படக்கவிதைப் போட்டி 32-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திரு. ஆதித்யா நாகராஜ் எடுத்த வித்தியாசமான இந்தப் புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் வல்லமையின் நன்றி!
திருஷ்டிப் பூசணியின் முகத்தோடு முகம்வைத்து நிற்கின்ற இந்த மனிதர்தான் அதைத் தயாரித்தவர் போலும்!
மனிதா! ’கண்ணேறுபடாமல் காக்கும்’ என்று பூசணிமீது வைக்கும் மூடநம்பிக்கையைத் தூரவீசிவிட்டு உன்மீது மட்டும் நம்பிக்கை வைத்து வாழ்வில் முன்னேறு!
இனி, இவ்வாரப் போட்டிக் கவிதைகளைப் படித்து இரசிப்போம்!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவாரைக் கண்டு அஞ்சி ஒதுங்கிய வள்ளலார் பூமியில் இன்று உண்மைமுகம் தொலைத்த முகமூடி மனிதர்களே எங்கெங்கும் தென்படுகின்றனர் என்று வேதனையோடு விளம்புகின்றார் திரு. கொ. வை. அரங்கநாதன்.
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவார்
உறவு வேண்டாமென்ற
வள்ளலார் வாழ்ந்த பூமி
வண்ணப் பூச்சுகளுடன்
எத்தனை வடிவ மாற்றம்
வார்த்தைகளுக்கும்
உள்ளத்திற்குமான
இடைவெளி
ஏன் இப்படி நீள்கிறது
கண்களிலிருந்து வழியும்
கண்ணீர் கூட
ஏன் இப்பொழுதெல்லாம்
உண்மையை உரைப்பதில்லை
பொய்முகம் அணிந்தணிந்து
மெய்முகமே பொய்முகமான பின்
அவரவர் முகம் எதுவென்று
எவருக்குமே தெரியவில்லை!
***
கண்ணேறு கழிக்கும் இந்தப் பூசணி வியாபாரம் நன்முறையில் நடைபெறாவிட்டால் அந்த வியாபாரியின் வாழ்க்கையில் பசியும் பிணியும் கோலோச்சத் தொடங்குமே என்று கவல்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
கண்படும் என்றேதான் காயில் படமெழுதிக்
கண்களில் காணவே வைக்கின்றார்– கண்ணிறைக்
காயுடன் ஓவியமும் விற்காத போதிலே
பாயும் பசிப்பிணிதான் பார்…!
***
விஞ்ஞானம் வளர்ந்தாலும் அஞ்ஞானம் அகலாத மக்கள் இன்னமும் திருஷ்டிப் பூசணியில் திருப்திகொள்கின்றனர் என்று கூறும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், பூசணியுடன் அதன் வியாபாரி ஆசையாய் எடுத்துக்கொண்ட செல்ஃபி இது! என்று இப்புகைப்படத்திற்கு விளக்கம் தருகிறார்.
கல்லடி பட்டாலும்
கண்ணடி படக்கூடாது
கண்ணேறு கழித்தல்என்பது
முன்னோர்கள் வாக்கு
[…]
புது வீடு கட்டினால்
புதிதான பூஷணிக்காயில்
படம் வரைந்து வாசலில்
திருஷ்டி பொம்மை
[…]
விஞ்ஞானம் வளர்ந்தாலும்
அஞ்ஞானம் மாறா மக்கள்
வரைந்த பூஷணிக்கு
திருஷ்டி படாமலிருக்க
வரை படம்போல்
அழகு காட்டி அதன்
அழகில் மயங்கி ஆசையுடன்
எடுத்துக்கொண்டான் ஒரு செல்ஃபி
ஆசை யாரை விட்டது?
***
திருஷ்டிப் பூசணி குறித்த உங்கள் எண்ணங்களை எழிலாய்க் கவிதையில் கொணர்ந்திருக்கின்றீர்கள் கவிஞர்களே. பாராட்டுக்கள்!
இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் கண்டறிவோம் இனி!
திருஷ்டிப் பூசணியாய் உருமாறியிருக்கும் பூசணிக்காயொன்று, சமூக அவலங்களை அறச்சீற்றத்தோடு சாடுவதைப் பாங்காய்ப் பட்டியலிட்டு நம் பார்வைக்கு வைத்துள்ளது ஓர் கவிதை!
கண்ணேறு படாதிருக்க
குலத்திற்கு மட்டும்
நான் காவல் அல்ல!
திருஷ்டி கழிக்க
என்னை எடுத்த மானிடனே!
சாலையில் உயிரையெடுக்க
அல்ல என்றே நீயும்
புரிந்து வாழ்வாயோ!
பிறர் மகிழ்ச்சியிலே
நம் மகிழ்ச்சி உதயமாக
சுயநலமின்றி வாழ்வாயா!
நீட்டிய என் நாவினில்
தாகம் தீர்த்த குளங்களின்
பிறப்பிடம் எங்கே?
[…]
வீசுகின்ற தென்றலாய்
கனி தரு சோலையாய்
கற்பகத் தருவாய்
புவனமதில் வாழ
ஏழைக்கு உணவளிக்க
என்னை யார் தயார்
செய்ய வருவார்?
[…]
ஆறடி மனிதனுக்கு
ஆறடி இடம்கூட
சொந்தமில்லையடா!
கட்டாந்தரை அடுக்கக உதயங்கள்
வெற்று வயிற்றை நிரப்பி விடாது!
வரைந்த நீளக் கொடிகளின்
கட்டிடப் புதுமனைப் புகுவிழாக்கள்
வரப்போகும் உணவுப் பஞ்சத்தின்
எதிரொலி என்பதை யார் அறிவார்?
வருகின்ற திருவிழா
ஏழையின் வசந்தவிழாவாக
உருவெடுக்க பசுமைச் சமுதாயம்
உருவாக்கும் இளைஞர் சமுதாயம்
காணும் ஆவலில் நான்!
பூசணியின் ஆசைகளைப் பாவாக்கித் தந்திருக்கும் திருமிகு. லட்சுமியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்துள்ளேன். அம்மையாருக்கு என் பாராட்டுக்கள்!
அடுத்து, “மானுடா! காயாக எனையுண்டால் நோய்தீர்க்கும் மருந்தாவேன்; ஆனால் நீயோ கண்ணேறு கழிப்பதற்கு எனைவாங்கிச் செல்கின்றாய். உன் மடமை கண்டு நான் மனவேதனை கொண்டாலும், என்னாலே பிழைக்கின்ற தொழிலாளியைக் கண்டு உள்ளபடி உவகையே கொள்கின்றேன்” எனப் பகுத்தறிவோடு பேசும் பூசணியைக் கண்டேன் ஒரு கவிதையில்!
கண்ணேறு கழிப்பதற்கென்றே
காயாகும் வரம் பெற்றேன்,
கறிவகையாய் வந்தாலும்
கண்ணெதிரே தூக்கிலிட்டுக்
காயும்வரை காத்திருந்து
கண்டபடி தூக்கி எறிவர்.
கண்ணேறு கதையெல்லாம்
காணாத மூடநம்பிக்கை,
கதைத்தவர் யாரெனக்
கண்டறியேன் இருப்பினும்
அமாவாசை நாளிலெல்லாம்
அவதியாய் கற்பூரம்
சுமையாக என்மீது
சுடராக ஏற்றிவிட்டு
அணைந்ததும் முச்சந்தியில்
அமர்க்களமாய் போட்டுடைத்து
கண்ணேறு கழிந்ததாய்க்
கற்பனையில் திரிகின்றார்.
[…]
காயாகச் சமைத்தாலோ
கண்டவர் பசியென்னும்
நோயதனைத் தீர்த்திருப்பேன்
கொழுப்பதனைக் குறைத்திருப்பேன்.
[…]
பரவாயில்லை ஒருவகையாய்
பசித்திருக்கும் உழவனவன்
குறைதீர்க்க விற்குமொரு
குணமதனால் என்பிறப்பில்
நிறைவொன்று நான்கண்டேன்
நிற்குமென்பெயர் வெண்பூசணியாமே!
திரு. இளவல் ஹரிஹரனின் இந்தக் கவிதையைப் பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட விரும்புகின்றேன்.
பங்குகொண்ட அனைத்துக் கவிஞர்களுக்கும் என் பாராட்டுக்கள் மீண்டும்!
படம் 32
காகிதக்கூழ் கலை
அச்சு அசலாக நடிப்பது
மெச்சும் வகையாயில்லையே இது.
மச்சு வீடாயினும் குடிசையாயினும்
முகமூடியிட்டு சமூகத்தில் உலாவுதல்
தகவற்ற குணமாகும் புவியில்.
நகைச்சுவை, திருஷ்டிக்கு உதவும்.
பகைச்சுவைக்கு நல் நண்பனாகும்.
வகை வகையாம் காகிதக்கூழ் கலையிது.
வரிகள்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-10-2014 – 21.00 பின் மாலை
பக்கம் திறக்க முடியாது – வலையேற்ற முடியாது 4-10-2015 வல்லமைக்கு மின்னஞ்சலில் அனுப்பிய எனது வரிகள்.
இம்முறை வென்றவர்களிற்கும் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.