நவராத்திரி நாயகியர் (9) -கூத்தனூர் சரஸ்வதி தேவி

0

க.பாலசுப்பிரமணியன்

images (4)

அரசலாற்றின் கரைவாழும் ஆதிசக்தி !

அன்னத்தின்  மேலமர்ந்த ஞானசக்தி !

ஆணவத்தை அழித்துவிடும்  ஆன்மசக்தி !

அன்னையவள் அறிவின் பராசக்தி !

 

வெள்ளைத்தாமரையில் வீற்றிருந்து

வேதங்கள் நான்கையும் கையெடுத்துத்

தாய்மொழியாய் தாய்ப்பாலை தந்தெனக்குத்

தாயாகி அறிவூட்டும் சோழநாட்டுச் சுகமே !!

 

கூத்தனுக்குச்  சங்கத் தமிழ் தந்தவளே !

கூத்தோடு  இயல்  இசையானவளே !

யாழிசையின் ஓரசைவில் மனமசைய

நாவசைவில் நாதமெல்லாம் தந்தவளே !

 

கல்விக்கு வித்தாவாய் காலையிலே

மனத்திற்கு இசையாவாய் மாலையிலே

கல்லுக்குள் சிலையாவாய் கைகளிலே

கருணைக்குப் பொருளாவாய் கருத்தினிலே !

 

கண்ணோக்கும் காட்சியெல்லாம் கருத்தாக்கி

கண்ணிமைக்கும் நேரத்திலே அறிவாக்கி

வித்தைக்கு வழிகாட்டும் வித்யாதேவி

சிந்தைக்குள் என்றும்இருப்பாய்  ஸ்ரீதேவி !!

 

அகரம் முதல் ஆய்தம் வரை எழுதிவைத்தேன்

அழகுதமிழ் காவியங்கள் அடுக்கிவைத்தேன் !

ஆயிரம் கண்கள் கொண்டவளே, அம்மா !

அறிவுக்கண்ணிரண்டும் தந்தருள்வாய் !

 

இருள்கண்டு அஞ்சுகின்ற என் மனதினையே

அருள்கொண்டு அரவணைக்கும்   அன்புக்கரமே!

செல்வத்தோடு வீரத்தையும் கல்வியில் சமைத்து

சீரான வாழ்வுக்குப்  பொருளாய் தந்தாய்  நவராத்திரி !

 

உலகெங்கும்  அமைதியின் ஆட்சி வேண்டும்

உயர்தமிழ்ச் சொல்லெங்கும் கேட்க வேண்டும் !

உண்மைகள் உறங்காமல் வாழவேண்டும் !

உன்னருளால் உலகமெல்லாம் உய்யவேண்டும் !!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *