத்திற்குமான
இடைவெளி
ஏன் இப்படி நீள்கிறது
கண்களிலிருந்து வழியும்
கண்ணீர் கூட
ஏன் இப்பொழுதெல்லாம்
உண்மையை உரைப்பதில்லை
பொய்முகம் அணிந்தணிந்து
மெய்முகமே பொய்முகமான பின்
அவரவர் முகம் எதுவென்று
எவருக்குமே தெரியவில்லை!
புண்படுமே…
கண்படும் என்றேதான் காயில் படமெழுதிக்
கண்களில் காணவே வைக்கின்றார்- கண்ணிறைக்
காயுடன் ஓவியமும் விற்காத போதிலே
பாயும் பசிப்பிணிதான் பார்…!
-செண்பக ஜெகதீசன்…
திருஷ்டி
கல்லடி பட்டாலும்
கண்ணடி படக்கூடாது
கண்ணேறு கழித்தல்என்பது
முன்னோர்கள் வாக்கு
அழகு அழகுன்னு
குழந்தையைகொஞ்சினா
கண்ணேறு படாமலிருக்க்
கன்னத்தில் வைப்பது
திருஷ்டி பொட்டு
புது வீடு கட்டினால்
புதிதான பூஷணிக்காயில்
படம் வரைந்து வாசலில்
திருஷ்டி பொம்மை
அகத்திய முனிவரே
கண் திருஷ்டியிலிருந்துவிடுபட
சுப திருஷ்டி கணபதி என்ற
மகாசக்தியைதோற்றுவித்தார்
விஞ்ஞானம் வளர்ந்தாலும்
அஞ்ஞானம் மாறா மக்கள்
வரைந்த பூஷணிக்கு
திருஷ்டி படாமலிருக்க
வரை படம்போல்
அழகு காட்டி அதன்
அழகில் மயங்கி ஆசையுடன்
எடுத்துக்கொண்டான் ஒரு செல்ஃபி
ஆசை யாரை விட்டது?
சரஸ்வதிராசேந்திரன்
கண்ணேறு கழிப்பதற்கென்றே
காயாகும் வரம் பெற்றேன்,
கறிவகையாய் வந்தாலும்
கண்ணெதிரே தூக்கிலிட்டுக்
காயும்வரை காத்திருந்து
கண்டபடி தூக்கி எறிவர்.
கண்ணேறு கதையெல்லாம்
காணாத முடநம்பிக்கை,
கதைத்தவர் யாரெனக்
கண்டறியேன் இருப்பினும்
அமாவாசை நாளிலெல்லாம்
அவதியாய் கற்பூரம
சுமையாக என்மீது
சுடராக ஏற்றிவிட்டு
அணைந்ததும் முச்சந்தியில்
அமர்க்களமாய் போட்டுடைத்து
கண்ணேறு கழிந்ததாய்க்
கற்பனையில் திரிகின்றார்.
மங்கல விழாக்களில்
மகிழ்வாக முடிந்ததும்
குங்குமக் குழம்போடு
கொண்டுபோய் வீதியில்
இங்கிதமின்றியே எனையுடைப்பர்,
காயாகச் சமைத்தாலோ
கண்டவர் பசியென்னும்
நோயதனைத் தீர்த்திருப்பேன்
கொழுப்பதனைக் குறைத்திருப்பேன்.
நிறைவாக என்மீது
நிழலானமுகமெழுதி
வருந்துன்பம போக்குகின்ற
வழியென்று வகைசெய்தர்.
பரவாயில்லை ஒருவகையாய்
பசித்திருக்கும் உழவனவன்
குறைதீர்க்க விற்குமொரு
குணமதனால் என்பிறப்பில்
நிறைவொன்று நான்கண்டேன்
நிற்குமென்பெயர் வெண்பூசணியாமே!
“இளவல்”ஹரிஹரன், மதுரை.
பூசணியின் புலம்பல்
கண்ணேறு படாதிருக்க
குலத்திற்கு மட்டும்
நான் காவல் அல்ல!
திருஷ்டி கழிக்க
என்னை எடுத்த மானிடனே!
சாலையில் உயிரையெடுக்க
அல்ல என்றே நீயும்
புரிந்து வாழ்வாயோ!
பிறர் மகிழ்ச்சியிலே
நம் மகிழ்ச்சி உதயமாக
சுயநலமின்றி வாழ்வாயா!
நீட்டிய என் நாவினில்
தாகம் தீர்த்த குளங்களின்
பிறப்பிடம் எங்கே?
நீசர் கூட்டம் சிரம்
அறுக்க வாள் செருக
யார் வருவார்?
வீசுகின்ற தென்றலாய்
கனி தரு சோலையாய்
கற்பகத் தருவாய்
புவனமதில் வாழ
ஏழைக்கு உணவளிக்க
என்னை யார் தயார்
செய்ய வருவார்?
எல்லையில்லா விளைச்சல்
காட்டிய ஏழையின்
ஒட்டிய வயிறு
ஓராயிரம் முராரி
ஓட்டைக் குடிசையில்
இராகம் இசைக்க
சுயநல வியாபாரியின்
மதுப் புன்னகை கலந்த
நீட்டிய நாவினில்
இழுக்க சூட்டுகோலுக்கு
எங்கே செல்வது?
மண்ணாசை கொண்டோரெல்லாம்
மண்ணுக்கே சொந்தமாகும்
வரலாறு தெரியாத வாழ்க்கையினால்
ஏது பயன்?
ஆறடி மனிதனுக்கு
ஆறடி இடம்கூட
சொந்தமில்லையடா!
கட்டாந்தரை அடுக்கக உதயங்கள்
வெற்று வயிற்றை நிரப்பி விடாது!
வரைந்த நீளக் கொடிகளின்
கட்டிடப் புதுமனைப் புகுவிழாக்கள்
வரப்போகும் உணவுப் பஞ்சத்தின்
எதிரொலி என்பதை யார் அறிவார்?
வருகின்ற திருவிழா
ஏழையின் வசந்தவிழாவாக
உருவெடுக்க பசுமைச் சமுதாயம்
உருவாக்கும் இளைஞர் சமுதாயம்
காணும் ஆவலில் நான்!