இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-4
போர்க்கோலமே திருமணக்கோலமான பெண்!
ஒப்பற்ற அழகும், வீரமும், எவராலும் தடுத்து நிறுத்த இயலாத ஆற்றலும் கொண்ட தடாதகை, தென்மதுரைக்கரசி. அரியணை ஏறிய அவள், திக்குவிஜயம் புறப்பட்டு, எல்லா அரசர்களையும் வென்று வாகைசூடி வருகிறாள்.
‘ஆர்த்தன தடாரி பேரி, ஆர்த்தன முருடு மொந்தை,
ஆர்த்தன உடுக்கை தக்கை, ஆர்த்தன படகம் பம்பை,
ஆர்த்தன முழவம் தட்டை, ஆர்த்தன சின்னம் தாரை,
ஆர்த்தன காளம் தாளம் என திசைகள் எங்கும் ஆர்க்கும்படி’ எனப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணத்தில் போற்றியபடி, அவளுடைய படைகள் எங்கணும் வெற்றிவாகை சூடிப்பின் எம்பெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலைமலையை அடைகின்றன. வெற்றிக்குமேல் வெற்றி – தடாதகையின் உள்ளம் பெருமிதத்தில் நீந்துகின்றது. அவளுடைய படைகள் இமயமலையின் மீது விரைந்தேறுகின்றன. எங்கும் உற்சாகமும், ஆரவாரமும், யானைகளின் பிளிறலும், புரவிகளின் குளம்படி ஓசைகளும் நிறைந்து அதிர்கின்றன.
மலையின் ஒருபுறத்தில் அமைதியாக அமர்ந்து மோனத்தவமியற்றும் முனிபுங்கவர்கள், தமது தவம் கலைய அதிர்ச்சியடைந்து கண்களை மலர்த்தி, ‘யார் வருவது?’ என நோக்குகின்றனர். மானினங்களும் மயிலினங்களும் அச்சத்தால் அலமந்து போகின்றன. எதிர்க்கும் சிவகணங்களும் அஞ்சி நடுங்கப் படை செலுத்தி வருகிறாள் தடாதகை. நந்திதேவரும் ஒடோடிச் சிவபிரானிடம் சென்று நிலைமையை விளக்கா நிற்கிறார்.
செவியுற்ற சிவபிரான் சிறுமுறுவல் கொண்டார். அவருக்கா தெரியாது வந்திருப்பது யார்? எவர்? எதற்கென்று?
போருக்கழைக்கும் தடாதகைமுன் சென்று குறுநகை பூத்தவண்ணம் நிற்கிறார் அண்ணல்.
அப்போது……..என்ன நிகழ்கிறது?
போர்க்களத்தில் அழகிய தேரில் அமர்ந்திருந்த தடாதகைக்கு மேருமலையை வில்லாக வளைத்த சிவனாரைத் தன் முன்பு கண்டதும், உடல் சிலிர்த்து, அவளுடைய பொய்யோ எனும் குறுகிய இடை தளர்ந்து துவள்கின்றது. அவளுடைய மூன்றுமுலைகளுள் ஒன்றானது தன்னுள் ஒடுங்கி மறைந்துவிடுகின்றது- எதனால்? இத்துணை உயர்வுடைய தனது கொழுநரை (கணவரை) கண்ணுற்றதும், அவர் யார்என அவள் உணர்ந்துகொண்டமையால், அவருடன் அவள் உள்ளம் சென்று ஒன்றிவிட்டது- இதுதான் உள்ளப்புணர்ச்சி எனப்படுகின்றது.
(இங்கு ஒரு சிறு முன்நிகழ்வை அறிந்து கொள்ளவேண்டும். தடாதகை மலயத்துவச பாண்டியனின் மகளாக வந்துதித்த போது, மூன்று முலைகளுடன் அவதரித்தாள். இதனைக் கண்டு வருந்திய மன்னனுக்கு, ‘இவள் தகுந்த பருவத்தில் தனக்குரிய மணாளனைக் காணும்போது மூன்றாம் முலை மறைந்துவிடும்,’ என அசரீரி சொல்கின்றது. அதன்படியே இப்போது நிகழ்ந்துள்ளது).
எதற்கும் வணங்காத அவள் தலை தானாக நாணத்தில் குனிகின்றது. கடைக்கண்ணால் நோக்கித் தன் ஒருமுலை மறைந்ததை உணர்ந்து கொள்கிறாள் அரசமகள். காதற்கணவனை நோக்கி அமுதம் சொரியும் நோக்கினைப் பொழிகிறாள். பெண்மைக்கே உரிய நாணத்துடன், சிறுநுதலில் அரும்பிய குறுவியர்வையுடன், விம்மிய உள்ளத்துடன் உயிரோவியமாக நிற்கிறாள் தடாதகை. என்ன செய்வது, சொல்வது எனப் பேச்சற்று நிற்கிறாள். அகிலத்தையே ஈன்றெடுத்து ஆண்டு அருள் செய்யும் அன்னையின் அவதாரமான தடாதகைக்கும் இந்த நிலை ஒருநாள் வந்துற்றது!
கையில் ஏந்திய வில்லைக் கீழே தழைத்துப் பிடிக்கிறாள்; அது கீழே விழுந்து விடாமல் விரல் நுனியால் மெல்லத் தழுவி, அதன் நாணைக் கைவிரலின் விளிம்பால் தடவிக் கொண்டு நிற்கிறாள்.
கண்முன் இந்த இலக்கியச்சித்திரம் விரியும்போது முழுமையான காதலின் உண்மையான அழகுவடிவம் உயிர்பெற்று உலவுகின்றதல்லவா? அண்டசராசரத்தின் நாயகர்களான அம்மையும் அத்தனுமே காலத்தின் சுழற்சியில், அதனுள் நிரந்தரமாக உறைந்துவிட்ட காதற்சித்திரம் இதுவன்றோ? இச்சொற்சித்திரம் செவிக்கமுதம்! ஓதும் நாவுக்கும் அமுதம்!
“இத்தகைய சிவந்த கைகளைக் கொண்டு சப்பாணி கொட்டியருளே! தமிழுடன் ஒன்று சேர்ந்து பிறந்து பழமை வாய்ந்த மதுரை நகரில் வளர்ந்த கொடிபோல்பவளே! சப்பாணி கொட்டியருள்!” எனப்புலவர் குமரகுருபரனார் மீனாட்சியன்னையைப் போற்றி வேண்டுகின்றார். இவருடைய கவிதையைப் போற்றும் வாய்ப்புக் கிடைத்ததை எண்ணிப் பூரிக்காமல் இருக்க இயலவில்லை. பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு மகுடமாக விளங்கும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடல் இதுவாகும்.
பொய்வந்த நுண்ணிடை நுடங்கக் கொடிஞ்சிப்
பொலன்தேரோடு அமரகத்துப்
பொன்மேரு வில்லியை எதிர்ப்பட்ட ஞான்றுஅம்மை
பொம்மல்முலை மூன்றிலொன்று
கைவந்த கொழுநரொடும் உள்ளப்புணர்ச்சிக்
கருத்தான் அகத்தொடுங்கக்
கவிழ்தலை வணக்கொடு முலைக்கண்வைத் திடும்ஒரு
கடைக்கண்நோக்கு அமுதம்ஊற்ற
மெய்வந்த நாணினொடு நுதல்வந்து எழும்குறு
வெயர்ப்பினோ டுயிர்ப்பு வீங்கும்
விம்மிதமு மாய்நின்ற உயிரோவம் எனஊன்று
வில்கடை விரல்கடை தழீஇத்
தைவந்த நாணினொடு தவழ்தந்த செங்கைகொடு
சப்பாணி கொட்டியருளே
தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
சப்பாணி கொட்டியருளே
(மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்-
சப்பாணிப் பருவம்- குமர குருபரர் இயற்றியது)
அம்மையும் ஐயனும் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் போது தடாதகையின் நிலைமையை உரைத்த புலவர் அண்ணலின் நிலையை உரைக்காது விடலாமா? ஒரு நிகழ்வைக் கூறிவிட்டு அதன் தொடர்ச்சியைக் கூறாமல் விட்டால் கதை கேட்பவர்களுக்கு ஆர்வம் அடங்காதல்லவா? குமரகுருபரனார் இதனை நினைவில் இருத்திக் கொண்டு சமயம் வாய்த்தபோது பெண்பாற்பிள்ளைத்தமிழின் கடைசிப் பருவமான ஊசற்பருவத்தில் ஒரு பாடலில் அண்ணலின் நிலையையும் அழகுற விளக்குகிறார்.
அழகான மணித்தேர்; போருக்கெழுந்த தடாதகை பொற்சித்திரமென அதில் வீராவேசத்துடன் வில்லை ஏந்தி நிற்கிறாள். நந்திதேவர் கூறியதைக் கேட்ட சிவபிரான் தனது வில்லை ஏந்தி உள்ளத்தில் சினம் பொங்க (சினம் ஏன்? தனது சிவகணங்களையும், மற்றவர்களையும் தடாதகையின் படை எதிர்த்ததால் எழுந்த சினம்!) அங்கு வந்துற்றார். அம்மை நின்ற அந்த அழகுத்திருக்கோலம் தீயை அணைத்த நீரென அவர் சினத்தை மாற்றியது. ஆனால் சினம் இருந்த இடத்தில் அவ்வமயம் ‘காமம், காதல்’ எனும் தாபம் பொங்கி எழுந்து கொழுந்து விட்டெரிகின்றதாம். சிவபிரானின் சிவந்த செஞ்சடை அக்காமத்தீ போலக் காணப்படுகின்றதாம். காதலில் அண்ணலின் உள்ளம் உருக அதுபோன்றே அவர் கை வில்லும் (அது பனிபடர்ந்த மேருமலையால் ஆனதல்லவா?) உருகியோடிற்று. குளிர்ச்சியுடைய சந்திரனை முடியில் வைத்ததும், வெண்மையான இடபத்திற்கு மணி கட்டியதும் அவருக்குத் துன்பம் விளைவித்தன. காதல் கொண்டவருக்கு இவ்விரண்டும் துன்பம் தருவன என அறியப்படும்!
கருமேகம் போன்ற கழுத்தினை உடையவரான சிவபிரான், காதல் போர்க்களத்தில் அன்னையை எதிர்கொண்டு நின்று மயங்குகிறார். ஏனெனில் தடாதகை அவர்மேல் செலுத்தும் அம்புகள் கொடியனவாம்! கரிய புருவங்களாகிய வில்லினை வளைத்துக் கண்களாகிய கணைகளை அவர்மேல் விடாது எய்தவண்ணம் இருக்கிறாள் தடாதகையான மீனாட்சி. (கட்கணை துரக்கும் கரும்புருவ வில்). இவற்றுடன் கையில் கொண்ட வில்லையும் பயன்படுத்தாது வளைத்தபடி வைத்து அழகொழுக நாணித் தலைகுனிந்து நிற்கிறாள்.
இவளுக்கு இப்போர்க்கோலமே திருமணக் கோலமாகி விட்டது. எதிரி என எண்ணி வந்தவன் இதயத்தில் நிறைந்து விட்டான். புனுகுநெய் பூசிய சொக்கருடைய திருவழகினுக்கு ஒத்தகொடி போல்பவள் மீனாட்சியன்னை. அவளைப் பொன்னூசல் ஆடியருளத் தாய்மார் வேண்டுவதாக இப்பாடலை அமைத்துள்ளார் குமரகுருபரனார்.
தேர்க்கோல மொடுநின் திருக்கோல மும்கண்டு
சிந்தனை புழுங்குகோபத்
தீயவிய மூண்டெழும் காமநலம்கான்ற
சிகைஎன எழுந்துபொங்கும்
தார்க்கோல வேணியர்தம் உள்ளமென வேபொன்
தடஞ்சிலையும் உருகியோடத்
தண்மதி முடித்ததும் வெள்விடைக்கு ஒண்மணி
தரித்ததும் விருத்தமாகக்
கார்க்கோல நீலக் கருங்களத் தோடொருவர்
செங்களத்து ஏற்று அலமரக்
கட்கணை துரக்கும் கரும்புருவ வில்லொடொரு
கைவிற் குனித்துநின்ற
போர்க்கோல மேதிரு மணக்கோல மானபெண்
பொன்னூசல் ஆடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி
பொன்னூசல் ஆடியருளே
(மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- ஊசற்பருவம்)
இவை பேரழகு வாய்ந்து கருத்தைக் கவரும் இலக்கியச்சித்திரம் என ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!
பி.கு. ‘மீனாட்சி திக்விஜயம்’ எனும் பொருளில் பிரதிமைகளைக் கொண்டு நான் செய்த நவராத்திரிக் காட்சிகளின் படங்கள் இவை.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
********************************
அழகான படங்களுடன் எளிய தமிழில் பிள்ளைத்தமிழை தன் கைவண்ணத்தில் எழுத்தோவியமாக மாற்றியிருக்கிறார் முினாட்சி அவர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் தமிழ் சேவை