புரட்டாசியில் பூத்த புதுமை மலர்

சுலோச்சனா

அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்

கருணை அருட்பெருஞ்ஜோதி.

The_vallalar-06-214x300பூமியில் எத்தனையோ விதமான மலர்கள் பூத்துப் பொலிகின்றன. பூமியை அலங்கரிக்கின்றன. சில மலர்களே பூமியை புனிதமாக்க ,பூமியில் பிறந்த மக்களை புனிதமாக்க பூக்கின்றன. அப்படிப் பூத்த மலர்கள் புதுமை மலர்கள் . இவற்றில் ஒன்றுதான் புரட்டாசியில் பூத்த புதுமை மலரான அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார். தனிப்பெருங்கருணையே அருட்பெருஞ்ஜோதி என அடிகளார் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதூரில் இராமையா சின்னம்மை இவர்களுக்கு 5-10-1823 புரட்டாசித் திங்கள் 21ம் நாள் மகனாகப் பிறந்து பெற்றோர்களை பாக்கியசாலி ஆக்கினார். சுவாமிகளின் உடன் பிறந்தவர்கள் 2 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள் ஆவர். சிறு வயதினிலேயே சிதம்பரம் நடராஜப் பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி பூண்டவர்.

பள்ளி சென்று பயிலாத சுவாமிகள் அண்ணன் சபாபதிக்குப் பதிலாக, அவர் பேச வேண்டிய மேடையில் சொற்பொழிவாற்றி அண்ணனை விட மிக நன்றாக சொற்பொழிவு செய்கிறார் என்று புகழப் பெற்றார். அப்பொழுதுதான் அவர் மகிமை வெளிப்பட ஆரம்பித்தது எனலாம். இவருக்கு மிக இள வயதிலேயே வற்புறுத்தி மணம் முடித்தனர். அவர் அன்று இரவு முழுவதும் படிப்பிலேயே ஈடுபட்டிருந்தார். மின்விளக்கில்லாத அந்த காலகட்டம். எந்த விளக்கின் ஒளியில் சுவாமிகள் படித்தாரோ அதில் எண்ணெய் வற்றியது. சுவாமிகளோ அவ்விளக்கில் தண்ணீர் ஊற்றினார். இருந்தும் அவ்விளக்கு சுடர் விட்டு எரிந்தது. சுவாமிகளை மணந்த அந்த அம்மையார் இவரின் அற்புத செயலைக் கண்டு மிக்க மதிப்பு மரியாதை உணர்வுடன் அவரிடம் இருந்து விலகியே நின்றார். கருவிலே திருவுடையார் என்பதற்கேற்ப அவர்பிறவி ஞானியாக இருந்தார். ஆன்ம ஞான அனுபவத்துடனேயே அவர் பிறப்பு நிகழ்ந்திருக்கின்றது. அது மட்டும் அல்லாமல் அவர் வாழ்வில் திடீர் திருப்பங்கள் எதுவும் நிகழவில்லை. இறையருளிலேயே அவர் மனம் இயல்பாகவே பொருந்தி இருந்தது என அவர் வாழ்வின் முறையிலேயே அறிகின்றோம்.

உயிர் கொல்லாமை, ஊண் உண்ணாமை போன்றவை அவரின் முதன்மை கொள்கையாக இருந்தது. விலங்கினங்களைக் கொன்று அவற்றின் ஊண் உண்டு மகிழ்ந்திருப்பதை எண்ணியும் கண்டும் அவர் நெஞ்சம் நடுங்கிற்று. ஏழைகளின் வயிறு வாடுவதை நினைத்து வாடிய பயிரை கண்ட போதெல்லாம் அவர் முகமும் மனமும் பெரிதும் வாடியே நின்றது. அவரை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்ற பலர் பின்னாட்களில், “ஐயா அவர்களின் முகத்தில் எப்பொழுதுமே சற்று வருத்தக்குறியே இருக்கும். வெண்மையான துணியால் உடல் முழுதும் போர்த்தி இருப்பார் தலையில் முக்காடிட்டும் இருப்பார். ஏதோ சிறிது மற்றவர் கண்களுக்கு தெரியும் பாகங்கள் பொன் போன்று மின்னும்,கைகளை வீசிக்கொண்டு கூட நடக்கமாட்டார். கைகளை இணைத்து வைத்துக்கொண்டு மிகுந்த அடக்கத்துடனேயே நடப்பார். மிகவும் மென்மையான எளிமையானசாத்வீக குணத்தையும் கடந்தவர்” என்று கூறுகின்றனர் .

இரஜஸ் தமஸ்,சாத்வீகம் இம்மூன்று குணங்களையும் கடந்து நிற்பதே ஞானிகளின் அடையாளம் அல்லவா? வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் வீடிதோறிரந்தும் பசியறாவெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்.எனும் வள்ளலார் ஏழைகளின் பசியாற்ற தரும சாலை ஒன்றை நிறுவினார். அதற்கு சத்திய தருமச்சாலை என்று பெயரிட்டார்.அதில் தன்னம்பிக்கையினாலேயே அடுப்பை ஏற்றினார். கஞ்சி காய்ச்சப்பட்டு அங்கு அரும் ஏழை பாழைகள் அனைவருக்கும் வயிறாற பசியாற்றப்பட்டது. அன்று அருளாளரான வள்ளலாரால் ஏற்றப்பட்ட அடுப்பு அணையா அடுப்பாக இன்று வரை உணவு தயாரிக்கப்பட்டு ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகின்றது. வள்ளலார் வளம் மிக்க வயலூரில் துவங்கிய சத்திய ஞான தரும சாலையும் மக்களின் வழிப்பாட்டிற்காக சத்திய ஞானசபையும் இன்றும் வடலூரில் சத்ய சன்மார்க்க வழியில் நல்ல முறையில் நடந்து வருகின்றது. வள்ளலார் ஞானவழியில் ஏற்படுத்திய ஒளிமயமான ஜோதி வழிபாடு நடந்து வருகின்றது. மென்மையான மனம் கொண்ட வள்ளலார் கடவுளர் வழிபாட்டில் ஆடம்பரமான வழிபாடுகள் தேவையில்லை. உண்மையான பக்தியுடன் எளிய வழிமுறையில் இறையருளுடன் இசைந்த மனதுடன் அருட்ஜோதி ஆண்டவரை ஜோதிவடிவில் தரிசித்து அந்த ஜோதியை தன் மனதுக்குள் தரிசிக்க வேண்டும் என்பதே அவர் வகுத்த வழிபாட்டு முறை .வள்ளலார் வழிபாட்டில் மட்டும் புதுமையை கூறவில்லை . சமூக அமைப்பில் வாழும் வழிமுறைகளில் புதுமைக் கருத்துக்கள் புகவேண்டும் என விரும்பி “மனிதர் அனைவரும் சமமே சாதி சமய வழக்குகளை விட்டு பேரின்ப வீட்டிற்குள் நுழையும் வழி காண வாரீர்” என்று வடலூர் வட திசைக்கே என்று பாடி அழைக்கிறார் . ஜாதி மத இன சமய வேறு பாடுகளை விட்டு மனிதன் மனிதனாகப் பிறந்து வாழும் முறையால் தேவனாக உயர வேண்டும் என விரும்பி கூறுகின்றார்.

அவற்றிற்கெல்லாம் என்னென்ன வேண்டுமென்று சென்ன கந்த கோட்டத்துள் உள்ள சண்முகனை நினைந்து கேட்கிறார்.

ஒருமையுடன் நினது திருமலரடி

நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று

பேசுவார் உறவு களவாமை வேண்டும்

பெருமை பெறு நினது புகழ் வேண்டும்

பொய்மை பேசாதிருக்க வேண்டும்.

பெரு நெறிபிடித்தொழுக வேண்டும்

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்.

மருவு பெண்ணாசையை மறக்கவேண்டும்

நினை மறவாதிருக்க வேண்டும்.

மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்.

நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்.

வேண்டுவன வற்றையும் வேண்டாதவற்றயும் இறைவனிடம் வேண்டிக் கேட்க வழி சொல்கின்றார். வள்ளலார் வள்ளுவரின்

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய் பொருள் காண்பதறிவு”

என்ற குறளுக்கு ஒரு எடுதுக் காட்டாகவும் இருக்கின்றார். தேர்ந்து தெளிந்த பின்னொரு சில இடங்களில் வேதத்தின் சில பகுதிகளை மறுத்துரைக்கின்றார். மென்மையான மனம் கொண்டவர். திண்மையான மனதுடன் தனக்கு ஒவ்வாத கருத்துக்களை வன்மையுடன் கண்டிக்கின்றார்.

எவ்வுயிரும் தம் உயிர் ஒத்து இருப்போர் உள்ளமே.சுத்த சன்மார்க்க சங்கம் .என்பது இவரது திடமான கருத்து,பள்ளி சென்று பயிலாத ஞானிகள் அனேகர்.அவர்களில் ஒருவரே அருட்பிரகாச வள்ளலார் என அன்புடன் அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார். இறை பக்தியில் தோய்ந்தவரேனும் “அறவால் அறிந்தே உன் இரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே”

எனும் அருணகிரி நாதரின் வாக்கிற்கேற்ப ஞான மயமான பக்தியை உடையவர் நமக்கும் அதை அளிப்பவர். மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருந்த மக்கள் அனேகர் அவர் கருத்துக்களுக்கு ஒத்து வராதது கண்டு வள்ளலார் “கடை விரித்தேன் கொள்வாரில்லை” என அறிவித்தார்.

வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில்சித்தவளாகத்தில் தம்மை மக்கள் கண்களுக்கு மறைத்துக்கொண்டார். ஒவ்வொரு தைப்பூசத்தன்றும் அவர் நிறுவிய சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காட்டப்படுகின்றது. சுவாமிகள் வகுத்த விதிப்படி பல வண்ண திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி 7 வது திரையாக சுத்த சத்துவகுணத்தைக் குறிக்கும் வெண்மை நிறமுடைய திரையை விலக்கி “அருட்பெருஞ்ஜோதி” தரிசனம் அனைவருக்கும் கிடைக்கின்றது. பல வருடங்களுக்குமுன் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் திருப்பணி செய்யப்பட்டது. சத்ய ஞானசபை சத்ய தருமசாலை சன்மார்க்க சங்கம் இவைகள் எல்லாம் வாரியார் அவர்களால் திகழ்கின்றது.

ஒவ்வொரு காலத்திலும் கடவுளின் தூதுவராக மகான்கள் வருகின்றனர்.மூட நம்பிக்கை நம்பிக்கை மிகுந்த காலத்தில் சீர் திருத்த வாதிகளும் புரட்சி சிந்தனை உடையவர்களும் தோன்றுகிறார்கள். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவரே வள்ளலார் இராமலிங்க அடிகளார் ஆவார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *